நாக.இளங்கோவன்
வரலாறுகளிலும், வரலாற்றுக் கதைகளிலும் படித்திருந்த கடல்கோள் ஒன்றனை கண்ணெதிரில் கண்டுவிட்ட அதிர்வில் இருந்து தமிழ் தேசங்கள் விடுபட காலங்கள் ஆகும்.
இந்தப் பேரழிவைக் கண்டு இரங்கும் தனிமனிதர்களின் நெஞ்சங்கள் போற்றத்தக்கவை. அண்ணாமலை என்ற தொலைக்காட்சித் தொடரின் பாடலில் ‘….அதனால்தான் சலிக்காமல் சுழலுது பூமி ‘ என்று ஒரு வரி வரும். துன்பம் நேர்ந்திருக்கிற வேளையில் அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று தோன்றுகிற இந்த நெஞ்சங்களால்தான் பூமியும் சலிக்காமல் சுழல்கிறது போலும்.
இந்த உதவிக் கரங்களின் உதவிகள் பலனுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் அமைந்தும் விட்டால் அதுதான் சரியான அறப்பணியாக இருக்கக் கூடும்.
இந்த உதவிகளில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. அரசுகளுக்கு இருக்கும் அக்கறை மற்றும் கருணையுள்ளத்திற்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் தனிமனிதர்களுக்கும் இருக்கின்ற அதே உணர்வுகளுக்கும் எந்த வேறுபாட்டையும் காண இயலவில்லை.
உள்ளம் என்பது ஒன்றாக இருக்கும் அதே வேளையில், செயல்பாட்டில் அரசாங்கம் சூழ்நிலைக்கேற்ற அணுகுமுறையையும் திட்டங்களையும் செய்ய முடியாத கையாலாகாத நிலையில் உள்ளது.எனினும் ஏதோ செய்து கொண்டிருக்கிறது. இது தமிழக அரசாங்கத்துக்கு மட்டுமல்ல இந்திய நடுவண் அரசாங்கத்திற்கும் பொருந்தும்.
இந்நிலையில், அலை அடித்த அந்த பத்து இருபது நிமிடங்களுக்குப் பின்னர் உதவி செய்திருக்கக் கூடிய தனி மனிதர்கள் மற்றும் அண்டைய மக்களை விட சிறந்த உதவியை யாரும் செய்து விடப் போவதில்லை.
இந்திய அரசாங்கமும் விஞ்ஞானிகளும் EWS என்கின்ற ‘சரவல் கால எச்சரிக்கைச் சிட்டம் ‘ இல்லாததுதான் காரணம் என்று முடிவெடுத்து அறிவித்ததுதான் அவர்கள் செய்த அவசரகாலப் பணிகளில் ஒன்று.
ஆனால், கடலிலே அதுவும் ஒரு மாபெரும் கடலிலே, 8.9 இரிக்டருக்கு நிலநடுக்கம் நேர்ந்திருக்கிறது என்ற சேதி மட்டும் எல்லா நாட்டு விஞ்ஞானிகளையும் அரசுகளையும் அடுத்த சில நிமிடங்களில் அடைந்திருக்கிறது.
ஒரு நிலநடுக்கம் கடலில் நேர்ந்தால் கடல்கோள் வரும் என்றும் அது கண்ணில் பட்ட நிலங்களை கவ்விவிடும் என்ற சேதி நமது விஞ்ஞான மூளைகளுக்கு எட்டவேயில்லை.குறைந்த பக்கம் கடலில் அலைகளின் தன்மை மாறுபடும் என்று கூடவா தோன்றவில்லை ?
ஆறரை மணிக்கு நடுக்கம் ஏற்பட்டு, பின்னர் இரண்டு மணிநேர காலம் இருந்திருக்கிறது கரையில் அலைகள் தன் கொடுமைகளைச் செய்ய! ஆனால் நமது ‘அறிவுசார் ‘ உலகிற்கு கடலில் நடந்த நடுக்கம் ஏதோ ‘மீன்களைத்தான் பாதிக்கும் ‘ என்று மட்டும் எண்ண வைத்து விட்டதோ என்று தெரியவில்லை.
