ஒரு மஞ்சள் மயக்கம்

This entry is part [part not set] of 28 in the series 20050506_Issue

சாரங்கா தயாநந்தன்


உருண்டோடிற்று அது. பளீரிட்ட வட்டக் குற்றி. மூப்பிலான மங்கல் சற்று. முதிர்ச்சியினாலாய சோபையிழப்பு. வழமை. ஒதுக்கிற்று. அழகிழப்புக் குறைத்து விட்டிருக்காத, பெறுமதியினாலாய கர்வம் அதன் முகத்தில் கீற்றாய். சதங்கள் யாவும் செத்திருந்தன. தக்கன பிழைக்கும் நியதிப்படி, தகாதனவாகி. ஒரு ரூபாவும் இரண்டு ரூபாவும் இன்றோ நாளையோ என நாளெண்ணுவதாய்ச் சினேகமான ஒரு பொழுதில் கதை பரிமாறியிருந்தன. ரூபாய்களில் நாளை சாவு தொற்றுகையில் மூன்றாவது இலக்காக இதன் தலைதான் உருளும். சாவு அண்மித்திருக்கையிலும் வாழ்வு பற்றிக் கர்வித்திருப்பது ஒருவகைச் சுகம். அதை அது அனுபவித்திருந்தது.

முன்பொருநாள் பிறந்த பொழுதில் ‘தங்கமே நானென ‘ ப் போக்குக் காட்டிற்று, சில மனிதரைப் போல. யாரோ ஒருவரால் சின்ன மகனின் சந்தோஷத்திற்கு அன்பளிப்பாகியது. அவன் கையில் வாழ்ந்தது அவனது சிறு விழிகள் வெண்ணிறப் பாம்பு பலூனைப் பார்க்கும் வரையில் தான். அவன் அதைப் பார்த்த பொழுதில் கைமாறிற்று. பெறும் போதும் இழக்கும் போதும் சந்தோஷமான சிறுவனைப் புரியமுடியவில்லை. அதுதான் ஞானமோ ? அல்லது தேவை தணிந்த திருப்தியோ அவனது ?

பணக்காரப்பையன்களிடையே படபடவெனக் கைமாறமுடியும். வாழ்க்கை சுறுசுறுப்பாக இருக்கும். ஒரு சிறு யூஸ் பைக்கற்றாக ,மாபிளாக,பபிள்கம்மாக மாறி அவர்கள் முகத்தில் சந்தோஷத்தை அப்பி விட்டு உற்சாகமாய்ப் பாயமுடியும். ஏழைச் சிறுவர்களிடம் அவ்வாறில்லை. சிலபொழுதில் சிறுதகரப் பேணியில் முடங்கிக் கிடக்கவேண்டும். அல்லது உண்டியலுக்குள் படுத்து ஒரெயொரு சிறு ஒளிக்கீற்றையும் ஒரு கொஞ்சம் காற்றையும் உறிஞ்சிக் கொண்டிருக்கவேண்டும். விட்டுவிடுதலையாகும் நாள் எண்ணுவது போலக் கஷ்டமான தொழில் உலகத்திலில்லை என்பது தான் உண்மை. வியர்க்கும் .விசிறத் தென்றலுக்கு உள் நுழையும் அனுமதி மறுக்கப்பட்ட சிறுதுவாரம் .விதியே என்ற படுத்துவிட வேண்டியதுதான்.கைமீறிய விடயங்களில் கவலையுறல் முட்டாள்தனம். அது மனிதர்களுக்கு மடுமே வாய்த்த பெருஞ்சொத்து. ‘களுக் ‘ என்று சிரித்தது, உருண்டோடியபடி. மனிதர்களை நினைத்துத் தான்.

ஓட்டமுடிவு. தரையுராய்வு. உராய்வற்ற ஒரு தரையில் தொடரோட்டம் போடுவதாக ஓரிரவில் கண்ட கனவுக்காக மகிழவில்லை அது. வாழ்வே மாயமோ என்ற சிந்தனை மனதில் வசித்து வருவதில் மாயமென உறுதிப்படுத்தப்பட்ட கனவுக்காகச் சிரித்துக்கொள்வது அவ்வளவு புத்திசாலித்தனமல்ல என்பது அதன் நம்பிக்கை. மெல்லிய ஓரம் சிறுபுல்லில் முட்டியதைக் காரணமாக்கிப் படாரெனச் சாய்ந்தது. மல்லாந்து படுத்து அரச இலச்சனை காட்டியது. பாதசாரி வாலிபனின் அலையும் பார்வை தொட்டு அடுத்த நொடியில் சொந்தங்களுடன் சேர்ந்து கடைப்பெட்டிக்குள் குலுங்கியது. அதே பொழுதில் அவன் சிகரெட்டோடு புகைந்தான்.

