ஒரு நாள் கழிந்தது (லண்டனில்)

This entry is part [part not set] of 46 in the series 20110417_Issue

Essex சிவா

அலைப்பேசி குறுந்தகவல் எச்சரிக்கை மாதிரி தான் இருந்தது…கனவு தானே? இல்லையா..? இல்லை. நன்கு தெளிவாக கேட்டது.
கையைத்தலைக்கு மேல் துழாவினேன். இந்த எச்சரிக்கை சனியன் கண்ட நேரத்தில் வந்தாலே ஏதோ தொந்தரவு, பிரச்சனை…ஏதாவது பேட்ச் தோல்வியடைந்திருக்கிறது அல்லது ஊரில் யாருக்காவது…கைபேசி மூன்று மணி காட்டியது.குறுந்தகவல் ஸ்கெடுலரின் தானியங்கி தகவல்தான்…ஒரு கணம் அப்பாடா!
எந்த மார்கெட் லோட் பெயிலாகியிருக்கிறது…நினைத்தேன், ஜெர்மன் மார்கெட் தான்…ஹிம்சை பிடித்த மார்கெட், யுரோப்பிலேயே பெரிய மார்க்கெட்…இதற்கு மட்டுமே ஒரு மணி நேரமாகிவிடும் லோடாவதிற்கு.

ஆப்சோர் டீம் அலைப்பேசிக்கும் இந்தத்தகவல் போயிருக்கும்…ஓ…உதய் இந்த வாரம் ஷீமோகா போயிருப்பாரே…சுத்தம்!
சலிப்பாக குளிர்ப்போர்வையை விலக்கி எழுந்த போது ‘எப்போ வெளியே வருவாய் உனக்காக காத்துக்கொண்டே இருக்கேன்’ற ஜில்லென்று குளிர்.
முகத்தை துடைத்து கண்ணாடி போடும்போது சன்னல் திரையை விலக்கி வெளியே பார்த்தேன்.
ஜனவரி மாதத்திற்கு அரிதான, தெளிவான வானம்…சமீபத்திய முழு நிலவு….வழக்கமான டிராகுலா பனிப்போர்வையும் காணோம்…எதிர் சாரி வரிசை வீடுகள், கார்கள் மவுனமாய் இருந்தன…தூரமாய் ஒரு நரி நிதானமாய் போய் கொண்டிருந்தது, செகண்ட் ஷொ முடிந்து வீட்டிற்கு போவது போல. செருப்புத்தேயும் சத்தம்தான் மிஸ்ஸிங்.
பின் புலத்தில் லெங்டன் ஹில்ஸ் ஏறிச்சரிந்தன. பகல் பச்சைக்கு பதில் கரு நீலம், வெள்ளி பூச்சுடன்.

சம்பந்தமே இல்லாமல் தாராபுர வெயில் கால மொட்டை மாடித்தூக்கங்கள் நியாபகத்தில் வந்தன…வெயில் காலங்களில் பின்னிரவு வரை புறங்கழுத்து வேர்க்கும்! பழனி சித்தப்பா சாயங்காலமே மொட்டை மாடியை தண்ணீர் ஊற்றி விடுவார் ‘இல்லைனா சூடு’…நிறைய தடவை பைல்ஸ் வந்து அவஸ்தை பட்டிருக்கிறார்.

அடுத்த குறுந்தகவல்…அடுத்த மார்கெட்? இன்னிக்கு தூக்கம் அவ்வளவுதான் போல (‘கல்யாண்:: மிச்சத்தை ஆபிஸில் பார்த்துக்கலாம் சார்!”).
“பேட்ச்தான்” புரளும் மனைவியிடம் சொல்லிவிட்டு மெதுவாய் கீழே போய், லேப்டாப், மோடம் எல்லாவற்றையும் ஆன் செய்து…