நமது அரசுகள், விஞ்ஞானிகளை விட, வழி வழியாக கடலினை அறிந்திருக்கும் மீனவக் குமுகாயத்திற்கு மட்டும் இந்த நிலநடுக்கச் சேதியினை சரியான நேரத்தில், பரவலான முறையில் நமது அரசுகளும் விஞ்ஞானிகளும் செய்திருப்பார்களேயானால், மீனவ மக்களே கடல் கோள் வரவினை எதிர்பார்த்துத் தங்களைக் காத்துக் கொண்டிருப்பார்கள் என்பது மட்டுமன்றி பிறரையும் காத்திருப்பார்கள்.
வழி வழி வந்த மீனவக் குமுகாயத்திற்கு இந்த அறிவு இந்திய அரசாங்க மற்றும் விஞ்ஞான உலகை விட அதிகம் என்று என்னால் நம்ப முடிகிறது. ஒரு படிக்காத பாமர மீனவனுக்கு இருந்திருக்கும் என்று என்னால் நம்ப முடிகிற அந்த அறிவு நமது அறிவு-சார், தகவல்-சார், அரசு-சார் உலகுக்கு இல்லை என்பது கசப்பான உண்மை.
இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கையிலேயே சென்னையை மேலும் ஒரு கடல்கோள் தாக்கப் போவதாக வானொலிகளும் தொலைக்காட்சிகளும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. வானொலியில் 30 வருடங்களாகக் கேட்டு அலுத்துப் போன ‘மீனவர்கள் கடலுக்குள் போகவேண்டாம் என்று எச்சரிக்கப் படுகிறார்கள் ‘ என்று அறிவிக்கையைச் சொல்கிறார்கள்.
அடப் பாவிகளா, இந்த இழவை ஞாயிற்றுக் கிழமை காலையில் சொல்லியிருக்கக் கூடாதா ? இப்ப எங்கே மீனவன் இருக்கிறான் ? எல்லாரும்தான் சிதம்பரத்தில் தப்பித்த பலரைத் தவிர ஒட்டு மொத்தமாக அழிந்து போய் விட்டார்களே ?
இந்த எச்சரிக்கையைக் கூட செய்ய இயலாமல் ஞாயிற்றுக் கிழமை விடுப்பில் நமது விஞ்ஞான மற்றும் அரசாங்க உலகம் தூங்கிப் போய்விட்டது என்று எண்ணும்போது நமது நிலையை நாம் நொந்து கொள்ளத்தான் வேண்டும்.
ஆனால் படித்தவர்கள் அல்லவா ? அதனால் புத்திசாலித்தனமாக சுனாமி அறிவிக்கைச் சிட்டத்தை இந்தியா செயல்படுத்தும் என்று ஒரு சமாதானத்தைச் சொல்லி நம்மையும் அதை நம்ப வைத்து விட்டார்கள். கடலிலே நடுக்கம் என்றால் கடல்கோள் உண்டு; அளவுகள் வேறுபடலாம் அவ்வளவுதான். இதற்கு எதற்கு ‘சுனாமி எச்சரிப்புகளின் இல்லாமை ‘ சுட்டிக் காட்டப்படல் வேண்டும் ?
இப்படிப் பட்ட அரசாங்க எந்திரங்கள், கடல்கோளின் பின்னரும் சரியான முறையில் ‘உதவி நிர்வாகத்தை ‘ அமைத்து நிவாரணப் பணிகளைச் செய்யாமல் வெறும் அமைச்சர்கள் பவனிகளை நடத்தி வருகிறது.
மத்திய, மாநில, மாவட்ட, வட்ட, கிராம நிர்வாகங்கள் அவசரகால உதவி மய்யங்கள் அமைத்து, அதனோடு தொண்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் தனிமனித் தொண்டுகளை ஒருங்கிணைத்து ஒரு பெரிய பணியை ஆற்றியிருக்கத் தவறிவிட்டது நமது குமுகாயமும் குமுகாயத்தைக் காக்கும் அரசுகளும்.
