ஒரு நாவல் -இரண்டு வாசிப்பனுபவங்கள்

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue

வளவ.துரையன்,ரகுராம்


(புலிநகக்கொன்றை பற்றிய பார்வைகள்)

1. துரத்தும் மரணங்கள்

வளவ.துரையன்

‘தோழி, கேள், அவனுடைய மணலடர்ந்த கரையில் பறவைகள் இருந்து கூச்சலிடும் புலிநகக்கொன்றை மரம் இருக்கும். அவனை இனிமேல் நான் நினைக்கமாட்டேன். என் கண்களுக்குக் கொஞ்சம் துாக்கமாவது கிடைக்கும் ‘

இக்கருத்தமைந்த பாடலை அம்மூவனார் ஐங்குறுநுாற்றின் 142ஆம் பாடலாக எழுதியுள்ளார். இப்பாடலே இந்த நாவலுக்குப் பின்னணியாகும். தலைவி தலைவனுடைய பிரிவைச் சோகத்தோடு கூறும் பாடல் இது. அவள் ஒரு முடிவோடு பிரிந்துவிட்டதை உணர்த்தும் பாடல் இது. இந்த மரமும் பறவைகளும் மிகச்சிறந்த குறியீடுகள். அவளது மனத்தில் நிலைத்திருந்தவன் பிரிந்துவிட்டான். ஆனால் ஆக்கிரமித்த பறவைகளின் ஒலி ஓயவில்லை. கொஞ்சம் துாக்கமாவது கிட்டட்டும் என அவள் வேதனைப்படும்போது என்னென்னவோ கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாந்த அவளுடைய தன்னிரக்கம் புரிகிறது.

ஒவ்வொருவர் மனத்திலும் ஒரு மரம் இருக்கிறது. அது நீக்கப்பட்ட பின்பும் அந்த இடத்தில் பள்ளமோ அல்லது பள்ளத்தை மூடிய மேடோ கவனத்தை ஈர்த்து தொந்தரவு செய்த வண்ணமே உள்ளது. இந்த நாவலில் நிகழும் இளவயது மரணங்கள் பறவைகளின் கூச்சலாக அலைந்துகொண்டுள்ளன.

கட்டபொம்மனுடைய காலத்திலிருந்து எம்.ஜி.ஆர். சுடப்படுகிற காலம் வரை மிகமிக நீண்ட காலத்தளத்தை ஆசிரியர் வசதியாக எடுத்துள்ளார். அந்தந்தக் காலங்களில்நடைபெறும் அரசியல் நிகழவுகளைப் பாத்திரங்கள் மிகச் சுலபமாகப் பேசும்படித் துாண்டிச் செல்வதில் ஆசிரியர் வெற்றி பெற்றள்ளார்.

துன்பம் வந்தபோது அழுதுபுலம்பும் மனிதமனம் அடுக்கடுக்காகச் சோகங்கள் தொடர்ந்துவந்து வழிமறிக்கும்போது அதன் மூலகாரணத்தை அறிய முயற்சி செய்வது மரபான செயலாகும். அதைக் கண்டபின்னர் அதை மாற்ற முனைவதும் முன்செய்ததற்குப் பரிாகரங்கள் தேடுவதும் வழக்கம்தானே. நாவலில் அதுதான் நடக்கிறது.

பெரிய பெருவட்டரின் மரணப்படுக்கையுடன் தொடங்கும் ஜெயமோகனுடைய ‘ரப்பர் ‘ நாவலைப்போலவே இந்த நாவலும் பெரிய பாட்டி பொன்னாவின் மரணப்படுக்கையுடன் தொடங்குகிறது. அதன்பின் அவள் நினைவாகவும் பாத்திரங்களின் மனஓட்டமாகவும் ஆசிரியரே நிகழ்த்துவதாகவும் நான்கு தலைமுறைகள் கதை பேசப்படுகின்றது. அத்தியாயங்களைக் கலைத்துப் போடுவதும் மையத்தைச் சுற்றி வட்ட அலைகளாக எழும்பாமல் ஆங்காங்கே சிறுசிறு சலனங்களாகி ஒன்றாக உருக்கொள்ளும் பேரலையாக விளங்குவதுமாக நாவலின் கட்டமைப்பு விளங்குவது படிக்கும் ஆர்வத்தைத் துாண்டும்படி உள்ளது. கிருஷ்ண ஐயங்காரின் பாட்டனார் கேசவன் தன்னிடம் பொருள்கேட்டுவந்த கட்டபொம்மனுடைய படைத்தலைவர் தளவாய்ப் பிள்ளையைக் கும்பெனியாரிடம் காட்டிக்கொடுக்க அதில் சாபம் பிறக்கிறது.

