எஸ். ஜயலக்ஷ்மி
’’குட்மார்னிங் மேடம்’’ என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள் ஜானகி. ‘’குட்மார்னிங்’’ என்று பதில் வணக்கம் சொல்லிவிட்டு என்ன விஷயம் என்பது போல் பார்த்தாள்.
‘’நான் ஸரஸ்வதி வித்யாசாலையில் டீச்சராயிருக்கேன். என் பெயர் பங்கஜம். ஒங்ககிட்ட ஒரு விஷயம் கேக்க ணும்’’ என்றாள். சம்பளப் பட்டியலில் அந்த டீச்சரின் பெயரைப் பார்த்தது ஜானகியின் நினைவுக்கு வந்தது.
ஸரஸ்வதி வித்யாசாலையில் சுமார் 40 ஆசிரியைகள். பொதுவாக அப்பள்ளியின் க்ளார்க் நீலா தான் வருவாள். இன்று இந்த டீச்சரே நேரில் வந்திருப்பதால் ஏதோ முக்கியமான விஷய மாகத்தான் இருக்க வேண்டும். ‘’சொல்லுங்க டீச்சர்’’ பங்கஜம் டீச்சர் தயங்கித் தயங்கிப் பேச ஆரம்பித்தாள். அதற்குள் ஆபீஸ் பியூன் வந்து ஆபீசர் கூப்பிடுவதாகச் சொன்னதும் ஜானகி எழுந்து உள்ளே போனாள். அவள் திரும்பி வந்த போது அவள் மேஜையருகே மேலும் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். இந்தச் சூழ்நிலை யில் தான் சொல்லவந்ததை நிதானமாகச் சொல்ல முடியாதென்று தோன்றவே, ‘’மேடம் நாளை உங்கள்
வீட்டில் வந்து பார்க்கட்டுமா? கொஞ்சம் தனியாகப் பேச
வேண்டும். நாளை உங்களுக்கு ஆபீஸ் லீவுதானே?’’ என்றாள். ‘’சரி நாளை வாருங்கள் என்றாள் ஜானகி.
மறுநாள் காலை 10 மணிக்கெல்லாம் பங்கஜம் டீச்சர் வந்து விட்டாள். கொஞ்ச நேரம் பொது வான விஷயங்களைப் பேசியபின், ‘’எங்க க்ளார்க் ஒங்களப் பத்தி ரொம்பப் பெருமையாச் சொல்லுவாள். ஜானகி மேடம் கிட்ட பெண்டிங்கே இருக்காது.பி.எஃப் லோன் போட்டா சிக்கிரமா சாங்ஷன் பண்ணிடுவா என்று ஜானகிக்கு கொஞ்சம் ஐஸ் வைத்தாள். மொதல்ல
என்ன விஷயம்னு சொல்லுங்கோ, ஜானகி கேட்டாள்.
’’என்னோட பிரச்சனையை மொதல் லேர்ந்து சொன்னாத்தான் ஒங்களுக்குப் புரியும்’’
சரி, விஷயம் தீவிரமானது தான் என்று ஜானகிக்குத் தோன்றியது. அவளே ஆரம்பிக்கட்டடும் என்று ஜானகி
கேட்கத் தயாரானாள்.இதற்குள் ஜானகியின் அம்மா காபி கொண்டுவந்து கொடுத்தாள். அம்மாவுக்குப் பங்கஜம் டீச்சரை அறிமுகம் செய்து வைத்தாள் ஜானகி.
’’மாமி, நமஸ்காரம். என்று சொல்லி விட்டு காபி குடித்தவள், ‘’மாமி காபி ஏ ஒன்! ஒங்களப் பாத்தா எங்கம்மாவப் பாத்த மாதிரி யிருக்கு என்றாள். பின் தன்
பிரச்சனையை (கதையை)ச் சொல்ல ஆரம்பித்தாள்.
