கடல் மெளனமாகப் பொங்குகிறது

This entry is part [part not set] of 35 in the series 20070301_Issue

பாவண்ணன்


எழுபதுகளின் இறுதிப்பகுதிதான் என் கல்லு¡ரிக்காலம். கவிதைகளில் மனமிழந்து கிடந்த காலம். பாரதியார், பாரதிதாசன், வள்ளலார், தாயுமானவர் என மனத்துக்குப் பிடித்த கவிஞர்களுடைய கவிதைத் தொகுதிகளை நு¡லகத்திலிருந்து எடுத்துவந்து நேரம் கிடைத்தபோதெல்லாம் படித்துத் திளைப்பது வழக்கம். முதலில் எல்லாக் கவிதைகளிலும் என்னைக் கவர்ந்தவை கவிஞர்கள் உருவாக்கிய புத்தம்புது சொல்லிணைவுகள். அவை உடனடியாக மனத்தில் இடம்பிடித்துவிடும். பிறகு நாளெல்லாம் அச்சொற்கள் நெஞ்சில் மிதந்தபடி இருக்கும். தென்னந்தோப்பிலும் ஏரிக்கரையிலும் சுற்றிக்கொண்டிருக்கும்போது மீண்டும்மீண்டும் அச்சொல் நெஞ்சில் அசையும். அதையட்டி ஏராளமான புதுப்புதுச் சொற்களும் எண்ணங்களும் வாதங்களும் அரும்பியபடி இருக்கும். ஊழிக்கூத்து, உயிர்த்தீ, மனப்பீடம், காற்றுவெளி என்னும் அச்சொற்களை இப்போது எண்ணிக்கொள்ளும்போதும் மனம் பேருவகை கொள்கிறது. சொல்லிணைவுகளைத் தாண்டி கவிதையின் சில தொடர்கள் அழுத்தமாகப் பதிந்து பல நாட்கள் அலைக்கழித்துக்கொண்டிருந்தன. “விசையுறு பந்தினைப்போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல்கேட்டேன்” என்ற வரியும் “பன்றியைப் போலங்கு மண்ணிடைச் சேற்றில் படுத்துப் புரளாதே. வென்றியை நாடிஇவ் வானத்தில் ஓட விரும்பி நிறைந்திடுமே” என்ற வரிகளும் அப்படிப் பதிந்த வரிகள். சொற்களையும் தொடர்களையும் அசைபோட்டு அசைபோட்டு மனத்துக்குகந்த வகையில் ஒரு கற்பனைப் பாதையைச் சமைத்துப் பயணப்பட்டுக்கொண்டிருந்த காலமும் கழிந்து “அஞ்சல்அஞ்சல் என்றிரங்கும் ஆனந்த மாக்கடல்கீழ் நெஞ்சமே என்போல நீ அழுந்த வாராயோ” என்பதுபோன்ற கவிதைகளின் அழகையும் கருத்துக்கோலத்தையும் உள்வாங்கிக்கொண்டு திளைப்பதும் பழகியது. நூலகங்களுக்கு வெளியே நண்பர்களிடமிருந்து இரவல் வாங்கிப் படித்த ரஷ்ய மொழிபெயர்ப்புகள்வழியே ரசூல் கம்சுதேவ், மாய்க்கோவ்ஸ்கி, புஷ்கின் ஆகியோருடைய கவிதை உலகத்துக்கும் நெஞ்சில் இடம்கொடுத்தேன். இவற்றின் தொடர்ச்சியாக அவ்வப்போது பத்திரிகைகளில் மொழிபெயர்ப்பில் படிக்கக் கிடைத்த பாப்லோ நெருதாவின் கவிதைகளும் நல்ல வாசிப்பனுபவத்தை அளிப்பவையாக இருந்தன. பல கவிதைகள் அரசியல் கவிதைகள். ஆவேசக்குரல் இல்லாமல் மிக எளிய வாக்கியங்களில் அவை அரசியலை