ஆனால், வெட்கங்கெட்ட இந்த படித்த மேதைகள் பன்னாட்டு இந்நாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு மையங்கள் (call centers), தொடர்பு மையங்கள் (contact centers), சேவை மையங்கள்(service centers) என்று பல வணிக அமைப்புகளை அமைப்பதில் வல்லுநர்கள் என்று எண்ணிப் பார்த்தால் அடப் பாவிக் குமுகாயமே, ‘இட்ட ஆணைக்கு எழுந்து நிற்கும் குமுகாயமே, சுட்ட காலுக்கு மருந்து போட்டுக் கொள்ளத் தெரியவில்லையே உனக்கு! ‘ என்று புலம்ப மட்டும்தான் முடிகிறது.
ஆக, அறிவு இல்லாமல் இல்லை. ஆனால் அதனை நமக்கு தேவையான பொழுது, அவசரத் தேவையான பொழுது நம்மால் அப்படி அவசரகால உதவி ஒருங்கிணைப்பு செய்து கொள்ள இயலவில்லை என்பது உண்மை.
அதே நேரத்தில் கடல் கோளைத் தவிர மழை, புயல் போன்ற என்ற வேறு எந்த இடர்களும் உதவிக்குக் குறுக்கே வரவில்லை.
சூழ்நிலையின் கொடுமை தெரிய சில மணிகள் ஆகியிருந்தாலும் இரண்டு நாள்களுக்கு அங்கு முழுதாக ஒன்றுமே நடக்க வில்லை என்பது ஆழ்ந்த இரங்கலுக்கு உரியதாகும்.
அரசியல் தலைவர் பிறந்த நாள் என்றால் கூட கட்சித் தொண்டர்கள் வரிந்து கட்டிக் கொண்டு மரம் நடுவார்கள் அல்லது அன்னதானம் செய்வார்கள்.
தி.மு.க 1 கோடி, அ.தி.மு.க 1 கோடி, இதர கட்சிகள் 1 கோடி என்று எண்ணிக்கையில் கட்சி உறுப்பினர்களைக் கொண்ட அரசியலாரும் இரசிக மன்றங்கள் வைத்திருக்கும் பெரும் நடிகர்களின் இரசிகர்களும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி நிவாரண வேலைகளைச் செய்ய வில்லை; மாறாக வை.கோ முதற்கொண்டு பலரும் ‘ஆறுதல் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள் ‘.
இவர்கள் மாநாடு நடத்தினால் பல மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் வந்து குவிவார்கள். ஆனால், அத்தொண்டர்களை இன்று கடற்கரையில் பணி செய்ய ஒருவரும் ஆணையிடவும் இல்லை, அழைக்கவும் இல்லை.
‘உன் கரங்கள் தேவைப்படுகையில்
உன் ஆறுதல் யாருக்கு வேண்டும் ? ‘
ஆகவே, உதவி அல்லது நிவாரண ஒருங்கிணைப்பு சரியாக முறைப்படுத்தப் படாத, செயல் படுத்தப் படாத இந்த நிலையில் எப்படி உதவுவது என்ற கவலையை அனைவரும் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
உதவிகள் என்றால் என்ன ?
ஒருவர் அனுப்பும் பணமோ, பொருளோ சரியானவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதுதான் உதவி செய்யும் உள்ளங்களுக்கு மனநிறைவானதாகும். உதவிகள், உடனடி உதவி, சின்னாள் உதவி, குறைந்த கால உதவி, நீண்ட கால உதவி என்று நான்கு வகைப்படுத்தலாம்.
இதில் அலை இழுத்துப் போகையிலும், அலை நின்றவுடனும் செய்யப் பட்ட ‘அந்த உடனடி உதவிகளை ‘ விட சிறந்ததொரு உதவியை இனி யாரும் செய்து விடப் போவதில்லை. இந்த உதவிகளைச் செய்த மக்களுக்கு மானசீக நன்றியை நாம் தெரிவிக்க வேண்டும்.
