ஜெயந்தி சங்கர்
இரண்டு நாட்களில் நான்கைந்து முறை என்னோடு தொலைபேசிட விடாமல் முயன்றபடி இருந்தான் மெங்லோங். அவனோடு பேசுவதைத் தவிர்த்தேன். ‘அவசரம்’ என்று முதலிலும், பிறகு, ‘உன்னோட கொஞ்சம் பேசணும்’, என்று சாதரணமாகவும், அதைத் தொடர்ந்து ‘போன எடுடா மடையா’, என்றும் ‘அப்படி என்னத்தடா வெட்டி முறிக்கிற’, என்று திட்டியபடியும் நடுநடுவே குறுஞ்செய்திகள் வேறு. அவற்றிற்கிடையேயான நேர இடைவெளிகள் குறைந்தபடியே இருந்தன. ஓரிரு முறை எடுத்து, ‘அதத் தவிர வேற எதையாவது பேசு’, என்று சொல்லிவிட்டு சாதாரணமாகப் பேசி விடுவோமா என்று கூடத் தோன்றியது. ஆனாலும், அவன் வேண்டுமென்றே அந்தப் பேச்சை எடுத்துக் கடுப்படிப்பான். ‘தொலைபேசியின் பக்கமே திரும்ப முடியாத படிக்கு சுந்தர் படிக்கிறான்’, என்றோ, ‘வேண்டுமென்றே என்னைத் தவிர்க்கிறானோ’, என்று எப்படி வேண்டுமாலும் எடுத்துக் கொள்ளட்டும். அவனோடு பேசுவதை விட அதே மேல். தேசிய சேவை முகாமின் அடிப்படை இராணுவப் பயிற்சிகளை எல்லாம் முடித்து விட்டான். கெடுபிடிகள் அதிகமில்லாத ‘கணக்கர்’ பதவியில் சில மாதங்களாக இருக்கிறான். அதிக வேலையுமில்லாமல் இருந்தானோ என்னவோ. அப்படி அதிக நேரமிருந்தால் அவனின் தோழி ஸீஷ¤வானோடு பேச வேண்டியது தானே. சிங்கப்பூர் தேசியப் பல்கலையில் படித்துக் கொண்டிருந்த அவள் அனாவசியமாகத் தொந்தரவு செய்தால் கோப வார்த்தைகளாலேயே குதறி விடுவாள்.
சிங்கப்பூரில் புகுமுக வகுப்பை முடித்து விட்டு நான் பொறியியல் முதலாமாண்டு சேர்ந்து படித்துக் கொண்டிருந்தது ஆஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக் கழகத்தின் மலேசிய வளாகம். சில வாரங்களுக்கு முன்னர் ஜோஹோர் மாநிலத்தை வெள்ளக்கடாக்கிய பேய்மழை வடக்கே நகர மறந்ததிருந்ததில் குவாலலம்பூர் வெயிலில் மிளிர்ந்து கொண்டிருந்தது. பொது விடுமுறை என்பதால் ‘சன் வே லகூனி’ல் கூட்டம் அதிகரித்திருந்தது. சாலையின் மறுபுறம் எங்களுக்குரிய கட்டடம் தயாரானதும் அடுத்த வருடம் இந்த தற்காலிக வளாகத்திலிருந்து குடிபெயர்ந்து விடுவோம். சன்னலின் வழியாக மூன்றாம் மாடியிலிருந்து பார்த்த போது மேலாண்மை இளங்கலை படித்துக் கொண்டிருந்த கென்யாவைச் சேர்ந்த •பெர்நாண்டஸ் வியர்க்க வியர்க்க மெதுவோட்டம் ஒடிக் கொண்டிருந்தது தெரிந்தது. உருவத்திற்கும் அவனின் மென்மனதிற்கும் கொஞ்சமும் பொருத்தமில்லாதிருந்ததை நினைத்துக் கொண்டேன்.