பெட்டிக்குள் பார்த்தபோது பக்கமெல்லாம் சொந்தக்காரர்கள். தாள்கள் நாணயங்களை ஏறெடுத்துப் பார்க்காத மமதையோடு இருப்பதாய்த் தோன்றியது. இருக்கட்டுமேன். ‘ ‘வெறும் நீர்த்துளிக்குச் சாகிற கோழைகள். ‘ ‘ மனதுள் கறுவியது. ஆனால் ஒரு ரூபாக் குற்றியின் மரியாதையான ‘ ‘அண்ணாச்சி ‘ ‘யோடு கொதி கோபங் குளிர்ந்து விட்டது. ‘ ‘பெரியவர்களுக்குப் பெரியவர்களும் சிறியவர்களுக்குச் சிறியவர்களும் உலகத்தில் வந்தே தீருவார்கள் என்று பெரியவர் ஒருவர் சொல்லியிருப்பது பற்றி வயதில் சிறியவராகிய நீங்கள் என்ன கருதுகிறீர்கள் ? ‘ ‘ என ஒரு ரூபாவைக் கேட்டபோது அது திருதிருவென விழித்து விட்டு பதிலற்று மெளனமாகி விட்டது. மீண்டும் கேட்டபோது கேள்வியைப் பற்றிச் சிந்திப்பதாகக் கூறியது. சிறிது பொழுதில் உற்றுப் பார்க்கத் தூங்கிப் போயிருந்தது. ஆக, ஒப்பீடற்ற நிர்ச்சலனமே நிரந்தர சந்தோஷம் என்று முன்பொருநாள் காதில் விழுந்த சேதியை நினைத்தபடி தானும் தூங்கிப் போனது.

மறுநாள் யாசகனின் கையிரப்பு குரலாய் அதனை மோதியதில் விழிப்பு வந்து விட்டது. கடைக்காரனின் வேகமான இழுப்பறைத் திறப்பு. கைக்கெட்டிய நாணயம் தூக்கி வீசினான். அவனது கவனமெல்லாம் யாசகனின் தொழுநோய்ப்பாதங்கள் வாசலின் ‘பளபள ‘க் கம்பளத்தில் பதிந்திருந்ததில் மட்டும் . யாசகன் பொறுக்கினான். நெளிந்த காசுக்குடுவைக்குள் பட்டென அதன் முகம் மோதிற்று. மாலைப்பொழுதில் ஒரு குச்சுக் கடையில் அவனுக்கான தேநீர் ஆயிற்று. பிறன் பசி தீர்த்த பெருமித நிறைவில் சுகித்தது. மனிதனுக்கு ஏனில்லை இப்பண்பு ? பதிலற்ற மயக்கம். கேள்வியின் சிக்கலுக்குள் மாட்டிப் போய் அதிக நேரமாய் யோசித்துக் கொண்டிருந்தது அது.

****

நாளெனும் ந(இ)ல்லாள்

விழி திறந்தேன்.. குளிர்தென்றல் வருடிற்று. போர்வை தன் கடமை தொலைத்திருந்தது.கால்ப்பிரதேசம் கவனமாய் மூடினேன். மெல்லச் சந்தடியற்று வந்து நின்றாள் அவள். வழமை போல. உஷாதான். சுவாசிக்க இதமான பவள மல்லி வாசத்தைத் திருடி ஓடிற்று காற்று ,என் மூக்கில் மோதி. எழுந்து அவளை அணைக்கத் துடித்தது மனம். உடல் இல்லை.அசையாமல் படுத்திருந்தேன்.தழுவச் சொன்னாள், அன்றைய கடமைகளை நினைப்பூட்டி. எந்த வேலையின் தொடக்கத்திலும் அவளை உசுப்பேற்றி விட முடியும்.புரிந்தும் தள்ளினேன் ,இணைவு பிடிக்காத புருஷனாய்.