அடுத்ததாக கொடுமை நிகழ்ந்த பிற்பாடு சில நாள்கள் மீட்பிலும், ஆதரவு கேட்கக் கூடத் தோன்றாத அந்த மனநிலையில் உண்டியும் இடமும் கொடுத்து உதவிய அந்த உதவிகள் போற்றப் படத்தக்கவை. அதைச் செய்தவர்களுக்கும் நமது நன்றிகள் போய்ச்சேரவேண்டும்.
தற்போது உலகம் முழுவதும் அனைவரும் முண்டியடித்து உதவி செய்ய முயல்கிறார்கள். இன்றைய அளவில் எல்லா மிடையங்களும் (media),எல்லா சிறு பெரு நிறுவனங்களும்.எல்லா தொண்டு நிறுவனங்களும், களத்தில் இறங்கியிருக்கின்றன.
இவ்வுதவிகள் எவ்வகைக்கு உதவ வேண்டும் ?
குறைந்த கால அடிப்படையில் :
1) ஓரிரு மாதங்களுக்கு அவர்களுக்குத் தற்காலிகத் தங்கல்கள் வேண்டும்.
2) உடுத்தவும், தை மாசி மாதப் பனிகால குளிரையும் தாங்க துணிகள் வேண்டும்.
3) மூன்று வேளை சோறு வேண்டும். போடக் கூடிய சோறு அண்டா அண்டாவாக வைத்துக் கொண்டு பிச்சை போடுதல் போல இருக்கக் கூடாது.போதிய பாத்திரங்களும் வேண்டும். அல்லது தற்காலிக பயனுக்கான தட்டுகள் (காகிதத் தட்டுகள்) போன்றவை வேண்டும்.
4) தற்காலிகத் தங்கல்களில் சோறு கிடைத்தாலும் போதிய தண்ணீர் கிடைக்காது. அதனால் தண்ணீர் வேண்டும்.
5) தங்கும் இடங்களுக்கு போதிய விளக்கு வசதி வேண்டும்.
6) எல்லாவற்றையும் விட மலம் சலம் கழிக்க வசதிகள் வேண்டும். இதைச் செய்யாமல் மாத்திரை மருந்து கொடுப்பதில் பயனில்லை.
7)பிணிகள் வாராதிருக்கவும், வந்த பிணி போகவும் தொடர் மருத்துவம் இருந்து கொண்டே இருக்கவும்.
8) இழப்பில் தவிப்போருக்கு ஆறுதலாக இருக்கவும் நம்பிக்கை ஏற்படுத்தவும் நல்ல ஆன்மீக அல்லது பொதுவான சொற்பொழிவுகள் நிகழவேண்டும்
(மற்றவைகளைச் செய்யாமல், 8 வது சங்கதியைச் செய்தால் அடிக்க வருவார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்)
நீண்ட கால அடைப்படையில்:
1) வீடு வாசல் இழந்து தவிப்போர் அனைவருக்கும் நிரந்தரமான வீடுகள் அமைத்துத் தரப்படல் வேண்டும். அவைகள் சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்; இல்லாவிடில் எதிர்காலத்தில் முயற்சி வீணாகப் போகக் கூடும். அதற்கு முன் உண்மையிலேயே பாதிக்கப் பட்டவர்களா என்று பார்த்தலும் தேவை.
2) இழப்புக்கள் பலவிதம். குடும்பத் தலைவனை இழந்தவர்கள், தலைவியை இழந்தவர்கள், வருமானம் ஈட்டியவர்களை இழந்தவர்கள், வாரிசுகளை இழந்தவர்கள், அல்லது அநாதையான சிறார்கள் என்று பல விருக்கும். அத்தன்மை பார்த்து அவர்களுக்கு கல்விக் கொடையோ அல்லது ஊதியம் ஈட்ட வழியோ செய்தல் நலம்.
