கற்பக விநாயகம்
அம்பேத்கர் இந்து மதம் பற்றிய தனது மதிப்பீட்டைப் பின்வருமாறு வைத்த பின்னரே பெளத்தம் தழுவினார்.
‘இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று இந்து மதத்திலேயே சமத்துவம் ஏற்படுத்துவது. சமபந்தி உணவு, கலப்புத்திருமணம் மூலம் இதனை உருவாக்கலாம். அதாவது வருண முறையை, பார்ப்பன மதத்தை வேரறுப்பதன் மூலம். இது சாத்தியமா ? சாத்தியமில்லாதபோது இரண்டாவது வழியை நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது. அதுதான் மத மாற்றம். ‘
அம்பேத்கர் சாத்தியமில்லாததாய்க் கருதியதை வாழ் நாள் முழுக்கப் போராடி சாதிக்க முனைந்தார் பெரியார். அவர் இந்துவாய் வாழ்ந்தார் என்பதற்கு என்ன ஆதாரம் ? அவர் இறந்த பிறகும் கூட எவ்வித இந்து முறையும் அனுசரிக்கப் படவில்லை. இந்துவாய் வாழ்வதென்பது என்ன ?
இந்தியாவில் பிறப்பால் வருவதுதானே சாதியும், மதமும். யாரும் இந்து மதத்தின் கொள்கை, தத்துவத்தினில் தேர்ச்சி பெற்றுப் பின் அதில் இணைவதில்லையே. சுப்பையா இந்து வாய் இருந்தால், சுப்பையாவின் மகனும் இந்து..
பெரியார் இது பற்றி ஒருமுறை சொல்லி இருக்கிறார். ‘வீட்டிலே கிடக்கிற நரகலைத் தூக்கி எறிந்து சுத்தப் படுத்த சொன்னால், அந்த நரகலுக்குப் பதில் எந்த சாணியக் கொண்டு வந்து அந்த இடத்திலே போடுறதுன்னு கேக்கற மாதிரி ‘ என்று மாற்று தெய்வப் பரிசீலனை பற்றிக் கராறாய் சொல்லி இருக்கிறார்.
பிரபாகரன் பற்றிய வதந்தியை சொல்வதற்கு மலர்மன்னனுக்கு மட்டும் ஏன் ஓர் இஸ்லாமியராகப் பார்த்து அமைகிறார் எனத்தெரியவில்லை.
பிரபாகரனை சாகடித்த கோபால்ஜியின் தினமலர் ஏன் அவருக்கு நினைவுக்கு வரவில்லை ?
மன்னனுக்கு துரோகம் செய்வது என்னமோ முஸ்லிம்களுக்கு மட்டுமே உரிய குணம் மாதிரி அவதூறு செய்யும் மலர்மன்னன் கீழ்க்கண்ட செய்திகளுக்கு என்ன விளக்கம் சொல்வாரோ ?
1) டிப்பு சுல்தானின் கடைசிப்போர் அன்று, கிழக்கிந்தியக் கம்பெனிப்படை சிறீ ரங்கப்பட்டணத்துக்குள் நுழைய வசதியாக, காவிரி ஆற்றில் ஆழம் குறைவாய் உள்ள பாதைகளை,வெள்ளையருக்குக் காட்டிக் கொடுத்தவர்கள் இந்துப் படைவீரர்கள்தானே!!
2) கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த தொண்டைமானும், எட்டப்பனும் இந்துதானே!!
3) ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுக் காரர்களுக்கும் நாட்டைக் காட்டிக் கொடுக்க துவிபாசாகப் பணி புரிந்த பலபேர்கள் (ஆனந்த ரங்கம் பிள்ளை உட்பட) செய்ததெல்லாம் துரோகமல்லாது வேறென்ன ?
மலர்மன்னன் வாதப்படியே முஸ்லிம்கள் மதக்கண்ணோட்டத்தில் செய்தால் அது துரோகம். ஆனால் இந்துக்கள் வெள்ளிக்காசுக்கும், விஸ்கிக்கும் காட்டிக்கொடுத்தால் அது துரோகமாகாது. அப்படியா ?
