ஒரு கனவு துகிலுரிகின்றது

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

இரா.அரிகரசுதன்


ஆத்தாளுடன் நெல்லறுக்கப் போகும்போது
நெற்தாள் அறுத்தக் கையின் தடத்தை
இன்னும் என்னால் தாண்டி குதிக்க முடியவில்லை

கஞ்சி குடிக்க பனம்பட்டை வெட்டும்போது
மயில்முடி குட்டிபோட இரை எடுத்து
கால் சட்டையின் இரகசிய அறையில் – என்று
மாற்றிப்போட்டு ஊரலாகிப் போனது

தேரிக்குளத்தின் தாழம்மூடுகளில்
வாத்துமுட்டை பொறுக்கப் போய்
சாரையும் நல்லப்பாம்பும் கனவில்
வந்து பிணைந்தாடி காய்ச்சல் வந்ததும்

தெவங்கி நிற்கும் செம்மண் மழைநீரில்
விழுந்தெழுந்து வெளிளைச் சட்டை நிறம்மாறி
முழங்காலின்கீழே தெறச்சி வால் தடம் பதிந்ததும்

ஆத்தா அடித்தழுதழுது ஏசி
கண்ணீர் கவிதை எழுதி
கிழித்து எரிக்கப்பட்டதும்

பின்னாளில் என்ன எளவல எழுதா ?
எனும் இரணங்களின் மீதே
என் கவிதை இரத்தம் குடித்துக் கிடந்ததும்

இப்படியாய் என் பழைய நான்
கணிணியின் காலடியில் காலாவதியாகிக் கிடக்கும்
நவீன நானிடம் மறந்துவிட்டாயா ?
எனக் கண்ணடித்துச் சிரிக்கும் கதை…

இரா.அரிகரசுதன்
நாகர்கோவில்
inian_tamil@rediffmail.com

Series Navigation

இரா.அரிகரசுதன்

இரா.அரிகரசுதன்