முன்வைப்பவையாகத் தோன்றியது. ஆனால் அவருடைய ஒரு தொகுப்பை பல ஆண்டுகள் கழிந்த பிறகுதான் பெங்களூருக்கு வந்தபோது வாங்கிப் படித்தேன். அவை முழுக்கமுழுக்க காதல் கவிதைகள். என்னால் ஒருகணம் நம்பவே முடியவில்லை. அவரா இவர் என்று சற்றே குழப்பமாக இருந்தது. அரசியல் கவிதைகள் எழுதுகிறவர் காதல் கவிதைகள் எழுதக்கூடாது என்று எந்தச் சட்டத்தில் சொல்லியிருக்கிறது என்று என்னையே கேட்டுக்கொண்டேன். அரசியல் கவிதை எழுதிய பாரதியாரும் பாரதிதாசனும் அவற்றுக்குச் சமமாக காதல் கவிதைகளும் எழுதியவர்கள் அல்லவா என்று நானே பதிலும் சொல்லிக்கொண்டேன். மொழிபெயர்ப்புகள் வழியாக உருவாக்கி வைக்கப்பட்ட அரைப்பற்றிய ஒரு படிமம் தானாக உடைந்தது. மீண்டும் அவருடைய தொகுப்புகளைத் தேடிப் படிக்கத் தொடங்கினேன். தமிழ் வாசகர்களுக்கு உதவும் வகையில் அவருடைய நு¡று கவிதைகளைத் தேர்ந்தெடுத்து “பாப்லோ நெருதா கவிதைகள்” என்னும் தலைப்பில் சுகுமாரனுடைய மொழிபெயர்ப்பில் நு¡லாக வெளிவந்திருக்கும் புத்தகத்தைப் படித்ததும் பழைய நினைவுகளில் மனம் தோயத் தொடங்கிவிட்டது. (வெளியீடு : உயிர்மை பதிப்பகம்). இப்போது நெருதா ஒரு தமிழ்க்கவிஞரைப்போல நெஞ்சத்தில் நிரந்தரமான இடத்தைப் பிடித்துக்கொண்டார்.

பாப்லோ நெருதாவின் கவிதை உலகத்துக்குள் நுழைவதற்கு இந்தத் மொழிபெயர்ப்புத் தொகுதியை மிகச்சிறந்த வாசல் என்று சொல்லலாம். அந்தப் பேருலகத்துக்குள் மிகச்சிலராவது செல்லக்கூடும் என்கிற நம்பிக்கையை இத்தொகுதி ஏற்படுத்துகிறது. கூறுமுறைகளில் நெருதா கையாண்டிருக்கும் வெவ்வேறு முயற்சிகள் அக்கவிதைகளோடு ஒருவித நெருக்கத்தை இயல்பாகவே உருவாக்குகின்றன. சில கவிதைகளில் சின்னச்சின்ன வரிகளையே அவர் பயன்படுத்துகிறார். சில கவிதைகளில் நீண்ட வாக்கியங்களை அளவின்றிப் பயன்படுத்துகிறார். பல இடங்கள் முழக்கமாக இருக்கின்றன. பல இடங்களில் சொன்னவையே மீண்டும்மீண்டும் சொல்லி வலியுறுத்தப்படுகிறது. அளவான உவமைகளும் படிமங்களும் பொருத்தமான இடங்களில் சுடர்கின்றன. எந்த இடத்திலும் அவருடைய கவிதை அலுக்கவில்லை. கவிதைக்குத் தேவையான ஆதாரமான பரவசம் பலநு¡று கவிதைகள் எழுதியபிறகும் சற்றும் குன்றாமல் இருப்பதே பாப்லோ நெருதாவின் மிகப்பெரிய வெற்றி என்று சொல்லவேண்டும். எந்த இடத்திலும் மிகச்சிறிய அளவில்கூட நெருடலில்லாமல் அவற்றைத் தமிழ்ப்படுத்தியிருப்பது சுகுமாரனுடைய மொழிக்குக் கிடைத்திருக்கக்கூடிய வெற்றி.