சதி எனும் செயல் ஹிந்துக்களாலேயே தவறு என உணரப்பட்டு சட்டப் பூர்வமாய்க் கைவிடப்பட்டது என்பது பொய்.
சதியை சட்டவிரோதமாய் ஆக்கியது ஆங்கிலேயர் அரசு. அதனை இன்னமும் மீறிக் கொண்டிருப்பது ஹிந்து சமூகம். (உதாரணம் ரூப் கன்வர் சதியில் தள்ளப்பட்ட ராஜஸ்தானத்து நிகழ்வு. 1987 என எண்ணுகிறேன்).
சதியை உன்னதமான செயல் என்று வட இந்தியாவில் இன்னும் இந்துத்துவ சக்திகள் பிரச்சாரம் செய்கின்றன.
சதியை எதிர்த்து ஊர்வலம் சென்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் அணி ஊர்வலம் இச்சக்திகளால் தாக்கப்பட்டு உள்ளது.
இன்னும் ரூப் கன்வர் போன்று செய்தி ஊடகங்களில் இடம் பெறா எண்ணற்ற சதி நடந்தே வருகிறது. சதி மாதா எனக் கொல்லப்பட்டவர்கள் தெய்வமாய் வணங்கப்படுகின்றனர்.
(சதியினை ஏன் இந்து மதம் உருவாக்கியது என்பது குறித்து அம்பேத்கர் விளக்கி இருக்கிறார். போர் அல்லது பெரும் வியாதியால் ஒரு சாதியின் ஆண்களின் எண்ணிக்கை குறைந்து விட்டால் அங்கு மணமாகாத பெண்களின் எண்ணிக்கை பெருகி விடும். அப்போது இனக்கலப்பும் நடைபெற வாய்ப்பு அதிகம். எனவே ஆண்களுக்குப் பலதாரமணம் மூலம் இப்பிரச்சினை சரி செய்யப்பட்டது.
ஆயினும் இளம் வயதில் கணவன் இறந்து விட்டால் மேலும் பல சிக்கல்கள். இளம் விதவைகளின் உணர்வை மழுங்கச் செய்யும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், இயற்கையின் முன் அவை தோற்றுப்போய் இனக் கலப்பு உருவாகவே செய்தது.
தன் சாதியின் தூய்மையை உறுதி செய்யவே கணவனுடன் அவ்விளம் விதவைகளை எல்லாம் வலுவந்தமாய் நெருப்பில் தள்ளி விடுவதை இந்து சமூகம் உருவாக்கியது.
தஞ்சை மராட்டிய அரசர்கள் (சிவாஜியின் பங்காளியின் வழித்தோன்றல்கள்) டஜன் கணக்கில் பெண்டாட்டிகளையும், 20க்கும் மேல் வைப்பாட்டிகளும் வைத்திருந்த தகவல்கள் தஞ்சை மோடி ஆவணங்களில் பதிவாகி உள்ளன. வைப்பாட்டி மார்கள் தங்கி இருக்கத் தனியாய் ஓர் பங்களா இருந்ததும், அதன் உள்ளே நடந்த சில ஒழுக்கக்கேடுகளும் மொட்டைக் கடிதமாய் மோடி ஆவணங்களில் பதிவாய் உள்ளன. கடைசியாய் சதியில் பார்வதிரி பாயி, சாவித்ரி பாயி ஆகிய இரு ராணிகளும் தீக்குள் குதிக்கச் செய்த ஆண்டு 1802 -ஏப்ரல் 19.)
தேவதாசி முறையை ஆதரிக்கும் மலர் மன்னனுக்கு சிறு விண்ணப்பம். அப்படியே பாலர் விவாகம், நரபலி ஆகியவற்றையும் ஆதரித்து கட்டுரை எழுதி விட்டால் ஹிந்து தர்மத்தை வளர்த்த மாதிரி இருக்கும்.. அப்புறமாய் செயல்படலாமே.