’’எங்கப்பா ரொம்ப வசதியானவர் இல்லைன்னாலும் என்னை டீச்சர் ட்ரெயினிங் படிக்க வெச்சிருந்தார். அது முடிஞ்சதுமே வரன் பாக்க ஆரம்பிச்சுட்டார். எனக்குக் கொஞ்ச நாளாவது வேலை பாக்கணும்னு ஆசை. நான் அப்பவே பாட்டு, ட்ராமா, படிப்பு எல்லாத்திலும் முன் னால நிப்பேன். வேலைக்கும் முயற்சி செஞ்சோம். அந்த சமயம் எங்க வீட்டுக்கு வந்த உறவுகாரர், என் கணவர் வீட்டைப் பற்றிச் சொல்லி நல்ல வசதியான இடம் அவாளும் நல்ல பொண்ணாப் பாத்துண்டு இருக்கா.நீங்க வேணா ஜாதகத்த வாங்கிப் பாருங் கோன்னு சொல் லிட்டுப் போனார். எனக்கு எப்படியும் வேலைக்குப் போகணும்னு ஒரே ஆசையா இருந்தது. ஆனா எங்க அம்மா அப்பா, பாட்டி எல்லோ ரும் ’’நல்ல எடம்னு சொல்லறா. ஜாதகம் வாங்கிப் பாப்போம். பொருத்தம் இருந்தா மேல பேசுவோம். இல்லாட்டா வேலை பாரு.வேலை எங்க போறது?’’ என்று ஜாதகம் பார்க்க ஆரம்பித்தார்கள். எனக்குக் கீழே ரெண்டு தங்கைகள் எல்லாரையும் கரையேத்தணுமே!
டீச்சரின் வார்த்தைகளில் நக்கல்
தெரிந்தது. ஜானகிக்கும் அவள் சொல்வது புரிந்தது.பெண் கள் என்ன ஆடுமாடுகளா கரையேற்ற? கரையேற்றல் என்ற வார்த்தை ஜானகிக்கும் பிடிக்காது தான்.
மாப்பிள்ளையின் அப்பா வசதி பற்றிச்
சொன்னவர்கள் மாப்பிள்ளையின் வசதி பற்றிச் சொல்ல வில்லை. வசதி வளியே தெரிந்தது. கடன் வெளியே தெரியவில்லை. ஜாதகம் ரொம்ப நன்னாப் பொருந்தி
யிருக்கு என்று சொன்னார்கள். ஜாதகம் பார்த்தவர்கள் பாதகங்களைப் பார்க்கத் தவறி விட்டார்கள். கல்யாணம் ஜாம் ஜாம் என்று நடந்தது. நான் குடித்தனம் பண்ண ஆரம்பித்த பிறகுதான் அவரது குடியைப் பற்றித் தெரிந் தது. விஷயங்கள் ஒவ்வொன்றாய் வெளியே வர ஆரம்
பித்தது.
முதல் வருஷமே பெரியவள் ரமா பிறந்து விட்டாள். நான் பிரசவத்திற்காகப் போய் விட்டு வந்த ஆறு மாதங்களுக்குள் என் கணவருடைய நட வடிக்கைகள் அதிகமாகி விட்டிருந்தது. குடிப்பழக்கம், காசுவைத்துச் சீட்டாடுவது, பனம் போதவில்லை யென் றால் அதிக வட்டிக்குக் கடன் வாங்குவது என்று எல்லாமே கட்டுப் பாடில்லாமல் போய் விட்டிருந்தது.
நான் எல்லாவற்றியும் சரிப்படுத்த முயற்சி செய்தேன்.
இதற்குள் உமாவும் பிறந்து விட்டாள். வீட்டில் நிம்மதி போனது. தனியார் கம்பெனியில் என் கணவரின் ஒழுங்கீனங்களைப் பொறுக்க அவர்கள் தயாராக இல்லை. அவர் ஒழுங்காக வேலைக்குப் போவதில்லை. போனாலும் ஒழுங்காக வேலை பார்ப்பதில்லை.
அதனால் அவரை வேலையை விட்டு நீக்கியது அதிசயமில்லை.
ஒருநாள் அதிகமாக்க் குடித்து விட்டு பைக்கில் வந்த போது நிலை தடுமாறி போஸ்டில் மோதி தூக்கி எறியப்பட்டதில் அந்த இடத்தி லேயே உயிர் பிரிந்து விட்டது. எனக்கு வாழ்க்கையே
வெறுத்து விட்டது. ஆனால் காலைக் கட்டிக் கொண்டு அழும் ரெண்டு கொழந்தைகளையும் காப்பாத்தணுமே!