“எனது மெளனத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது கடல்” என்பது நெருதாவின் கவிதையில் இடம்பெறக்கூடிய ஒரு வரி. இந்த வரி உருவாக்கும் மனச்சிலிர்ப்பு கொஞ்சநஞ்சமல்ல. மெளனம், கடல் என்ற வெவ்வேறு தன்மை கொண்ட சொற்களின் இணைவுதான் அச்சிலிர்ப்புக்குக் காரணம். கடல் பரந்து விரிந்த உருமுடையது. நேர்மாறாக மெளனமோ உருவமற்ற ஒன்று. கடல் சதாநேரமும் கொந்தளித்தபடி இருக்கும் மாபெரும் சக்தி. மெளனமோ அனைத்துக் கொந்தளிப்புகளும் அடங்கிய பின் உருவாகும் சமநிலை. ஆனால் இந்தச் சட்டகங்களைத் தகர்க்கிறது ¦ந்ருதாவின் தொடர். தனக்குள் படிந்திருப்பது சமநிலையல்ல, எழுச்சியின் சீற்றம் என்பதை உணர்த்துவதுபோல முழக்கமிடுகிறது இத்தொடர். மெளனம் என்பது செயலின்மையல்ல, அது கொதிநிலையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தீவிரம். மெளனம் என்பது சகிப்புத்தன்மையுமல்ல, அது ஒதுக்கவேண்டியவற்றைத் தள்ளிவைத்துவிட்டு ஆழத்தைநோக்கி நகரும் ஒரு பயணம். மெளனம் என்பது எல்லையே இல்லாத தட்டைநிலை அல்ல. தெளிவும் வேகமும் பயணத்தின் எல்லையும் அறிந்த ஆழ்ந்த அறிவுநிலை. இப்படி அடுக்கிக்கொண்டே போகமுடியும். இன்னொரு கவிதையில் இடம்பெற்றிருக்கும் “ஒரு ரொட்டியைப்போல சாதாரணமாக இருக்கவிரும்புகிறேன்” என்ற வரியும் மனத்தில் சட்டென இடம்பிடிக்கக் கூடியதாகும்.

“பாறையில் ஓர் உருவம்” நெருதாவின் மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்று. மூன்று பிரிவுகளாக இக்கவிதை பிரிந்திருக்கிறது. முதல் பகுதியில் குறிப்பிட்ட ஒருவருக்கும் தனக்கும் இருந்த நட்புறவை விவரிக்கப்படுகிறது. ரத்தமும் சதையுமாக அவர் வாழ்ந்திருந்த காலத்தின் விவரணை இடம்பெறுகிறது. தாய்தந்தையரைவிட்டு வெளியேறியவர் அவர். உறவு முறைகளைவிட்டு விலகி ஊருக்காகவும் ஊர் மக்களுக்காகவும் உழைப்பை அர்ப்பணித்தவர். அந்த உழைப்பும் அர்ப்பணிப்பும் அவரை நிறுவன எதிரியாக்குகிறது. அர்ப்பணிப்புக்கு எதிராக அடக்குமுறை. அவர் நாடு கடத்தப்படுகிறார். நாடு கடத்தப்படும் ஒவ்வொரு இடத்திலும் அவருடைய அர்ப்பணிப்புக் குணமும் அன்பும் பெருகியபடி இருக்கின்றன. மக்களுக்கும் அவருக்கும் இடையிலான நெருக்கமும் பெருகியபடி இக்கிறது. நிறுவன எதிர்ப்புகள் பெருகப்பெருக அதற்கு இணையாக மக்கள் ஆதரவும் பெருகுகிறது. காலமெல்லாம் அலைக்கழிக்கப்பட்டு, பிறகு ஏதோ ஒரு தருணத்தில் அவன் உயிர் பிரிகிறது. கவிதையின் இரண்டாம் பகுதியில் தம் நெஞ்சில் நிறைந்த அந்த நண்பரின் உருவத்தை மக்கள் பாறையில் செதுக்கிவைக்கிறார்கள். மனிதனை நாடு கடத்துவதைப்போல பாறையை நாடு கடத்த இயலாத நிறுவனம் இயலாமையின் கசப்போடு வேடிக்கை பார்க்கிறது. எது பரவிவடக்கூடும் என்று நிறுவனம் அஞ்சியதோ, அது அமைதியாகவும் வேகமாகவும் பரவுகிறது. எந்த முகத்தை யாரும் பார்த்துவிடக்கூடாது என்று நிறுவனம் நினைத்ததோ அந்த முகம் இருபத்துநாலு மணிநேரமும் பார்வையிலேயே படும்படி உயரமாக கம்பீரமாக எழுந்து