கிருஷ்ண ஐயங்காரின் மனைவி தீவட்டிக் கொள்ளைக்காரர்களால் சித்ரவதை செய்யப்பட்டு இறக்கிறாள். அவருடைய மகன் ராமனுக்கும் பொன்னம்மாளுக்கும் திருமணம் ஜீயரால் நடத்தப்படுகிறது. மூன்று குழந்தைகள் பிறக்கின்றார்கள். பெண்ணுக்கு ஆண்டாள் எனப் பெயரிட்டு மணம் அசய்விக்க அவள் இளம்விதவையாகிறாள். ராமனுக்கும் துாங்கும்போதே உயிர்பிரிகிறது. பொன்னம்மாள் எனும் புலிநகக்கொன்றை பெரிய பாட்டியாகிறது. அவளுடைய முதல் மகன் நம்மாழ்வார். அவனுக்கு மணமாகிக் குழந்தை பிறக்க மனைவி மரணமெய்துகிறாள். அந்த மகனும் இளவயதில் திருமணம் செய்துகொண்டு நம்பி பிறந்தவுடன் மரணமடைகிறான். நம்மாழ்வார் ஓடிப்போகிறார். நம்பி பெரியவனாகி, கிறித்துவப் பெண்ணை மணந்து நக்சலைட் எனக் கருதப்பட்டு காவல் துறையால் கொல்லப்படுகிறான். இரண்டாவது மகன் பட்சிராஜன், அவன் மகன் திருமலை, பேரன் கண்ணன் ஆகியோர் மரத்தில் பறவைகளாக அடிக்கடி கூச்சலிடுகிறார்கள். கண்ணன் -உமா காதல் நாவல் முடிந்தபிறகும் கேள்விக்குள்ளாகிறது. ஆண்டாள் காமத்தை அடக்க அவஸ்தைப்படுகிறாள். அன்பைக் கொட்டத் திசையில்லாமல் புத்தி பேதலித்துவிடுகிறாள்.

இவ்வாறு முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பின் அவராலேயே தமிழில் எழுதப்பட்ட இந்த நாவல் முழுவதுமாக சோகங்கள், மரணங்களின் ஊடாகவே பயணம் செய்கிறது. ஆங்காங்கே சுவைக்காகவே சில பாலியல் காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதைப்போலத் தெரிகின்றன.

அவ்வப்போது நடைபெறும் விவாதங்கள் யாரையும் காயப்படுத்தாமல் இருப்பதை அவசியம் சுட்டிக்காட்டவேண்டும். ‘மொட்டை மாடியின் கைப்பிடிச் சுவரில் உட்கார்ந்திருந்தார் ‘ என்னும் உரையாடல் பொருத்தமின்மை உள்ளது. ‘வேள்வி ‘ என்பது அய்யங்கார் உட்பட எந்தப் பிராமணர் வீட்டிலும் பயன்படுத்தும் சொல்லன்று. ‘ஹோமம் ‘ என்றே கூறி இருக்கலாம். சில நல்ல ஆங்கிலக் கவிதைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக ஒடென் நாஷ் எழுதிய கவிதையைச் சொல்லலாம். இது ‘அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும் ‘ எனும் குறளை நினைவூட்டுகிறது.

புலிநகக்கொன்றை நாவலும் நினைக்கப்படும்

2. இலட்சியங்களும் இழப்புகளும்

ரகுராம்

‘சட்டங்கள் சாதாரண மனிதர்களுக்கு. சிறந்த மனிதர்கள் ஒழுக்க வரையறைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் ‘ – திலகர் எழுதிய கட்டுரையில் இவ்வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாக பி.ஏ.கிருஷ்ணன் தன் நாவலான புலிநகக்கொன்றையில் குறிப்பிடுகிறார். தன் வாழ்வில் ஓர் இலக்கை வகுத்துக்கொண்டு அதை அடைந்தே தீரவேண்டும் என்னும் வேட்கையுடைய பயணம் எல்லாருக்கும் அமைந்துவிடுவதில்லை. பிறக்கும்போதே யாரும் எந்த லட்சியத்துடனும் மண்ணில் பிறப்பதுமில்லை. வாழ்கின்ற சூழல், மனத்தையும் கண்ணையும் திறக்கின்ற ஏதோ ஒரு முக்கிய தருணம், தற்செயலாக சந்திக்க நேர்கிற யாரோ ஒரு மனிதரிடமிருந்து கிடைக்கும் அனுபவம் என ஏதோ ஒன்றுதான் ஒருவருக்குத் தன் இலக்கை வகுத்துக்கொள்ளத் துாண்டுகோலாக இருக்கலாம். சிறந்த மனித்கள் பலரும் தம் இலட்சியத்துக்காக தம் இயல்பான வாழ்க்கையையும் இன்பத்தையும் துறந்தவர்களே.

