ரவி ஸ்ரீநிவாஸ்
கடந்த வாரத்திண்ணையில் ஆனந்த விகடனை வருத்ததுடன் கண்டித்து ஒரு கடிதம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் ”அவருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்வதை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஜெயமோகனுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக விகடன் எங்கே நடந்து கொண்டது, எப்படி நடந்து கொண்டது என்பது எனக்கு புரியவில்லை. விகடன் அவர் எழுத்தினை கையாண்டவிதம் கண்டனத்துக்குரியது என்று எடுத்துக் கொண்டாலும் கூட அதில் வ்னமுறையை தூண்டும் விதமான வார்த்தைகள்/வாக்கியங்கள் இல்லை. ‘படிப்பவர்கள் குமுறிக் கொந்தளிக்கும் அளவுக்கு’ என்பதை வன்முறை தூண்டும் விதமாக எழுதப்பட்டது என்று அர்த்தப்படுத்த முடியாது. ஜெயமோகன் எழுதாதவற்றை அவர் எழுதியாக விகடன் இட்டுக்கட்டவில்லை. விகடனின் வாசிப்பினை ஏற்பதும், ஏற்காததும் ஒரு புறம் இருந்தாலும், விகடனில் வெளியானதில் ஜெயமோகன் ஒரு பொறுப்பான எழுத்தாளர் என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தார். இந்த அளவு மரியாதையைக் கூட ஜெயமோகன் பல சமயங்களில் தன்னை விமர்சிப்பவர்களுக்கும், தன்னால் விமர்சிக்கப்படுபவர்களுக்கும் கொடுத்ததில்லை என்பதை இங்கு நினைவு கொள்ள வேண்டும். ஒப்பீட்டு நோக்கில் பார்த்தால் விகடன் ஜெயமோகனை மோசமாக சித்தரிக்கவில்லை. ஜெயமோகன் எழுதியதை வாசகர்களிடம் அறிமுகப்படுத்தி எழுதிய விதத்தில் விகடன் ஒரு சரியான சித்தரிப்பினை முன்வைக்கவில்லை என்று கூறலாம்.
விகடனை பரபரப்பூட்டும் வகையில் எழுதியதற்காக விமர்சிக்கலாம். இதையே வேறொருவர் கருத்து சுதந்திரத்தின் ஒரு மோசமான வெளிப்பாடு என்று கருதலாம். என்னைப் பொருத்த அளவில் விகடனை விமர்சிப்பதோடு அந்த அறிக்கை நின்றிருக்க வேண்டும். மாறாக இல்லாத ஒன்றை இருப்பதாக சித்தரித்து ஜெயமோகனுக்கு போலி அனுதாபமும், ஆதரவும் பெற அது உதவுவதாக உள்ளது. விகடன் அப்படி எழுதியிருப்பது ஜெயமோகனின் கருத்து சுதந்திரத்திற்கு எந்த விதத்திலும் எதிரானது அல்ல. தமிழ் நாட்டிற்கும், கேரளாவிற்கும் எதற்கெடுத்தாலும் ஆறு வித்தியாசம் கண்டுபிடித்து தமிழர்களுக்கு அறிவுரை வழங்கியோ அல்லது தமிழர்களின் ரசனை மேலாதானதாக இல்லை என்று புலம்புவர்களுக்கு அவ்வாறு புலம்ப எல்லா உரிமைகளும் உண்டு. அந்த புலம்பலைக் கிண்டல் செய்ய, விமர்சிக்க தமிழர்களுக்கும் உரிமை உண்டு. இதைப் புரிந்து கொண்டால் சர்ச்சையை ஊதிப் பெருக்கியதில் ஜெயமோகனுக்கும் பங்குண்டு என்பது புலனாகும்.
