ஒட்டைச்சிவிங்கி

This entry is part [part not set] of 30 in the series 20020512_Issue

ஸ்லவோமிர் ம்ரோஸெக் – தமிழில்: பூமணி


பொடியன் ஜோவுக்கு தலைமுடி முன்வாக்கில் தாழ்வாரமிட்டிருக்கும். பார்த்தாலே சிரிப்பு வரும். அவனுக்கு ரெண்டு மாமா. ரெண்டு பேருக்கும் ஒத்துப்போகாது. ஆளுக்கொரு திசை.

பெரியமாமா கன்னியர் மடத்தை யொட்டி ஒடுக்கமான சந்தில் குடியிருந்தார். கீழ்த்தளத்தில் ஒரு விசாலமான அறை அவருடையது. அவர் சொல்வார்.

‘அய்யா எனக்குக் கீழ்த்தளமே போதும். மாடமாளிகை எல்லாம் புதுமை விரும்பிகளான ஒங்களுக்குத்தான் சரி. ‘

அந்த அறை முழுக்க பழைய புஸ்தகங்கள். தண்டி தண்டியாக பாதி உளுத்துப்போன அலமாரிகளில் அடைத்துக் கொண்டிருக்கும். அலமாரிகளைத் துளைத்த பூச்சிகளும் அலுத்துப்போய் செத்துவிட்டன.

ஒரு சமயம் மாமாவைப் பார்க்க வந்த ஜோ அலமாரியில் இடித்துக்கொள்ள ஒரு கனத்த புஸ்தகம் விழுந்து மண்டையைப் பதம் பார்த்துவிட்டது. மாமாவுக்குத் தினமும் ஒத்தாசை செய்ய வருகிறவன் மருந்துக்கடைக்குப் போய் கட்டுத்துணி வாங்கி வரவேண்டியதாயிற்று. அந்தப் புஸ்தகத்தின் பெயர் ‘பொருளை எதிர்த்து ஆன்மா. ‘

மாமா அந்த அறையை விட்டு வெளியே தலைகாட்டியதில்லை. உயரமான சாய்வு மேசையில் உட்கார்ந்து சதா எழுதிக் கொண்டிருப்பார். அப்படித்தான் அவர் காலம் கழிந்தது.

அவர் எழுதுகிற சமாச்சாரம் சுவாரசியமாகத்தான் இருக்கவேண்டும். ஏனென்றால் நாற்பது வருசமாக இந்த விஷயம் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறார். சரி, இந்த விஷயத்தின் சாராம்சம் இதுதான்.

‘காரண காரிய உலகம் பற்றிய ஒரு சிறு விவரணை அல்லது பூமி ஒரு கோளமாக இல்லாமலிருந்தால் எப்படித் தோற்றமளிக்கும் மற்றும் இதன் எதிர்நிலைவாதம் ‘

ஜோ ஒரு நாள் மாமாவிடம் கேட்டான்.

‘ஒட்டைச்சிவிங்கி எப்படி இருக்கும் மாமா. ‘

அந்த மிருகத்தின் தோற்றம் எப்படி இருக்கும் என்று மாமாவுக்குத் தெரியவில்லை. இருபது வயதிலிருந்தே தன்னுடைய இந்த மாபெரும் ஆய்விலே முழுக்க முழுக்க முங்கியிருந்ததால் அறையின் நான்கு சுவர்களுக்கப்பால் போனதே கிடையாது. அவருடைய படிப்பெல்லாம் மேற்படி, ‘பொருளை எதிர்த்து ஆன்மா ‘ புஸ்தகத்துடன் பூரண கருத்து, பூரண சித்தம், உலகம் குறித்த தன்னிலை லட்சிய வாதம், கடந்த நிலைமறுப்புவாதம், அனுபவ அறிவின்றியே கொள்ளும் கற்பனைக் கருத்துகோள்கள், தன்னிலை அறிவொன்றே சாத்தியம் என்னும் கொள்கை இப்படியான பொருள்கள் பற்றிய அரும்பெரும் ஆய்வுகளாக இருந்தன.

இருபது வயதுவரை அவர் என்ன செய்தார் என்று நீங்கள் கேட்கலாம்.

அதுவா, இருபது வயதை எட்டும்வரை அவருடைய ஒரே சிந்தனை தன் முகத்திலிருந்த பருவைப் பற்றியே இருந்தது. கண்ணாடி முன்னால் மணிக்கணக்கில் தவங்கிடந்தும் அது மறைய மறுத்தது.

