அப்துல் கையூம்
ரகுவரன் இறந்துவிட்டார் என்ற துயரச் செய்தி என் மனதை வாட்டியது. 49 வயதுதான். ஆர்ப்பாட்டமில்லாத, அலட்டலில்லாத வில்லத்தனம் அவரது. ஒரு படத்தில் அவரது ஒப்பனை அப்படியே பால்தாக்கரேயை பிரதிபலித்தது. அப்துல் கலாம் வேடத்திலும் நடித்துக் கொண்டிருந்ததாகக் கேள்வி. What a contrast?
இந்த ஏழாவது மனிதன்; ஆயிரத்தில் ஒருவன். ‘அஞ்சலி’ நாயகனுக்கு எனது மலரஞ்சலி.
பாரதியாரின் பாடலுக்காகவே ஏழாவது மனிதன் படத்தை பலமுறை பார்த்தவன் நான். எல்.வைத்தியனாதன் இசையில் மிளிர்ந்த கே.ஜே. ஏசுதாஸின் ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா’ என்ற பாடல் மனதைப் பிழியும்.
அமைதியான அப்பா வேடம் கிடைத்தால் அமர்க்களமாகப் படுத்திவிடுவார் ரகுவரன். அடித்தொண்டையிலிருந்து சாந்தமாகப் பேசுவது அவர் பாணி. அவர் மிரட்டுவது, மிரட்டுவது போலிருக்காது. ஆனால் ‘மிறட்டு’வது போலிருக்கும்.
கெளரவர்கள் வேடத்தில் நடிப்பது எளிது. ஆயிரத்தில் ஒருவனாக ‘கூட்டத்தோடு கோவிந்தா’ போட்டு விடலாம் கெளரவ வேடத்தில் நடிப்பது அவ்வளவு சுலபமல்ல. குணச்சித்திர நடிப்பில் ரகுவரன் சாதனைப் புரிந்தவர் என்றால் மிகையாகாது
“அடப்பாவிகளா! அந்த மனுஷனை மிமிக்ரி பண்ணியே சாகடிச்சுட்டீங்களேடா!” என்று என் உள்மனது கூப்பாடு போட்டது.
ஸ்டார்ட் தி மியுசிக். .. ..
டமுக்கு டிப்பான்.. டிக்கா.. டிக்கா.. டமுக்கு டிப்பான் .. டிக்கா ..
இப்படி மியுசிக் ஆரம்பித்தால் போதும். இந்த மிமிக்ரி மனிதர்களுக்கு பேய்க்கு சாம்பிராணி போட்டது போல் ஆகிவிடும். சவ ஊர்வலத்திற்கு அடிக்கின்ற தாளம் போன்று ஒரு தாளம். முதன்மை விருந்தினர்களாக வரும் மிகச் சிறந்த கலைஞர்கள் கூட இந்த இசைக்கு சாமி வந்ததைப் போல் ஆடுவது வேதனையாக இருக்கும்.
ஸ்டாப் தி மியுசிக் .. ..
அப்போதுதான் இந்த டப்பாங்குத்தை நிறுத்துவார்கள். அப்போதும் இவர்கள் கிறுக்கு பிடித்ததைப் போல் குதித்துக் கொண்டுதான் நடப்பார்கள். நமக்கு சிரிப்பு வரவழைப்பதற்காகவாம். ஹா.. ஹா.. ஹா..
இந்த இசை கூட எங்கிருந்தோ சுட்டதுதான். சூரியன் படத்தில் கவுண்டமணி தீ மிதிப்பதற்காக இறங்கும் போது இந்த பின்னணி இசைதான் ஒலிக்கும். அட ஒக்கா மக்கா! இது கூட ஒரிஜினல் இல்லையா? என்று நீங்கள் புலம்புவது எனக்கு கேட்கிறது.
எல்லாமே சிரிப்புக்காகத்தானே? இதை ஏன் இவ்ளோ சீரியஸா எடுத்துக்கிறீங்க? இப்படி வாசகர்கள் கேட்கலாம்.