முழந்தாழிட்டுப் பணிந்தாள். தன்னைக் ‘கூடுதல் ‘ எனக்கு நன்மை தரும் என்றாள். தள்ளினேன். மிகையாகும் அவள் ஒளி என்முகம் மோதியதில் சலிப்போடு எழும்பினேன். பல் துலக்குதலே பெரும் வேலையெனும் என் பாசாங்கு. எச்சிலைத் துப்பினேன். விலகலற்று ,அவள் அருகிலேயே நின்றாள். இளமையின் தீவிரம் தொலைத்த நான்.அது கருதாத அவள்.

கடிகாரம் அலாரித்தது. பாய்ந்து அதன் தலையில் ஒரு குட்டு வைத்தேன். அதன் மென்சங்கீதம் என்காதின் நாராசம். அதன் முகத்தில் இவளது வயதை ஒட்டியிருந்தது. எவ்வொரு கணத்திலும் இவளது வயதைத் தீர்மானிக்கப் பிறந்த கடிகாரங்கள். பல்கிப் பெருகி…உலகமெல்லாம் ஆகி… என் புத்தியில் உறைத்த இவளின் பெறுமானத்தை ஒதுக்கினேன். முற்றுமாய் உணர்ந்து விடக்கூடாத கவனம் எனது. ஏனெனில் நானறிவேன். ஆரம்பம் ஒன்றே இழப்புணர்தலதும் வேதனையினதும்.

காலைப் பருவம் இப்போது அவளது. வயது அவள் குதிப்பை விலக்கியதோ ? பறவைகளின் கானக் கலைவு. மென் சூடேறிய அவளுடல் என்னை ஆர்வப் படுத்தினும் கூட உடல் சலிப்புடன் சோம்பிக்கிடந்தது . வானொலி தட்டினேன். வழிந்தது ஒலி அருவி . .அதில் நிமிடங்களைக் கரைத்தேன். அறுபதாகி தம் மணிமுகம் காட்டின நிமிடங்கள்.எனக் கென்ன. அதையும் கரைத்தேன்.

நான்கு நண்பர்களின் வரவு. மெல்ல எம் கூடவே நின்றவளில் எம் ஐவரதும் அலட்சியம். உரத்துச் சிரித்தோம், சந் தோஷிப்பதான போக்குக் காட்டி. இப்போது அமைதிப்பட்டிருந்தாள். ஆயினும் அவள் கோபம் கொண்டிருக்க வேண்டும் .தகிப்பு. கடிகார மணி முட்கள் கூடின. சங்கமம் இனிதென நாளுக்கு இருமுறை.

பாதிப்பகல் வயது அவளது.அவள் கண்களில் இன்னுங் கூட ஆர்வம். பயன் படுத்த வேண்டித்தான். புறக்கணித்தேன். நண்பர்கள் விலகினர். அவளும் விலகி நடப்பதாய் உணர்ந்தேன்.

மாலை ஆனாள் அவள்.நான் இன்னமும் என் மார்பில் சூடிக்கொள்ளாத அவள். உற்சாகம் செத்திருந்தாள், ஒரு வெளிறிய நோயாளிப் பெண்ணைப் போல. தான் மெல்ல நடந்து உலகை ஓட ஓட விரட்டும் நடுத்தரவயதுக்காரி. முதிர்வில் இழந்த சோபை. மாலையும் பாலையும் ஒன்று. இரண்டும் வரண்ட வெளி. மதியத்துக்கும் இரவுக்கும் இடையிலான மாலை ஒரு பாலம். மதியம் உற்சாகமுற்றிருந்தால் மென்பாட்டோடு அப்பாலவழி நடக்கலாம் மகிழ்ச்சியான இரவை நோக்கி. எதுவும் நிகழாது எனக்கு. கசந்தது.

இரவு. இருளுள் புதைந்த அவள் முதிர்வு முற்றி மடிந்தாள், என் ஆண்மை பயனின்றிக் கழிய. ஏக்கம் மூடிற்று என்னை. என் இனிய மனைவியாய் வந்தாள் .இருவரும் இணைந்து புதியதொன்றைப் பிறப்பிக்காத கவலை அப்பிற்று.வெறுமை. தினமும் வருவாள் அவள் ,உயிர்த்து. நாளை எழுவேன் அவளை எனதாக்கி, ஏக்கம் தொலைத்து.

****

Series Navigation

சாரங்கா தயாநந்தன்

சாரங்கா தயாநந்தன்