வீட்டை விட்டு வெளியே வரும் போது காலை 7 மணியாகி விட்டது. எதிர் வீட்டு மார்கரெட் (பாட்டி) மாடி சன்னலில் துல்லியமாக தெரிந்தார். வெளிரிய, ஏகப்பட்ட சுருக்கங்கள், லண்டன் தேம்ஸ் டாக்கில்(dock) பலமான காற்று வீசும் போது மார்க்கரெட் முக சுருக்கங்கள் அங்கு தேம்ஸிலும் தெரியும்.
கையசைத்தார், கூடவே சிகரெட்டும் தொடர்ந்த புகையும் நளினமாக அசைந்தன.
கடுமையான இருட்டு.
பாதையெல்லாம் ஐஸ் – சட்டென்று தெரியாத ‘கருப்பு ஐஸ், கவனமாக நடக்க வேண்டும், இல்லையெனில் ஆரம்பிக்கும் ஐஸ் ஸ்கேட்டிங் A&Eயில்தான் முடியும்.
7:15 யை பிடிக்க முடியுமா? வழக்கமான காக்க (வெறுக்க) வைக்கும் பாதசாரி சிக்னல் இன்று சரியாக பச்சை! முப்பது விநாடிகள் என்றாலும் முப்பதாயிற்றே! டிரெயினை/பஸ்ஸை பிடிப்பவர்களுக்குத்தான் இத்தனை விநாடிகளின் அருமை தெரியும்.

ரயில் நிலையத்தை நெருங்க, நெருங்க கம்பளிக்கோட்டை அணிந்த முன்னாள், இன்னாள் இளைஞர்கள், இளைஞைகள் தூக்க மூஞ்சிகளுடன்…”‘காலை வணக்கம்” டிக்கெட் செருகுவதற்கான வழியின் பின்புறத்திலிருந்து அந்த கருப்பு, பிரமாண்ட ஊழியர் சொன்னார், சத்தமாக, உற்சாகமாக. வழக்கமாக வருபவர்களுக்கு இந்த வரவேற்பு உண்டு. இன்றைய உற்சாகத்திற்கு காரணம் அவரது ஃபேவரிட் வெஸ்ட் ஹாம் நேற்று இரவு ஜெயித்தது கூட இருக்கலாம்.
கேட்ட நேரமில்லை…..7:15 பிடிக்க முடியாது, ஸ்டேஷனின் கடிகாரம் 7:15:20 காட்டியது…
இல்லை, இன்னும் ட்ரெயின் வரவில்லை, 2 நிமிடம் தாமதம்! அட சந்தோஷமாக இருந்தது!
எப்போதுமே 7:15 ட்ரேயின் 7:13 அல்லது 7:14க்கே வந்துத்தொலைக்கும். சரியாய் 7:15:01க்கு கிளம்பி விடும்! அட்லீஸ்ட் 7:15:59 வரை வெயிட் பண்ணினால் என்ன? கொடூரமான பங்க்சுவாலிடி…

இன்று ஆரம்பமே பரவாயில்லை. காலை பேட்ச் பெய்லிற்கான காரணம் கண்டுபிடித்தாயிற்று, உதய் இல்லாமலேயே. கொலோன் மெயின்ஃப்ரேம் குழுவைக்கூப்பிட்டு திட்டி பேட்ச் சாளரம் முடிவதற்குள் சரியான பைலைப்பெற்று, லோடரை ஓட விட்டு…சரி, காலை லைன் மேனஜர் லியாமின் ‘excellant’ இமெயில் இருக்கும்.
வந்த புதிதில் இந்த மாதிரி excellant இமெயிலுக்கெல்லாம் புளாங்கிதமடைந்தேன். அப்புறம் மெக்டொனால்சில் சில்லறை சரியாக கொடுத்தாலே ‘வொண்டெர்ஃபுல்’, எஃஸ்ஸெலண்ட், லவ்லி” எல்லாம் கேட்டதிற்குப்பின் சம நிலைக்கு வந்தேன்.