3) ஆதரவின்றிப் போன மழைலைகளை/சிறார்களை அணைத்துக் கொள்ள விரும்புதலோ, அல்லது அவர்களை தத்து எடுத்திருக்கும் நிறுவனங்களை ஆதரிப்பதோ சரியானதாக இருக்கும்.
4) ஆதரவின்றிப் போன முதியவர்களை, காக்கும் இல்லங்களில் சேர்த்துக் காப்பதும் சரியானதாக இருக்கும்.
இவைகளை எப்படிச் செய்வது ?
1) தற்காலிக மருத்துவ உதவிகள் செய்ய முனைவோர், அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் மருத்துவர்களை அணுகி அவர்களுக்குப் பணம் கொடுத்து தேவையான மருந்துகளைக் கொடுத்து பணியில் அமர்த்தலாம். மருத்துவர்கள் எல்லோரையும் தொண்டாற்றக் கூப்பிட்டால் அதை அவர்களால் முழுமையாகச் செய்ய முடியாது. குறிப்பாக கிராம மற்றும் சிறு நகரங்களில் வாய்ப்புக் குறைவாக உள்ள மருத்துவர்கள்தான் இதற்குத் தகுதியானவர்கள். அதுவன்றி, சித்த, ஓமியோபதி, கிராம மருத்துவர்களைப் பணியில் அமர்த்தினால் அது அவர்களுக்கும் வருவாயைக் கொடுப்பதோடு பணியும் சரியாக நடக்க உதவும்.
அதை விடுத்து நகரத்து மருத்துவர்களை கூட்டம் கூட்டமாக கூட்டிப் போய் ஊசி போட்டு மருந்து கொடுத்தல் எல்லாம் ஆடம்பரமாகவே முடிய வாய்ப்பு அதிகம்.
2) உணவு அளிக்க முனைவோர்கள், அப்பகுதியில் இருக்கும் ஒன்று அல்லது சில சிறிய, மிகச் சிறிய உணவகங்களைப் பிடித்து அப்பகுதி முழுக்க சோறு ஆக்கிப் போடச் செய்யலாம்.
மிகச் சிறிய மற்றும் தேநீர்க்கடை கணக்காக கடை வைத்துள்ள மக்கள், சாதாரண மக்களோடு சேர்ந்து வாழும் அதிகத் தொடர்புள்ள மக்கள்; ஏமாற்ற மாட்டார்கள்.
அவர்களுக்கும் வருவாயும் கிடைக்கும், போக வேண்டிய உதவியும் போய்ச் சேரும்.
3) தண்ணீர் வசதி செய்ய முனைவோர்கள், தண்ணீர்ப் பந்தலை ஏற்படுத்தி விடலாம். ஓரிரு மாதங்களுக்கு உள்ளூர் அல்லது உள்ளூர்த் தொடர்புள்ள ஆள்களை வைத்து தண்ணீர்ப் பந்தலை அமைத்து விட்டால் அது மிகப் பெரிய புண்ணியத்தைத் தரும்.
4) துணிமணிகள் பெரும்பாலும் உள்ளூர் வாசிகளால், அண்டை நகர கிராம தொண்டு அமைப்புகளால் சென்று சேர்ந்து விடும். அதைப் பற்றி அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை.
5) குழந்தையுணவுகளான பால் போன்றவை முக்கியமானவை. பால் தமிழகத்தில் நிறைய கிடைக்கிறது. தெரிவு செய்த இடத்தில் இருக்கும் பால் கடைகளில் பணம் கொடுத்து நிறைய செய்யச் செய்யலாம்.