நாடோறும் சிரித்துக் கொண்டிருந்தால் நமனையும் (எமன்) விரட்டலாம் என்பது உண்மைதான். “Seven days without laughter makes one weak” என்று நான் அடிக்கடி என் நண்பர்களுக்குச் சொல்வதுண்டு. “மனதுக்கு சவுக்காரம் எப்படியோ அப்படித்தான் உள்ளத்திற்கு சிரிப்பு” என்று ஒரு ஆங்கில அறிஞன் கூறியது நினைவுக்கு வந்தது. “சிரி உன்னுடன் சேர்ந்து இவ்வுலகமே சிரிக்கும். குறட்டை என்றால் அது நீ மட்டுமே தனியாக விடக்கூடியது” இதுவும் ஒர் மேலைநாட்டு அறிஞன் சொன்னதுதான். நாம் யாரையாவது சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லாவிட்டாலும் பரவாயில்லையாம். குறைந்த பட்சம் ஒரு புன்னகையாவது கொடுத்து விட வேண்டுமாம். இரண்டு பேர்களுக்கிடையில் இருக்கும் தூரத்தை நெருக்கம் செய்வது புன்னகைதான். ஹ்யூமர் என்பது மற்றவர்கள் மனதை புண்படுத்தா வண்ணம் இருத்தல் வேண்டும்.
மற்றவர்களை சிரிக்க வைப்பதில் தப்பில்லை. அதுக்காக பிரபலங்களை சிரிப்பா சிரிக்க வைக்கக் கூடாது. பிரபலமாக இருப்பதிலே எவ்வளவு செளகரியங்கள் இருக்கின்றதோ அந்த அளவுக்கு அசெளகரியங்களும் இருக்கின்றன.
தென்னகத்தில் மிமிக்ரி மோகத்தை உண்டாக்கியது சேரர்கள்தான். அதாவது நமது மலையாளி சகோதரர்கள். அவர்களுக்கு வாழைப்பழம் இல்லாமல் எப்படி புட்டு இல்லையோ, மோட்டா அரிசி இல்லாமல் எப்படி மத்தி மீன் இல்லையோ, அதுபோன்று மிமிக்ரி இல்லாத கலைநிகழ்ச்சிகளே இல்லை என்று கூறலாம். மிமிக்ரி செய்தே கதாநாயகனான ஜெயராம் போன்றவர்கள் மலையாள திரைப்பட உலகில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். (அரைஞாண் கொடியா? என்று கேட்டு படுத்தாதீர்கள்)
மம்மு கோயா முதல் கருணாகரன் வரை இந்த நையாண்டி ஆசாமிகளிடம் மாட்டிக் கொண்டு பேய் முழி முழிக்கிறார்கள். இந்தியிலும் இதே கதைதான். ‘கும்கும்’ போன்ற தொடர்களை பார்த்து அழுதழுது கண் சிவந்தவர்கள் இப்போது The Great Laughter Challenge பார்த்து சிரி சிரியென்று சிரித்து கன்னம் சிவந்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு ஆறுதலான விஷயம். இந்தியில் மூத்த நடிகர்களை வைத்து அரைத்த மாவையே அரைப்பது குறைந்து விட்டது. சற்று வித்தியாசமாக சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள். இதற்கு உதாரணமாக ராஜு சிரீவாஸ்தவ்வைச் சொல்லலாம். ஆனால் ஒன்று. ஜோக்கை கேட்டு சிரிப்பு வருதோ இல்லையோ Siddhu-வின் சிரிப்பைப் பார்த்து நம் எல்லோருக்கும் சிரிப்பு வந்துவிடும். அப்படியொரு வெடிச்சிரிப்பு. சில சமயம் எதற்கு அவர் சிரிக்கிறார் என்றே நமக்கே தெரியாது. ஆனால் நாமும் சேர்ந்து சிரிப்போம். நாடாளுமன்றத்திலும் இந்த மனுஷன் இப்படித்தான் சிரித்து தன் சித்து வேலைகளைக் காட்டுகிறாரோ என்னவோ?