காஷ்மீரத்தில் பண்டிட் பார்ப்பனர்கள் பூண்டற்றுப்போன கதைக்கு வருவோம். 1980களின் இறுதியில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தனது ஆயுதப்போரைத் தொடங்கியது. இவ்வமைப்பு மதச்சார்பற்ற தேசிய இன விடுதலையை லட்சியமாய் வைத்திருந்தது. இதன் செயல்பாடுகள் இந்திய ஆக்கிரப்பு காஷ்மீரிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் அதிகரித்த வேளையில் இந்திய ஆளும் வர்க்கம் ஜ.கா.வி.மு. வை இஸ்லாம் பயங்கரவாதிகள் என்று சர்வதேச ரீதியில் காட்டிட செய்த சதிவேலையே பண்டிட்களின் இடப்பெயர்வு. இதைப்பற்றி விரிவான ஆதாரங்கள் விடியல் பதிப்பகம் வெளியிட்ட ‘காஷ்மீரின் தொடரும் துயரம் ‘ எனும் நூலில் உள்ளன.
பண்டிட்களின் பரிதாப நிலைக்கு இந்திய ஆளும் வர்க்கம்தான் முழுப்பொறுப்பு. அப்பழியை இஸ்லாமியர் மேல் போடுவது அநியாயமானது.
கல் எறிந்து கொல்லுதல், கழுத்தை அறுத்தல் இந்து சமூகத்தில் இல்லையாம். நம்மை நம்பச்சொல்கிறார் மலர்மன்னன்.
மேலவளவில் தலித் பஞ்சாயத்துத் தலைவர் முருகேசனின் தலையை வெட்டிக் கிணற்றில் எறிந்தது இந்து சமூகத்தின் சாதி வெறிதானே!
ஹரியானாவில் செத்த மாட்டை தலித் மக்கள் உரித்தபோது, 4 தலித்களையும் கல்லால் அடித்துக் கொன்றது பசுமாதா புகழ் இந்துக்கள்தானே.
(மாட்டை உயிருடன் உரிக்கின்றனர் என வதந்தி கிளப்பி மக்களைத் திரட்டி அக்கொலைகளைப் புரிந்தனர். உயிருள்ள மாட்டை உரித்துவிட முடியுமா என்று எந்த இந்துவும் அன்று எண்ணிப்பார்க்கவில்லை.)
எண்ணாயிரம் பேரைக் கழுவேற்றுதல் சாதாரணமானது இல்லைதான். மலர்மன்னனுக்கு இது தெரிந்திருக்கும். மண்டைக்காட்டில் சிறு எண்ணிக்கையில் பலி வாங்கவே ஒரு வருசத்துக்கு மேலாக எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருந்தது. இதனைவிட மிகவும் கஷ்டப்பட்டு சிவபெருமானிடம் சாக்கியப் பெண்களைக் கற்பழிக்க வேண்டிய உடல்வலிமை வேண்டி, மலர்மன்னன் சொல்வது மாதிரி ஒவ்வொரு சமணர்களாய்த் தாமே கூர் நுனியை ஆசனவாயில் ஏற்றிக் கொள்ளும் வரை … சே.. எவ்வளவு கஷ்டம்.. ரெண்டரை மாசம் திட்டமிட்டு, கம்யூட்டர் பிரிண்ட் அவுட், அமெரிக்காவில் வசூலான கலவரத்துக்கான டாலர் பணம் இதெல்லாம் பண்ணியும் குஜராத் ஸ்கோர் 3000த்த தாண்டலைனா பாருங்களேன். முன்னோர்கள் திறமையை என்னே என்பேன்.
‘ஊத்தை வாயர் ‘, ‘பாசிப்பல் மாசுமெய்யர் ‘, ‘மந்தி போல் திரியும் அந்தகர் ‘ என்றெல்லாம் நாவுக்கரசால் அர்ச்சிக்கப்பட்ட மாற்று சமயத்தாரை ‘கூடு மேல் தலையை ஆங்கே அறுப்பதே கருமங்கண்டாய் அரங்க மா நகருளானே ‘ எனத் தொண்டரடிப்பொடியாள்வார் பாடிச்சென்றதன் பொருள் பகர்வீரா மலர் மன்னன் ? ?