ட்ரெயினில் உட்கார அங்கே, இங்கே இருந்தது. நான் உட்கார மாட்டேன். தூங்கும், படிக்கும், காதில் எதோ மாட்டியும் பற்பல நிறங்களில் முகங்கள்… சிலரின் கைகளில் காகித காபிகள்…சத்தமே இல்லாமல் எப்படித்தான் உறிஞ்சுகிறார்களோ…ஏற்கனவே மறைந்த உதடுகள், இப்போது சுத்தமாக கோப்பைகளில் மறைந்து, மறைந்து தெரிந்து மறைந்தன.
வயது கண்டுபிடிக்க முடியாத ஒருத்தி உள்ளங்கையைப்பார்த்து பஞ்சை ஒற்றி, ஒற்றி எடுத்துக்கொண்டிருந்தாள். அவள் உள்ளங்கையில் அவளை மட்டுமே காட்டும் கண்ணாடி.
ட்ரெயின் நகரத்தொடங்கியதும் நான் நிதானமாக தோள்பையைஇறக்கினேன்.
எதிரில் நிற்கும் வெள்ளைகாரர் – வயது, இருபதிலிருந்து ஐம்பது வரை எந்த எண்ணை வேண்டுமானாலும் சொல்லலாம், நம்பலாம் – என் கண்களையே பார்த்தார். பொதுவாக கண்களை நேருக்கு நேர் பார்க்க மாட்டார்கள், அட்லீஸ்ட் நம்மவர்களை. முடிந்தவரை லேசாக அதிர்ந்து விலக்கிவிடுவாரகள், இல்லையெனில் ஒரு தயக்க “ஹலோ”. ஆனால் இவர் இப்படி பார்த்ததில் எனக்கு ஆச்சரியம் இல்லை. இன்னமும் மெல்ல ஜிப்பை திறந்தேன். அவரது நெஞ்சு கொஞ்சமாவது இரு அடியாவது வேகமாக அடித்திருக்கும். “பையில் குண்டு, கிண்டு ஏதாவது..!”
ஆர்ச்சரின் ஒரு சிறுகதைத்தொகுப்பை எடுத்தேன். ஆனால் இப்போது படிக்க ஆரம்பிக்க மாட்டேன்.
அடுத்த ஒரு பதினைந்து, இருபது நிமிடங்களுக்கு வெளியே வேடிக்கை பார்த்துகொண்டே வருவேன், வந்தேன். சலிக்காத பச்சை,பச்சை, எங்கெங்கும், இந்த ஜனவரியிலும்.
தூரத்தில் குதிரைகள். இன்னும் தள்ளி தெரியும் A ரோடையும் மெல்லிய மின் டவர்களையும் தவிர்த்து விட்டால் பதினைந்தாம் நூற்றாண்டு என்றால் தைரியமாய் நம்பலாம். Brave Heart படம் மாதிரி சரித்திர படம் எடுக்க ரொம்ப செட் அது இது என்று மெனக்கட வேண்டாம்.அப்மினிஸ்டர் தாண்டி லண்டன் எல்லையைத்தொட்ட போது புத்தகத்தை கவனம் செலுத்த முயற்சித்தேன். இனி மேல், பழைய சிவப்பு கட்டிடங்கள், அழுக்கு அபார்ட்மெண்ட்கள் என்று ஒரு சலிப்பான தோற்றங்கள்.
இருந்தும் அவ்வப்போது குட்டி, குட்டி பார்க்குகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. பார்கிங்க் ஸ்டேஷனில் நின்றபோது நிறைய கருப்பர்கள், திராவிட பழுப்பு முகங்கள் ஏறின. கொஞ்ச நாட்களான பரிச்சியமான பக்கத்து மாநில ‘மணவாடு’ முகம் பக்கத்தில் நின்றது. கம்பளிக்கோட்டில் வெங்காய வாசனை. பாலிஷ் பார்த்து பல நாளான, ஓரங்களில் நனைந்த ஷுக்கள். மீசையை எடுத்திருந்தினாலயோ என்னவோ மூக்கு எல்லை தாண்டி தொங்கி இருந்தது.
தலைக்குல்லா, கையுறைகளை ட்ரெயின் கிளம்பிய போதும் கழற்றவில்லை, கழற்ற மாட்டார். காதுகளில் ஒலிக்கேட்கும் கருவிகளை மாட்டிக்கொண்டு சுற்றுபுறத்தை மறந்து போனார். குத்துப்பாட்டு மெலிதாய் கேட்டது…காலங்கார்த்தால குத்துப்பாட்டு!