நிற்கிறது. கவிதையின் மூன்றாம் பகுதியில் நெருதாவின் ஒற்றைவரிக் குறிப்பு இடம்பெறுகிறது. “சொந்த நாட்டில் கல்லாக மாறி வாழ்கிறான்” என்பது அவ்வரி. மேலோட்டமாக வாசிக்கும்போது இரக்கமும் துயரமும் படிந்த வரியாகவே இது தோற்றம் தருகிறது. திரும்பித்திரும்ப இவ்வரிகளை அசைபோடும்போது வரியின் ஆழத்தில் பதிந்திருக்கும் உறுதியையும் நம்பிக்கையையும் எட்டித் தொட்டுவிட முடியும். காலமெல்லாம் தொடர்ச்சியாக நாடு கடத்தப்பட்டவன் அவன். புறநிலையில் இன்று அவன் அசைக்கமுடியாத மாபெரும் சிற்பம். அகநிலையில் அவன் அழிக்கப்பட்ட முடியாத மாபெரும் நினைவு. கையறு நிலையில் நிறுவனத்தைத் திகைத்து நிற்கவைத்துவிட்டது அச்சிற்பம். சகல சக்திகளும் அடங்கிய நிறுவனம் கம்பீரமான எளிய சிற்பத்தின்முன் கையைப் பிசைந்துகொண்டும் தன்னைத்தானெ நொந்துகொண்டும் நிற்கிறது. ஏவாழ்கிறான்ஏ என்னும் சொல்லில் இருக்கிற அழுத்தம் கவனிக்கத்தக்கது. மரணத்துக்குப் பின்னும் நீடிக்கும் வாழ்வு என்பது இதுதான் போலும்.

“வனத்தில் வழிதவறிய நான்” என்னும் சிறிய கவிதை வழங்கும் அனுபவம் மகத்தானது. வனத்தில் தற்செயலாக வழிதவறிப் போய்விடும்போது ¨க்குக் கிடைத்த கம்மங்கதிரைக் கடிப்பதன் வழியே ஊறிப் பெருகுகின்றன இளமை நினைவுகள். அவற்றைத் தொடர்ந்து இழந்துபோன பிரதேச நினைவுகள் அணைத்துக்கொள்கின்றன. ஒரு பிரதேசத்தைவிட்டு வெளியேறியவனுடைய அல்லது வெளியேற்றப்பட்டவனுடைய துக்கம் கடுமையானது. பிரியத்துக்குரிய பிரதேசம் என்பது வெறும் மண்சார்ந்தது மட்டுமல்ல, அது மனம் சார்ந்தது. ஒரு புகைப்படத் தொகுதியைப்போல மனம் தன் பிரதேசத்து அனுபவங்களைக் காட்சித் தொகுப்புகளாக்கிப் பாதுகாக்கிறது. அகஉலகில் அத்தொகுப்புக்கு இணையாக புறஉலகில் ஒரு காட்சி அல்லது அனுபவம் வாய்த்ததும் அப்பிரதேசம் உயிர்த்தெழுகிறது.
¦ந்ருதாவின் இன்னொரு சிறந்த கவிதை “கடல் ஆமை”. நெடுந்தொலைவு நடந்துவரும் ஒரு கடலாமையைப்பற்றிய குறிப்போடு கவிதை தொடங்குகிறது. பிறகு, அதன் இயக்கங்களைப்பற்றியும் இயல்புகளைப்பற்றியும் சிற்சில குறிப்புகள் இடம்பெறுகின்றன. தீவிரமான இயக்கத்தைப்பற்றிய குறிப்புகளை முன்வைத்த முதல் பகுதியை அடுத்து உறங்கிக்கொண்டிருக்கும் அதன் தோற்றம் முன்வைக்கப்படுகிறது. அலைகளின் காதலை ஏற்றுக்கொள்ள முடியாத பருவம் இப்போது. இரும்புத் தகடுபோல கெட்டியாக மாறி எல்லா நேரமும் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது. கடலையும் வானத்தையும் பூமியையும் பலமுறைகள் மாறிமாறிப் பார்த்த விழிகளை மூடி பாறைகளின் இடுக்கில் உறங்குகிறது. ஒரு பகுதியில் தீவிரமான இயக்கம் இன்னொரு பகுதியில் தீவிரமான அமைதி. தீவிரமாக இயங்கியதெல்லாம் இவ்வாறு அமைதியில் திளைப்பதற்காகத்தானா என்றும் இந்த அமைதியை அடையத்தான் அவ்வளவு முயற்சிகளா என்றும் கேள்விகள் மாறிமாறி அலைபாய்கின்றன. கடல்ஆமையை ஒரு மனிதனாக அல்லது மனித இனத்தின் படிமமாக மாற்றிப் பார்க்கும்போது கவிதையின் அனுபவம் இன்னும் கூர்மைப்படுகிறது. அமைதியாக இழுத்துவிடும் ஒவ்வொரு