ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

அரவிந்தன் நீலகண்டன்


இப்பூமியில் காணப்படும் உயிரினங்களின் பன்மைச் செழிப்பு என்றென்றும் மானுட மனங்களில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘புல்லாகிப் பூடாய், புழுவாய் மரமாகி பல்விருகமாகி பறவையாய் பாம்பாகி ‘ மனிதராயும் ஆகி நிற்கும் இவ்வுயிரினப்பன்மையின் செழிப்பினை சிறிதே சிந்தித்துணரும் எவருக்கும் இந்த பன்மைச்செழிப்பு எவ்விதம் ஏற்பட்டதென வியப்பு மேலோங்கும்.

இதனைக் குறித்து பல ஊகங்கள் மிகத்தொன்மையான காலத்திலேயே முன்வைக்கப்பட்டுள்ளன. கருதுகோள்கள் எனும் அளவிலேயும் கூட இவற்றில் தெரியும் மானுட எண்ணங்கள் எழ முடிந்த வீச்சு அபரிமிதமானதாகும். இன்றைக்கு எண்ணிப்பார்த்தாலும் இந்த எண்ணங்களின் உயர்வும் அந்த உயர்வை அடைவதற்கான மன தைரியமும் அபாரமானவை என்பது புரியும். பாரதிய, கிரேக்க சிந்தனைகள் உயிரினங்களின் தோற்றத்தில் பரிணாம வளர்ச்சியை குறித்து பேசலாயின. சாங்கியம் மற்றும் வேதாந்த சிந்தனைகள் பரிணாம அறிவியலாளர்களுக்கு இன்றைக்கும் தத்துவபடுகையை அளிப்பதாக விளங்குகின்றன.

ஆனால் அறிவியல் முறையினூடே உயிரினங்களின் பரிணாமம் என்பது குறித்த சிந்தனை பிரெஞ்சு விலங்கியலாளரான ஜீன் பாப்டைஸ்ட் லெமார்க்கிடமிருந்துதான் (1744-1829) தொடங்குகிறது.

ஏற்கனவே ஸ்வீட தேசத்தைச் சார்ந்த கரோலஸ் லின்னயஸ் (1707-1778) பெருமளவுக்கு உயிரினங்களை வகைப்படுத்தியிருந்தார். குடும்பங்களாக வகைப்படுத்தப்பட்ட விலங்கினக் கூட்டங்களில் ஓரளவுக்கு ஒரு பரிணாம செயல்பாடு விளங்குவது தெரியலாயிற்று என்ற போதிலும், அது குறித்த தெளிவான அறிவியல் பார்வையினை

உருவாக்கும் முயற்சியினை எவரும் மேற்கொள்ளவில்லை.தன் வாழ்வின் ஒருபகுதியை இராணுவ சேவையிலும், வங்கி எழுத்தராகவும் செலவிட்டிருந்த லெமார்க், தம் முயற்சியாலேயே மருத்துவத்திலும் தாவரவியலிலும் தொடங்கி உயிரியலைக் கற்றுத்தேர்ந்தார்.லமார்க் அக்காலகட்டத்தில் முக்கியமற்றதாக கருதப்பட்ட ‘முதுகெலும்பற்ற ‘ விலங்கினங்கள் குறித்த வகைப்படுத்தலில் தம் ஆராய்ச்சியினை ஆரம்பித்தார். அவர் தம் ஆய்வினை ஆரம்பித்த போது இந்த முதுகுவடமற்ற விலங்கினங்களுக்கு எவ்வித அறிவியல் பெயரும் இல்லை. இன்று நாம் அறியும் ‘இன்வெர்ட்டிபிரேட் ‘ (Invertbrate) எனும் பகுப்பை உருவாக்கியவர் லெமார்க்கே ஆவார். இது ஒருவிதத்தில் அவர் மீது சுமத்தப்பட்டதென்றுதான் கூறவேண்டும்.