லைம்ஹௌஸ் ஸ்டேஷனில் இறங்கி DLR ட்ரெயினுக்காக இரு நிமிடங்கள் காத்திருந்தேன். பேய்க்கூட்டம். நெருக்கி, நசுங்கி…என்ன என்னவோ வாசனைகள்…வாசனைத்திரவியங்கள், முட்டை, நெயில் பாலிஷ்…கொஞ்ச நேரத்தில் கனேரி வார்ப்பில் அனேகமாய் அத்தனைக்கூட்டமும் ‘போய்’ தொலைந்தது….
….
தானியங்கியுள் புதிதாக சேர்ந்திருக்கும் டெஸ்டிங் ஆலோசகர் புன்னகைத்தானா அல்லது புன்னகைத்தாளா…அதை அவர் தினமும் காலைதான் முடிவு செய்வாராம். பின் அதற்கு ஏற்றமாதிரி உடை அணிவாராம். முடிவு எப்படியிருந்தாலும் மறுபக்க ஜாடை நிறைய இருக்கும். குழுக்கூட்டத்திலும் மின் அஞ்சலிலும் இவரை கவனமாக கையாளுவேன். he/she தவிர்த்து…

“Excellant’ இமெயிலுடன் இன்னொரு கடுகடு இமெயில். ‘Vijay is not much helpful you know…!”
கீழே சுருட்டிப்செய்து பார்த்ததில் லியாம் ஆப்ஷொர் டீமிடம் சாதாரண தகவல் கேட்டு இருக்கிறார், பசங்கள் சொதப்பியிருக்கிறார்கள்.
சுள்ளென்று கோபம் வந்தது, எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்.
இந்த ஆள் ஒரு ஜரிஷ், நேரில் பேசினாலே புரிவது கஷ்டம், பாடி லேங்குவேஜ் எல்லாவற்றையும் வைத்துதான் நம்மளாக முடிவிற்கு வரவேண்டும். இந்த அழகில் ஆடியோவில் உலகின் அந்த பக்கத்தில் எவ்வளவு புரியும்?
நம்ம பசங்களா புரியலை என்றால் புரியலை என்று சொல்லமாட்டார்கள்…கஸ்டமராம்.
எதாவது பிரச்சனை, சம்பவம் என்று மீட்டிங் வைத்தால் கடுப்பாகி விடும். என்ன பிரச்சனை என்று ரெண்டு நிமிடத்திற்க்குள் ‘no problem, we can do this…yes, we understood the problem’ அந்த ஆப்ஷோர் மேலாளரை உதைக்க வேண்டும். ஜரிஷ்க்காரருக்கு குழப்பமாகி விடும். என்ன பிரச்சனை என்று சொல்லவே இல்லை, அதற்குள் செய்து விடலாம் என்கிறார்களே?
ஒரு மணி நேர மீட்டிங் ஜந்து நிமிடத்திற்குள் முடிந்து விடும்.

மீட்டிங் அறையிலிருந்து இருக்கைக்கு போகும்போதே போன் அடிக்கும்.
“கிருஷ்ணா”
“சொல்லுங்க விஜய்”
“இப்போ கால்ல இஷ்ஷு பேசினமே, அதில எனக்கு சில விஷயங்கள் புரியலை”
“நினைச்சேன், புரியலைன்னா புரியலைன்னு அங்கேயே சொல்லனும் இல்லை, எத்தன தடவை சொல்லியிருக்கேன்”
“இல்லை கிருஷ்ணா, அது வந்து…”
“கங்காதரன் இருந்தாரா கால்லை”
“ஆமா!”
“நினைச்சேன், ஆனா இருந்தமாதிரியே காட்டிக்கலையே!”
“அவர் என்னிக்கு பேசி இருக்கார்!”
“அது சரி சொல்லுங்க விஜய்”
இது மட்டும் காரணமில்லை. யாராவது நாம் சொல்வது புரியவில்லை என்று சொன்னால் நாம் என்ன செய்வோம்? திருப்பி, கொஞ்சம் மெதுவாக, வேறு வார்த்தைகளை, வாக்கியங்களை உபயோகிப்போம். இந்த மனிதர் லியாம் சொன்னது புரியலை என்றால், அப்படியே திருப்பிச்சொல்லுவார், வார்த்தை மாறாமல், உச்சரிப்பு மாறாமல். மூன்றாவது தடவையில் கொஞ்சம் வித்தியாசம், வார்த்தைகளில் எரிச்சல் தடவியிருக்கும்!
மறுபடி கேட்க யாருக்கும் தயக்கம்…