தொலைபேசியை எடுக்காமலிருக்க ஒவ்வொருமுறையும் நான் அதிகப் பிரயத்தனப் படத்தான் வேண்டியிருந்தது. ஒரே ஒரு விஷயத்தைத் தவிர, மெங்லோங்கோடு பேச உண்மையில் எனக்குப் பிடிக்கும். எத்தனை உம்மணாமூஞ்சியையும் சிரித்துப் பேச வைத்து விடும் கலையினைக் கைவரப் பெற்றவன். தன் மண்டை நிறைய மூளையும், அது நிறையத் தகவல்களையும் செய்திகளையும் கொண்டிருந்த மெங்லோங் என்றுமே தன் மேதாவித்தனத்தைக் காண்பிக்கவென்று பேசிட நினைக்கவே மாட்டான். தனது புத்திசாலித்தனத்தை அவன் அறிந்தேயிருந்தான். கர்வம் துளியும் கிடையாது. மிக இயல்பாக அமையும் அவனின் உரையாடலின் ஊடே நான் அறிந்து கொண்டவை நிறைய. ஒவ்வொரு முறையும் அங்கு சுற்றி இங்கு சுற்றி, ‘இப்பவாவது உனக்கு ஒரு ‘கேர்ல் •ப்ரெண்ட்’ இருக்காளாடா, சுந்தர்?’, என்ற கேள்வியில் மெங்லோங் வந்து நிற்கும் கணத்தில் அதுவரை என்னில் சேர்ந்திருந்த இனிமைகள் யாவும் வடிந்து இருந்த இடம் தெரியாமல் காணமல் போகும். அவன் குரலிலிருந்து கேலியா அக்கறையா என்று கண்டு பிடித்துவிட முடியாது. பெரும்பாலும், ‘கேர்ல் •ப்ரெண்ட்’ இல்லாத ஒரு இளையன் வாழ்க்கையையே வீணடிக்கப்பட்டதாக நம்பும் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால் அக்கறை போன்றே தோன்றும். தான் பெற்ற ‘துன்பம்’ எல்லோரும் பெற்றிட வேண்டும் என்றே உள்ளூர விழைகிறனோ. அந்தக் கேள்வியால் அவன் என் போன்றவர்களில் ஏற்படுத்தக் கூடிய நெருக்கடி எப்போதுமே குறிப்பிட்ட நபரை ஒரு அலாதியான நிர்பந்தத்தை நோக்கித் தள்ளும் நோக்கத்தையும் அபாயத்தையுமே சுமந்து கொண்டிருந்தது.
அறையைச் சுத்தம் செய்ய வழக்கமாக வரும் பாக்கியம் வராமல் வேறு ஒரு பெண் வந்திருந்தாள். என் பார்வையைப் புரிந்து கொண்டவள் போல, “அக்கா இன்னிக்கி பத்துமலை போயிருக்காங்க, தைப்பூசமில்ல,.”, என்றாள். அப்போது தான் ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு வருடத்திற்கு இங்கு படிக்க வந்திருந்த வில்லியம், வெரோனிக்கா மற்றும் எட்வர்ட் ஆகியோர் என்னை பத்துமலைக்குக் கூப்பிட்டிருந்ததே நினைவிற்கு வந்தது. தைப்பூசத்தைக் குறித்து நான் விவரித்துச் சொல்வேன் என்ற அவர்களின் நம்பிக்கையைக் கெடுக்க நான் விரும்பவில்லை. தெரிந்தவரை சொல்லிச் சமாளித்து விடுவோம் என்று ஒரு குருட்டு தைரியம். பக்தி இலக்கியங்களைத் தேடிச் சரி பார்க்கவா போகிறார்கள் என்றும் தான். மலேசியாவில் தைப்பூசத்தன்று பொது விடுமுறை என்பதையே நேற்று தான் அறிந்திருந்தேன். சிங்கப்பூரின் ஆரவாரமற்ற காவலரின் கண்காணிப்பில் அடக்க ஒடுக்கமாக நடந்தேறும் தைப்பூசக் காவடி ஊர்வலத்தை ஒப்பிடும் போது பத்துமலையில் மிகமிகக் கோலகலமாக மிகப் பெரியளவில் இருக்கும் என்று கேள்விப் பட்டதிலிருந்தே ஒரு முறை போய்ப் பார்த்து விடவேண்டும் என்று என்னுள் ஆர்வம் ஏற்கனவே எழுந்து விட்டிருந்தது.
பலமுறை மெங்லோங்கிடமிருந்து கேட்டுப் பழக்கப் பட்டிருந்த கெள்வி தான் என்றாலும் ஒவ்வொரு முறையும் எனக்குள் எரிச்சல் மூளும். என் கோபம் தான் இயல்புக்கு மாறானதா இல்லை மெங்லோங் தான் திரும்பத் திரும்ப அதே கேள்வியைக் கேட்டு இயல்புக்கு மாறாக நடக்கிறானா என்று பலமுறை யோசித்ததுண்டு நான். இவன் சொல்வதால் நான் ஒருத்தியை இழுத்துக் கொண்டு ஊர்சுற்ற முடியுமா என்ன. எனக்கே தோன்றினாலும் சரி எனலாம்.