மூச்சுக்குப் பின்னணியிலும் மறைந்திருக்கிறது ஆழ்ந்த அனுபவம். அனுபவம் அற்ற அமைதி அல்லது அமைதியாக இருக்கத் தெரியாத அனுபவம் இரண்டும் எவ்விதமாக இருக்கக்கூடும் என்று நாமே சில காட்சிகளை உருவாக்கி எடையிட்டுப் பார்க்கத் தேவையான இடைவெளி கவிதையில் இடம்பெற்றிருக்கிறது. அனுபவம் இல்லாத அமைதி வெறும் கேலிக்கூத்து அல்லது பகல்வேஷமாக முடியும். அமைதியாக இருக்கத் தெரியாத அனுபவம் வெறும் ஆரவாரமாகவும் பகட்டாகவும் காட்சியளிக்கக்கூடும். இப்படியும் பல காட்சிகளை நாம் வாழ்க்கையில் கண்டதுண்டு. கடல்ஆமையின் அறிமுகம் ஒரு வாழ்க்கை முறையின் அறிமுகம் என்று எடுத்துக்கொள்ளலாம்.

பாறையில் ஓர் உருவம், கடல் ஆமை இரண்டு கவிதைகளின் குணங்களும் கூடி முயங்கிய ஒரு மகத்தான கவிதை “மக்கள்”. எளிய மக்கள் காலம்காலமாக பட்ட பாடுகளை ஒருவிதமான தொகுப்புமுறையில் முன்வைத்தபடி நீளும் இந்த நெடுங்கவிதை முத்தாய்ப்பான ஒரு வாழ்த்துக் குறிப்போடு முடிவடைகிறது. “அந்த மனிதனை எனக்கு நன்றாகத் தெரியும்” என்றுதான் தொடங்குகிறது அக்கவிதை. ஆதிகாலத்து மனிதன் அவன். குதிரைமீதோ அல்லது வாகனத்திலோ பயணம் செய்யாதவன் அவன். கால்நடையாகவே காலமெல்லாம் நடந்து பல ஊர்களையும் தேசங்களையும் கடந்தவன் அவன். போர் ஆயுதங்கள் ஒருபோதும் அவனுடைய கைகளில் இருந்ததில்லை. மாறாக, அவனுடைய தோள்களில் வலைகள், கோடரி, சுத்தியல், மண்வெட்டி என வேலைக்கருவிகளே இருக்கும். ஒருநாளும் அவன் சக மனிதர்களோடு மோதியதில்லை. மாறாக, அவன் போராட்டம் இயற்கையோடு நிகழும். விளைநிலத்தை உருவாக்கக் காடுகளோடும், பயிரை உருவாக்கி வளர்க்க நிலங்களோடும், விறகுக்காக மரங்களோடும், சுவர் எழுப்புவதற்காக மண்ணோடும் மட்டுமே அவன் போராட்டம் நிகழ்கிறது. அப்போதுதான் அவன் சற்றும் விரும்பாத யுத்தம் இந்த மண்ணில் உருவாகிறது. காடுகளையும் பயிர்களையும் சுவர்களையும் வீழ்த்துகிறது அந்த யுத்தம். நகரம் கைப்பிடிச் சாம்பலாகிவிடுகிறது. முதன்முதலாக அந்த மனிதனோடு நிழல்மனிதனாக யுத்தத்தின் இருப்பும் உணர்த்தப்படுகிறது. அமைதியும் இன்பமும் மதிப்பும் அடையவேண்டிய அவன் வாழ்வு எதையுமே அடையாமல் ஏன் பொசுங்குகிறது என்ற கேள்வியும் முதன்முதலாக திரண்டெழுகிறது. தொடர்ந்து வெவ்வேறு காலகட்ட மனிதர்கள் முன்வைக்கப்படுகிறார்கள். அனைவரும் அந்த ஆதார மனிதனுடைய தொடர்ச்சி. அனைவரும் அந்தந்தக் கட்டத்து யுத்தங்களில் பலியாகி வீழ்ந்தவர்கள். தாக்கும் முறையும் தோற்கும் முறையும் மாறுகிறதே தவிர வேறெந்த மாற்றமும் அவர்கள் வாழ்வில் நிகழ்வதில்லை. புரிந்துகொள்ள முடியாத அந்தப் புதிர் மீண்டும்மீண்டும் சிக்கலுறுகிறது. அந்தப் போக்கில்தான் யார் மக்கள் என்னும் கேள்வி திரண்டெழுகிறது. உருவாக்குகிறவனா அல்லது அழிக்கிறவனா என்னும் கேள்விக்கு கவிஞரின் மனம் வாழ்க்கைக்கு ஒளியேற்றுபவர்களே மக்கள் என்ற விடையைக் கண்டடைகிறது. அத்தகையவர்களே மரணமற்றவர்கள் என்ற குறிப்போடு “என்றும் நீ வாழ்ந்துகொண்டிருப்பாய்” என்று வாழ்த்துரைக்கிறது.