இருக்கும் டீமில் விஜய் பரவாயில்லை, அந்த பட்டார்ஜி வெக்கமே இல்லாமல் என்ன செய்யனும் என்பான், விளக்கி பத்து நிமிஷம் கூட ஆகி இருக்காது…
இருபது நிமிடங்களில் விஜய் மூலக்காரணத்தை கண்டுபிடித்து விட்டான். சாமர்த்திய சாலி.
தீர்வை எப்படி பண்ணலாம் என பேசினோம். படபடப்பு தணிந்து சகஜ நிலைக்கு வந்திருந்தேன்.
“வெல் டன் விஜய்”
“தேங்க்ஸ் கிருஷ்ணா”
“அப்புறம் என்னைலருந்து லீவில் போறிங்க?”
” பொங்கல் லீவிருந்து ஒரு பத்து நாள்”
“ஓகே, என்ஜாய் பண்ணுங்க”
“நீங்க தான் வர மாட்டிங்க!”
“வர முடியாதுய்யா, உனக்குதான் தெரியுமே”
அண்ணன் தண்ட கடனைகளையெல்லாம் அடைத்து, அவனுக்கான வங்கி கடன் வாங்கி இப்போதுதான் செட்டில் ஆகிறான்.
“நீங்க நியாபகப்படுத்தவே வேண்டாம், இந்த தடவை அப்ரைசல்ல பாத்துக்கலாம்”
“ஓகே கிருஷ்ணா…நீங்க ரெகமெண்ட் பண்ணினாலும் கங்காதான்…”
“நான் பாத்துக்கிறேன் விடுங்க விஜய்”.
12 மணிக்கெல்லாம் நல்ல பசி. “தலைவர்” காணோம், இன்று புதன் தானே, இன்டோர் கால்பந்து விளையாடப்போயிருப்பார். உலகமே இடிந்தாலும் கால்பந்து தான் முதலில்.
உணவு விடுதியில் சூப்பு மட்டும் வாங்கிக்கொண்டு (‘கவுண்ட்டரில் சரியான சில்லறைக்கு: ” எஃஸெக்ஸலண்ட் லவ்!”) சாண்ட்விச்சை கடித்துக்கொண்டே சன்னலின் வெளியே எட்டிப்பார்த்தேன்.
சரியான காற்று, போவோர் வருவோர் எல்லாரிடமும் முட்டி மோதி முனகி போய் வந்து கொண்டு இருந்தது.
தேம்ஸ்ஸின் மேல் மெல்லிய பனித்தோலின் மேல் வாத்துகள் நடந்துகொண்டு இருந்தன.
இப்போதே இருட்டிக்கொண்டு வந்தது. நடக்கும் எல்லோர் முகத்திலும் சின்ன சின்ன நீராவிப்புகை இல்லையெனில் சிகரெட் புகை. இந்த குளிருக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல மதிய ஓட்டத்தை முடித்துவிட்டு சிலர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
டீவி, மெளனமாக ஒரே செய்திகளை பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை சொல்லிக்கொண்டு இருந்தது. சொல்பவர்களாவது அட்லீஸ்ட் சில மணி நேரங்களில் மாறிக்கொண்டு இருந்தார்கள்.
சரி, வேலைக்கு திரும்புவோம்…

மதிய மூன்று மணி குழுக்கூட்டத்தை விட்டு வெளியே வந்தபோது மறக்காமல் வங்கிக்கு போன் செய்யவேண்டும் என்றிருந்தது நியாபகம் வந்தது. போன் செய்தேன்.
தானியங்கிக்குரல்களுக்கு பதில் செய்து விட்டு உயிருள்ள குரலுக்கு காத்திருக்கும் போது ஜெரால்டின் கணிணித்திரை தெரிந்தது. ஐசிஐசிஐ வலைத்தள முகப்பு ஒரு குட்டி சாளரமாக…தூத்துகுடிக்காரர்தான்…எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு வங்கியின் வலைத்தளம் திரையில் இருக்கும்…!