படிப்பிற்காக முதல் முறையாக வெளியூருக்குக் கிளம்பி ஜோஹோரில் பேருந்து எடுக்கவென்று குவாலலம்பூரை நோக்கிப் பயணப் பட்டிருந்த நான் சிங்கப்பூரின் வுட்லண்ட்ஸின் குடிநுழைவுத் துறையின் நீண்ட வரிசையில் அம்மாவுடன் நின்று கொண்டிருந்தேன். புதிய இடம் புதிய கல்வி நிலையம் என்று எதிர்பார்ப்புகளும் கற்பனைகளும் என்னுடன் முன்னகர்ந்தபடி. முதல் தினம் பேசிக்கூத்தடித்ததெல்லாம் போதாதென்று மெங்லோங் அம்மாவின் கைத்தொலைபேசியில் அழைத்தான். யாரிடம் அந்த எண்ணை வாங்கியிருப்பான்? ஏதோ முக்கியமாகப் பேசப் போகிறானோ என்று நினைத்து எடுத்துப் பேசினால், “போனதும் போன் பண்ணுடா”, என்றான். “ம்,. ‘டிஜி டாப் அப் கார்ட்’ வாங்கினவுடனே பேசறேண்டா?”, என்றேன். வேறு எதுவும் பேசாமல், “டேய் போனதும் மொதல்ல ஒரு கேர்ள் ப்•ரெண்ட்ட பிடிடா”, என்றான். இதில் இவனுக்கு என்ன இவ்வளவு அக்கறையோ என்ற எரிச்சல் தான் மண்டியது. “பொத்திகிட்டுப் போடா”, என்று தமிழில் திட்டிவிட்டு இணைப்பைத் துண்டித்தேன். மறுமுனையில் மெங்லோங் சிரித்தாற்போலிருந்தது. வானை நோக்கி வளர்ந்து நின்றிருந்த கட்டடங்களைப் பார்த்த கண்களுக்கு தரை வீடுகளும் திறந்தவெளிகளும் நல்ல மாற்றம். சிறிய கடல் இடைவெளி ஏற்படுத்திய மிகப்பெரிய மாற்றங்களை வியந்தபடி பயணித்த என் மனதின் அடியில் மெங்லோங் மீது ஏற்பட்ட எரிச்சல் மறையாமலே உடன் வந்தது.
நண்பர்களோடு நகரத்திற்குப் போய்விட்டு இரவு தாமதமாக உறங்கி காலையில் தாமதமாக எழுந்ததிருந்த என்னை நினைத்து எனக்கே கொஞ்சம் வெட்கமாக இருந்தது. கிடுகிடுவென்று துண்டை எடுத்துக் கொண்டு குளிக்கக் கிளம்பினேன். குளியலறைகள் ஒன்றில் கூட ஆள் இல்லை. தண்ணீரில் நின்றபடி கைகள் தன்னிச்சையாக இயங்க நினைவுகள் முன்னும் பின்னுமாக நெய்யத் துவங்கியது. அனைத்து இன மாணவர்களும் உலகெங்கிலுமிருந்து வந்து தங்கிப் படித்தனர். கிட்டத்தட்ட ஒரு குட்டி உலகம் தான் பல்கலைக்கழக வளாகம். பத்துமலையையும் முருகனையும் மறந்து வில்லியம், வெரோனிக்கா, எட்வர்ட் மூவரும் தூங்கிக் கொண்டு தான் இருந்தார்கள். விடுமுறையன்று தூக்கத்தில் என்னையும் மிஞ்சி விடுபவர்கள் இருந்தார்கள் என்ற எண்ணமே ஒருவித நிம்மதியைக் கொடுத்தது. இன்று அம்மூவரும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதைப் பார்த்தால் சில மாதங்களுக்கு முன்பு ஓர் இரவில் நடந்ததைச் சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள்.
