மார்வின் ஹாரிஸ்
(Our Kind என்ற மானுடவியல் பாடப்புத்தகத்திலிருந்து)
ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன், ஒவ்வொரு உயிரியல் அறிவியலறிஞரும், மானுடவியல் அறிஞரும் நமது மனித இனத்தின் உள்ளே இருக்கும் உப இனங்கள் ஒவ்வொன்றுக்கும் தொழில்திறம் மிகுந்த நாடு ஒன்றைக் கட்டக்கூடிய திறமைகள் வெவ்வேறானவை என்று நம்பினார்கள். அன்றைக்காலத்தின் மிகப்படித்த அறிஞரான தாமஸ் ஹக்ஸ்லி உறுதியாகக்கூறியது என்னவென்றால்..
‘சில நீக்ரோக்கள் சில வெள்ளைக்காரர்களைவிட சிறந்தவர்களாக இருக்கலாம். ஆனால் நன்றாக உண்மைகள் அறிந்த எந்த ஒரு சிந்திக்கும் மனிதனும் ஒரு சராசரி நீக்ரோ ஒரு சராசரி வெள்ளைக்காரனுக்கு சமம் என்றோ அல்லது வெள்ளைக்காரனைவிட சிறந்தவன் என்றோ நம்பமாட்டான். நமக்கு பரிணாமத்தில் பின்னால் இருக்கும் இந்த இனம், அவனது சமூகக்குறைபாடுகளை எல்லாம் எடுத்துவிட்டால், அவனை எந்த ஒரு இனமும் நசுக்காமல், அவனுக்கு சமமான இடத்தில் சமமான போட்டியிடும் இடம் கொடுத்தால், சிறிய தாடையும் பெரிய மூளையும் உடைய நம்முடன் உடல் வலிமையோடு மோதாமல் வெறும் சிந்தனை மட்டும் கொண்டு போட்டியிட்டு வெற்றிபெறுவான் என்பது சுத்தமாக நம்ப முடியாதது. ‘
பின்னால் வந்த எல்லா ஆராய்ச்சிகளும், ஹக்ஸ்லி சொல்கிற ‘உண்மைகள் ‘ உண்மைகளே அல்ல என்று நன்றாக நிரூபித்துவிட்டன. தவறான அளவுகோல்கள், குறைபாடு உடைய மாதிரிகள், வெறும் ஸ்டாரியோடைப் என்று நன்றாகவே நிரூபித்துவிட்டுப் போய்விட்டார்கள். ஆனால், இன்னும் கருப்பர்கள் வெள்ளைக்காரர்களுக்கு எதிராக தொழில்துறையிலோ, வியாபாரத்திலோ அல்லது போரிலோ வெற்றிகரமாக போட்டியிட முடியவில்லை என்னும் உண்மை, ஹக்ஸிலி காலத்தில் வாழ்ந்தவர்களுக்கும், இன்று வாழும் பல மனிதர்களுக்கும், வெள்ளைக்காரர்கள் கருப்பர்களைவிட உயர்ந்தவர்கள் என்பதற்கு மறுக்கமுடியாத சாட்சியாக இருக்கிறது.
ஐரோப்பாவிலிருந்தும் அவர்களது இனமான அமெரிக்காவில் வாழும் வெள்ளைக்காரர்களும் உலகத்தின் எல்லா மக்களின் மீதான அரசியல் பொருளாதார கட்டுப்பாட்டை வெற்றிகரமாக கைக்கொண்டிருக்கிறார்கள். ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள் நாடுகளில் இருக்கும் பின் தங்கிய தொழில்நுட்பத்திறமும், பழங்காலத்திய தொழிற்சாலைகளும் வெள்ளைக்காரர்கள் மற்ற இனங்களைவிட முன்னேறிய இனம், சிறந்த இனம் என்பதை காண்பிக்கவில்லையா ? இந்த சுயதம்பட்டத்தில் இருந்த ஆர்வமும் தங்களது காலனியாதிக்கத்தை உறுதிப்படுத்தவும் அவர்கள் இருந்ததால் இந்தப் பேச்சின் ஓட்டையை அவர்கள் கவனிக்கவில்லை. பின் தங்கிய ஜெர்மானிய குடியானவர்கள் ரோம் பேரரசை அழித்ததையும், இரண்டாயிரம் வருட சீன ராஜாங்கம், முடி நிரம்பிய, சிவப்பு முகம் கொண்ட, நீண்டமூக்குடைய, பின் தங்கிய ராஜ்யங்களைச் சேர்ந்த மாலுமிகளால் அழிக்கப்பட்டதையும் அவர்கள் சுலபமாக மறந்துவிட்டார்கள்.
