ஓவியப்பக்கம் – ஐந்து – நளினி மலானி – கருத்தாழம் மிக்க நிர்மாணக் கலை

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

மோனிகா


ஐரோப்பாவில் தொழிற் புரட்சியின் உற்பத்தியாகவும் இரண்டாம் உலகப் போரின் பாதிப்பாகவும் உருவான நவீனத்துவத்தை கலை எதிர்கொண்டதன் விளைவாக தாதாயிசம், ப்யூச்சரிசம், பாவிஸம், க்யூபிஸம் போன்ற புதிய கலை இயக்கங்கள் பல புதிய போக்குகளையும் பரிமாணங்களையும் கலை உலகுக்கு கொண்டுவந்தன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த மனிதார்த்த கொடுமைகளும், போரின் அவலமும், அர்த்தமற்ற தேசியக் கட்டமைப்புகளும் கலையை செவ்வியல் தளங்களிலிருந்து நகர்த்தி கலாச்சார மதிப்பீடுகளையும் முதலாளித்துவத்தையும் ஏளனம் செய்வனவாக உருமாற்றின. அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்ப்ரஷனிசம், மினிமலிசம் போன்றவை எளிமையான அதே சமயத்தில் ஆழமான உணர்வுகளையும் புரியச் செய்வனவாக இருந்தன.

அதே இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் 1970ம் ஆண்டுக்குப் பிறகு கணினிகளையும், மின்னணு அறிவியலையும் பயன்படுத்திய கலை வடிவங்களும் இன்ஸ்டலேஷன் ஆர்ட் எனப்படும் நிர்மாண ஓவியமும் பிரசித்தி பெறத் தொடங்கின. நியூ மீடியா என்று சொல்லப்படுகின்ற நவீன ஊடகம் கலையை தூரிகையையும் கான்வாஸ் துணியையும் விட்டகற்றி வெகு தூரம் எடுத்துச் சென்றுவிட்டது. கருத்தமைப்பைப் (conceptual art) பெறுவதற்காக பல்வேறு ஊடகங்களை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட சூழலையும் உணர்வையும் பார்வையாளனின் மனதில் ஏற்படுத்துவதற்கான முயற்சிதான் நிர்மாணக் கலை. நிர்மாணக் கலைஞர்கள் கலைக்கூடத்தின் வெளியை நேரடியாக உபயோகப்படுத்திக் கொள்வதன் மூலம் எளிதில் ஒரு சூழலை உருவாக்குவதில் வெற்றி பெறுகின்றனர். இதனை முதன் முறையாக வழக்கத்துக்கு கொண்டு வந்தவர் மார்ஷல் டுஷாம்ப் என்னும் பிரஞ்சு/அமெரிக்க கலைஞர் ஆவார்.

விளையாட்டுத் திட்டம் (Game plan)

மேற்கத்தைய நாடுகளில் இரண்டாண்டு/ மூன்றாண்டுகளுக்கொரு முறை நடைபெறுகின்ற கண்காட்சிகளில் (biannial/triannial) தற்காலக் கலை வடிவமான நிர்மாணக் கலைவடிவங்களே அதிக அளவு ஆக்கிரமைப்பை பெறுகின்றன. அத்தகைய கலைஞர்களில் மிகவும் முக்கியமானவர் நளினி மலானி. கடந்த ஆறேழு வருடங்களாக நவீன ஊடகத்தின் (New media) புதிய வருகையான நிர்மாணக் கலைவடிவத்தில் தனது கருத்துக்களை உலகெங்கும் எடுத்துச் சென்று வருகிறார். சமீபத்தில் நியூயார்க்கின் போஸ் பேஸியா கலைக்கூடத்தில் அவரது இன்ஸ்டலேஷன் கண்காட்சி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மைலாரில் (transperent plastic) செய்யப்பட்ட ஆறு உருளைகளில் வரையப்பட்ட உருவங்கள் அந்த உருளைகளின் அசைவில் எதிரிலுள்ள சுவற்றின்மேல் அசைவது போன்றதொரு பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. பின்பகுதியிலுள்ள மூன்று ப்ரொஜக்டர்களிலிருந்து செலுத்தப்படும் புகைப்படங்கள் இந்த உருவங்களின் பின்புலங்களாய் தோற்றம் அளிக்கின்றன. இராமாயணம் மற்றும் காவியங்களிலிருந்து எடுத்தாளப்பட்ட உருவங்கள் மனிதர்களை துரத்துகின்றன… மனிதனைத் துரத்தும் மதமெனும் மாயையும் வன்முறையும் கலைக்கூடத்தின் சுவற்றில் உருண்டு உருண்டு வரும் இந்த விளையாட்டு ஒருவருக்கொருவர் பகைமையை வளர்த்துக் கொண்டு அதன் பால் வல்லரசாகும் உத்தி கொண்ட ஆதிக்க சக்திகளின் விளையாட்டு இது எனப் புலப்படுத்துகிறது.

