ஒன்பதாம் திசை

This entry is part [part not set] of 28 in the series 20060106_Issue

அன்பாதவன்


கிழக்கு

ஒன்பதாம் திசையிலிருந்து
ஒலிக்கிறதொரு மாயக்குரல்
முகங்காட்டாமல்.

வடமேற்கு

கனக்கும் கழிவுகளின்
சுமை தாளாமல்
வெடித்துச் சிதறுமென்
கழிவறைத் தொட்டி

வடக்கு

நீர்தேடும் வறட்சிக்கு
எவை தாகந்தீர்க்கும் ?

தென்கிழக்கு

ஜன்னல் வழியாகக்கசியும்
மரணத்தின் மெல்லிசை
படுக்கை அறை முழுதும் வியாபிக்கிறது
வாத்சல்யப் புன்னகையுடன்
தலைகுனிவேன்
என்னைப் பார்த்து கண்சிமிட்டும்
மரணத்தின் முகம் பார்க்காமல்.

வடகிழக்கு

கரங்களுக் கால்களும் போதமையில்
முளைத்து விரிந்த இறக்கைகளில்
இலகுவானதொரு மகிழ்வில்
பறத்தல் பெருஞ்சுகம்.

மேற்கு

எண்ணெயில்லா கதவுகளில்
ஓசையாய்
முக்கல் முனகல்களைத் தூவி
காமத்தை விதைத்து
தூண்டுகிறது விரகத்தை
அருகிலிருக்கும் கனியை
சுவைக்க இயலாத
தடைகளின் மீது
வெகுண்டெழும் எரிச்சல்
விரைத்த குறியும் விரியாத
யோனியும்
எதிரெதிர்த் திசையில்
வழியும் காமத்தில்
அடித்துச் செல்லப்படுகிறேன்
கரை தெரியாமல்.

தென்மேற்கு

புற உலகின்
யாதொருக் கரங்களும்
தட்டி எழுப்பாமல்
ஆழ்ந்து துயிலில் மிதக்கிறேன்
தாலாட்டு இசையுடன்
சந்தோஷம் தருகிறது
நிர்ச்சலன உறக்க நிம்மதி.

தெற்கு

கவிச்சுழலில் தள்ளி
தத்தளிக்க வைத்து
வேடிக்கைப் பார்க்குதென்னை
அரூபக் குரலொன்று.

—-
jpashivammumbai@rediffmail.com

Series Navigation

அன்பாதவன்.

அன்பாதவன்.