ஆல்ஃபிரட் க்ரோபர் என்ற சிறந்த மானுடவியலாளர் (பெர்க்லி நகரத்தில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறை நிறுவனர் இவர்), ஜெர்மானிய காட்டுமிராண்டிகளின் கையால் ரோம பேரரசின் அழிவு நடந்ததை சுவையாகச் சொல்கிறார்.
‘ஜுலியஸ் சீசரிடம் (அல்லது அவரது காலத்திய மற்றவர்களிடம்) பிரித்தானியர்களும் ஜெர்மானியர்களும் எந்த விதத்திலாவது ரோமானியர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் சமமானவர்களாக இருக்க வாய்ப்புண்டா என்று கேட்டிருந்தால், ‘இந்த வடக்கத்தியர்களுக்கு மத்திய தரைக்கடலில் வாழும் எங்களைப்போல திறமையோ அறிவோ இருந்திருந்தால் அந்த திறமைக்கு வடிகால் அமைத்து சிறப்பான சமுதாயத்தை அமைத்திருப்பார்கள். அப்படியில்லாமல் இதுபோன்ற வறுமையிலும், அறிவின்மையிலும், ஒழுங்கின்மையிலும், அடாவடித்தனத்திலும் காலத்தை வீண் செய்து கொண்டிருக்க மாட்டார்கள் ‘ என்று சீசர் (அல்லது அவரது காலத்திய வேறொருவர்) சொல்லியிருப்பார் ‘
சீனாவின் இனவாதத்தின் அழிவுக்கு, ‘சிவப்பு முகம் கொண்ட காட்டுமிராண்டிகள் ‘ கேட்டுக்கொண்ட வியாபார ஒப்பந்தத்தை 1871இல் சீனப்பேரரசர் சீயென் லிங் மறுத்ததைவிட நல்ல உதாரணம் காட்ட முடியாது. சீனப்பேரரசர் சீனாவுக்கு வேண்டியது ஒன்றும் இங்கிலாந்திடம் இல்லை என்று சொன்னார். ‘உங்கள் தூதரை சீனாவை நன்றாகப் பார்க்கச் சொல்லுங்கள். எங்களிடம் எல்லா விஷயங்களும் இருக்கின்றன ‘ என்றார். சீயென் லிங் சொன்னது உண்மைதான். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் சீனாவின் தொழில்திறம் இங்கிலாந்தைவிட முன்னேறியது. சீனா அழகான் போர்ஸீலீன் (சீன களிமண் பாத்திரங்கள்), அழகான பட்டு, பித்தளை பாத்திரங்கள் எல்லாவற்றையும் செய்தார்கள். அவர்கள் வெடிகுண்டு மருந்தும் கண்டுபிடித்து வைத்திருந்தார்கள். முதல் கம்ப்யூட்டர் (அபாகஸ்), வாய்க்கால் மூடும் கதவு, இரும்பு சங்கிலி தொங்கு பாலம், இயந்திர கிராங், கப்பல் கட்டும் திறம்,மனிதனை காற்றில் ஏற்றும் பட்டம், ஐரோப்பிய கடிகாரங்களுக்கு முன்னோடியான எஸ்கேப்மெண்ட் என்ற கண்டுபிடிப்பு எல்லாம் அவர்கள் கண்டுபிடித்ததே. போக்குவரத்து, விவசாய உற்பத்தி, மக்கள்தொகை, எல்லாவற்றிலும் சிறிய ஐரோப்பிய தேசங்களை ஒப்பிடவே முடியாது. சீயென் லிங் அவர்களின் பேரரசு வடக்கே ஆர்க்டிக் வட்டத்திலிருந்து இந்தியப் பெருங்கடல் வரை நீண்டிருந்தது. 3000 மைல் நீளமும் அகலமும் கொண்ட தரையை ஆண்டார். மக்கள் தொகை 30 கோடி. அனைத்தும் ஒரே மத்திய அதிகார வர்க்கத்தின் கீழ். இதுவே அன்றுவரை உலகம் பார்த்தவகைகளிலேயே பெரிய பேரரசு. ஆனாலும் சீயென் லிங் மிதப்புடன் சொல்லி 50 வருடத்துக்குள், சீயென் லிங் பேரரசின் வலிமை அழிக்கப்பட்டது. அவரது படைகள் கையளவே இருந்த ஐரோப்பிய படைகளால் அவமானப்படுத்தப்பட்டன. சீனப்பேரரசின் துறைமுகங்கள் ஆங்கிலேயர்களாலும் பிரெஞ்சுக்காரர்களாலும் ஜெர்மானியர்களாலும் அமெரிக்கர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டன. சீனப்பேரரசின் குடியானவ மக்கள் வறுமையிலும் நோயிலும் அழிந்தார்கள்.