சிவாஜி, எம்ஜிஆர் குறித்து தான் அவ்வாறு எழுதியது என் கருத்து சுதந்திரம் என்ற அளவில் ஜெயமோகன் எழுதியிருந்தால் இது இப்படி சர்ச்சைக்குரிய ஒன்றாக ஆகியிராது. ஒப்பீடுகளின் மூலம் தன் மேட்டிமைத்தனத்தை ஜெயமோகன் வெளிப்படுத்திக் கொண்டார். அத்துடன் நிற்கவில்லை. அத்தகைய எழுத்துக்களை பத்திரிகைகள்
வெளியிட விரும்பியதாகவும், தான் அதை நிறைவேற்ற மறுத்துவிட்டதாகவும் எழுதினார். அதற்கு அவர் சொன்ன காரணங்கள் அவரது அறியாமையையும், மேட்டிமைத்தனத்தையும் நன்றாகப் புரிய வைத்தன. இது போன்ற எழுத்துக்களால் ‘கஸ்தூரி மான் இழுக்கும் வண்டியுடன் இலக்கிய அண்டார்டிகாவிலிருந்து வரும் கிறிஸ்துமஸ் தாத்தாவாகிய’ (உபயம் – சன்னாசி) மகாராஜா ஜெயமோகனின் புதிய் ஆடைகளைத் (emperors new clothes) (தாண்டிப்) பார்ப்பது “தங்களையே வெட்கி கூசிச்சுருங்கும் சிற்றுயிர்கள்” என்று ஜெயமோகனால் வர்ணிக்கப்பட்ட வாசகர்களுக்கு மிகவும் எளிதான ஒன்றாகி விட்டது, எனவே வேறு வழியின்றி விகடன் இப்படி எழுதியதை வைத்து ஜெயமோகன் ஒரு அழுகுணி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார். அறிக்கையில் ஜெயமோகன் தரப்பில் எழுதப்பட்டதைக் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த சர்ச்சையில் விகடனை மட்டும் குறை கூறுவதில் அர்த்தமில்லை. ஜெயமோகன் என்ன எதிர்வினையாற்றினார் என்பதையும், அகந்தை தலைக்கேறி என்னவெல்லாம் எழுதினார் என்பதையும் கவனிக்க வேண்டும். அதையும் கருத்து சுதந்திரம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
எம்ஜிஆரையும், சிவாஜியையும் நையாண்டி செய்பவர்களிடம் அவர்களின் குரலில் மிமிக்ரி செய்து பகடி செய்பவர்களை, திரிசூலத்தில் வரும் சிவாஜி கணேசன் – கே.ஆர்.விஜயா பேசும் தொலைபேசி உரையாடலை கிண்டல் செய்து பேசுபவர்களிடம் யாராவது நீ எத்தனை சினிமாவில் நடித்திருக்கிறாய் இவர்களை கேலி செய்ய என்று கேட்கிறார்களா. அவற்றை நகைச்சுவையாக ரசிக்கிறார்கள். எம்ஜிஆரை சோ செய்யாத கிண்டலா இல்லை கேலியா. தங்கப்பதக்கம் என்ற படத்தில் எம்ஜிஆரின் அண்ணாயிசத்தினை அவர் கேலி செய்திருப்பார். அப்பாயிசம்
என்று ஒன்றை சொல்வார். அது அண்ணாயிசத்தினைக் கேலி செய்வது என்பது நன்றாகப் புரியும். அப்பாயிசம் என்னவென்று கேட்டால் அப்பா சொல்வதை மகன் கேட்க வேண்டும், மகன் சொல்வதை அப்பா கேட்க வேண்டும். அது போல் யாருக்கும் வெட்கமில்லை என்ற படத்தில் சோ இயக்கியது , நான் தோசை சுட்டால் அது வெந்து விட்டால் என்று பாடல் வரிகள் வரும், நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால், என்ற புகழ் பெற்ற சினிமாப் பாடலைப் பகடி செய்து, அந்தக் காட்சியைப் பார்த்தால் அதில் கேலி செய்யப்படுவது எம்.ஜி.ஆர் என்பது பெயர் சொல்லாமலே புரியும். அதில் எம்,ஜி,ஆரின் பல படங்களில் அப்போது நடித்துக் கொண்டிருந்த மனோரமா நடித்திருப்பார்.