இருட்டி வெகு நேரமாகியிருந்தது. வெளியில் ஏதொ சண்டை போன்ற அரவம் கேட்டது. கீழே இறங்கு முன்னர் சன்னல் வழியாக எட்டிப் பார்த்தே. வேலியோரமாக வில்லியம், வெரோனிக்கா, எட்வர்ட் மூவரும் நிற்பது தெளிவின்றித் தெரிந்தது. எட்வர்ட்டை நோக்கிப் பாய்ந்து பாய்ந்து ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தான் வில்லியம். அவன் கையில் பளப்ளத்த கத்தி என் வயிற்றில் இறங்கியதைப் போல அதிர்ந்தேன். “ஐ டோல்ட் யூ ஸோ மெனி டைம்ஸ், வீ’ர் ஜஸ்ட் •ப்ரெண்ட்ஸ். வொய் டோண்ட் யூ பிலீ£வ்”, என்ற எட்வர்டின் சொற்களைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், உரக்கக் கத்திக் கொண்டிருந்த வில்லியத்தை வெரோனிக்கா விலக்கி விளக்கி சமாதானப் படுத்துவதும் புரிந்தது. நல்ல வேளை, அன்றைக்கு வேலையில் இருந்த காவல்காரர் சமயத்திற்கு வந்து மூவரையும் அவரவர் அறைக்குப் போகச் சொன்னார். இல்லையென்றால், ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்கலாம்.
ஒரு வாரத்திற்கு இந்தச் சம்பவம் பல்வெறு கட்டங்களில் வசதிக்கேற்ப புனைவுகள் சேர்க்கப்பட்டு வளாகத்தின் தலைப்புச் செய்தியாக உலவியது. இங்கு வருவதற்கு முன்பிருந்தே வில்லியமும் வெரோனிக்காவும் நெருங்கிப் பழகினர் என்பது எல்லோரும் அறிந்தது தான். வெரோனிக்கா எட்வர்டுடன் பாடம் சம்பந்தமாக அடிக்கடி சந்திக்கவும் பேசவும் நேர்ந்ததை வில்லியம் தப்பாகப் புரிந்து கொண்டானாம்.
ஆஸ்திரேலியாவிலிருந்து எட்வர்டின் தோழி தொலைபேசி வில்லியமிடம் விவரிவமாகச் சொன்னதும் தான் புரிந்து கொண்டனாம். அன்றிலிருந்து மூவரையும் சேர்ந்து பார்க்க முடிந்தது.
துறை சார்ந்த துறை சாராத வளாகத்தில் படித்த பாதிக்கும் மேற்பட்ட பெண்களிடமும் எனக்கு நட்பு உண்டு. ஆனால், மெங்லோங் சொல்வதைப் போல எனக்கு யாரிடமும் நெருக்கம் கிடையாது. அவன் ஸீஷ¤வானின் பையைத் தூக்கிக் கொண்டு நடக்கவும் அவள் நல்ல மனநிலையில் இருந்தால், இடையைப் பற்றிய படியும் நடந்தான். புகுமுக வகுப்பில் ஏதோ பேசிக் கொண்டே அவனின் வலது தோளில் என் வலக்கையைப் போட்டதற்கு ஏதோ நெருப்பைத் தொட்டு விட்டவன் போல, ‘ஏய், நாம என்ன ‘கேய்’யா?’ என்றபடி என் கையை உதறி விட்டான். தோழமைக்கும் ஒருபாலுறவுக்கும் இடையேயான அடிப்படை வித்தியாசங்கள் கூடவா புரியாமல் போயிற்று என்று நினைத்து அவனிடமே கேட்டேன். ஆணும் ஆணும் பெண்ணும் பெண்ணும் தொட்டுப் பேசுதல் கூடாது என்ற தன் சித்தாந்தத்தை அவிழ்த்து விட்டான். அவனிடம் பேசி என்ன பயன் என்று வாயை மூடிக் கொண்டேன்.