ரெண்டு கொழந்தைகளுக்கும் அம்மாவும் அப்பாவுமா இருந்து கடமையைச் செய்யணுமே! நான் படிச்ச டீச்சர் ட்ரெயினிங் கை கொடுத்தது.கல்யாணத்துக்கு முன்னால பாக்காத வேலையை இப்போ பாத்தாக வேண்டிய கட்டா யம். என்னோட திறமையைப் பாத்து இந்தப் பள்ளிக் கூடத்தில வேலை குடுத்தா. ஆச்சு 25 வருஷம் ஓடிப்போயாச்சு.
நானும் அம்மாவும் கேட்டுக் கொண்டி ருந்தோம். டீச்சர் முகத்தைத் துடைத்துக் கொண்டு மேலே ஆரம்பித்தாள். “கொழந்தைகள் கொஞ்சம் பெரிய வாளா ஆனதும் ட்யூஷன் எடுக்க ஆரம்பிச்சேன். நெறைய கொழந்தைகள் படிக்க வந்தார்கள். பங்கஜம் டீச்சர் மாதிரி யாரும் சொல்லித் தர முடியாதுன்னு பெயர் வாங்கியிருக்கேன்”.
”மேடம், என்னோட பி.எஃப் அப்ளிகேஷன்ல ரமா, உமா ரெண்டு பேரையும் எனக்கு நாமினியாப் போட்டி ருக்கேன். அதுல உமா பேரைக் கான்சல் பண்ணணும். எனக்கப்பறம் என் பணம் முழுசும் என் மூத்த பொண் ரமாவுக்கு மட்டுமே தான் சேரணும். அந்த ராக்ஷஸிக்கு ஒரு பைசாக் கூடச் சேரக்கூடாது” என்றாள். இது கொஞ்சம் வித்தியாசமான கேஸ் என்று ஜானகிக்குத் தோன்றியது.ஜானகியின் எண்ணத்தைப் புரிந்துகொண்ட டீச்சர், நான் சொல்றதக் கேட்டா என் கோபம் ஒங்க ளுக்குப் புரியும். மாமி, நீங்களும் கேக்கலாம், பரவா யில்லை’’ என்றாள். இருவரும் ஆர்வமுடன்
கேட்கலானார்கள்.
”என் பெரிய பொண் ரமா எனக்கு ரொம்ப அனுசரணையா ட்யூஷன் எடுப்பாள். டிகிரி முடிச்சப்பறம் பாங்க் பரீக்ஷை எழுதினாள். பாங்க் வேலையும் பாத்துண்டே ட்யூஷனும் எடுத்தாள். தனக்கு வேண்டிய நகைகளையும் பண்ணிண்டா. ஸ்டேட் பாங்க்கில் வேலை பாக்கற பையனைப் பார்த்தேன். என்ன மாதிரி எம்பொண் கஷ்டப்படக் கூடாதுன்னு நன்னா விசாரிச்சு கல்யாணம் பண்ணிக் குடுத்தேன். அவாளும் எம்பொண்ண நல்லபடியா பாத்துக்கறா.
ஆனா இந்த உமாவால நாம்பட்ட
பாடு! எங்கிட்ட ட்யூஷன் படிக்க வந்த பையனாலேயே பிரச்சனை வரும்னு நான் எதிர் பாக்கவேயில்லை. உமா
கிட்ட ட்யூஷன் படிச்சு பாஸ் பண்ணிட்டு உள்ளூரி லேயே பாலிடெக்னிக் சேர்ந்து விட்டான். அப்பறம் ஈரோடோ, கோயமுத்தூரோ, வேலைக்குப் போய் விட் டான். உமாவும் கரஸ்பாண்டண்ட் கோர்ஸில் சேர்ந்து பி.எட் படித்தாள். பாங்க், ரயில்வே, எல்.ஐ.சி என்று பரீட்சைகளும் எழுதி வந்தாள்.
எங்கூட வேலை பாக்கற டீச்சர் களும் காம்பவுண்டில் இருந்தவர்களும் உமாவையும்
சங்கரபாண்டியனையும் கடையில் பாத்தேன். மாட்னி ஷோவில் பாத்தேன் என்று சொன்ன போது என்னால் நம்பமுடியவில்லை. என் பொண்ணாவது! நான் எப்படிக் கண்டிப்பா வளர்த்திருக்கேன்? உமா கொஞ்சம் தயக்க மில்லாமல் எல்லோரிடமும் பேசுவாள். அவ்வளவுதான்.