சமணர்கள் தாமே ஒத்துக்கொண்டு கூர் நுனி ஏறினர் என்பது உண்மையாயின் இன்னும் கோவில்களில் (நாட்டார் கோவில்கள்) சேவலைக் கழுவில் ஏற்றிக் கொன்று பலி இடுவதும், சிவன் கோவில்களில் வருடந்தோறும் நடக்கும் கழுவேற்றமும் எதன் பிரதி சடங்குகள் ?
அடுத்து வலங்கை, இடங்கை இடத்தில் சத்திரிய வைசியர் இடம் எங்கே என நான் கேட்டால், அதற்குப் பதில் சொல்லாமல்.. ஜாதிகள் வேறு வர்ணாசிரம தர்மம் வேறு என்கிறார் மலர்மன்னன். அவ்வாறெனில் பெரியார் தமிழர் சாதியை, பிராமணர், சூத்திரர், அவர்ணர் என மதிப்பிட்டதில் என்ன தவறு இருக்க முடியும் என்பதை எம் சிற்றறிவுக்கு எட்டுமாறு விளக்குக.
வாஜ்பேய் அரச பதவி ஏற்றதும் வட இந்தியாவில் நூற்றுக்கணக்கில் சர்ச்கள் தாக்கப்பட்டன. கன்னியாஸ்திரிகள் பாலியல் வன்முறைக்காளானார்கள்.அப்போது மத்தியப் பிரதேசில் ஜாபுவா மாவட்டத்தில் கிறிஸ்துவ கன்னியாஸ்திரீகள் இந்து தீவிரவாதிகளால் பாலியல் வன்முறைக்காளானபோது பி.ஜே.பி.யின் பிரிஜேஷ் சர்மா சொன்னது ‘இது மத மாற்ற செயல்பாடுகளுக்கான எதிர்வினை. ‘
குத்தூசி குருசாமி தெளிவாய்த்தான் சொல்லி இருக்கிறார். ‘அம்பே சிவம் ‘ என்று.
சூத்திரன் என்ற வார்த்தை இழிவான வார்த்தை அல்லவாம் ? சூத்திரன் என்றால் யார் என்பதை மனுதர்மம் ‘தாசிக்கு பிறந்தவன் ‘, ‘அடிமையின் மகன் ‘ என்று விளக்குகிறதே. இவ்வார்த்தை இழிவில்லாமல் வேறென்ன ? மேலோட்டமாய்ப் பார்த்தால் எதையும் இலேசாகச்சொல்லி விடலாம்; மலம் அள்ளுவதும் கூட இழிவான தொழிலில்லை என்று சொல்வர் சிலர். ஆனால் சொல்பவருக்கு அதன் வலியை, இழிவை உணர்ந்திட வாய்ப்பில்லாததால் அவ்வாறு சொல்வர். ஆனால் அனுபவித்தவனுக்குதான் தெரியும் – சூத்திரன் / பஞ்சமன் என்ற வார்த்தையின் பொருள்.
அடுத்து, கிறிஸ்தவம் பரப்ப டாலர் வருகிறது என்கிறார்.
டாலர் அதற்கு மட்டுமா வருகிறது ?
2002ல் குஜராத்தில் முஸ்லிம்களைப் படுகொலை செய்ய வனவாசிகளுக்கு ரொக்கமும், குவார்ட்டர் பாட்டிலும் கொடுக்க, கேஸ் சிலிண்டர் (வெடி குண்டாய்ப் பயன்படுத்தப்பட்டது), வாகன வசதி இத்யாதி செலவுகளுக்கு விஷ்வ ஹிந்து பரிசத் அமெரிக்க இந்தியர்களிடம் டாலர் திரட்டியது எந்த வகையில் சேர்த்தி ?
டாலர்களால்தான் கிறிஸ்தவம் வளர்கிறது என்றால், இங்குள்ள மதம் மாறிய கிறிஸ்தவர்கள் எல்லோரும் டாட்டா பிர்லா ரேஞ்சுக்குப் போயிருக்க வேண்டுமே! அவ்வாறு டாலரால் ஆட்கொள்ளப்பட்டு மேம்பாடுற்ற வேதக்காரர்களின் புள்ளிவிவரம் ஏதுமுண்டா ?