எம்ஜிஆர் தமிழ் சினிமாவில் முதல் இடத்தில் இருந்த போது செய்யப்பட்ட கேலிகள் இவை. இதே போல் சிவாஜி கணேசனும் கிண்டலிக்கப்பட்டிருக்கிறார். சில படங்களில் அவர் நடித்து புகழ் பெற்ற பாத்திரங்களை கிண்டல் செய்திருப்பார்கள். வசந்த மாளிகையில் வரும் ‘இது யாருக்காக, இது யாருக்காக’ என்ற பாடல் காட்சியில் சிவாஜியின் நடிப்பு பகடி செய்யப்பட்டு இன்னொரு படத்தில் மனோரமாவால் நகைக்சுவையாக மாற்றப்பட்டிருக்கிறது. முதல் மரியாதையில் அடி நீதானா அந்தக் குயில் என்ற பாடல் காட்சியின் சூழல், பாட்ஷாவில் ரஜனிகாந்த் பேசும் ‘நான் ஒரு தடவை சொன்னா’ போன்ற வசனங்கள் பல முறை, பல சந்தர்ப்பங்களில் திரைப்படங்களிலும், பிறவற்றிலும் பகடி செய்யப்பட்டுள்ளன.அதே போல் பிரபல நடிகர்களின் நடை, பாவனைகள், வசன உச்சரிப்புகள் உட்பட பல கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளன.
இதையெல்லாம் யாரும் புனித பிம்பங்களை கேள்விக்குட்படுத்தல், subversion என்று சொல்லிக் கொண்டு திரிவதில்லை. அவற்றை நகைச்சுவையாக இயல்பாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் காஞ்சியை கஞ்சி என்று புரிந்து கொண்டதாக பாடாவதி நகைச்சுவை எழுதும் ஜெயமோகன் அண்ணாத்துரையை நேரடியாக கிண்டல்
செய்யாமல் பொருந்தாத ஒன்றை அங்கதம் என்பதாக சொல்லிக் கொள்கிறார். அதைப் படித்தால் சிரிப்பு வரவில்லை. நேரடியாக எழுதிவிட வேண்டியதுதானே என்று கேட்கத் தோன்றுகிறது.
ஜெயமோகன் மிகவும் சீரியசாக தன்னுடைய அறிவினை வெளிப்படுத்திக் கொள்ள எழுதுபவைகளைப் படித்தால் பல சமயங்களில் எனக்கு சிரிப்பு வருகிறது. உதாரணமாக கீழ்க்கண்ட பகுதி.
”ஆனால் ஒரு ஆச்சரியம் எனக்கு காத்திருந்தது. இருபதாண்டுகளுக்குப் பின்னால் என்னால் இப்போது ஒரு பழந்தமிழ் படத்தைக்கூட பத்துநிமிடம் பார்க்க முடியவில்லை. ஆனால் எம்ஜிஆர் படங்களை பெரும்பாலும் கடைசிவரை பார்க்க முடிகிறது — அம்புலிமாமா கதை படிக்கும் ஆர்வத்துடன். திரைக்கதை பற்றி கற்ற பின் இந்த இரண்டாண்டுகளில் கச்சிதமாகத் திரைக்கதை அமைக்கப்பட்ட படங்கள் என்று கணிசமான எம்ஜிஆர் படங்களைப்
பற்றி என்ணத்தோன்றுகிறது. தமிழில் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த வணிகத்திரைக்கதை ‘எங்கவீட்டுப்பிள்ளை’தான்.”
இதில் தன்னையும் அறியாமல் ஜெயமோகன் தன்னை கேலி செய்துகொள்கிறார். திரைக்கதை குறித்த தன் அறிவினை வெளிக்காட்டி, கருத்துச்சொல்லி முயன்று சிரிப்பினை வரவழக்கிறார். பல வாசகர்களுக்கு அது அப்படி ஒரு வாசிப்பைத் தரும் என்பது கூட அவருக்கு புரியாமல் போகலாம். ஒரு முட்டாள் தன் புத்திசாலித்தனத்தைக் காட்ட முயன்று மறுபடியும் மறுபடியும் தான் முட்டாள் என்பதை நிரூபிப்பது நமக்கு சிரிப்பினை வரவழைப்பதில்லையா.