பேரினவாதத்தின் மிகப்பெரிய சுமை, எதிர்காலத்தில் பேரினவாதம் பேசப்போகும் மக்களை இன்று அவமதிப்பவர்களுக்கே வருகிறது. அவமதிக்கப்பட்டவர்களுக்கும் அவமதிப்பவர்களுக்கும் விலைகள் இருக்கின்றன. மக்கள் தங்களது தோல் நிறமும் தங்கள் மூக்கின் அமைப்பும் அவர்களது நல்ல எதிர்காலத்துக்கு உறுதி தருகின்றன என்று தனக்குத்தானே நம்புபவர்கள் தங்களுக்குத் தானே கல்லறைகளை தோண்டிக்கொள்கிறார்கள். நான் சில நேரம் அமெரிக்க தொழிற் நிறுவனங்கள் ஜப்பானிய தொழில் நிறுவனங்களிடம் படும் அவமானம் எவ்வளவு தூரம் அமெரிக்கர்களின் பேரினவாதத்தால் வந்தது என்று யோசிப்பதுண்டு. 1930இல், அமெரிக்கர்கள், விலை மலிவான பொம்மைகளையும், பட்டங்களையும், காகித விசிறிகளையும் பண்ணுபவர்களாகவே ஜப்பானியர்களை அறிந்திருந்தார்கள். ஜப்பானிய கடிகாரங்கள் ஒரு சுற்று இறுக்கிச் சுற்றினால் பிய்ந்து தொங்கின. அமெரிக்க பொறியியலாளர்கள், எவ்வளவுதான் ஜப்பானியர்கள் முயன்றாலும் தொழில் நாடுகளான ஐரோப்பிய நாடுகளையும் முக்கியமாக அமெரிக்காவையும் தொடவே முடியாது என்று தெளிவாகத் தெரிவித்தார்கள்.
அமெரிக்கர்களின் கூடப்பிறந்த ‘யாங்கீ மூளை ‘ (yankee ingenuity) ஜப்பானியர்களுக்குக் கிடையாது என்று திட்டவட்டமாகப் பேசினார்கள். அமெரிக்காவின் ஜுலியஸ் சீசர்கள் ஜப்பானுக்குக் காப்பி மட்டுமே அடிக்க இயலும் என்று பேசினார்கள். ம்.. 50 வருடங்களில் அமெரிக்காவின் டெட்ராய்ட் தொழில் நகரம் ஜப்பானிய கார்களின் முன் முழங்கால் மண்டியிட்டது. ஜப்பானின் மைக்ரோஸ்கோப்புகள், காமெராக்கள், கால்குலேட்டர்கள், டெலிவிஷன்கள், வீடியோ ரெக்கார்டர்கள், இன்னும் எத்தனை எத்தனையோ ஜப்பானியப் பொருட்கள் அமெரிக்காவின் சந்தையை ஆக்கிரமித்து அமெரிக்க தொழில்நிறுவனங்களை போண்டியாக்கின.