மெங்லோங் பட்டினி கிடந்து பணம் சேர்த்து பரிசுப் பொருள் என்றும் உயர்ரக உணவு விடுதியில் மாலை உணவு என்றும் ஸீஷ¤வானுக்காகச் செலவிட்டான். அத்தகைய கவலைகளை விட தேவையான முக்கியக் கவலைகள் எனக்கு இருந்ததால் எதிலும் மாட்டிக் கொள்ளவும் நான் விரும்பவில்லை. தவிர, என்னைக் கவர்ந்தவள் இன்னும் என் கண்ணில் படவில்லை. ‘ரெயின் கோட்’ படத்தில் வந்த உலக அழகி ஐஸ்வர்யாவை ‘வீணடித்து விட்டதாக’ மற்றவர்கள் நினைத்த நேரத்தில் ஒப்பனைகளற்ற அந்த முகம் தான் எனக்குப் பிடித்திருந்தது. “இவனோட டேஸ்டே அலாதி டா”, என்று ஒரு மாதிரியாகப் பார்த்தனர். பெரும்பான்மையினரின் ருசிகளோடு தன்னுடைய ருசிகளையும் வலுவில் பொருத்திக் கொண்டு ஜோதியோடு ஐக்கியமாகி அதன் மூலம் கிடைப்பதாக பமற்றவர் நம்பிய அங்கீகாரத்துக்கு ஆசைப்பட எனக்கு விருப்பமேயில்லை.
தலை துவட்டிக் கொண்டிருந்த போது மீண்டும் மெங்லோங்கின் தொலையழைப்பு. பேசாமல் எடுத்துப் பேசிவிடுவோமா என்று தோன்றியது. அவனின் முத்திரைக் கேள்வியைக் கேட்டால், “ம், ஒருத்தியோட நெருங்க முயற்சிக்கிறேன்”, என்று சொல்லி விட்டால் போகிறது. “அறிமுகப் படுத்துடா”, என்று நச்சரிப்பான். விடுப்பு மட்டும் கிடைத்தால், உண்மையைக் கண்டு பிடித்தும் ஆர்வத்திலும் அந்த ‘ஒருத்தி’யைப் பார்க்கும் ஆர்வத்திலும் விடுவிடுவென்று சிங்கப்பூரிலிருந்து கிளம்பி ஒருநடை வந்து விடவும் கூடியவன் தான். அப்படியே தன் சொந்தக்கார்களையும் பார்த்து விட்டுப் போய்ச் சேருவான். ஏற்கனவே ஒருத்தி இருப்பதாகச் சொன்னாலோ அவனின் ஆர்வம் பீரிட்டு உறக்கமும் கொள்ளாமல் தவிப்பான்.
புகுமுக வகுப்பின் முதலாம் ஆண்டு. சதீஷ் என்ற ஒரு மாணவனிடம் இதே கேள்வியால் நச்சரித்த மெங்லோங், “தட்ஸ் நன் ஆ•ப் யுவர் பிஸன்ஸ்’, என்று நன்றாக வாங்கி கட்டிக் கொண்டான். அதற்குப் பழிவாங்கும் நோக்குடன் சதீஷை, ‘பொட்டப்பய’, என்று ஒரு வாரத்திற்குச் சொல்லிக் கொண்டு திரிந்தான். ‘உண்மையில் உனக்குத் தான் ஏதோத் தான் தாழ்வு மனப்பான்மையோ மனப் பிறழ்வோன்னு நினைக்கிறேன். பின்ன என்னடா, எப்பப் பாத்தாலும் இதப் பத்தியே பேசிகிட்டு’, என்று ஒரு முறை நாங்களிருவரும் தனித்திருந்த நேரத்தில் கேட்டிருக்கிறேன். அதற்கும் மிகச் சமார்த்தியமாகப் பேசி என்னையும் மற்றோரையும் குழப்பத்திலும் குற்றவுணர்விலும் தள்ளினான். அதே வருடத்தில் அவனின் மூன்றாவது தோழி வெண்டி அவனை விட்டு விலகிய போது, ‘அவளுக்கு என்னோட அரும தெரியல்ல. இன்னும் நல்ல கல்லூரியில் இடம் கிடைத்தும் இவளுக்காக நான் இங்க சேர்ந்தேம்பாரு, என்னச் சொல்லணும். அவ துர்திருஷ்டம் பிடிச்சவ’, என்று எல்லோரிடமும் சொல்லித் திரிந்தான். ‘குப்புர விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்று சாதித்திடும் அவனின் குணம் எல்லோருக்கும் உணரக் கூடியதாகவே இருந்தது.