ஏனெனில் அவர் முதலில் எழுதிய ‘பிரான்ஸ்சின் தாவரங்கள் ‘ (Flore Francaise,1778) எனும் நூலின் அடிப்படையில் அரச தாவரவியல் பூங்காவில் ஒரு ஊதியம் குறைந்த உதவியாளராகச் சேர்க்கப்பட்டிருந்தார். ஊழியர் குறைப்பு எனும் வாள் வேறு அவரது தலையின் மீது நித்திய கண்டமாக தொங்கிக் கொண்டிருந்தது. இந்நிலையில் 1793 இல் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து பிரான்சின் அரச தாவரவியல் பூங்கா தேசிய இயற்கை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு 12 அறிவியல் புலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றிற்கு 12 பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இத்தகைய சீரமைப்பு உக்தியை கூறியவர் லெமார்க்குதான். அவரும், அவருக்கு தொடர்பேயில்லாத ‘பூச்சிகள் மற்றும் புழுக்களை ‘க் குறித்த அறிவியல் அறிதலுக்கு பேராசிரியராக அமர்த்தப்பட்டார். என்றபோதிலும் அவற்றைப் ஆராய்ந்தறிவதில் அவர் தீவிர ஆர்வம் காட்டலானார். சிலந்தி வகைகள் மற்றும் புழுக்கள் ஆகியவற்றினை பூச்சிகளிலிருந்து பிரித்தறிந்த முதல் அறிவியலாளர் அவரே ஆவார்.

1809 இல் அவர் வெளியிட்ட ‘விலங்கியல் தத்துவம் ‘ (Philosophie Zoologique) எனும் நூலில் லெமார்க் தன் பரிணாமக் கோட்பாட்டினை விளக்கியிருந்தார். இக்கோட்பாட்டின் படி ஒரு உயிரினம் தன் வாழ்க்கையில் பயன்படுத்தும் உறுப்புகள் நன்றாக வளர்ச்சியடையும். அவ்வாறு பெறும் வளர்ச்சி அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும். அவ்விதமே எந்த உறுப்பு பயன்படுத்தப்படவில்லையோ அந்த உறுப்பு வளர்ச்சி குன்றும். அவ்விதம் வளர்ச்சி குன்றிய உறுப்பே அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும். இவ்வாறு சுற்றுச்சூழல் மாற்றங்கள் மரபுகளாக கடத்தப்படுவதன் விளைவாக பரிணாமம் உருவாகிறது. இப்பரிமாணமானது சின்னஞ்சிறு செல் அளவேயான விலங்குகள் தொடங்கி மனிதனில் முடியும் ஓர் பெரும் முன்னேற்றத் தொடராக விளங்குகிறது. இதுவே லெமார்க்கின் கோட்பாடாகும்.

தற்போது மிகவும் புகழ்பெற்றுவிட்ட லெமார்க்கின் உதாரணம் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து. ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தின் பரிணாமத்தை அவர் பின்வருமாறு விளக்குகிறார்:

“ஒரு குறிப்பிட்ட உணவருந்தும் முறை தனித்தன்மை கொண்ட அமைப்பையும் அளவையும் ஒட்டகச்சிவிங்கியில் உருவாக்கியுள்ளதை காண நமக்கு சுவாரசியமாக இருக்கும். பாலூட்டிகளிலேயே உயரமான இந்த விலங்கு ஆப்பிரிக்காவின் உட்பகுதிகளில் மண் வளமில்லாத இடங்களில் வாழ்கிறது. இதன் விளைவாக அதற்கு மரங்களின் மிக உயரங்களில் கிடைக்கும் பசும் இலைகளை உண்ணவேண்டிய நிலை. எனவே எப்போதும் அது தன் கழுத்தினை நிமிர்த்தி எவ்வித்தான் உண்ண வேண்டும். இந்த இடைவிடாத முயற்சியின் விளைவாக ஒட்டகச்சிவிங்கிகளில் அவற்றின் முன்னங்கால்கள் பின்னங்கால்களை விட உயரமாகிவிட்டன என்பதுடன் ஒரு ஒட்டகச்சிவிங்கி எவ்வவே வேண்டிய தேவையில்லாத அளவிற்கு, அதன் கழுத்து ஏறத்தாழ ஆறு மீட்டர்கள் உயரத்திற்கு நீண்டுவிட்டது.“