எழுத்தில் உள்ள முரண் நகை சமயங்களில் எழுதியவரும் அறியாமல் வெளிப்படும். அதே போல் எழுத்தில் எழுத்தாளர் அறியாத மர்ம ஸ்தானங்களை வாசகரால் கண்டறிய முடியும், அதை எழுதியவருக்கு எதிராக
திருப்பி அடிக்கும் போது பயன்படுத்த முடியும். வாசிப்பின் அரசியல் இது போன்ற சாத்தியக் கூறுகளையும் உள்ளடக்கியதுதான். சமயங்களில் எழுதுபவர் வாசகர்களில் சிலருக்கு மட்டும் புரியக் கூடியவற்றை எழுத்தில் வைத்திருப்பார். அது மேலோட்டமாகப் பார்த்தால் மிக சாதாரணமாகத் தெரியும் அல்லது ‘ஆபத்தற்ற’ நகைச்சுவையாகத் தெரியும்.. அவசர நிலையின் போது தணிக்கை செய்தவர்களுக்கு இது புரியாததால் சில கூர்மையான விமர்சனங்கள் தணிக்கைக்குத் தப்பி வாசகர்களுக்கு புரிந்தது, அது போல் கிசுகிசுகளிலும் சில கேலிகள், கிண்டல்கள் பட்டப்பெயர்கள் மூலம் அல்லது வேறு சில மூலம் சுட்டப்படும். இது சமயங்களில்
சட்டெனப் புரியாவிட்டாலும், புரிந்தபின் அதில் உள்ள நுட்பமான கேலி புலப்படும்.
ஜெயமோகனின் எழுத்தில் மிக தட்டையான அங்கதம், வலிந்து கற்பிக்கப்படும் அங்கதம் மிக அதிகம் உள்ளது.
பல சமயங்களில் அது வெறுப்பின் இன்னொரு வெளிப்பாடாக அது இருக்கிறது. வெறுப்பினையும் அங்கதமாக ரசிக்கத்தக்க வகையில் சொல்லும் போது அங்கு வெறுப்பு துருத்திக் கொண்டிருக்காது, நுட்பமாக இருக்கும். ஜெயமோகன் எழுத்தில் அது துருத்திக் கொண்டு பல்லிளிக்கிறது. இந்தப் பலவீனங்களையும் பொறுத்துக் கொண்டால்தான், ஜெயமோகனின் ‘அங்கத’ எழுத்துக்களால்தான் தமிழில் அங்கத உணர்வுடைய எழுத்துக்கள், இலக்கியம் வளரும் என்ற நிலை நிச்சயமாக இல்லை.
தமிழ் நாட்டில் திராவிட, பொதுவுடமை இயக்கங்களின் தாக்கத்தினால் இங்கர்சால், சாக்ரடீஸ், லெனின், ஸ்டாலின் போன்ற பெயர்கள் குழந்தைகளுக்கு சூட்டப்பட்டன. பெரியாரே ஒரு பெண் குழந்தைக்கு ரஷ்யா என்று பெயர் வைத்தார். கல்பனா தத் நினைவாக பல இடதுசாரிக் குடும்பங்களில் பெண்களுக்கு கல்பனா என்று பெயர் சூட்டப்பட்டது. என்னுடன் கல்லுரியில் படித்த ஒருவரின் பெயர் மேற்கு வங்க முன்னாள் முதல்வரின் பெயர். கோஷ் என்பது பெயரின் ஒரு பகுதி, ஆனால் அவர் தமிழர், வங்காளி அல்ல. இது போன்றவற்றை சமூக இயக்கங்களின் தாக்கங்களாக புரிந்து கொள்ளலாம். இதை கேலி செய்யலாம். ஜெயமோகனோ சில பெயர்களை வைத்து கேலி செய்யும் விதம் அவரின் வெறுப்புதான் இப்படி ‘அங்கத’மாக வெளிப்படுகிறது என்பதைக் காட்டிக் கொடுத்து விடுகிறது.
“கண்ணுச்சாமிக் கோனார் மீசையை உருவினார். “பெர்னாட் ஷா!… எங்கியோ கேட்டபேரு… ஏன் மாரிமுத்து பெர்னாட் ஷாண்ணாக்க நம்ம அறிஞர் அண்ணாவுக்கு தெரிஞ்ச யாரோ தானே?”