அந்தப் பெண் வெண்டியும் சளைத்தவளில்லை. “பதினேழு வயதான போதிலும் மீசை முளைக்கவில்லை என்றும் தான் உயரமோ ஆண்மைக்குரிய வேறு அடையாளமோ இல்லை என்றும் ஒரு தாழ்வு மனப்பான்மை அவனுக்குள் ஆழமாவே இருக்கு. அத மறைத்துக் கொள்ளவோ என்னவோ, மாத்தி மாத்தி ‘கேர்ள் ப்ரெண்ட்’ வச்சிகிட்டு மத்தவங்கள மட்டம் தட்டிப் பேசிகிட்டே இருக்கான்”, என்று நிறைய பேரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். “சுந்தர், உன்னோட நெருக்கமாப் பழகறான்னு நெனக்காத. உள்ளுக்குள்ள உன்னோட உயரத்தப் பார்த்து அவனுக்கு ரொம்பப் பொறாமை. உன்னோட அந்தக் கருகரு மீசையப் பார்த்தும் தான். அவனே என் கிட்ட சொல்லியிருக்கான்.
உங்களையெல்லாம் க்ளீனா ஷேவ் பண்ணிகிட்டு வரச்சொல்லி டிஸிப்ளின் மாஸ்டர் சொல்லும் போது நீ அவன் மூஞ்சியப் பாக்கணுமே. திருப்தியையும் சந்தோஷத்தையும் நாங்கவனிச்சிருக்கேன்”, என்று என்னிடம் தனியாக வேறு சொன்னாள்.
எல்லாமே ஸீஷ¤வானின் தோழமை கிடைக்கும் வரை தான். அதன் பிறகு, புகுமுக வகுப்பில் நெருக்கமாகி, பின்னர் பல்கலைப் பட்டப்படிப்பு முடித்து விட்டு மணந்து கொண்டு எங்கள் கல்லூரியிலேயே ஆசிரியர்களாகப் பணியாற்றிய லீ தம்பதியர் மெங்லோங்கின் ஆதர்சமாகிப் போனார்கள். அவரைப் போல சில வருடங்களில் ஸீஷ¤வானை மணக்க விரும்பும் கற்பனைகளில் லயித்தான். அக்கற்பனைகளின் மூலம் மெங்லோங், தங்களிடையே இருந்த உறவின் பலம் குறித்து தனக்கும் அவளுக்கும் இருக்கக் கூடிய சந்தேகங்களை விரட்டவே முயன்றான் என்பது எனக்குப் புரியவே செய்தது.
உடை மாற்றிக் கொண்டு தொலைக் காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்தேன். மீண்டும் தொலைபேசி ஒலித்தது. சிங்கப்பூர் எண் தான். ஆனால், மெங்லோங்கின் எண் இல்லை. இது என்னடா, யார் யாரோ கூப்டறங்க? ஓ, ரஜித் மெங்லோங்கின் நண்பன் ! எனக்கும் தெரியும் அவனை. நேரடியாக விஷயத்திற்கு வந்தான். ஸீஷ¤வான் மெங்லோங்கை விட்டுப் பிரிந்து விட்டாளாம். முறையாக அவனைச் சந்திக்க வந்து, சுமுகமாகப் பேசிவிட்டுப் போனாளாம். பல்கலைக் கழகத்தில் புதிதாகக் கிடைத்திருந்த தன் தோழனையும் உடன் அழைத்து வந்திருந்தாள் என்றும் சொன்னான். “இப்ப வேலையில இருப்பானில்ல?”, என்று நான் கேட்டதுமே, “இல்ல, லீவுல இருக்கான். பேசு. ஸீஷ¤வான் ‘ப்ரேக் அப்’னு சொன்னதுமே பாவம் கொடகொடன்னு அழுதுட்டானாம். முந்தா நாளே நீ அவங்கூடப் பேசியிருந்தா நேத்தி ராத்திரி மூக்கால ஒழுகற வரைக்கும் குடிச்சிருக்க மாட்டான்”, என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து, “அவன் எங்களையெல்லாரையும் விட உன்னோட தானே ரொம்ப க்ளோஸ். சொல்லி அழத்தாண்டா நெனக்கிறான். மொதல்ல பேசு”, என்ற சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்ததும், நானே மெங்லோங்கின் எண்ணை அழுத்தினேன்.