வேற்றுமையில் ஒற்றுமை (Unity in Diversity)

1946ம் ஆண்டு பாகிஸ்தானின் கராச்சியில் பிறந்த நளினி மலானி மும்பையிலுள்ள ஜே.ஜே ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸில் ஓவியம் பயின்றார். இவர் பிறந்த முதல் வருடம் தேசப் பிரிவினை நடந்தது. பிறகு இந்தியாவில் தொடர்ந்து இருந்து கொண்டுவரும் மதவாதக் கலவரங்கள், படுகொலைகள் என்ற சூழலில் வரையத் தொடங்கிய நளினி தன்னை துயரத்திற்கு இட்டுச் செல்கின்ற அச்சம்பவங்களை தனது படைப்புகளில் கொண்டு வருகிறார். “வேற்றுமையில் ஒற்றுமை (Unity in diversity)” என்னும் அவரது வீடியோ படம் “ஆறு வயதுக் குழந்தை…. வாயில் பெட்ரோலை ஊற்றி, நெருப்புக் கொழுத்தி போட்டுவிட்டார்கள்” என்று குஜராத் சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு பெண் அழு குரலுடன் ஆரம்பிக்கிறது.

ரவிவர்மாவின் ஓவியங்களுக்கு மேல் இஸ்லாமியப் பெண்களின் புகைப்படங்களை நிழற்பெறச் செய்து (super impose) பிறகு தன்னுடைய உருவத்தையும் அதனுடன் இருத்திக் கொள்வதன் மூலம் பெண்மைக்கு மதம், இனம் போன்ற அடையாளங்கள் கிடையாது என்று உணர்த்துகிறார். மற்றும் ஒவ்வொருவரும் துயரகரமான சந்தர்பங்களில் மற்றவர்களுடன் அடையாளப்படுத்திக் கொள்வதுதான் மனித இயல்பு என்பதையும் வர்ணித்திருக்கிறார்.

ஹேம்லெட்மெஷின் (Hamletmachine)

1977ம் ஆண்டு ஜெர்மனியைச் சார்ந்த ஹெய்னர் முல்லர் (1929-1995) “ஹேம்லெட்மெஷின்” என்ற நாடகத்தை எழுதினார். அவர் அதை எழுதும்போது ஜெர்மனியின் பிரதானமான சின்னமாக ஜெர்மானியைப் பிரித்த சுவர் இருந்தது. இந்த நாடகத்தின் மூலம் அவசியமே இல்லாமல் மக்களிடம் வெறுப்புணர்ச்சியையும் வன்முறையையும் தூண்டிக் கொண்டு வந்த சக்திகளைப் பற்றி அவர் எடுத்துக் கூறினார். அவரது இந்த நாடகத்தை உதாரணமாகக் கொண்டு இந்து-முஸ்லிம் பிரச்சினையையும் இணைத்து நளினி உருவாக்கிய “ஹேம்லெட்மெஷின்” என்ற கலா நிர்மாணம் உலக அளவில் இத்தகைய கலவரங்களின் பின்னணியில் உள்ள மதவாதம், தேசியம் போன்ற குழப்பங்களை எடுத்துரைக்கிறது. முல்லரின் இந்தக் கருத்துக்களை சொல்கின்ற அதே நேரத்தில் நளினி, மக்களின் பகுத்தறிவை வெல்கின்ற பயத்தின் சக்தியையும் அதன்பால் அவருக்குள்ள அதிருப்தியையும் விளக்குகிறார். இன்னும் சொல்லப்போனால் பயத்தின் பேரால் மக்களை போரை நோக்கி இட்டுச் செல்கின்ற இந்நாளைய அமெரிக்க ஜன நாயகத்துக்கும் அந்த நாடகம் பொருந்தும் எனலாம்.

