கடவுளின் காலடிச் சத்தம் – 2 கவிதை சந்நிதி

This entry is part [part not set] of 34 in the series 20081016_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


1
நல்ல வியாபாரம்
கண்ணீர் விட்டபடி சிரிக்கிறான்
வெங்காயம் விற்றவன்
2
காகம் கரைகிறது
வீட்டுக்காரன் கஞ்சன்
நீயாவது போடு விருந்தாளியே
3
அழுக்கான மேகத்தைச்
சலவை செய்தது
சூரியன்
4
மெல்லிய நிலவு
கால் நனைக்கும் கடல்
மனசில் பாடல்
5
அலையில் அசையும் படகு
முடிவாகவில்லை
போகும் இடம்
6
ஈர நண்டுக் கால்தடம்
கலைக்க வரும் காற்று
புரண்டு மூடும் சருகு
7
பயணிகள் நிழற்குடை
மேல் அமரும் பறவையே
கீழே வா நிழலுக்கு
8
ராஜா வருகிறார்
பராக் பார்க்க வேண்டாம்
ராஜாவைப் பார்
9
கோமாளி பார் விளையாட
வேடிக்கை பார்க்கும்
சர்க்கஸ் குரங்கு
10
இதனால் சகலருக்கும்
அறிவிப்பது என்னவென்றால்
ராஜா சம்பளம் தரவில்லை
11
காலி வகுப்பறைகள்
வாசல் மொட்டை மரம்
கோடை விடுமுறை
12
சுனாமி
அடித்துப் போனது
அலைபேசியை
13
சாவு வீடு பழைய நண்பர்கள்
தேடிப் போனார்
இறந்தவர்
14
அறுவடையான வயல்
உட்கார்ந்து
அசைபோடும் மாடு
15
உளியை எடுத்தான் ராமன்
கல்லில் வடித்தான்
அகலிகை
16
நெல்லிக்கனி உண்டால்
மரணம் வராதா –
எங்கே அந்த மரம்?
17
பெத்தம் பெரிய வானம்
பறக்கும் சிறு குருவி
என்ன பேராசைப் பயணம்
18
தூளியில் அழும் குழந்தை
பதறும்
சோளக்கொல்லை பொம்மை
19
பள்ளிக்கூட வாசலில்
நெல்லிக்கனி விற்ற கிழவி
சாகக் கிடக்கிறாள்
20
கவ்வியோடும்
நாய் வாயில்
எக்ஸ் ரே பிலிம்
21
பகல்காட்சி சினிமா
கனவுக் காட்சி
தூக்கம் போச்சி ராத்திரி
22
காதலிக்குக் காத்திருக்கையில்
சிநேகமாச்சு
முறுக்கு விற்கிறவள்
23
வந்த ரயிலை அனுப்பிவிட்டு
வரும் ரயிலுக்காக
தண்டவாளம்
24
பனியில் நனைந்த நிலவு
பூத்துக் குலுங்கும் மரம்
சாத்துகிறாள் ஜன்னலை
25
பௌர்ணமிப் பெருவெளிச்சம்
ஒளியத் தவிக்கும்
எறும்பு
26
கண்ணாடி வாழையிலை
அமர வந்த பனித்துளி
நழுவிக் கீழிறங்கும்
27
கல் இறங்கியது
கீழே
அலைகள் பக்கவாட்டில்
28
அலைகள் சுருங்கும்
விழுந்தது கல் அல்ல
உதைபந்து
29
கோழிக்குஞ்சைத்
தூக்கிப்போகும் ராஜாளி
மேகம் பார்க்கும் கடல்
30
நிலா வெளிச்சம்
தாழம் புதர்
ஜோடிப்பாம்புகள் நடனம்

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்