“காரல் மார்க்ஸ் என்ன இருந்தாலும் வேறு மாதிரியானவர். பக்கத்து வீட்டில் எங்கல்ஸ் என்ற பணக்கார பையன் இருந்திருப்பான். இவன் சொல்வது அவனுக்கு மட்டுமே புரிந்திருக்கும். அதிலிருந்து பல சிக்கல்கள் வந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் கொலை? இருக்கலாம். அவர் சாத்வீகராக இருந்தாலும் ராப்பகலாக, கூட்டக்கொலை, ரத்த ஆறு பற்றியே பேசி மற்றவர்களுக்கு வெறியைத் தூண்டிவிட்டிருக்கலாம். அதே தெருவில் ஸ்டாலின் என்ற இளவல் யாராவது அவருக்கு இருந்தார்களா என்று போலீஸார் கண்காணிக்க வேண்டும்.”
எம்ஜிஆர் படங்களில் சில காட்சிகளில்/பாடல்களில் (அவை வெளியான/தயாரிக்கப்பட்ட கால) நடப்பு அரசியல் தூக்கலாக இருக்கும். அப்படிப் பட்ட ஒன்றுதான் நேற்று இன்று நாளை படத்தில் வரும் ‘தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று’ என்ற பாடல். அதில் தெளிவாக அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஒலை என்று வரும். ஜெயமோகனுக்கு எம்ஜிஆரின் பேச்சுத்தான் புரியவில்லை, தெளிவான குரலில் பாடப்பட்ட பாடல் வரிகளும் புரியவில்லை என்றால் பிழை அவர் கேட்கும்/புரிந்து கொள்ளும் திறனிலும், தமிழ் அறிவிலும்தான் என்று கூட கேலி செய்யலாமே. காஞ்சியிலே நேற்று என்பதை, அண்ணா என்பதையும் வைத்து ஜெயமோகன் அண்ணாவை நேரடியாக கிண்டல் செய்திருக்கலாம். அதைச் செய்யாமல் எதையோ பொருத்தமின்றி எழுதிவிட்டால் அது அங்கதமாகிவிடுமா என்ன.
என்னிடம் விவாதிக்க இன்னாருக்கு இன்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று அகந்தையுடன் எழுதும் ஜெயமோகனால் வெகுஜன கலாச்சாரத்தில் உள்ள சில அம்சங்களைப் புரிந்து கொள்ள முடியாது. அதில் ஒன்று யாரும் கேலி செய்ய, தகுதிகளைக் கோருவதில்லை, கேலிகளை ரசிக்க புதுமைப்பித்தனை படித்திருக்கிறாயா என்றெல்லாம் கேள்வி கேட்பதில்லை. ஆனந்த விகடன் சிவாஜியை கிண்டல் செய்யும் ஜெயமோகன் எத்தனைப் படங்களில் நடித்து தன் நடிப்புத்திறமையை நிரூபித்திருக்கிறார் என்று எழுதவில்லை. (ஆனால் ஜெயமோகன் என்னவெல்லாம் எழுதியிருக்கிறார் என்பதைப் படித்தால், சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக் கொள்வதில் அவருக்கு எப்படி என்ன அலாதி ஆசையோ என்று கேட்கத் தோன்றுகிறது.) இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் பி.ஏ.கிருஷ்ணனும், நாகார்ஜுனனும் எழுதுகிறார்கள் என்பதை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது.
ஆனந்த விகடன் ஏன் இப்படி எழுதியது என்று எனக்குத் தெரியாது. அது “நவீனத் தமிழிலக்கியத்தின் ஜாம்பவான்கள் வைரமுத்துவும் நா.முத்துக்குமாரும்தான் என்ற எண்ணத்துக்குச் சொந்தமான அந்த ‘சும்பன்’ ” ஜெயமோகனுக்கு கொடுத்த பதில் மரியாதையாகக் கூட இருக்கலாம். போஸ்டரில் இன்னார் பெயரைப் போடவில்லை என்ற குறையைப் போக்க, அந்த ‘சும்பன்’ ஜெயமோகனுக்கு இப்படி கவனம் பெற்றுத் தர வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கலாம். பக்கத்து இலைக்கு பாயசம் கேட்டவர் மேல் பாயச வாளியை
கவிழ்த்து திக்கு முக்காடச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.
