எஸ்ஸார்ஸி – அக்கிரஹாரத்தில் இன்னொரு அதிசயப் பிறவி

This entry is part [part not set] of 31 in the series 20100312_Issue

வே.சபாநாயகம்


மகாகவி பாரதியின் வரலாற்றை முதன்முதலில் எழுதிய பாரதியின் அணுக்க சீடரான வ.ரா என்கிற
வ.ராமசாமி ஒரு விசித்திர மனிதர். அவர் பிறப்பில் பிராமணராக இருந்தும் பிராமணர்க்கான ஆசார அனுஷ்டானங்களைக் கடைப் பிடிக்காதவர். பூணூலைக் கழற்றி எறிந்தவர். பிராமணர்களின் – பால்ய விவாகம், விதவைக்
கொடுமை, பெண்ணடிமைத்தனம் போன்றவற்றைக் கடுமையாய்ச் சாடி, கட்டுரைகளும் நாவல்களும் எழுதியவர்.
அதோடு சமூகத்தின் கண்மூடித்தனமான மூட நம்பிக்கைகள், அறியாமை ஆகியவற்றையும் சாடிய பகுத்தறிவாளர்.
திராவிடக் கழகத்தார் மட்டுமே பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பி வந்த அன்றைய நிலையில் சனாதனக் கும்பலி லிருந்து எழுந்த இந்த பகுத்தறிவாளரை வியந்து ‘அக்கிரஹாரத்தில் ஒரு அதிசயப் பிறவி’ என்று பாராட்டினார் அறிஞர் அண்ணாத்துரை. வ.ராவின் குருவான பாரதியும், தான் பிறந்த சமூகத்தின் பிற்போக்குத்தனங்களைத் தனது கவிதைகளில் சாடியவர்தான். அதே போல புதுமைப்பித்தனும், தான் பிறந்த சைவவேளாளர் இனத்தவரைத் தன் கதைகளில் மிகவும் கடுமையாய்க் கேலியும் கண்டனமும் செய்தவர். ஆனால் அவரைப் பாராட்ட, அண்ணாத் துரையின் பெருந்தன்மை பெற்றிராத இன்றைய நவீன(!)ச் சிந்தனையாளர் சிலருக்கு மனமில்லை. சாதிக் கண்ணோட்டத்துடனேயே எதையும் பார்க்கிற ஆன்மரோகிகளான அவர்கள் அவரை சைவவேளாளச் சார்பினர் என்று, சாதிச் சிமிழுக்குள் அடைக்கிற வக்கிர புத்தியைப் பார்க்கிறோம். ஆனால் உண்மையான இலக்கிய
ரசிகர்கள் அவர்களது பிதற்றலைப் புறக்கணித்து வ.ராவைப் போல அவரும் ஒரு புரட்சிவாதி என்றே
போற்றுகின்றனர்.

இன்றைய இளம் படைப்பாளிகளிடையேயும் வ.ரா போன்ற அதிசயப்பிறவிகளைப் பார்க்க முடிகிறது.
இந்த ஆண்டின் ‘தமிழ் வளர்ச்சிக் கழக’ப் பரிசினைப் பெற்றுள்ள ‘நெருப்புக்கு ஏது உறக்கம்’ என்கிற நாவலை எழுதியுள்ள ‘எஸ்ஸார்ஸி’ என்கிற திரு.எஸ்.ராமச்சந்திரன் அவர்களை அக்கிரஹாரத்தின் இன்னொரு அதிசயப்
பிறவி என்று சொன்னால் அது மிகையாகிவிடாது. அவரது இந்த நாவல் அந்த அபிப்பிராயத்தை எனக்கு ஏற்படுத்துகிறது.

திரு.எஸ்ஸார்ஸி அடிப்படையில் ஒரு தொழிற்சங்கவாதி. இவரது முதலிரண்டு நாவல்களான – ‘மண்ணுக்குள் உயிர்ப்பு’, ‘கனவு மெய்ப்படும்’, என்பவை முறையே – வடலூர் பீங்கான் தொழிற்சாலைத்
தொழிலாளர் பிரச்சினையைப் பேசுவதாகவும், அவரது சொந்த ஊரான தருமநல்லூரின் சில பிற்போக்குத் தனங்களைச் சாடுவதாகவும் அமைந்தவை. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய’ வள்ளலாரைப்போல, இவரும் தன் ஊரிலும், தன் பணி இடங்களிலும் ஒடுக்கப்பட்ட ஆதரவற்றோரின் துயர் கண்டு மனம் வாடி அவற்றைத் தன் படைப்புகளில் பதிவு செய்பவர். இவரும் வ.ரா போலவே சனாதனக் கருத்துடைய அக்கிரஹாரத்தில் பிறந்தவர் தான். அவரது குடும்பத்தார் இன்னமும் ஆசார அனுஷ்டானங்களை விடாது பின்பற்றுகிறவர் கள்தான். அந்தப் பின்னணியில் வளர்க்கப்பட்டவர்தான். ஆனால் கல்லூரிப் படிப்பினாலும், பணியிட அனுபவங்
களாலும் மார்க்சீயத்தில் ஈடுபாடு கொண்டதால் சமூக நீதிக்காகப் போராடும் மனஉரம் பெற்றவர். சாதி மத சழக்குகளை முற்றாக வெறுப்பவர். அதனால், இவர் தன் ஊராரும், தன் இனத்தாரும் முகம் சுளிக்கிற கற்பனையை இந்நாவலில் துணிந்து பதிவு செய்துள்ளார்.