ஒரு சிறுகதைக்குரிய தன்மையோடு விளங்கும் “தந்தை” என்னும் கவிதை படிப்பவருடைய மனத்தில் வெகுவிரைவாக இடம்பிடித்துவிடக்கூடிய சித்திரமாகும். புகைவண்டித் தொழிலாளியை “பூமியின்மீது ஒரு கடற்பயணி” என்று வியப்போடு சித்தரிக்கும் இக்கவிதை ஒரு சிறுவனுடைய பார்வைக் கோணத்திலிருந்து முன்வைக்கப்படுகிறது. புகைவண்டிப் பணியாளரான தனது தந்தை பணியை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வருவதையும் பணிக்குச் செல்வதையும் ஏதோ ஒரு மாயச் செய்கையைப் போலவும் அல்லது கதைநிகழ்ச்சி போலவும் அவன் மனத்தில் பதிந்துபோயிருக்கிறது. அவனுக்கு அவர் வருவதும் ஆச்சரியம். செல்வதும் அதைவிட ஆச்சரியம். சூரியன் முளைத்த மறுகணமே தாடியைக் கோதியபடி தயார் நிலையில் உள்ள விளக்குகளோடு பனிபோர்த்திய புகைவண்டி நிலையத்தைநோக்கி நடந்துசெல்லும் அவர் பின்னிரவில் நண்பர்களோடு சேர்ந்து திரும்பி வருகிறார். ஓய்வின்றி பேச்சிலேயே மூழ்கியிருக்கிற அப்பா. நண்பர்களோடு சிரித்துப் பேசி அரட்டையடிக்கிற அப்பா. வாழ்க்கையின் அச்சிலும் நட்பின் ஆண்மையிலும் இருக்கும் அப்பா. அதிகாலை விழிப்புக்கும் பிரயாணங்களுக்கும் இடையில், வருகைக்கும் புறப்பாட்டுக்கும் இடையில் மங்கலான ஞாபகமாக மனத்தில் பதிந்துவிட்ட அப்பா. தினமும் பிரயாணிகளையும் சரக்குகளையும் ஏற்றிச் செல்லும் புகைவண்டியில் ஏறிச் செல்வதைப்போல ஒருநாள் அவன் அப்பா மரணத்தின் புகைவண்டி ஏறிப் போய்விட்டார், அப்புறம் வரவே இல்லை என்ற குறிப்போடு கவிதை முடிவடைகிறது. புகைவண்டிப் பயணம் ஒருகட்டம் வரைக்கும் வாழ்க்கைப் பயணமாக நீண்டு, இன்னொரு கட்டத்தில் மரணத்தின் பயணமாக முடிவடைந்துவிடுகிறது. வாழ்க்கையையும் மரணத்தையும் பயணத்தின் வெவ்வேறு பாகங்களாக வகுத்து பெருமூச்சின் வேதனையை வெளிப்படுத்துகிறது கவிதை. குழந்தைமையின் சொல்லாக வந்துவிழும் அச்சொற்கள் மிகப்பெரிய தரிசனமாக மாறிவிடுகிறது.