மாலை DLR ஸ்டெஷினில் மாங்கு மாங்கு என்று அத்தனைப்படிகளையும் தாண்டி, சரியாக கடைசிப்படித்தாண்டும் போதுதான் சட், மேசை சாவியை மேசையின் மேலேயே வைத்துவிட்டது உறைத்தது. சிறு சலிப்புடன் திரும்பி…முதல் தடவையில்லை, இப்படி மறப்பது…

3 மணிக்கு இருட்ட ஆரம்பித்து 5 மணிக்கெல்லாம் சரியான கும்மிருள்.
வழக்கம் போல கதவோரம் ஒண்டிக்கொண்டேன். ஒவ்வொரு ஸ்டேஷனில் கதவு திறக்கும் போதும் உறையவைக்கும் காற்று உள்ளே வந்தது.
வலது கையில் நடு விரல் வெளுத்து போய் இருந்தது. வீட்டிற்கு போய் சில நிமிடங்கள் வரை இப்படித்தான் இருக்கும்…
அலைப்பேசி மௌனமாக அதிர்ந்தது…
“ஏய் கண்ணா, நல்ல விஷயம்தானடா?”
“ஆமா…மதியம். பொண்ணும் அம்மாவும் நலம். நார்மல் வெயிட்தான்”
“வெரிகுட், சந்தோஷம் மச்சி!”
“ஆமடா…இப்போதான் ரிலாக்ஸா இருக்கு”
“அப்புறம் பேரு…”
“அது கண்டிப்பாய் நீ கொடுத்த லிஸ்ட்டில் இருந்துதான்!”
“அப்புறம் கிருஷ்ணா, லோன் அப்ளை பண்ணியிருந்தேயில்ல?, எல்லாம் ஓகேயாச்சா?”
“பின்ன, எங்க வொர்க் பண்றோம், நமக்கு இல்லைன்னா அப்புறம் யாருக்கு!”
“அது சரி”
“என்ன கொஞ்சம் அகலக்கால்தான், எப்படியும் இன்னும் ரெண்டு வருஷமாவது ஊருக்கு போறது பத்தி யோசிக்ககூடாது”
“இப்படித்தான் ரொம்ப வருஷமா சொல்லிகிட்டு இருக்கமே!”
அலைப்பேசியை அணைத்து கோட்டில் வைக்கும் போது புன்னகையை தொடர்ந்திருப்பேன் போலிருக்கிறது. எதிர் சாரி வெளுத்த சினேகிதமாக புன்னகைத்தார்.
எங்கேயோ பார்த்த முகமாக இருந்தது…

வீட்டில் தமிழ் பாடம் நடந்து கொண்டிருந்தது. பொடியன் ஓடி வராதபோதே நினைத்தேன், இறுக்கமான சூழ்நிலை!
“என்ன எப்படி போய்க்கிட்டு இருக்கு?”
“பூக்கள் என்ன என்ன சொல்லு?”
” ரோஜாப்பூஊஊ, மல்லிகப்பூஊஊஊ”
ஒவ்வொருப்பூவை முடிக்கும்போது வேண்டுமென்றே ஒரு அழுத்தம்(poo!)
குட்டியாய் ஒரு கேக்கை கடித்துவிட்டு பாட்மிட்டனுக்கான தயார் செய்தேன்.
பாட்மிட்டன் கிளப் இரவு 8 மணிக்குத்தான் ஆரம்பிக்கும், ஒரு ஜந்து நிமிடம் ஸ்பிரே அடித்து கார்க்கண்ணாடி ஜஸை சுரண்டுவதிற்கு …பக்கத்து கிராமம்தான், போக்குவரத்து வழக்கம் போல் இல்லாமல் சற்று இலகுவாகவே இருந்தது.
கையுறைகளைக் கழற்றாமலே ஓட்டினேன், நடு விரல் மட்டும் மரத்து வெளிறிப்போய் இருந்தது.