இவ்வளவு உதாரணங்கள் இருந்தும் ஏராளமான மக்கள் கருப்பு ஆப்பிரிக்கா ஒரு விதிவிலக்கு என்று நம்புகிறார்கள். ஆப்பிரிக்காவின் ஜெனடிக் பாரம்பரியம் அதை நிரந்தரமாகப் பின் தங்கி இருக்க வைத்திருக்கும் என்று நம்புகிறார்கள். அமெரிக்காவில் நிறைய கருப்பர்கள் இருப்பதால் அமெரிக்கா நன்றாக வளர முடியவில்லை என்று சமீபத்தில் பேசிய ஜப்பானிய பிரதமர் (ம்ம்..ஐரனி) இதே கருத்தைத் தான் பேசுகிறார். சகாராவுக்கு தெற்கே இருக்கும் இடங்களில் ஒரு அமெரிக்காவையோ ஒரு ஜப்பானையோ கட்டுவதற்கு ஜெனடிக் பாரம்பரியம் தடையாக இருக்கிறதா என்ன ? ஒரு காலத்தில் மிகவும் பின் தங்கி இருக்கும் மக்கள் அடுத்த தலைமுறையில் எல்லோருக்கும் முன்னால் வருவதை அடிக்கடி பார்த்து வரும் வரலாறு பேரினவாதம் ஒரு காரணம் இருக்க முடியாது என்றே கூறுகிறது. வரலாற்று காரணங்களை ஆராயாமல் ஆப்பிரிக்கா பின் தங்கி இருக்கும் காரணத்தை அறிய முடியாது.
கி மு 500இல், மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்த கானா, மாலி, ஸாங்கே போன்ற நிலவுடமை அரசுகள், அன்றைய ஐரோப்பிய அரசுகள் போலவே இருந்தன. ஆனால் சகாரா நடுவில் இருந்தமையால், ரோம பேரரசு ஐரோப்பிய நாடுகளுக்கு அளித்த தொழில் நுட்ப அறிவு இவைகளுக்கு கிடைக்காமல் போய்விட்டது. நடுவில் இருந்த பெரும் பாலைவனம் அரேபியர்களால் தாண்டமுடியாமல் போய் அரேபியர்கள் ஐரோப்பாவுக்கு அளித்த அறிவியலும் வியாபாரத்திறமும் இவைகளுக்கு கிடைக்காமல் போய்விட்டது. மத்திய தரைக்கடல் நாடுகளில் இருந்தவர்கள் வியாபாரமும் கப்பல் மூலம் போரிடுவதும் செய்து கொண்டிருந்த காலத்தில், கருப்பு நிற மக்கள் பாலைவனத்தை கடப்பதே பெரிய விஷயமாக கொண்டு, கப்பல் மூலம் செல்கின்ற விஷயங்களில் நாட்டமில்லாமல் இருந்தார்கள். கினியா கடற்கரைக்கு வந்த போர்ச்சுகீஸ் கப்பல்கள் துறைமுகங்களை கைப்பற்றி அடுத்த 500 வருடங்களுக்கு ஆப்பிரிக்காவின் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்களாக ஆனார்கள். தங்க சுரங்கங்களை தோண்டி அதை தீர்த்துவிட்டு, ஆப்பிரக்கர்கள் அடிமைகளை வேட்டையாடி அவர்களை ஐரோப்பியர்களின் உடைகளுக்கும் அவர்களது துப்பாக்கிகளுக்கும் பதிலாக விற்றார்கள். இது இன்னும் அதிகமான போர்களுக்கும், கலவரங்களுக்கும், நிலவுடமை அரசுகளின் அழிவுக்கும் காரணமாகி, ஆப்பிரிக்காவின் அரசியல் வளர்ச்சிக்கு தடை போட்டு, பெரும் நிலப்பரப்புகள் காலி இடங்களாகி, ஆப்பிரிக்காவின் முக்கியமாக வியாபாரப்பொருள் மனிதர்கள் விளைச்சல்தான் என்று ஆகி அவர்களை அட்லாண்டிக்கின் மறுபுறம் சர்க்கரை, பருத்தி, புகையிலை தோட்டங்களில் வேலை செய்ய அனுப்பும் அடிமை வியாபாரமே முக்கிய தொழிலாக ஆனது.