அதுக்காக, சங்கரபாண்டியன் சின்னப்பையன். அவனோடு போய்……சே, என்னால் நினைத்துப் பார்க்கவே முடிய வில்லை. மேலும் அவன் வேறு ஜாதி! என் பொண்ண நான் அப்படி வளர்க்கலை, என்று பெருமைப்பட்டுக் கொண்டேன். எதற்கும் உமாவைக் கவனிக்க ஆரம்பித் தேன்.
உமா லேட்டாக வீட்டுக்கு வருவதும், லீவு நாட்களிலும் ஏதோ ஒரு சாக்குச்
சொல்லி விட்டு வெளியே போவதும் என் சந்தேகத்தை
அதிகரித்தது. இப்படியெல்லாம் சந்தேகப் படுவதை விட
கல்யாணம் பண்ணிக் கொடுத்து விட்டால் தேவலை என்று தோன்றவே கல்யாணப் பேச்சை ஆரம்பித்தேன். மேலே படிக்க வேண்டும் என்றோ வேலை கிடைத்தபின் தான் கல்யாணம் என்று கண்டிஷன் போடுவாள் என்றோ எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம். அவளோ கொஞ் சம் கூடத் தயங்காமல், “அம்மா, நானே ஒங்கிட்ட சொல்லணும்னு இருந்தேன். நான் சங்கரபாண்டியனைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்” என்றாள்
நான் அதிர்ந்தே போனேன்.
பூமியே என் காலடியிலிருந்த நழுவிப்போன மாதிரி இருந்தது. நான் என் பொண்ணப்பத்தி என்னவெல்லாம் நெனச்சேன்! எனக்கு வந்த ஆத்திரத்தில் உமாவின் கன்னத்தில் பளாரென்று அறைந்தேன்.’’ஏண்டி ஒனக்குக்
கொஞ்சமாவது புத்தி யிருக்கா? அவன் ஜாதி என்ன குலம் என்ன? கோத்திரம் என்ன? ஒன்னவிடச் சின்ன வன் தெரியுமா? இந்தப் பங்கஜத்தின் பொண்ணாப் பொறந்த ஒனக்கு எப்படி இந்த புத்தி வந்தது? ஏண்டி, நான் ஒனக்கு என்ன கொறை வெச்சேன்? இதெல்லாம் நடமுறைக்கு ஒத்து வராது. ஒனக்கும் ரமா மாதிரியே நல்ல பையனாப் பாத்துக் கல்யாணம் பண்ணி வெக்க றேன்” என்று எவ்வளவோ சொன்னேன்.
ஆனா அவள் கேட்கத் தயாராஇல்லை.”நான் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்க முடியாது’’ன்னேன். ’’தேவையில்லை’’ என்றாள்.
”இது காதல் இல்லை, வெறும் கவர்ச்சி”
“நீங்கள் காதலித்திருக்கிறீர்களா? என்று எதிர்க்கேள்வி வந்தது. நான் வாயடச்சுப் போனேன். நான் வளர்த்த பொண்! என்னிடமே எப்படியெல்லாம் பேசறா? என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.
எனக்குக் காதலும் தெரியாது கத்தரிக்காயும் தெரியாது. ஆனா வாழ்க்கைன்னா என்னன்னு தெரியும். இந்தக் காதலும் மோகமும் முப்பது நாளோ அறுபது நாளோ தான் இருக்கும். வாழ்க்கைங்கறது நீண்ட பயணம்’’ என்றேன்”.
“வாழ்ந்து காட்டுவோம் என்று சொல்லிவிட்டுத் தன் பெட்டியை எடுத்துக் கொண்டு போய்விட்டாள். அவள் பேசியதையும், நடந்து கொண்ட விதத்தையும் பார்த்தால் ஏற்கெனவே அவள் போவதாகத் தீர்மானம் செஞ்சிருப் பாள் போலத் தோணித்து.
எங்கள் வாக்கு வாதத்தைக்
கேட்டு அந்தக் காம்பவுண்டிலிருந்த அத்தனை பேரும் கூடி விட்டார்கள். எண் சாண் உடம்பும் ஒரு சாணாகக்
கூனிக் குறுகி திக் பிரமை பிடிச்சவள் போல இருந்தேன்.
அவரவர்களுக்குத் தோன்றியதை யெல்லாம் சொன்னார்
கள். போலீசுக்குப் போக வேண்டும் என்றார்கள்.