பதினைந்து நிமிடத்தில் போய்விட்டேன். கார் நிறுத்துமிடத்தில் சாராவும் அவள் மகளும் ‘Hi ya’.
சாராவின் உடம்பிற்கும் விளையாட்டிற்கும் சம்பந்தமே இருக்காது. முதல் தடவை பார்த்தபோது ஷேப்பே இல்லாமல் சேனைக்கிழங்கு மூட்டை மாதிரி என்று தோன்றியது.
திஜாதானே? உதாரணப்புலவர்!…

பச்சைக்கண்களுடன் கிரிஸ் கண்களைச்சிமிட்டினான். ஜூனியர் கிளப்பிலிருந்தும் சிலர் வந்திருந்தனர். அதில் அந்த கண்ணாடிப்போட்ட பையன் நன்றாகவே ஆடினான். ஆட்ட நடுவில் ஏதோ உள்ளூர் உச்சரிப்பில் அவன் எதோ சொல்ல மற்ற இருவரும் சிரித்தனர். நான் புரிந்தமாதிரி புன்னகைத்தேன்!
முதல் இரு ஆட்டங்களிலும் விரல்கள் குளிர்ந்துதான் இருந்தன.
ஈரோடு சின்சியில் விளையாடும் போது உள்ளரங்குள்ளில் எரியும், செல்வாவின் பாஷையில் சொன்னால் ‘வேர்த்து ஊத்தும்!’ ofcourse, சும்மா நின்றாலே மூடிய அரங்கில் வேர்க்கும்தான்!
ஒவ்வொரு ஆட்டமுடிவிலும் வெளியே வந்து காற்று வாங்கிவிட்டு உள்ளே செல்வோம்.
இங்கே, தலைகீழ், வார்மப் செய்யவே பத்து நிமிடம், முதல் இரு ஆட்டங்களுக்கு ஜாக்கெட்டை கழற்றவே மாட்டேன்.

கடைசி ஆட்டத்தில் கிறிஸ் எதிராக….
பரவாயில்லை, கிறிஸ் இன்று ஓரளவிற்கு தாக்குபிடித்தான், நான் சில unforced mistakes…கவனம், focus, அவனுக்கு உன் பலம் தெரியும், நம்பிக்கையாக இரு, அவன் தயங்குவான்…தயங்கினான்!
வழக்கமான கொஞ்ச rally, அப்புறம் மடாரென்று ஒரே அடியில் ஃபினிஷ்….எப்போது, யாரால் அந்த fatal ஷாட் என்பதுதான் த்ரில்…27-26ல் கிறிஸ் லட்டு மாதிரி lift செய்தான் எனது favourite smash!
கை குலுக்கும் போது கண்களைத்தவிர்த்து விரல்களை லேசாகத்தொட்டு எடுத்தான்.
அவனது பார்ட்னர் அவனைவிட பிரமாண்ட உருவம், அகன்ற தோள்கள், கைகள்….எனது வலது கை அவரது கையில் பெரிய மீனின் வாயில் போன சின்ன மீனைப்போல ஒரு கணம் மறைந்து பின் வந்தது. அவர் கண்களில் பல முறை பல பேர்களிடம் பார்த்த லேசாக ஆச்சரியம், என் மெல்லிய சாதுவான விரல்களை உணர்ந்த போது…தம்மாத்துண்டு விரல்கள்! இந்த கையை வைத்துக்கொண்டா…நான் மனதிற்குள் சொல்லிக்கொள்வேன் – விரல்களைப்பார்க்காதேடா அற்பபதரே, மணிக்கட்டுகளில்தான் என் பலம்!