ஆர்.கே.நாராயணினின் ‘மால்குடி’போல, இவர் தனது ஊரான தருமநல்லூரை – ‘தருமங்குடி’ என்ற
பெயரில் தனது கதைகளிலும், நாவல்களிலும் களமாகக் கொண்டு எழுதுகிறார். அந்த தருமங்குடியில் பிறந்த அக்கிரஹாரத்து தருமு என்கிற பெண்ணும், ஊர்ச் சேரியைச் சேர்ந்த பழமலய் என்கிற பையனும் அண்ணாமலைப் பல்கலையில் படித்து, அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்குச் சென்று, அங்கே காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டு அமெரிக்காவிலேயே தங்கி விடுகிறார்கள். ஊர்ப்பக்கம் திரும்பவே இல்லை. தருமுவின் பெற்றோர் – உள்ளூர் கோவில் அர்ச்சகரும், அவரது மனைவியும் – மகளைத் தலைமுழுகி விடுகிறார்கள். பழமலையின் தகப்பனார் – கோபால் என்கிற சுதந்திரப் போராட்டத் தியாகி மட்டும் ஊரில் தங்கி இருக்கிறார்.
பிறந்த ஊரையும் தன் மண்ணின் கலாச்சாரத்தையும் மறவாமல், பழமலய் தன் மகனுக்கு தன் பிராந்தியத்துப் பழக்கத்தின்படி – கொளஞ்சி என்று பெயர் வைத்து, தமிழும் தமிழ்க்கலாச்சாரமும், தமிழ் இலக்கியங்களும்
கற்பித்து வளர்த்திருக்கிறார். ஒரு நாள் கொளஞ்சி தாத்தாவையும், தன் பெற்றோரது ஊரையும் பார்க்கக் கிளம்பி வந்தவன், தன் ஊர் மக்களின் அவல வாழ்க்கையையும், தலித்துகள் நந்தன் காலத்திலிருந்து வஞ்சிக்கப் பட்டிருப்பதையும் அந்த இடங்களுக்கெல்லாம் போய்ப் பார்த்து அறிந்து, அமெரிக்கா திரும்பாமல் இங்கேயே தங்கி தன் ஊர் மக்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முனைகிறான். இதுதான் கதை.

பிராமணப் பெண்ணுக்கும் தலித் பையனுக்கும் திருமணம் செய்து வைத்தது ஒன்றும் புதிய புரட்சி அல்லதான். ஆனால் சொந்த கிராமத்தில், இன்னும் அறியாமையும் சாதிக் கட்டுப்பாடும், சனாதனப் பழம்
பஞ்சாங்கங்களும் இருக்கிற நிலையில், தன் குடும்பமே ஏற்காத தன் இனத்தவரின் எதிர்ப்புக்குரிய புரட்சிகரமான கற்பனையைத் துணிந்து – அதனால் வரும் பின்விளைவுகளுக்கு அஞ்சாமல் – எழுத்தில் வடித்திருப்பது அவரைப் பொறுத்தவரை, அவரது ஊராரைப் பொறுத்தவரை பெரிய புரட்சிதான். இந்நாவலில் வரும், சதா வண்டையாய்ப் பேசும் ஒரு பாத்திரமான சபாபதிப் பிள்ளை (தற்போதும் ஜீவியவந்தராய் தருமநல்லூரில் வாழ்பவர்) இந்நாவலைப் படிக்க நேர்ந்தால், அவர் கோயில் அர்ச்சகரை அடிக்கடி ‘இழித்துப்பேசுகிற ‘பாப்பாரக் குசும்பு’ என்ற வசையைச் சொல்லி திட்டக்கூடும். அது மட்டுமல்ல – அமெரிக்கவின் நவீன சுக வாழ்வை கொளஞ்சி துறப்பதும், தன்
பணிக்குத் துணையாய் சென்னையில் நல்ல பதவியில் உள்ள, அமெரிக்கா செல்லும் வாய்ப்பைப் பெற்றிருந்த சந்துரு என்கிற பிராமண இளைஞனையும் தன் வளமான எதிர்காலத்தைத் துறந்து தன்னுடன் தங்க வைத்ததும், உள்ளூர்ப் பெரிய மனிதர் சேதுராமன் பிள்ளை என்பவர் தன் 60 ஏக்கர் நிலத்தையும், தனது நிர்வாகத்தில் இருந்த மேனிலைப் பள்ளியையும் கொளஞ்சி பேரில் உயில் எழுதி விட்டு இறந்ததும், அந்த நிலங்களைக்
கொளஞ்சி ஊர் மக்களுக்குப் பிரித்துக் கொடுப்பதும், வேலை வாய்ப்புக்காக ஊருக்கு சர்க்கரை ஆலை ஒன்றை நிறுவுவதும் ஆனவை – அந்த ஊருக்கு கற்பனையில் கூடக் கண்டிராத புரட்சிகள் ஆகும். இப்படியெல்லாம்
நடக்குமா நடப்பது சாத்தியமா என்ற யதார்த்தத்தை ஒட்டிய கேள்வி எழலாம். ஆனால் இப்படி நடக்குமா என்பதல்ல ஆசிரியரின் நோக்கம்! இப்படி நடக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசை! இலட்சியம் என்றும் சொல்லலாம்.