பொண்ணு மேஜர் அதனால ஒண்ணும் செய்ய முடியாது, பேசாம கல்யாணம் பண்ணி வையுங்கோ.
எல்லாம் ஒரு கொழந்தை பொறந்தா சரியாப்போயிடும்,
இப்படி ஒரு அடங்காப் பிடாரி எப்படித்தான் பங்கஜம் டீச்சருக்குப் பொண்ணாப் பொறந்தாளோ! இப்படி பல பேர் பலவிதாமாப் பேசறதக்கேட்டு என் உயிரே போயிடக் கூடாதான்னு தோணும்.வெறும் வாய மெல்லறவாளுக்கு ஒரு பிடி அவல் கிடச்சாக் கேக்கவா வேணும்? இவ வீட்ட விட்டுட்டு ஓடணுமாக்கும் நான் போய்க் கூட்டிண்டு வரணுமாக்கும்? அப்பறம் எங்கிட்ட படிக்கற ஸ்டூடண்ட்ஸுக்கு நான் ஒழுக்கத்தையும் பெரியவாளுக்குக் கீழ்ப்படிஞ்சு நடக்கணுங் கறதையும் எப்படிச் சொல்லிக் குடுக்க முடியும்?
ஸ்கூல் லீவ் விட்டதும் மன நிம்மதிக்காக மந்த்ராலயம் போய் ஒரு வாரம் இருந் தேன். துங்க பத்ரா ஆத்தங்கரையில் உமாவுக்குத் தலை முழுகிட்டேன். அப்பப யாராவது உமாவுக்கு பையன் பொறந்திருக்கானாம், பொண்ணு பொறந்துருக்காம்னு சொல்லும்போது மூணாம் மனுஷி மாதிரி கேட்டுப்பேன். ரெண்டு மூணு நாளைக்கு முன்னால புதுசா வந்த ஒரு டீச்சருக்கு பார்ம் ஃபில்லப் பண்ணின போதுதான் நான்
ரெண்டு பேரையும் நாமினியாப் போட்டிருந்த்து நினைவு
வந்தது. அந்த நீலிக்கு என்னோட ஒரு பைசாக்கூடக் கெடைக்கக் கூடாது. சொல்லும் போதே டீச்சருக்குக் கோபமும் அழுகையும் வெடித்தது. அது வரை அடக்கி
வைத்திருந்த உணர்ச்சிகள் வெடித்துக் கிளம்பியது.
இவ்வளவு நேரம் கேட்டுக் கொண்டிருந்த ஜானகியின் அம்மா, “இதப் பாருங்கோ, நடக்கக் கூடாதது நடந்து போச்சு. ரெண்டு கொழந்தை களும் பொறந்தாச்சு. இனிமே பழி வாங்கறதனால என்ன பிரயோசனம்?. அவ்வளவு சின்ன வயசில தைரியமா இருந்து கொழந்தைகள வளர்த்து ஆளாக்கின நீங்க இப்ப மனசத் தளர விடலாமா? என்றாள் ஆறுதலாக.
ஜானகி, “டீச்சர் கொஞ்சம் நிதானமா யோஜனை பண்ணிப் பாருங்கோ. நீங்க நாமினேஷன் குடுத்து எத்தனை வருஷம் ஆயிருக்கும்? இத்தன வருஷங்களுக்கப்பறம் மேல ஏ.ஜி. ஆபீஸ் வரை போய் அதை மாத்தறதும் ஈஸியா இருக்கும்னு தோணலை? ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டு திருப்பி அனுப்பிண்டே யிருப்பா. போறும், போறும்னு ஆயிடும். மேலும் இன்னும் நாலஞ்சு வருஷத்துக்குள்ள நீங்களே ரிடயர் ஆகப் போறேள். நீங்க ஏன் நெகடிவா நினைக் கணும்? பாசிடிவாக நெனச்சுப் பாருங்கோ. நீங்களே
நல்ல படியா ரிடயராகி ஒங்க பணத்தை நீங்களே வாங்க லாமே! அப்படியில்லைன்னாலும் அதுல இருக்கற பணத்தில 90% எடுக்கலாமே! அது போக எவ்வளவு இருக்கப் போறது? மிச்சத்தில 50% தானே அவளுக்குக் கெடைக்கும். கெடச்சாலும் யாருக்குக் குடுக்கப் போறேள்? உங்க பொண்ணு தானே? நாமினேஷன வேணா மாத்தலாம். ஆனா உமா ஒங்க பொண்ணுங்கற உண்மை மாறாது. நீங்க இப்ப நொம்ப உணர்ச்சி வசப் பட்டிருக்கேள். நீர் அடிச்சு நீர் விலகாது. உணர்ச்சி வசப் பட்டிருக்கும் போது எடுக்கும் எந்த முடிவும் சரியா வராது.’’ என்றாள்.