இது நான் சற்றும் எதிர் பார்க்காதது. தான் தேசியசேவையை முடித்து விடுவதற்குள் இடையிடையே சந்திக்கப் பழகக் கிடைக்கும் சந்தர்ப்பங்கள் போதுமானதாக இராது என்றும் அவள் வேறு ஒருவனைப் பிடித்து விடக்கூடும் ஆபாயம் உண்டு என்பதையும் மெங்லோங் உணர்ந்தேயிருந்தான். அதனால் தான் அவளை அனுசரிக்கவும் தங்கத் தாம்பளத்தில் தாங்கவும் வேண்டிய கட்டாயங்கள் அவனுக்கு இருந்தன. மெங்லோங் குடித்தான் என்பது அவனின் மன அழுத்தத்தை சொன்னாலும், ‘இதெல்லாம் வேற செய்யறயாடா மச்சான்?’, என்று ஆச்சரியத்தைக் கொடுத்தது. அழுதான் என்பதை அறிந்த கணம் சிரிப்பு வந்தாலும் பாவமாகத் தான் இருந்தது. ஸீஷ¤வானின் மேல் அத்தனை நம்பிக்கையா வைத்திருந்தானா? ஆனால், என்ன சொல்லித் தேற்றுவது?
(யுகமாயினி – அக்டோபர் 2007)
sankari01sg@yahoo.com
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பெரு வெடிப்பு எப்படி ஏற்பட்டது ? (கட்டுரை: 3)
- வடகிழக்கும் பாரதமே: பிரிப்பவர்கள் யார்?
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 2
- இனியொரு விதி செய்வோம்
- நிச்சயிக்கப்பட்ட திருமணம்
- இலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 23) வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2007
- தமிழ் வாணனின் வழிகாட்டிப் புத்தகங்கள்
- சிறுகதை எழுதப் போய் ..
- லா.ச.ரா.வுக்கு அஞ்சலி – 2 அம்பாளின் தொப்புள்கொடி
- சிங்கப்பூரில் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் தொடக்க நிகழ்வுகள் பற்றிய கலந்துரையாடல்!
- ஹெச்.ஜி.ரசூல் அவர்களுக்கு நேர்ந்த துயரம் : விடைகாண முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் கேள்விகள்
- ‘பெருஞ்சுவருக்குப் பின்னே’ – ஜெயந்தி சங்கர் (நூல் அறிமுகம்)
- பேராசிரியர் அம்மன்கிளி முருகதாசுவின் சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும் ஓரு மதிப்பீடு
- ஜெயமோகனின் சிறுகதைகள் – ஓர் பார்வை
- பாரதியாரின் தனித்தன்மை வாய்ந்த சிந்தனைகள்
- கவிதையோடு கரைதல். (ஈரோடு தமிழன்பனின் கவின் குறு நூறு )
- குற்றாலச் சிற்றருவி
- சிவசேனையின் வட்டார வாசனை நீங்க…
- கடிதம்
- கடற்கரைச்சாலை கவிமாலையின் கணையாழி விருது விழா
- கடிதம்
- பட்டிமன்றம் 25 நவம்பர் 2007
- கடலில் கரைந்த ஒரு துண்டு படகு..
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 7 – தடம் புரண்ட தலை நகரம்
- பள்ளிக்கூடம்
- மஞ்சள் வெளியின் இரண்டாவது அறை
- ஒரே கேள்வி
- மாத்தா ஹரி அத்தியாயம் -36
- இறந்தவன் குறிப்புகள் – 2
- மலர் மன்னன் எனக்கு எழுதிய மடலும் அதற்கான என் நன்றியும் எதிர்வினையும்
- மரணத்தின் விளிம்பிலிருந்து – (ஓர் உண்மை நிகழ்ச்சி)
- படித்ததும் புரிந்ததும்.. (10) காங்கிரஸ் தோற்றமும் – மாற்றமும் – அகிம்சையிலிருந்து இம்சை கட்சி அரசியல் ஒரே குட்டையில் ஊறிய மட்டை
- புன்னகைக்கும் பெருவெளி
- ஜெகத் ஜால ஜப்பான் – 1 . தோசோ யோரோஷிகூ
- கர்நாடகத்தில் மலர்ந்த கமலம்
- திண்ணைப் பேச்சு – ஒரு தன்னிலை (இன்மை) விளக்கம்
- நாம் எப்படி?
- தாகூரின் கீதங்கள் -3 மாறி மாறி வரும் முகம் !
- கவிதைகள்
- கல்யாணம் பண்ணிப்பார்!
- இலை போட்டாச்சு 38 – கோதுமை மோர்க்கூழ் (மோர்க்களி) /அரிசிமாவு மோர்க்கூழ் (மோர்க்களி)