அடிமை வியாபாரம் ஒரு முடிவுக்கு வந்ததும், ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்கர்களை தோட்டங்களிலும், வயல்களிலும், சுரங்களிலும் கட்டாயப்படுத்தி வேலை வாங்கினார்கள். அதே நேரம் ஐரோப்பிய காலனியாதிக்கத் தலைவர்கள் ஆப்பிரிக்காவை எப்போதும் கீழ் நிலையிலேயே வைத்திருக்க அங்கிருக்கும் குடிகளுக்கு மத்தியில் பழங்குடி போர்களை உண்டுபண்ணினார்கள். ஆப்பிர்க்காவின் கல்வியை கொலை செய்து அடிப்படைக்கல்வியே அதிகமான கல்வி என்ற நிலைக்குக் கொண்டுவந்தார்கள். ஆனால் ஆப்பிரிக்காவில் எந்தகாலத்திலும் தொழிற்சாலைகள் கட்டவே கூடாது என்ற சட்டத்தைக் கொண்டுவந்து ( ஐரோப்பா ஆப்பிரிக்காவை ஆளாத) எதிர்காலத்தில் கூட, ஆப்பிரிக்கா தொழில்திறம் கற்றுக்கொள்ளக்கூடாது என்று உறுதியாக இருந்தார்கள். இந்த சூழ்நிலையில் ஆப்பிரிக்கர்கள் அடுத்த நூற்றாண்டின் இறுதிக்குள் ஒரு தொழில்நுட்பம் சார்ந்த சமுதாயத்தை எந்த நாட்டிலாவது கட்டினார்கள் என்றால் அவர்களை மனிதர்கள் என்று சொல்ல முடியாது; அவர்களை மாமனிதர்கள் என்றே சொல்லவேண்டும்.
காலனியாதிக்கம் இந்த அளவுக்கு நீண்ட விளைவுகளை ஏற்படுத்துமா என்று நீங்கள் சந்தேகப்பட்டார்கள் என்றால், இந்தோனேஷியாவையும் ஜப்பானையும் எடுத்துப்பாருங்கள். இரண்டுமே தீவுகள். இரண்டுமே விவசாய நிலவுடமை அரசுகளாக இருந்தவை. இரண்டுக்குமே ஒரே ஜெனடிக் பாரம்பரியம் என்றும் கூறலாம். இந்தோனேசியா டச்சு காலனியாதிக்கத்தின் கீழ் வந்தது. ஜப்பான் ஐரோப்பிய வியாபாரிகளுக்கும் கிரிஸ்தவ மிஷனரிகளுக்கும் கதவுகளை இறுக்கமாக மூடியது. மேற்கிலிருந்து இறக்குமதியாக தொழில் புத்தகங்களை மட்டுமே இறக்குமதி செய்தது ஜப்பான். எப்படி வெடிமருந்துகளைச் செய்வது, எப்படி பாலம் கட்டுவது, எப்படி வேதிப்பொருள்களை செய்வது, எப்படி ரயில் கட்டுவது போன்ற புத்தகங்கள். 300 வருடம் ஐரோப்பிய மேலாதிக்கக்காரர்களின் பாதிப்பில் இருந்து வெளிவந்த இந்தோனேஷியா பின் தங்கிய நாடாக, தொழில்வளம் அற்ற நாடாக, மக்கள் தொகை அதிகம் நிரம்பிய நாடாக, வறுமையான நாடாக, சுதந்திரமடைந்தது. ஜப்பான் மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக எல்லாவிதத்திலும் எல்லா அளவு கோல்களிலும் அட்டகாசமான நாடாக, கீழை நாடுகளிலேயே மிகவும் தொழில்திறம் மிகுந்த நாடாக வெளிவந்தது. இவ்வாறு நடந்ததற்கு இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன, ஆனால் அதில் இனம் ஒரு காரணமல்ல.
***
- என்னைப் போல…
- தினகப்ஸா – 18 பெப்ரவரி 2001
- கியூப சமூகமும் கலைஞனின் சுதந்திரமும் :
- கிரிஷ் கர்னாட் – இந்திய நாடகங்களின் பரிமாணங்களை விரிவு படுத்தியவர் – நண்பர் குர்த்கோடி அவர்களுடன் பேட்டி
- புளி அவல்
- காரட்–தேங்காய் மிக்ஸட் பர்பி
- இயற்கை மொழி கணிணியியல் (Natural Language Processing)
- 2 கவிதைகள்
- ஒரு கடற்கரையின் இரவு…
- சூரியனைத் தேடும் இலைகள்
- சினிமா போஸ்டர் வடிவில் ஒரு கவிதை
- ஜெயமோகனின் கடிதம்
- இந்த வாரம் இப்படி – பெப்ரவரி 18 -2001
- ஏன் ஆப்பிரிக்கா பின் தங்கி இருக்கிறது ? (அல்லது ஏன் இந்தியா பின் தங்கி இருக்கிறது ?)
- ஆண்மையின் புதிய அளவு கோல்கள் :ராஜ்குமார் கன்னட வெகுஜன தளத்தில் – இறுதிப்பகுதி
- கியூப சமூகமும் கலைஞனின் சுதந்திரமும் :
- கல்கி