மிருகக்காட்சி சாலைக்குப் போயிருக்கலாமென்றால் அதுக்கும் தோதில்லை. மிருகங்களின் விரசமான நடத்தையைப் பார்க்க நேர்ந்துவிடுமோ என்ற பயம். அதனால் அந்தப் பக்கமே போகவில்லை.

மருமகன் கேட்டது அவர் எதிர்பாராத கேள்வி. ஆனாலும் காட்டிக்கொள்ளவில்லை. என்ன இருந்தாலும் அவர் ஒரு லோகாயத வாதியில்லை. மாறாக சுத்தமான கருத்துமுதல்வாதி. தன் வாழ்நாள் முழுவதும் அவர் படித்தவற்றிலிருந்து ஒரு விஷயம் உறுதி என்று அறிந்திருந்தார். இந்தப் பிரபஞ்சம் பற்றிய அறிவு முழுமையும் அதன் காரண காரியத் தொடர்புத் தன்மையில் மனுசனுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே ஒட்டைச்சிவிங்கி எப்படியிருக்கும் என்பது பற்றிய அறிவு அதில் ஒரு கூறுதானே.

அவர் ஜோவிடம் சொன்னார்.

‘நாளைக்கு வா சொல்றேன். ‘

ஜோ போய்விட்டான். அவர் திரைச்சீலைகளை இழுத்து மூடி மெழுகுவர்த்தியைக் கொளுத்தினார். தன் மேசைமேல் ஒரு மண்டையோட்டை வைத்தார். நெடுஞ்சாண்கிடையாக தரையில் விழுந்து கிடந்தார் நடுச்சாமம் வரை. சாமத்துக்கு மேல் எழுந்து படிப்பில் முங்கிவிட்டார்.

அடுத்தநாள் ஜோ பழைய கேள்வியுடன் வந்தான்.

மாமா பேச ஆரம்பித்தார்.

‘ஒட்டைச்சிவிங்கி எப்படியிருக்கும்னு தெரிஞ்சிக்கிறணும். நல்லது. ஒட்டைச்சிவிங்கிங்கிறது மூணு காலு, தலையில ரெண்டு கொம்பு, குதிரைக்கு உள்ளதுபோல ஒரு வாலு கொண்ட மிருகம். கெட்டிப் பாலோட சேத்து காளான்கள மட்டும் சாப்பிடும். தெரிஞ்சிக்கிட்டியா. ஓடு ஓடு. ‘

‘குளிர்காலத்துல காளான் மொளைக்காதே. அப்ப எதைத் திங்கும் மாமா. ‘

‘குளிர்காலத்துல ஊறுகா போட்ட காளானைச் சாப்பிடும். ‘

ஜோ அவருக்கு நன்றி சொல்லிவிட்டுப் போனான். இந்த மாமாவிடம் அவனுக்கு எப்போதுமே கொஞ்சம் பயம். அதனால் அவனுக்குத் திருப்தியாயில்லை. ஒட்டைசிவிங்கி விவகாரம் தீர்ந்தபாடில்லை. காளான் விஷயந்தான் நெருடியது.

சின்ன மாமாவிடம் கேட்பதென்று தீர்மானித்தான்.

எல்லாக் குடும்பங்களிலும் இருப்பதைப் போல ரெண்டு மாமாவுக்கும் எந்தவிதத்திலும் சரிப்பட்டுவருவதில்லை. ஒருத்தருக்கொருத்தர் தெரியாதவர்கள் போலக்கூட நடந்துகொள்வார்கள்.

சின்னமாமாவுக்கு அதிக வேலையுள்ள பிழைப்பு. ஒரு தினசரிப் பத்திரிகையின் ஆசிரியர். முழுக்க முழுக்க வேலையே தஞ்சமென்று கிடப்பதால் வீட்டில் இருக்க மாட்டார். ஜோ பத்திரிகை அலுவலகத்திலிருந்த அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டான்.