தோபா தேக் சிங்கின் நினைவாக (Remembering Toba Tek Singh)

1998-99ல் நளினி உருவாக்கிய இந்தக் கலா நிர்மாணம் சதத் ஹாஸன் மான்டோவின் கதையை ஒட்டி அமைந்தது. 1947ம் ஆண்டின் இந்தியா பாகிஸ்தான் பிரிவு பனிரெண்டு பதினாலு மில்லியன் மக்களின் இடமாற்றத்துக்கும் கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்களை பலி கொடுப்பதற்கும் துணை போனது. இதற்குப் பின் தம்மிடமுள்ள பைத்தியக்காரர்களையும், குற்றவாளிகளையும் மாற்றிக் கொள்வது என இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டன: பாகிஸ்தானில் உள்ள ஒரு நிறுவனத்தில் இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தை இந்த நாவல் சித்தரிக்கிறது. நாம் எங்கே இருந்தோம், எங்கே இருக்கப் போகிறோம் என்பதே அறியாத இந்த பேதைகளின் கதை பிறப்பிடம், அடையாளம், தேசியம் எல்லாவற்றையும் ஒரு முட்டாள்தனமெனக் கூறி அதன் மதிப்பீடுகளை கேள்விக்குள்ளாக்குகிறது. சிறையின் நாலு சுவர்களுக்குள் அடைபட்டுக்கிடக்கும் இவர்களுக்கு பிறப்பிடம் என்பது அர்த்தமற்ற வார்த்தையாகவும் சிதைக்கப்பட்ட தங்கள் அடையாளங்கள் மாற்றி வைக்கப்பட்ட தேசங்களின் பெயர்களில் சிக்கித்தவிப்பனவாகவும்தான் இருக்க முடியும்.

“ இப்போது பாகிஸ்தானில் இருக்கும் லாகூருக்கு என்ன நேரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அது எந்த நேரத்திலும் இந்தியாவிற்குள் புகுந்து விடலாம். தீபகற்பமான இந்தியாவும் எந்நேரமும் பாகிஸ்தான் ஆகியிருக்கலாம். ஒரு நாள் இந்தியாவும் பாகிஸ்தானுமே கூட வரைபடத்தை விட்டு காணாமல் போகலாம் என்பதை யாராலும் மறுக்க முடியுமா ?”

என்ற வாக்கியங்களை காட்சியாக்கிய முயற்சி தோபா தேக் சிங். தோபா தேக் சிங் என்பது ஒரு நபரின் பெயர் மட்டுமல்லாமல் பிரிவினைக்குட்பட்ட ஒரு ஊரின் பெயரும்கூட.

நாளுக்கு நாள் அபத்தமாகிக் கொண்டுவரும் நிகழ்கால சம்பவங்களும் போரும், மத, இனவாத கலவரங்களும் கலைஞனின் மனத்தில் இடம் பிடித்துவிடுகின்றன. கலை காலத்தின் கண்ணாடி. கலைஞன் வன்முறையைத் தட்டி கேட்கும் நேர்மை படைத்தவன். சாதாரண மனிதர்களைக் காட்டிலும் அதிக மென்மையானவன். புதிய அணுகுமுறைகளும், ஊடகங்களும், தொழில் நுட்பமும் அடைந்து வரும் பரிணாம வளர்ச்சிக்கேற்ப அமைதியும் மனிதார்த்தமும் வளரத் தொடங்குமாயின் அவலங்களுக்கு குரல் கொடுப்பதை விட்டு விட்டு பழையபடி அழகியலைத் தொட்டுப்பார்க்கத் தொடங்கலாம் இந்த உலகம்…

—-

monikhaa@hotmail.com

Series Navigation

மோனிகா

மோனிகா