லெமார்க்கின் உழைப்பு அபரிமிதமானது. அவர் தன் ஆராய்ச்சியின் விளைவாக திரட்டிய விலங்கியல் தகவல்கள் ஏராளமானவை. ‘முதுகெலும்பற்ற விலங்குகளின் இயற்கை வரலாறு ‘ எனும் தலைப்பில் அவர் ஏழுபாகங்களாக தன் ஆராய்ச்சியினை 1815 முதல் 1822 வரையிலாக வெளியிட்டார். ஆயினும் தன் பரிணாமவாதத்தினை அவரால் தெளிவான ஆதாரங்களுடன் விளக்க இயலவில்லை. குறிப்பாக உயிரினங்கள் கால ஓட்டத்தில் பரிணாம மாறுதல்கள் அடைகின்றன என்பதற்கான தெளிவான அறிவியல் ஆதாரங்களை லெமார்க்கால் முன்வைக்க இயலவில்லை.

தொல்லுயிர் எச்சங்களிலிருந்து அவை எவ்வாறு இருந்திருக்கக்கூடும் என அவற்றின் தோற்றங்களை அமைக்கும் அறிவியலாளரான லிபோல்ட் குவியர் பரிணாம வாதத்தை கடுமையாக எதிர்த்தவர். குவியர் உயிரினங்களை அவற்றின் உடலமைப்பின் அடிப்படையில் நான்காக பிரித்திருந்தார். விலங்குடல்களின் உள்-அமைப்புகளை

நன்றாக ஆராய்ந்து அவர் மூன்று கருதுகோள்களை முன்வைத்தார். அவையாவன:

1. ஒவ்வொரு உறுப்பும் தன் செயல்படுவிதத்தால் மற்றனைத்து உறுப்புகளுடனும் தொடர்புடையது. 2. ஒரு இயற்கைச்சூழலின் அடிப்படையில் ஒரு விலங்கின் உள்-அமைப்பு நிர்ணயிக்கப்படுகிறதே ஒழிய ஒரு வாழ்க்கையின் இயல்பினால் அல்ல. 3. உறுப்புகள் வடிவமைப்புத்தன்மை கொண்டவை. ஏனெனில் மேற்கூறிய சிறப்புடைய உறுப்புகள் மீண்டும் மாற்றங்கள் செய்யப்படத் தேவையில்லை.

இவற்றுள் மூன்றாவது கருதுகோள் லெமார்க்கின் நிலைக்கு நேர் எதிரானது. லெமார்க் தற்காலத்திய விலங்குகளில் ஒரு பகுதியினை மட்டுமே அறிந்திருந்தார். குவியரோ பழங்கால விலங்குகளின் உடலமைப்பு மற்றும் தற்காலத்திய விலங்குகளின் உடல் உள்ளமைப்பின் ஒப்பீடு ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர். எனவே அவர் லெமார்க்கின் பரிணாமக் கோட்பாட்டினை மிகத் திறமையுடன் வாதிட்டு லெமார்க்கின் மாணவர்களின் முன்னிலையிலேயே தவிடுபொடியாக்கினார்.

அறிவியலின் வரலாற்றில் ஒரு விசித்திர புள்ளி இது. ஒரு அறிவியல் உண்மை என பின்னாளில் நிரூபிக்கப்படும் கோட்பாடான ‘உயிரினங்கள் நிலவியல் கால ஓட்டத்தில் மாற்றங்களடையும் ‘ எனும் லெமார்க்கின் நிலைபாடு, பின்னாளில் அறிவியலுக்கு கடும் எதிரியான படைப்புவாத அடிப்படைவாதிகளால் ஏற்கப்பட்ட கோட்பாடான ‘படைக்கப்பட்ட காலம் முதல் விலங்கினங்கள் மாறவே இல்லை ‘ எனும் நிலைப்பாட்டின் முன் தோல்வி கண்டது. லெமார்க் மிகவும் மனமுடைந்த சூழலில் 1829 இல் காலமானார்.