எங்கும் எப்பொழுதும் நல்ல முயற்சிகளுக்குத் தடங்கல் ஏற்படுவது போலவே கொளஞ்சியின் கனவும்
நிறை வேறுவதாயில்லை. உள்ளூரின் ஆதிக்க சக்தியினரின் சதியால், ஊருக்கு அருகில் வேகமாக வளர்ந்து வரும்
நெய்வேலி சுரங்கப் பணிக்கு அவனது இட்சிய கிராமத்தையும் கையகப்படுத்தி விடுவதால் அவனுள் எரியும்
நெருப்பு அணைக்கப்படுகிறது. ஆனால் நெருப்பை அணைக்கலாம்; அழிக்கமுடியுமா? நெருப்புக்கு ஏது உறக்கம்? அது இங்கில்லை என்றாலும் வேறு எங்காவது புதிய உத்வேகத்துடன் மீண்டும் உயிர் பெற்று எரியும் என்னும்
சிந்தனையோடு கதை முடிகிறது.

‘எஸ்ஸார்சி’ யின் பாத்திரப் படைப்பும் தத்ரூபமானவை. ஒவ்வொரு ஊரிலும் மேலே சொன்ன – ஊருக்கு எந்த நல்லதும் நடந்து விடுவதைச் சகிக்காத சபாபதிப் பிள்ளைகள் இருப்பது கண்கூடு. இந்த நாவலில்
அவர்தான் ‘வில்லன்’. கொளஞ்சியின் கனவைப் பாழடிப்பவர் அவர்தான். அவரது பாத்திரப் படைப்பு அசலானது – நம்மில் பலருக்கும் பரிச்சயமானது என்பதால் வாசிப்பு நெருக்கமாகிறது. அதே போல அஞ்சாம்புலி, அவனது மனைவி சாரதம் இருவரும் நாம் கிராமங்களில் அபூர்வமாய்க் காண்கிற எளிய, எப்போதும் நல்லதையே எண்ணுகிற வெள்ளந்தி பாத்திரங்கள். அவர்கள் இருவரது உரையாடல்கள் எப்போதும் எடக்கு மடக்காகவே இருப்பதும் அதனால் அவர்களுக்கிடையேயான பந்தத்தில் நெருக்கம் ஏற்படுவதும் ரசிக்கத்தக்கவை. இன்னும்
தியாகி கோபால், பேராசிரியர் சீனுவாசன், நாட்டாண்மை முத்தையா சேதுவராயர் என்று நிறைய நினைவில்
நிலைத்து விடுகிற பாத்திரங்கள் மிகையில்லாமல் இயல்பாய்ப் படைக்கப்பட்டு இருக்கின்றனர். நாவல் நெடுக கடலூர் மாவட்டத்தின் வட்டார வழக்கு மொழி சரளமாய்ப் பிரயோகமாகி வாசிப்புக்கு இதம் சேர்க்கிறது. இடையிடயே விரவியுள்ள சமஸ்கிருத மற்று தமிழ் இலக்கிய எடுத்துக்காட்டுகளும், மார்க்சிய சிந்தனைச்
சிதறல்களும் ஆசிரியரின் பரந்துபட்ட அனுபவ மற்றும் அறிவுஜீவித்தனத்தைக் காட்டுவதாக உள்ளன.

குறை என்று சொல்வதானால் எல்லாப் புத்தகங்களுக்கும் சொல்கிற அச்சுப்பிழை அனர்த்தம், தவிர்த்திருக்கக் கூடிய – வாசிப்பில் உறுத்துகிற சில சொல்லாக்கங்களைச் சொல்லலாம். கைக்கும் கனமான
இந்நாவலை கவனமாய் எடிட் செய்து இன்னும் இறுக்கமாகச் செய்திருக்கலாம். ஆனால் நாவலின் விறுவிறுப்
பான கதையோட்டம் காரணமாக அவை வாசகர் கவனத்தைச் சிதற விடவில்லை என்பது சாதகமான அம்சம்.
மொத்தத்தில் கவிஞர் பழமலய் சொல்கிறபடி இது ஒரு சமுதாய சீர்திருத்த நாவலல்ல – இது ஒரு இலட்சிய நாவல்! 0

நூல்: நெருப்புக்கு ஏது உறக்கம்.
ஆசிரியர்: எஸ்ஸார்சி.
வெளியீடு: அலமேலு பதிப்பகம், குறிஞ்சிப்பாடி.
விலை: ரூ.160/-

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்