‘ஹலோ மாமாவா. ஜோ பேசறென். ‘

‘என்ன வேணும் தோழரே. ‘

‘ஒண்ணுமில்லை மாமா. ஒட்டைச்சிவிங்கி எப்படியிருக்கும்னு தெரியல்ல. அதான் ஒங்ககிட்ட கேக்கலாம்னு நினைச்சேன். ‘

‘விரிவுரையாளர்களுக்கான குறிப்புகள்ல பாரேன். ‘

‘அந்தப்புஸ்தகம் எங்கிட்ட இருக்குது. அதப்பத்தி ஒரு வார்த்தைகூட இல்லையே. ‘

‘அப்படின்னா பாயர்பாக்குல இருக்குமே. ‘

‘பள்ளிக்கூடத்தில எடுத்துப்பார்த்தன். அதுலயும் இல்ல. ‘

‘அப்ப டூரிங்குக்கு மறுப்புல பாரு. ‘

‘அதும் எங்கிட்ட இருக்குது. பிரயோஜனமில்ல. ‘

‘அதுல இருந்தாகணுமே. ‘

‘இல்லையே. ‘

‘அதெப்படி இருந்துதான் ஆகணும். நீ ஏதோ கற்பன பண்ணுற. ‘

மாமா தொலைபேசியை வைத்து விட்டார்.

ஜோவைப்போல் அவர் சின்னப் பையனாக இருந்தபோது ஒட்டைச்சிவிங்கியை படத்தில் பார்த்தது. சிக்கரி வியாபாரிகளின் கம்பனியொன்று விளம்பரத்திற்காக கொடுத்த ‘மிருகங்கள் ‘ வரிசையில் அதுவும் ஒன்று. அந்த நினைவில் ஒட்டைச்சிவிங்கி எப்படியிருக்குமென்று பருவட்டாக யூகிக்க முடிந்தது. ஆனால் அந்தப் படத்தை அவர் பார்த்தது போருக்கு முந்திய முதலாளித்துவக் காலகட்டம் என்பதால் அதை ஒத்துக்கொள்ள மனசில்லை. யாரும் என்னைத் தொந்தரவு பண்ணக்கூடாது என்று கறாராகச் சொல்லிவிட்டு மார்க்ஸிய நூலகத்தை அலச ஆரம்பித்தார். ஜோ சொன்னது சரிதான் என்பதை சீக்கிரமே தெரிந்துகொண்டார். லுத்விக் பாயர்பாக்கும் ஜெர்மனியத் தத்துவ ஒளியும், டூரிங்குக்கு மறுப்பு, ஏன் மூலதனம் எதிலுமே ஒட்டைச்சிவிங்கியைப் பற்றிய பேச்சே இல்லை. அந்தப் புஸ்தகங்கள் ஒன்றில்கூட ‘ஒட்டைச்சிவிங்கி ‘ என்ற வார்த்தையே தட்டுப் படவில்லை.

மேற்கொண்டு ஆராய்ச்சி செய்தும் பயனில்லை. பத்திரிகை ஆசிரியருக்கு ஒரே மண்டைக்குடைச்சலாகிவிட்டது.

சிக்கரி விளம்பரத்திலிருந்து இந்த அறிவைப் பெற்றதாக ஏற்றுக்கொள்வதா. கூடாது. ஏற்றுக்கொண்டால் தன் அந்தஸ்து என்னாவது. யுத்தத்துக்கு முந்தி சிக்கரி வாங்கக்கூட வக்கில்லாமலிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் அந்தஸ்தைவிட தாழ்ந்துவிடுமே.

அப்படியானால் ஒட்டைச்சிவிங்கி எப்படியிருக்கும் என்று தனக்குத் தெரியாதென்று சொல்லிவிடலாமா. அதுவும் முடியாது. அப்புறம் அவருடைய புகழ் என்னாவது. புறவுலகம் கண்டறியக்கூடியது என்ற கொள்கையை முழுமனசுடன் ஏற்றுக்கொண்டு அதன் காரணமாக தனக்கு எல்லாம் தெரியும் என்ற அபிப்பிராயத்தையும் ஏற்படுத்திக்கொண்டவராயிற்றே அவர். ஏதோ கொஞ்சம் தெரியாதென்று வைத்துக்கொண்டாலும் அதை ஒத்துக் கொள்ளமுடியாது.

கடைசி வழி. விலங்கியல் கையேடு வாங்கி ஒட்டைச்சிவிங்கியைப் பார்க்கலாம். அது முறையல்ல என்று தயக்கமில்லாமல் ஒதுக்கிவிட்டார். அப்படிச் செய்வது புறவயமான அறிவியல் என்னும் சகதியில் தள்ளிவிடுகிற குறுகிய ஆய்வறிவாகிவிடும்.