எது எப்படியானாலும் விகடன் செய்தது மோசமான அரசியல் என்றால் ஜெயமோகன் செய்தது அதை விட மோசமான அரசியல். இந்த அறிக்கையும் அத்தகையதுதான். கருத்து சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானதுதான். அதை எப்படி, எந்த நோக்கத்திற்காக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான்
கேள்வி. விகடன் ஒரு பெரிய பத்திரிகை, பல லட்சம் வாசகர்களைக் கொண்ட பத்திரிகை. விகடனில் வெளியான பல குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன. சுஜாதா விகடனில் தன் பத்திகளில் முன் வைத்த சில கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாயின. அந்த சந்தர்ப்பங்களில் விகடன் நடந்து கொண்ட விதத்தினை, மாற்று கருத்துக்களுக்கு இடம் தர மறுத்ததை விமர்சிப்பது சரியானது .விகடன் விஷமத்தனமாக இது போல் எதாவது செய்துள்ளது என்று
சுட்டிக்காட்ட முடியுமே தவிர அது வன்முறையை தூண்டும் விதமாக நடந்து கொண்டதில்லை என்பது என் கருத்து. எனவே விகடனைக் கண்டித்து அறிக்கைவிட்டிருப்பவர்கள் ஒரு அபாண்டமான பொய்யைக் கூறியிருக்கிறார்கள். அதை நான் கண்டிக்கிறேன். ஜெயமோகன் எழுதிய பதிலை ஆனந்த விகடன் வெளியிட மறுத்தால் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவில் ஒரு புகார் தரலாம். விகடன் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளது என்று முறையிடலாம். ஆனால் இங்கு யாரும் அத்தகைய சாத்தியக் கூறு குறித்து எழுதியிருப்பதாகத் தெரியவில்லை.
சிவாஜி கணேசனும், எம்.ஜி.ஆரும் தாங்கள் வாழ்நாளில் எத்தனையோ எதிர்ப்புகளையும், கேலிகளையும், விமர்சனங்களையும் சந்தித்தவர்கள். அவை கண்டு அழுகுணி ஆட்டம் ஆடியவர்களோ அல்ல. அவர்களை ஜெயமோகன் இப்படி எழுதித்தான் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும், எண்ணி சிரிக்க வேண்டும் என்ற நிலை இல்லை. தமிழ் நாட்டிலும்,தமிழிலும் கேலியும், கிண்டலும், நையாண்டியும், பகடியும் நிறையவே இருக்கின்றன. ஜெயமோகன் இப்படி எழுதினால்தான் அவை இங்கு வளரும் என்ற நிலை இங்கு இல்லை. வளமான நகைச்சுவை தமிழில் வெகுஜன கலாச்சாரத்தில் இருக்கிறது. அதில் எம்ஜிஆரும், சிவாஜியும், ரஜனி காந்தும், கமலஹாசனும் இன்ன பிறரும் கேலிக்குட்படுத்தப்பட்டுள்ளனர். அதைப் புரிந்து கொள்ள புதுமைப்பித்தனோ, புலி நகக் கொன்றையோ தேவையில்லை. இந்த சர்சைக்குப் பின் ஆனந்த விகடனில் அல்லது விகடன குழும வெளியீடுகளில்/தயாரிப்புகளில் ஜெயமோகன் எழுதினாலோ அல்லது வேறு வகையில் பங்களிப்பு செய்தாலோ அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. அதற்காக ஜெயமோகனையோ அல்லது விகடன் தரப்பையோ விமர்சிப்பதோ அல்லது குறை கூறுவதோ சரியானதாக இராது.
இந்த சர்ச்சை குறித்து வலைப்பதிவுகளில் விரிவாக அலசப்பட்டுள்ளது என்பதால் நான் இதற்கு மேல் விரிவாக எழுத விரும்பவில்லை.(1) அந்த அறிக்கையில் கையெழுத்திட்டவர்கள் அவற்றையும் படித்தால் தமிழில் உள்ள பல வாசகர்கள் ஜெயமோகன் உட்பட எந்த புனித பிம்பங்களையும் வழிபாடு செய்பவர்கள் அல்ல என்பது தெரிய வரும். ஜெயமோகனின் சுயமோகத்தையும், அகந்தையையும் அவர்கள் நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் தீவிர வாசகர்கள் இருந்தாலும் அவர்கள் எனைப் பார் என் வாசிப்பைப் பார் என்றெல்லாம் அலட்டிக் கொள்வதில்லை. வாசகர்கள் தன் நூல்களின் நுகர்வோராக, தன் ரசிகர்களாக, இருப்பதை மட்டும் விரும்பும் எழுத்தாளர்கள் அவர்களிடமிருந்தும் கற்க பல உண்டு.
