கஜினி Vs கஜினி

This entry is part [part not set] of 42 in the series 20090115_Issue

விபா



திரூப்பதிக்கு இருக்கும் நேர்த்திக்கடனோ இல்லை மூட நம்பிக்கையோ தெரியவில்லை – கதையின் லாஜிக் ஓட்டைகளோடு அப்படியே மீண்டும் ஹிந்தியில் transliterate செய்திருக்கிறார். படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது என்கிறார்கள் –ஹிந்தி சினிமாவின் மார்க்கெட் மிகப் பெரியது.

பார்க்கும் தமிழர் அனைவருக்கும் ஆமிரையும் சூர்யாவையும் ஒற்று நோக்கத் தோன்றும். இயற்கை! பல இடங்களில் ஆமிரும், சில இடங்களில் சூர்யாவும் ஒருவரை விட ஒருவர் ஜொலிக்கிறார்கள். காதல் வயப்படும் சூர்யாவின் அழகு ஆமிரிடம் இல்லை. அஸின் ஒரு குழந்தையை முத்தமிடும் போது சூர்யாவின் முகத்தில் தோன்றும் அந்த லேசான வெட்கம் – ஆமிரிடம் தென்படவில்லை. சாலையில் தர்பூசணி சாப்பிடும் போது தமக்கு சல்யூட் அடிக்கும் ரத கஜ துரக பதாதிகளுக்கு, விரலாலேயே ஆணையிடும் காட்சியில் சூர்யா ஆமிரைத் தூக்கி சாப்பிட்டுவிட்டார். கல்பனா தன் தந்தையின் மூன்று அம்பாஸடர் கார்களைப் பற்றிப் பேசும் போது வெளிப்படும் சூர்யாவின் குறும்பு எதுவுமே ஆமிரிடம் காணோம். மொழிப் பிரச்சினையில் சரியாக தனது எதிர்பார்ப்புகளை ஆமிரிடம் சொல்ல முடியவீல்லையோ?? மொத்தத்தில் சஞ்ஜய் ராமசாமி, சஞ்சய் சிங்கானியாவை விட மேல். ஆனால் இந்த ஆரம்ப ஓவர்களோடு சூர்யாவின் ஆதிக்கம் முடிந்து விடுகிறது.

காயம் பட்ட சஞ்சய் என்னும் பாத்திரத்தில் ஆமீர் விஸ்வரூபமெடுக்கிறார். அந்தப் பாத்திரத்துக்கு ஒரு மிகப் பெரிய நம்பகத் தன்மை கொடுக்கிறார். அவரின் சோகம், ஆக்ரோஷம், எல்லவற்றையும் மறந்து போகும் வெகுளித்தனம் எல்லாவற்றிலும் ஆமீர் மிக அழகாக ஜொலிக்கிறார். சூர்யாவின் ஆக்ரோஷம் கொஞ்சம் உரத்து மேலோட்டமாக இருந்தது – இந்த இடங்களில் சூர்யா தமது திறனை கூர் தீட்டிக் கொள்வது மிக முக்கியம். இயக்குனர் எங்கோ சொல்லியிருந்தது போல – ஆமீர் பேராசிரியர்; சூர்யா மாணவர்.

நயன தாராவின் பாத்திரத்தில் ஜியா கான் என்றொரு அம்மணி. கதை நகர்த்த ஒரு ஆள் வேண்டுமே எனக் கடனே இழவே என்று உருவாக்கப் பட்டு இருப்பதால், இந்தியிலும் ஒட்ட வில்லை. தமிழில் இன்ஸ்பெக்டராக வரும் அதே ரியாஸ் கான் ஹிந்தியிலும். ஒரு போலிஸ் ஆபிஸராக தகுதியான உடல் வாகு – அதற்கேற்ற ஹேர் ஸ்டைலும் இருந்திருந்தால் அட்டகாசமாக இருந்திருக்கும்.

ரவி கே சந்திரன் – அய்யா ஏன் இப்படி தமிழுக்குத் துரோகம் செய்யறீங்க.. படத்தை இவர்தான் நகர்த்துகிறார் – படத்தின் ஓட்டத்தை, பயத்தை, சந்தோஷத்தை, காதலை காமிரா பேசுகிறது.. ஆனால் பாடல் காட்சிகள் தமிழில் நல்லா பதிவாகி இருந்தது – படத்தின் நடன இயக்குனர்கள் காரணமா தெரியவில்லை – ஒரு மாலை இள வெயில் / சுட்டும் விழிச் சுடர் பாடல்களுக்கு இணையாக, ஹிந்தியில் எதுவும் பதிவாக இல்லை.

இசை – ரஹ்மான் – நீங்க தான் உருவாக்கினீங்களா? நம்ப முடியவில்லை – ரொம்ப சுமார். பின்ணணி இசையும் அவ்வாறே – சில காட்சிகளில் ஏதோ தெருக்கூத்தில் ஓரமாக ஹார்மோனியம் வாசிப்பது மாதிரித் தோன்றுகிறது. இது நிச்சயமாக, உங்களுடைய சிறந்த முயற்சி அல்ல. Better luck next time!

படம் மூணே கால் மணி நேரம் ஓடுகிறது – படத்தின் நீளம், மனிதனின் சிறுநீர்ப்பை தாங்கும் கால அளவுதான் இருக்க வேண்டும் என்னும் ஹிட்ச்காக்கின் அடிப்படை விதியை நிச்சயம் இயக்குனர் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே போல் திரைக் கதை ஆங்காங்கே ஆறிப் போன மைதா மாவு சப்பாத்தியைப் போல் இழுக்கிறது – தியேட்டரில் பேச்சுக் குரல் கேட்கிறது – இது திரைக்கதை அமைப்பின் தோல்வி.

ஆமிர் என்னும் சூப்பர் ஸ்டார், ரவி கே சந்திரனின் கேமரா, நல்ல திகில் கதை சொல்லிய முறை, பெரிய மார்க்கெட் இவையெல்லாம் சேர்ந்து இந்தப் படத்தின் மிகப் பெரும் பலவீனமான இசையை மறைத்து கஜினியை ஒரு மிக பெரும் வெற்றிப் படமாக்கியிருக்கிறது.


m_bala_s@hotmail.com

Series Navigation

விபா

விபா