பொடியன் ஜோ மறுபடியும் ஒட்டைச்சிவிங்கியைப் பற்றி தொலைபேசியில் விசாரித்தான். சட்டென்று பதில் வந்தது.

‘ஒட்டைச்சிவிங்கின்னு ஒண்ணு கெடையாது. ‘

‘என்ன…. என்ன சொல்றீங்க மாமா. அப்படி ஒண்ணு கெடையாதா. ‘

‘அப்படி ஒரு உசுப்பிராணியே இல்ல. வேணும்னா நாயோ முயலோ எப்படியிருக்கும்னு சொல்றென். ‘

‘வந்து…. ஒட்டைச்சிவிங்கி… ஏன் மாமா இல்லன்னு சொல்றீங்க. ‘

‘இல்ல அதனாலதான். மார்க்ஸ், எங்கெல்ஸ், அவங்க வழியில தொடர்ந்து பணிபுரிஞ்ச சிந்தனையாளர்கள் யாரும் ஒட்டைச்சிவிங்கியப் பத்தி ஏதும் சொல்லல. இதுலருந்தே தெரியவேணாமா அது இல்லன்னு. ‘

‘ஆனா… ‘

‘ஆனாங்கிற பேச்சுக்கே எடமில்ல. சொல்லிப்புட்டென். ‘

ஜோ தொலைபேசியைக் கீழே வைத்தான். அவனுக்குள்ளிருந்து பெருமூச்சு வந்தது. பிறகு பள்ளியில் சாரணர் படைத்தலைவனைக் கலந்து பேசினான்.

சாரணர் படைத்தலைவன் சாதாரண இளைஞன். அவன் சொன்னான்.

‘ஒனக்கு வேற பெரிய கவல கெடையாதா. சரி ஞாயித்துக் கெழம வரைக்கும் பொறுத்துக்கோ. மிருகக் காட்சிசாலைக்குப் போவோம். நேர்லயே பாத்து உண்மையைத் தெரிஞ்சுக்குருவொம். ‘

அவர்கள் போனார்கள். ஒட்டைச்சிவிங்கியைப் பார்த்தார்கள். அதைப்பற்றி நிறையப் பேசினார்கள். ஜோ சாரணர் படைத்தலைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு ஆழ்ந்த சிந்தனையில் வீடு திரும்பினான்.

வருகிற வழியில் பள்ளிக்கூடப் பையை விற்றான். உடனே பூக்கடைக்கும் எழுதுபொருள் கடைக்கும் போனான்.

மறுநாள் மதியம். ஒரு செய்தியாள் பத்திரிகை ஆசிரியரின் அலுவலகத்துக்கு ஒரு ரோஜாச்செண்டையும் சிறு கடிதத்தையும் கொண்டு வந்து கொடுத்தான்.

‘அன்புள்ள தம்பி,

நீ ஏன் என்னைப் பார்க்க வருவதேயில்லை. நமது இளமைப்பருவம், குடும்பம், சிறுவன் ஜோ, ஒட்டைச்சிவிங்கிகள்… இதெல்லாம் பற்றி நாம் பேசலாமே.

கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக.

உனது பாசமிக்க அண்ணன். ‘

பெரிய மாமா ஜோவைச் சந்தித்தபின் மீண்டும் தன் வாழ்க்கைச் சாதனையான புஸ்தகத்தை எழுதத் தொடர்ந்தபோது மைக்கூட்டில் எலி செத்துக்கிடப்பதைக் கண்டார்.

பொடியன்களுக்கு எப்போதாவதுதான் ரெண்டு ரோஜாச்செண்டு வாங்கக் காசு கிடைக்கும்.

ஸ்லவோமிர் ம்ரோஸெக் (Slawomir Mrozek):

இவர் போலந்து எழுத்தாளர். பிறந்தது 1930. கட்டிடக்கலையும், ஓவியமும் படித்துவிட்டு செய்தி ஆசிரியராகவும், கேலிச்சித்திரக்காரராகவும் பணியாற்றினார். ‘யானை ‘ என்ற பெயரில் வெளிவந்த இவரது சிறுகதைத் தொகுப்பை அதே பெயரிலேயே எழுத்தாளர் பூமணி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். வெளியீடு:புதுமைப்பித்தன் பதிப்பகம்.

***

தட்டச்சு – மைக்கேல்

***

Series Navigation

பூமணி

பூமணி