வெளியே வந்தவுடன் மருபடியும் ஊடுருவும் குளிர். நேற்று மாதிரி இல்லாமல் வழக்கமான மூடுபனியும், ஆங்காங்கேயான சோம்பல் மஞ்சள் விளக்குகளும் டிராகுலா படங்களை நினைவுபடுத்தின.
பொறுமையாக காரை ஓட்டி, வழியில் ஒரு ஆம்புலன்சிற்கு வழிவிட்டு வீட்டிற்கு வந்தபோது மணி பதினொன்றைத்தாண்டி விட்டது.
இரண்டு மிஸ்ட்கால்கள், மாலைபேட்ச் ஏதாவது? இல்லை, மனைவிதான்!
உடம்பின் அத்தனை பாகங்களும் வலிக்க, சுடு ஷவரின் கீழ் எவ்வளவு நேரம் நின்றேனோ?
பசி உயிர் போனது. சப்பாத்தித்தட்டுடன் டிவி ஆன் செய்தால் பிபிசியில் நூற்று பத்தாவது தடவையாக “Cast Away”.
ரெண்டாவது சப்பாத்தியில் போன சண்டே “Match of the day” ரெக்கார்ட் செய்தது பார்க்காதது நினைவிற்கு வந்தது. அதற்கு மாறினேன்.
துளிகூட அதிக சதையில்லாத, அதே நேரம் சோகைத்தனம் இல்லாத இறுக்கமான, கச்சித சட்டை அணிந்த காரி லினிகர் உற்சாகமாக எதிரில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்.
சாப்பிடுவிட்டு சோபாவில் புதைந்த போது சட்டென்று “What a day!” என்று தோன்றியது. பெரியதாக எதையும் சாதித்துவிட வில்லைதான். இருந்தும் திருப்தி…
காலை பேட்ச் பெயிலை உதய் இல்லாமலேயே சரி செய்தாயிற்று. கண்ணனுக்கு பெண் குழந்தை, பெயர் என்னுடைய லிஸ்டிலிருந்து. திருப்தியான, வியர்த்த திருப்தியான விளையாட்டு, வங்கி கடன் உறுதியானது…முழுதாக கண்ணயரும்முன் தட்டுத்தடுமாறி மேலே ஏறி ஹீட்டரை அணைத்து படுக்கையில் விழுந்துவிட்டேன்…

முதல் தடவை அலைப்பேசிஅடித்தபோது எனக்கு கேட்கவில்லை. இரண்டாவது தடவை அடித்த போது கஷ்டப்பட்டு கண்களைத்திறந்தேன். மணி இரண்டு…இந்த நேரத்திற்கு எந்த பேட்ச் புரோகிராமும் கிடையாதே?
இல்லை, இது ராகவன், ஈரோட்டிலிருந்து…
“கிருஷ்ணா, இன்னைக்கு பேப்பர் பார்த்தியா?”
“என்னடா இப்போ என்ன நேரம் தெரியாதா உனக்கு?”
“தெரியும்டா..சாரி, சில சமயம் உன்னுடைய 11, 12க்கெல்லாம் பார்ப்பல்ல, அதுதான் கேட்டேன் உங்க கம்பனி பத்திதான் ஹாட் நியுஸ்”
“என்னது?”
“உங்க பாஸ் எதோ ப்ராட் செஞ்சுட்டாராம், பெரிய பேச்சு அடிபடுது”
“ஏதாவது ரூமரா இருக்கும்டா, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கூட இப்படித்தான் பெருசா இஷ்யு ஆச்சு, எல்லாம் மீடியா செய்யற…”
“இல்ல கிருஷ்ணா, இது கொஞ்சம் சீரியஸ்னு நினைக்கிறேன், ராஜுவே எல்லாம் ஒத்துக்கிட்டு லெட்டர் அனுப்பிச்சுருக்கார் எல்லா மீடியாக்கும்..ஹிண்டு முதல் பக்கத்திலேயே வந்திருக்கு…ஒரே குழப்பமா இருக்கு போல”
“கிரெடிட் கார்டு எல்லாம்…”
ராகவன் ஏதெதோ சொல்லிக்கொண்டு போனான். பக்கத்து அறையில் பொடியனின் நெஞ்சு சளி கலந்த மெலிதான, ஆனால் தெளிவான சீரான மூச்சு ஒலி கேட்டது.
சன்னல் திரையை திறந்து பார்த்தால் இப்போது எப்படி இருக்கும்?
அடர் மூடுபனி? நேற்று போல் தெளிவான வானம் அல்லது வழக்கமான மழை?
இந்த ஊரில் எதுவுமே உறுதியாக சொல்ல முடியாது. இப்போது என்னவாக இருந்தாலும் கொஞ்ச நேரத்தில் மாறிவிடத்தான்போகிறது…

Series Navigation