லெமார்க்கின் துரதிர்ஷ்டம் அவரது மரணத்தின் பின்னரும் அவரைத் தொடர்ந்தது. பரிணாம அறிவியலின் முன்னோடி என்பதைக் காட்டிலும் அவரது பெயர், அவர் முன்வைத்த பிழையான ஒரு பரிணாம இயக்க கருதுகோளுடன் இணைக்கப்பட்டே அறியப்படுகிறது. ஒரு தனி உயிரின் வாழ்வில் ஏற்படும் சூழலியல் தாக்கங்கள் அதன் மரபுகளுக்கு கடத்தப்படும் என்பதே லெமார்க்கியம். இதன்படி இந்தியப் பெண்களுக்கு தலைமுறைகளாக காது குத்தப்படுவதால், பிறக்கும் இந்தியப் பெண்குழந்தைகள் காதில் துளைகளுடன் பிறக்க வேண்டும். அவ்வாறில்லை என்பது தெளிவு. எனவே இது பரிணாமத்தின் செயலியக்கமாக இருக்கமுடியாது. அப்படியென்றால் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து ? துரதிர்ஷ்டவசமாக லெமார்க்கின் இந்த புகழ்பெற்ற எடுத்துக்காட்டே தவறானதுதான். கட்டையான மிருகமாக இருந்த ஒன்று எவ்வித்தான் மேல்கிளைகளை தொடவேண்டும் என்பது இல்லை. ஆப்பிரிக்க காட்டாடுகள் மரங்களின்மேலேறி இலைகளை உண்பது கூட உண்டு. மேலும் அண்மை ஆய்வுகள் டார்வினிய பரிணாம இயக்கமுறைகளில் ஒன்றான பாலினத்தேர்வே (Sexual selection) ஒட்டகச்சிவிங்கிகளின் நீள கழுத்தின் காரணம் என தெரிவிக்கின்றன.ஆனால் மார்க்சியம் போன்ற சில இனமேன்மைவாத அரசியல் சித்தாந்தங்களில் இத்தகைய எண்ணவோட்டம் இருந்ததால், மரபணுவியலுக்கு எதிராக மார்க்சிய அடிப்படைவாத ஸ்டாலின் அரசு, லைசன்கோவின் தலைமையில் நடத்திய போலி அறிவியல் கூத்தடிப்பு பட்டறைகள் நியோ-லெமார்க்கியம் என அறியப்பட்டன.

ஆனால் பின்னாளில் ‘உயிரினங்கள் நிலவியல் கால ஓட்டத்தில் மாற்றங்களடையும் ‘ என ஐயந்திரிபற நிரூபித்த அறிவியலாளர் தன் சிந்தனையின் முன்னோடியாக போற்றியவர்களுள் லெமார்க் முக்கியமானவர். அந்த அறிவியலாளர் – சார்லஸ் டார்வின்.

தெரிந்து கொள்வோம்-1

பூச்சிகளும் சிலந்திகளும் உயிரியல் ரீதியாக ஒரே வகுப்பினைச் சார்ந்தவை அல்ல. அவை இரண்டுமே ஒட்டுக்கால்கள் உடையவை என்ற போதிலும், பூச்சிகள் மூன்று ஜோடிகளாக ஆறு கால்களை உடையவை. எனவே அவை ‘Hexapoda ‘ (Hexa – ஆறு) என அழைக்கப்படுகின்றன. ஒரு சுவாரசியமான மட்டையடி விதி என்னவென்றால், முதுகுவடமில்லாத எந்த பறக்கும் உயிரினமும் பூச்சியாகத்தான் இருக்கும் ஆனால் எல்லா பூச்சிகளும் பறக்கும் உயிரினமாக இருக்க வேண்டியதில்லை. புகழ் பெற்ற உயிரியலாளரான ஹால்டேன் ஒருமுறை வேடிக்கையாக, ‘கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட உயிரினங்கள் என்றால் அவை பூச்சிகள்தான். ‘ என்று குறிப்பிட்டாராம். ஏனெனில் இப்புவிகோளத்தின் உயிர்மண்டல வரலாற்றில் பரிணாம ரீதியில் மிகவும் வெற்றிகரமான உயிரினங்களாக பூச்சிகளைத்தான் கூறவேண்டும். ஒரு மில்லியனுக்கும் அதிகமான பூச்சி இனங்கள் புவியில் இருப்பதாகக் கணிக்கப்படுகிறது.

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்