ஜானகியின் அம்மா, “நேத்துத்தான்
பெரியாழ்வார் பாசுரம் ஒண்ணு படிச்சேன்.
’ஒருமகள் தன்னை உடையேன்
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன்
செங்கண் மால் தான்
கொண்டு போனான்
”நான் ஒரே ஒரு பொண்ண வச்சிண்டிருந்தேன். மகாலக்ஷ்மி போல வளர்த்தேன். அந்தக் கண்ணன் வந்து கொண்டு போயிட்டானே”ன்னு
புலம்பறாள். அவரே ஒரு அம்மாவா புலம்பறார். நாம எம்மாத்திரம்?
“மாமி, நீங்க ரொம்ப நன்னாப் பேசறேள். எங்கம்மாவும் இருந்தா இப்படித்தான் பேசுவாளோ என்னவோ?’’ என்றாள். டீச்சர் முகம் கொஞ்சம் தெளிவடைந்திருந்தது.
”சரி, மேடம் நீங்க சொல்லற படியே பாஸிடிவா நெனச்சுக்கறேன் நான் நல்லபடியா ரிடயர் ஆகப்போறதா நெனைக்க ஆரம்பிக்கறேன் என்றாள். ஜானகியின் அம்மா குடுத்த எலுமிச்சம் பழ சர்ப்பத்தைக் குடித்ததும் டீச்சருக்கு உண்மையிலெயே தெம்பு வந்து விட்டது! அந்த உமாவுக்கும் ரெண்டு கொழந்தைகள் பொறந்தாச்சு. நாளாக நாளாக எல்லாம் சரியாயிடும்
என்றாள், அனுபவசாலியான அம்மா.
அவர்கள் சொன்னபடியே பங்கஜம் டீச்சர் ரிடயராகி எல்லாப் பணபலன்களையும் பெற்று செக் வாங்கிக் கொண்டு போனாள்.
அந்த ‘ஒருமகள்’ எங்கிருக்கிறாளோ? எப்படியிருக்கிறாளோ?
*********************************************************
- மொழிவது சுகம் 11-: நமக்குள் உள்ள இன்னொருவன்
- ஓட்டை பலூன்
- பாவனைப்பெண்
- வேத வனம் விருட்சம் 76
- நித்யானந்தாவும் நேசக்குமாரும்
- மகளிர் தினம்
- எஸ்ஸார்ஸி – அக்கிரஹாரத்தில் இன்னொரு அதிசயப் பிறவி
- இந்திய மொழிச் சிறுகதைகளில் பெண்கள் படைப்பில் பெண்கள்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -5
- செல்வராஜ் ஜெகதீசன் – மனக் குறிப்புகளின் புத்தகம்
- தொடரும் பயணம், இரண்டு புத்தகங்களும் அவற்றின் இரண்டு முன்னுரைகளும்
- ஐன்ஸ்டைனுடன் பணி ஆற்றிய சத்யேந்திர நாத் போஸ்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -3
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சூரியனுக்குக் கீழே கவிதை -24 பாகம் -1
- முக்காட்டு தேவதைகள்
- எனது மண்ணும் எனது வீடும்
- எப்போதும் முந்துவது…
- கனவு தேசம்
- எச்சரிக்கை……!
- அவர்கள் காதலிக்கட்டும்..!
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- முப்பத்து மூன்று!
- மொழிக் குறிப்புகள்
- அர்சால்
- முள்பாதை 20
- துப்பாக்கி இல்லாமல் ஒரு துப்பறியும் கதை
- ஒரு மகள்.
- எங்கோ பார்த்த முகம்
- அங்கையற்கன்னியின் திருமணமும் ஐந்தாண்டு திட்டங்களும்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -8
- உதிர்ந்த இலைகள்