6) அந்த ஞாயிறன்று நண்பகலிற்கெல்லாம் வடலூர் தரும ஞான சபை வளாகத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக கடலூர் கடற்கரையில் இருந்து தப்பித்துக் கண்ணீரும் கம்பலையுமாய் ஓடி வந்து ஆங்காங்கு அமர்ந்ததை என் கண்களால் கண்டேன். திக்கற்றவர்களுக்குத் தெய்வந்தான் துணை என்று சொல்வது இதனால்தான் என்று எனக்குப் பட்டது. ஆகவே இம்மாதிரியான சபைகள், ஆலயங்கள் போன்றவை வாயிலாக உதவிகளைப் போய்ச் சேரவைப்பதும் நலம் பயக்கும்.
மிக முக்கியமாக, ஒருங்கிணைப்பு இல்லாத நிலையில் அல்லது குறைவாக இருக்கையில், செவ்வனே செய்ய வேண்டுமானால் அவரவர்களுக்கு அப்பகுதியில் இருக்கும் நன்கு அறிந்த உறவினர் அல்லது நண்பர்கள் அல்லது நிறுவனங்கள் மூலமாக செய்வது நலம் பயப்பதாகும்.
எல்லோரும் ஆர்வமாக இருப்பதால், கும்பலில் கோவிந்தா போடுவது போல உதவிகளைச் செய்தால் அது கடலில் கரைந்த பெருங்காயம் போல் ஆகி, நானும் உதவினேன் என்று பெருமை பேச மட்டுமே உதவும் என்பதைக் கட்டாயம் உணரவேண்டும்.
உதவி செய்வது நமது பெருமைக்காக அல்ல, நமது கடமை என்று எண்ணம் மட்டுமெ இருக்க வேண்டும்.
ஆகையால், செய்யுமுன், என்ன செய்வது என்பதைத் தெளிவாக சிந்தித்து செய்தல் வேண்டும்.
சரியானவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். சில புல்லுருவிகளைத்தவிர. ஆனால் மிகவும் சரியானவர்கள் என்றால், அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் மக்களை நன்கு அறிந்த, தொடர்புகள் கொண்ட சில நல்லவர்கள் மற்றும் நல்ல அமைப்புகள் மட்டுமே இருக்க முடியும்.
நடிகை சோதிகா நேற்று இந்த அறப்பணியை ஆற்றினார். ஆனால் இவரைப் போன்றவர்களும், நகரத்தில் வாழும் பலருக்கும் பாதிக்கப் பட்ட பகுதிகளில் நின்று நிலைத்து செய்ய இயலாது. ஒரு நாள் பணிகளாக மட்டுமே இருக்கும். ஒருங்கிணைத்த பணியாக இருக்காது. வேறு சிலருடையதோ ஆர்வக் கோளாறினால் பகட்டு விளம்பரமாகக் கூட இருக்கும்.
இவற்றினை எழுதியிருப்பது உதவி செய்கின்ற உள்ளங்களை தொய்வடையச் செய்ய அல்ல. மாறாக, சற்று சிந்திக்க வைக்க. இதற்கு மேலும் சில தினங்களானாலும் பரவாயில்லை, சரியாகச் செய்வதில் கவனமாக இருக்கும் என் நண்பர் ஒருவரின் செயலும் இதை எழுதிட எனக்குத் தூண்டுகோலாகியது.
அறம் செய்ய நினைத்தால் அதனை அன்றே செய்து விடவேண்டும் என்று வள்ளுவமும் நாலடியும் வரிந்து கட்டிக் கொண்டு சொல்லியிருக்கின்றன. அதோடு அற்றாரின் பசி தீர்த்தலின் பயனையும் வள்ளுவம் கூறுகிறது.
‘அற்றார் அழிபசி தீர்த்தல்; அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி ‘
தமிழ்த் தேசங்களில் எல்லாம் கடல் அரணாக இருந்த மீனவக் குமுகாயம் இன்று கொள்ளை போயிருப்பது நம்மை ஆழ்ந்த இரங்கல் செய்ய வைத்திருக்கிறது.