(எங்கள் கரிசல் வட்டாரத்தில் கிறிஸ்துவ மதத்தை வேதம் என்றே சொல்கிறார்கள். அவர்களுக்கு ரிக்கு யஜூரெல்லாம் தெரியாது. உலகில் உள்ள வேதமே பைபிள்தான். அதுதான் மக்களின் மொழியைப் பேசியது)
கோவிலில் நுழைய உரிமையில்லாத, நுழைந்தாலும் மேல்சட்டையைக் கழற்றச் சொல்லுகிற, கருவறைக்குள் நுழைய உரிமை இல்லாத, மானத்தை மறைக்கும் உரிமை கூட இல்லாத ஒரு மதத்தில் இருந்து கல்வியும், சமத்துவமும், மருத்துவமும் சுயமரியாதை உணர்வையும் தந்த கிறிஸ்துவத்துக்கும், அய்யா வழிபாட்டுக்கும் மாறினர் கன்னியாகுமரியில். இழிவை சகித்துக்கொண்டு இங்கேயே இரு. மாறினால் கலவரம் செய்வேன் என்று மிரட்டியவண்ணம் வந்தனர் சங் பரிவாரினர்.
டாலருக்கு முன்னால் தன் மதத்தை மாற்ற ஒருவன் துணிகிறான் என்றால் அவனுக்கு என்ன ஆன்மீகபலத்தை நம் மதம் தந்திருக்கிறது ?
நமது தர்மத்திலேயே இருந்து மாண்டால், அருளுண்டு ஆகவே அவ்வுலகுண்டு. அவ்வுலகில் ஊர்வசி, ரம்பை உண்டு என்று ஆசை காட்டி அவனை நம் மதத்திலே வைத்திருக்க செய்யலாம். மாறாக அவ்வுலகை விட இவ்வுலகு பொருளுண்டார்க்கே உண்டெனும் போதம் பெற்று ஒருவன் நல்லாய் இருப்பானேல், அவ்வாறு இருந்து விட்டுப் போகட்டுமே.. ‘எல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றறியேன் பராபரமே ‘ தானே நமது தர்மம்!!
****
vellaram@yahoo.com
- பெரியபுராணம் – 76 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- நேசிப்பாளர்கள் தினம் (VALENTINE ‘S DAY )
- கடிதம்: மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 2
- கடிதம்- ஆங்கிலம்
- ஹெச்.ஜி.ரசூல் அவர்கலின் “வஹாபிசம்—- ‘ கட்டுரை மற்றும் விளக்கம் குறித்து
- நீங்க எப்படிங்க ? கொஞ்சம் சொல்லுங்க
- புதுமைப் பித்தன் நூற்றாண்டு விழா – கருத்தரங்கு
- Looking for Comedy in the Muslim World – திரைப்படம்
- தமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள்
- மெட்டாபிக்சனின் ஆழ அகலங்கள்
- நான் கண்ட சிஷெல்ஸ் – 10. சேவை அமைப்புகள்
- விண்வெளி ஊர்திகள் கண்கண்ட செவ்வாய்க் கோளின் தளங்கள் [Rover Explorations on Planet Mars-2 (2006)]
- கவிதைகள்
- இப்போதாவது புரிகிறதா
- முற்றும் இழத்தல்
- கீதாஞ்சலி (61) ஏழையின் வரவேற்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! (இலக்கிய நாடகம் – பகுதி இரண்டு)
- மனிதம்
- அய்யா வைகுண்டரும் அரவிந்தன் நீலகண்டரும்
- சொல்ல மறந்த கதைகள் – கோல்வல்கர் பற்றி…
- மண்டைக்காடும் இந்து எழுச்சியும்
- பாலாற்றில் இனி கானல் நீர்தானா ?
- இளந்தலைமுறைக்குத் தலை வணக்கம்
- குருஜி கோல்வல்கர்: சில தகவல்கள்
- தர்கா பண்பாட்டு அரசியல்
- எல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றறியேன் பராபரமே…
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் இரண்டு: நல்லூரும் யாழ்ப்பாணமும்!
- ப்ரியமுள்ள வாலண்டைனிடமிருந்து….!
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 8
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-9) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- விடுமுறையின் முதல் நாள்
- ப லா த் கா ர ம் ( வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் )