பிறவியின் பயனறியும் வேட்கையில் புத்தர் தன் ராஜபோக வாழ்க்கையைத் துறந்து, மனைவி, குழந்தையைப் பிரிந்து துறவியாக வெளியேறினார். அரிச்சந்திரன் வாய்மையையே சிரமேற்கொண்டு, கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்ததால் அரசவாழ்க்கையைத் துறக்க நேர்ந்தது. வேண்டுமென்று நாடி வருகிறவர்களுக்கெல்லாம் ஈதலையே தன் பிறப்பின் லட்சியமாகக் கொண்டிருந்ததால்தான், கர்ணன் தான் செய்த தருமத்தின் பலன் அனைத்தையும் தாரைவார்த்துத் தலைசாய நேரிட்டது. காந்தியடிகளுக்கு இந்தியாவின் சுதந்தரம் என்பதே இலட்சியமாக இருந்ததால்தான் வழக்கறிஞர் வாழ்வைத் துறக்க நேரிட்டது. நேருவும் இப்படித்தான்.

‘புலிநகக்கொன்றை ‘ நாவல் கூட இப்படியான இலட்சியம் கொண்ட மனிதர்களையும் அவர்களுடைய பயணங்களையும் காட்டுவதாக இருக்கிறது. நம்மாழ்வார் சுதந்தரத்தின் மீது தீராத தாகம் கொண்டுதான் பிரிட்டிஷ் எதிர்ப்பு இயக்கங்களில் பங்கு கொள்கிறார். அதன் ஒரு பகுதியான ஆஷ்கொலை வழக்கில் தன் பெயர் சேர்க்கப்படவில்லை என்ற நிராசை அவரை வருத்தத்துக்குள்ளாக்குகிறது. சுதந்தரம் அடைவதற்கான வழிமுறைகளில் உள்ள தீவிரமின்மையால் சுதந்தரம் என்பதையே ஒரு கேள்விக்குறியாகப் பார்க்கிறது அவர் மனம்.

ஏதோ ஒன்றின்மீது ஆழ்மனப்பிடிப்புடன் இருக்கின்ற மனம், அதை அடைய முடியாத போது பேதலித்துப் போகிறது அல்லது ஆன்மிகத்தில் ஈடுபடுகிறது. நம்மாழ்வார் இரண்டாவது வழியைத் தேடிப் போகிறார். தமிழ்ப்படைப்புலகில் இத்தகு தத்தளிப்புகளையும் முடிவுகளையும் வாசகர்கள் ஏற்கனவே கண்டிருக்கிறார்கள். சன்னியாசமே போதையாகி அவரை அடிமை கொள்கிறது. க.நா.சு.வின் பொய்த்தேவு சோமு முதலியார் வாழ்வும் நிம்மதியும் பணத்தில்தான் என்று தேடித்தேடி, தேடியது கிட்டிய பின்னர், தான் தேடிய நிம்மதி இதுவல்ல என்று உணரும்போது சோமு முதலியார் சோமுப் பண்டாரமாகிறார். ஜேயமோகனுடைய பின்தொடரும் நிழல் நாவலில் இடம்பெறும் கே.கே.எம். தான் தேடிய சித்தாந்தத்துக்கும் நிஜத்தில் அதன் இருப்புக்கும் இடையிலான இடைவெளியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஆன்மிகநாட்டத்தின் ஒரு பகுதியாக கிருஷ்ண பக்தராகிறார். ஆகையால் நம்மாழ்வாரின் முடிவு இயற்கையான ஒன்றாகவே இருக்கிறது.

பொன்னா கூட பிரிந்துபோன தன் பிள்ளை நம்மாழ்வாரைப் பார்த்தபிறகே உயிர்துறக்கும் ஆசையுடன் காத்திருக்கிறாள். நம்மாழ்வார் வந்து சேர்ந்தபோதோ அவள் அந்த நினைவு தீண்டாத தொலைவில் உள்முகமாக அமிழ்ந்துபோயிருக்கிறார். அவளுடைய காத்திருத்தல் அர்த்தமில்லாமல் கழிந்துவிட்டதுபோலாகி விடுகிறது. கதையில் இடம்பெறம் மற்றொரு பாத்திரமான உமா தன் காதலனை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக்கி மணமுடித்துக்கொள்ளும் தன் வாழ்க்கையின் விருப்பம் நிறைவேறாமலேயே பிரிகிறாள். நம்பியின் தேடல் ஏதோ ஒரு புள்ளியை நகரும்போது அதை அடையா முடியாமல் அநியாமாகக் கொல்லப்படுகிறான்.