எல்லா வசதியும் பெற்ற தமிழ்நாட்டு மக்களுக்காகக் கண்ணீர் விடுகையில், எந்த உதவியும் வசதியும் இல்லாது பல சோதனைகளுக்குள்ளாகி வரும் தமிழீழத் தமிழர்களை எண்ணும்போது மேலும் பல சொட்டுக்களை மட்டுமே தமிழகத் தமிழர்களால் இடமுடிகின்றது. இச்சோதனையையும்ஈழவாழ் தமிழ்க்குமுகாயம் வென்றுவிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுதல் வேண்டும். உலகவாழ் தமிழர்களின் உதவிகள் அங்கும் நிறைய போய்ச் சேரவேண்டும்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
nelan@rediffmail.com
- துயருறும் இலங்கை மக்களின் நிவாரணத்திற்கு அவசர வேண்டுகோள்!
- சங்கீதமும் வித்வான்களும்
- மக்கள் தெய்வங்களின் கதைகள் – 15. வன்னியன் கதை
- மெய்மையின் மயக்கம்-32
- ஓவியப் பக்கம் – பதினொன்று – ஜார்ஜ் கிராஸ்ச்- ஓவியமும் அரசியலும்
- ரெஜி
- உடன் பயின்ற நண்பனுக்கு ஒரு மடல்!
- கடிதம் டிசம்பர் 30,2004 – பத்திரிகைகளின் தவறான போக்கு!
- திரு பத்மநாப ஐயருக்கு 2004 ஆம் ஆண்டிற்கான இயல் விருது
- கடிதம் டிசம்பர் 30, 2004-எஸ். அரவிந்தன் நீல கண்டன்: அருள் செல்வன் கந்த சுவாமி: சலாஹுத்தீன்: ஜோதிர் லதா கிரிஜா
- கடிதம் டிசம்பர் 30,2004
- சாகித்ய அக்காதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்
- ஒரு வேண்டுகோள்
- மார்க்ஸ், டார்வின் மற்றும் பிரச்சாரம்
- கடிதம் டிசம்பர் 23,2004
- சுனாமி
- சுனாமி
- பத்மநாபஐயர்
- விடுபட்டவைகள்-3 -தீர்க்கம்
- ‘சும்மா வருவாளா சுகுமாரி ? ‘ – இசை விழா விமர்சனம் – II
- சதாத் ஹசன் மண்டோ நூல் வெளியீடு
- Reporting from Chennai about the Relief efforts on the Tsunami hit areas.
- கடற்கோள்
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 52
- வாரபலன் டிசம்பர் 30,2004 – தோழர் நிர்பன் , யசோதர – யமுனா, அரசாங்க விருந்து ,கொலைகள் அலைகள்
- பெரானகன்
- சூசன் சாண்டாக் – ஒரு வாசகனின் அஞ்சலி
- சமஸ்கிருதமயமாதலும் நடுக்காட்டு இசக்கி அம்மனும்
- கடல்கோள் அழிவிற்கு உதவுவோர் கவனிக்க வேண்டியது!
- சுனாமி அழிவு :: உரிமையும் கடமையும்
- இராக்கில் இஸ்லாமிய மக்களாட்சி ? – பகுதி 2
- கடல் கொந்தளிப்பைக் குறித்த எச்சரிக்கையில் குளறுபடி
- இன்று புதிதாய்ப் பிறந்தோம்.. ?
- அறிவியல் சிறுகதை வரிசை 7 – நம்பிக்கையாளன்
- ஞானக்கோமாளி – கவிதாப் பிரசங்கம்
- கவிக்கட்டு 42
- பெரியபுராணம் – 24
- தவறான திருப்பம் (ஆங்கில மூலம் : ஆகா ஷாஹித் அலி)
- கடற்கோள்
- அழுகிறபோது எழுதமுடியுமா ?
- கடலம்மா….
- இந்து மாக்கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலை மதில்கள்! (Earth Quake Giant Sea Waves Attack South Asian Countries 2004)
- விலங்குகளுக்கு ஆறாம் அறிவு உண்டு என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது ட்சுனாமி
- தெற்காசிய இந்து/இஸ்லாமியப் பண்பாடுகள் – ஒரு மறுசிந்தனை -1