“எல்லாரையும் அலுப்படையச் செய்யும் ஒரு சோகப்பாட்டு” கவிதை முன்வைக்கக்கூடிய தரிசனம் அழகியல் தன்மை மிகுந்தது. “இரவு முழுதும் வீணாக்கிக்கொண்டிருந்தேன், எதையோ எண்ணிக்கொண்டு, எசுக்களையல்ல, பவுண்டுகளையல்ல, ·ப்ராங்குகளையுமல்ல, டாலர்களையுமல்ல, அதுபோன்ற எதையுமல்ல” என்று தொடரும் அக்கவிதை வீணாக்கிய பல பொழுதுகளைப்பற்றியும் அம்சங்களையும் பட்டியலிடுகிறது. காரணமில்லாமல் எதைஎதையோ எண்ணிக்கொண்டு கழிகிறது வாழ்வு. அலைகளில் வீணாகிறது இரவு. யுத்தத்தில் வீணாகிறது சமாதானம். பூமிமீது மழை வீணாக்கப்படுகிறது. இறுதியில் வாழ்க்கையில் மரணத்தை வீணாக்குவதாக ஒரு குறிப்பு இடம்பெறுகிறது. ஒவ்வொரு அடுக்குமுறையிலும் இடம்பெறும் வரிகள் கவிதையை மீண்டும்மீண்டும் படிக்கும் ஆர்வத்தைத் து¡ண்டுகிறது. இரண்டாவது மூன்றாவது வாசிப்பில்தான் “எதையோ எண்ணிக்கொண்டு” என்கிற வசீகரமான சொல் கவிதையில் மீண்டும் மீண்டும் இடம்பெறுவதை உணர்கிறோம். இந்த எண்ணத்துக்கும் வீணாக்குவதற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதை உடனடியாகப் புரிந்துகொள்கிறோம். எண்ணம் என்பதே ஒன்றைப் புரிந்துகொள்வதற்கும் மகிழ்ச்சியை அடையாளம் காண்பதற்கும் அதைப் பலமடங்காகப் பெருக்கிக்கொள்வதற்கும்தான் என்கிற கருத்தியலுக்கு நேர்மாறாக எண்ணம் என்பது எதையோ வீணாக்குவதாக ஏன் அமையவேண்டும் என்னும் கேள்வி நம் முன் திரண்டு நிற்கிறது. திரும்பத்திரும்ப இக்கேள்வியை ஒட்டி யோசிக்கும் வேளையில் பொருத்தமற்ற எண்ணங்களே இதற்கெல்லாம் காரணம் என்னும் உண்மை புரிகிறது. கரையில் நிற்கும்போது கடலையும் கடலில் நீந்தும்போது கரையையும் எண்ணிக்கொண்டிருக்கும் விசித்திரத்துக்கு என்ன காரணம்? மழை பொழியும்போது வெயிலையும் வெயிலின் வெப்பத்தில் மழையையும் மாறிமாறி எண்ணும் தன்மைக்கு எப்படியோ நம் மனம் இடைவிடாமல் ஆட்படுகிறது. மனத்தில் நிகழும் இந்த வசீகரக்கூத்து வாழ்வில் சோகத்தையும் வேதனையையும் படியவைத்துவிடுகிறது.
பாப்லோ நெருதாவின் கவிதைகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் படிமம் கடல். பிரயாணங்களும் அலைதலும் தவிர்க்கமுடியாத அம்சங்களாக காலமெல்லாம் திரிந்துகொண்டே இருந்த ஒரு கவிஞனை கடல் ஈர்த்ததில் ஆச்சரியமில்லை. கடலைப்போலவே அவரும் ஆச்சரியம் கொடுப்பவராகவும் தீவிரம் மிகுந்தவராகவும் இருந்தார். அலைகளின் வசீகரத்தை அவர் கவிதைகளும் கொண்டிருந்தன. இந்த மண்ணைவிட்டு அவர் மறைந்து பல ஆண்டுகள் கழிந்திருப்பினும் அவருடைய கவிதைகள் இன்றும் அலைவீசும் கடலைப்போலவே விரிவும் ஆழமும் கொண்டவையாக விளங்குகின்றன.

(சாளரம் – ஜனவரி 2007- இலக்கியமலருக்காக எழுதிய கட்டுரை)

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்