இப்படி நாவல் முழுவதுமே அவரவர் கொண்ட இலட்சியங்களும் ஆசைகளும் நிறைவேறாமலேயே முடிகின்றன. நாவல் நெடுகிலும் இடம்பெறும் சுலோச்சனா முதலியார் பாலம் காலத்தின் சாட்சியாக நிற்கிறது. தலைமுறை இடைவெளிகள், மாறுகின்ற அரசியல் சூழல், காலத்தின் கோலங்கள் எல்லாவற்றையும் தனக்குள் வாங்கிக்கொண்டு மெளனத்தின் சாட்சியாகவே தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.

சிப்பாய்க் கலகத்தில் தொடங்கி திராவிட இயக்கங்களும் மார்க்சியத் தத்துவங்களும் இந்த மண்ணில் ஆழ வே¢ருன்றுவது வரையிலான வெகு நீண்ட பயணத்தை நாவலாசிரியர் மேற்கொண்டிருக்கிறார். சீட்டுக்கட்டைக் கலைத்துக் கலைத்துப் போட்டு அடுக்குவதுபோல நிகழ்வுகளை முன்னும்பின்னுமாக மாற்றிமாற்றி அடுக்கி காலத்தினுாடே புகுந்துவரச் செய்கிறார்.

வாசகர் உணர்ந்து அனுபவித்து மகிழ பல இடங்கள் இடம்பெற்றுள்ளன. கள் என்ற பொன்னா கேட்பது ராதாவுக்குப் புரியாமலேயே போகிறது. ஏதோ வைரக்கல் என்று நினைக்கிறார்கள் எல்லாரும். ஆழ்ந்து வாசிக்கும் வாசகன் பொன்னா தன் கணவன் ராமன் உயிருடன் இருந்த காலத்தில், அவன் குடித்த மதுவைத் தானும் சுவைத்ததையும் அதன் போதையையும் நினைக்கிறாள் என்றும் அதுவே தன் மண்டையில் ஊறும் நினைவு எறும்புகளுக்கு மருந்தாகும் என அவள் நினைப்பதையும் உணரமுடிகிறது. சின்னவயதுக் குறும்புகள், பதின்வயது சேஷ்டைகள், அரும்பும் உணர்வுகள் என்று பல அத்தியாயங்கள் ரசித்து நகைக்கக் கூடியதாக அமைந்திருப்பது நாவலின் சிறப்பம்சமாகும்.

சூழ்நிலைகளும் இலட்சியங்களைத் தீர்மானிக்கின்றன என்னும் விதத்தில் திருநெல்வேலி மாவட்ட சுதந்தரப் போராட்ட வீரர்களுடன் நாவலில் பாத்திரங்கள் சந்திப்பதைப்போன்ற நிகழ்வுகள் இயல்பாகவே விடுதலையைப்பற்றிய உத்வேகம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நன்றாகவே படம்பிடிக்கப்பட்டுள்ளன. குடும்பமும் அரசியலும் சரியான கலவையில் நாவலுக்குள் பின்னப்பட்டுள்ளதில் அதன் அழகு மிளிர்கிறது.

பறவைகள் வந்து தங்கி, சத்தமிட்டு புலிநகக்கொன்றை மரத்தை சிதைய வைக்கின்றன. பட்டுப்போன மரம் மட்டும் மொட்டையாக நிற்கிறது. பொன்னா மரமெனில் வாரிசுகள் அடுத்தடுத்து வாழ்வதும் அழிவதுமாக இருக்கிறார்கள். தொடர்ந்து நான்கு தலைமுறை வாரிசுகளை பார்க்கக் கொடுத்து வைத்திருக்கும் பொன்னா தொடர்ந்து அவர்களின் மரணங்களையும் தாங்கிக்கொள்ள நேரிடுகிறது. மனம்கொள்ளா இந்த நினைவு இரைச்சல்களிலிருந்து விடுபட்டு நிரந்தரத் துாக்கத்தினைத் தழுவக் காத்திருக்கும் பொன்னா, துரத்தும் நினைவுகளும் தழுவாத மரணமுமாக வாழ்வின் இறுதிக்காகக் காத்திருக்கிறாள்.

காதலி தப் காதலனின் நினைவுகளிலிருந்து விடுபட நினைக்கும் ஒரு பாடலின் பின்னணியில் ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறை நிகழ்வுகளாக மாற்றிக் கதை சொல்லியிருக்கும் பி.ஏ.கிருஷ்ணன் பாராட்டுக்குரியவர். நாவலைப் படிக்கும் எவருக்கும் மூதாதையர்பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவல் எழும்.

—-

jayashriraguram@yahoo.co.in

Series Navigation

வளவ.துரையன்,ரகுராம்

வளவ.துரையன்,ரகுராம்