இறுதியாக ஜெயமோகனால் தமிழில் அங்கத்திற்கு பயன் ஏதும் இல்லை என்று அர்த்தமில்லை. தமிழ் சினிமாவில் வரும் சில பாத்திரங்களின்(உ-ம். தில்லா மோகனாம்பாள் சவடால் வைத்தி) குணாம்சங்கள், ஜெயமோகனின் ஆளுமையில் உள்ள சில கூறுகளை கலந்து சில நகைச்சசுவை பாத்திரங்களை எளிதாக உருவாக்கலாம்.
any takers 🙂
(1) உ-ம்
http://snapjudge.wordpress.com/2008/02/16/jeyamohan-vs-anandha-vikadan-backgrounder-tamil-blogs-mgr-sivaji-et-al/
http://andaiayal.blogspot.com/2008/02/flush-lit.html
இதில் சன்னாசியின் பின்னூட்டம் கட்டாயம் படிக்கப்பட வேண்டியது, குறிப்பாக விகடனைக் கண்டித்து அறிக்கைவிட்டவர்களால்.
- ‘சூப்பர் ஸ்டார்’ சுஜாதா
- திண்ணை வழங்கும் இலவச ஒருங்குறி எழுத்துருக்கள்
- காற்றினிலே வரும் கீதங்கள் -8 கறைப்படுத்தினார் !
- தாகூரின் கீதங்கள் – 18 எதை நோக்கிச் செல்கிறாய் ?
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 9
- அழியாத சின்னங்கள் !
- எழுத்தாளர் சுஜாதா நினைவாக…
- அரியும் நரியும்
- மழைக்குடை நாட்கள் கவிதைத்தொகுப்பு வெளியீடு
- பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் “செயலும் செயல்திறனும்”
- மாற்றமும் மடமையும் – வஹ்ஹாபி அவர்களுக்கு சில வரிகள்
- உலகப்பண்பாட்டிற்குத் தமிழ் பக்தி இலக்கியங்கள்/இயக்கங்களின் பங்களிப்பு
- “சங்க இலக்கிய வார விழா—தமிழ்நாடு முழுவதும் 100 ஊர்களில்”
- marginalisation of Maharashtrians in Mumbai
- ஜெயமோகன் ஆதரவு கடிதம் பற்றி
- “நாம்” என்னும் இலக்கிய சிற்றிதழ் துவக்கம்
- சுஜாதா என்னும் Phenomenon…
- இந்தக் கடிதத்தை நாற்பத்திரண்டு நாட்களாக எழுத எண்ணியிருந்தேன்.
- பன்முகப் படைப்பாளி திரு சுஜாதா அவர்களின் மறைவுக்கு அஞ்சலி:
- கற்பு என்னும் குறும் படத்தின் கதைச் சுருக்கம்
- கவிதை எழுதுவதற்கு லைசென்ஸ்
- நூல் மதிப்புரை: முனைவர் ஆ. மணவழகனின் ‘பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வையை முன்வைத்து…
- ஒர் அறிக்கை, ஒர் சர்ச்சை குறித்து ஒரு சாமன்யனின் 2 பைசா கருத்துக்கள்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! துணைக்கோள் நிலவு எப்படித் தோன்றியது ? (கட்டுரை: 18)
- மின்னும் புன்னகையோடு
- ப்ரியா விடை
- நிலமெனும் பஞ்சபூதம்
- கையையும் காலையும் கட்டிக்கொண்டு வேகமாய் ஓடுகிறவன்
- இந்த நாகரிகத்தின் வேர் படுகிறது
- கவிதை பிறக்கும்!
- புரட்சி
- கலைஞருக்கு வயதாகி விட்டதா?
- அபூர்வ மனிதர் சுஜாதா
- குழந்தைகளை அடிக்காதீர்கள்!!!
- தமிழில் இணைய உள்ளடக்க உருவாக்கம்