சிரிப்பில்தான் எத்தனை வகை? நம்ம ஊரிலும் மதன் பாப் என்று ஒருத்தர் இருக்கிறாரே.. யப்பப்பா? வி.ஜி.பி நிறுவனம் மாதிரி தவணை முறையில் சிரிப்பவர் அவர்.
இந்தி Laughter Show-வில் ஒரே ஒரு குறை. இவ்வளவு காசு செலவு செய்து ‘செட்’ போடுகிறவர்கள் பரிஜாத்துக்கு (அதுதாங்க .. அந்த நிகழ்ச்சி தொகுப்பாளினி) உடை விஷயத்தில் கஞ்சத்தனம் காட்டுகிறார்களே என்றுதான். எல்லா நிகழ்ச்சியிலும் நம்ம நமீதா மாதிரியே உடை உடுத்துகிறார்; அரைகுறையாக. (பரிஜாத் என்ற பெயருக்கு “தேவதை ஜாதி” என்று பொருள். தேவதைகள் உடை உடுத்துவார்களா இல்லையா என்பது எனக்கு சரியாகத் தெரியாது)
தமிழ் நாட்டில் முன்பு மீசை முருகேஷ், ராக்கெட் ராமனாதன் போன்றவர்கள் மிமிக்ரி செய்துக் கொண்டிருந்தார்கள். தொடக்கத்தில் ஆடு, மாடு, கழுதை மாதிரி கத்துவது. விமானம் மற்றும் இரயில் (சாரி.. தொடர்வண்டி) சப்தம், ஆங்கிலப்பட ட்ரெய்லர், இப்படித்தான் இருந்தது மிமிக்ரி. அப்புறம் மயில்சாமி போன்றவர்கள் நகைச்சுவை என்ற பெயரில் நாற அடித்தார்கள். சின்னி ஜெயந்த் கொஞ்சம் பரவாயில்லை ரகம்.
ஒரு காலத்தில் இவர்களுக்கு ‘விகடகவி’ என்று பெயர். பிறகு ‘பலகுரல் மன்னன்’ என்ற பெயர் வந்தது. ‘காதல் மன்னன்’, ‘நடை மன்னன்’ ‘புன்னகை மன்னன்’, என்று எதற்கெடுத்தாலும் ‘மன்னன்’ என்ற அடைமொழியை கொடுத்து விடுவது நமக்கு வழக்கமாகி விட்டது. (தயவுச் செய்து மலர் மன்னன் கோபித்துக் கொள்ளக்கூடாது)
இந்த மிமிக்ரி மோகத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்திய பெருமை மதுரை ஆசாமிகளைச் சாரும். இதுபோன்று பல குழுக்களை அமைத்து நாடு முழுவதும் பவனி வந்தவர்கள் அவர்கள்.
அந்தக் காலத்தில் முனிவர்கள்தான் கூடு விட்டு கூடு பாயும் கலையை கற்று வைத்திருந்தார்கள். பிறகு அவர்கள் அரசியல்வாதிகளுக்கு கற்றுக் கொடுத்தார்கள். பிறகு அதனை இந்த மிமிக்ரி மனிதர்கள் (மி.ம.) கற்றுக் கொண்டார்கள். ராஜ் டிவியிலிருந்து சன் டி.வி, பிறகு சன் டிவியிலிருந்து கலைஞர் டி.வி. என்று கூடு பாய்கிறார்கள். அடுத்து எந்த டி.வி.யோ?
கலக்கப் போகிறோம், அசத்தப் போகிறோம் என்று கூறி மறைந்த நடிகர்களை இழிவு படுத்திக் கொண்டு திரிகிறார்கள்.
தமிழ் வாரப் பத்திரிக்கைகளிலும், இணையத்திலும் வெளிவருகிற நகைச்சுவைத் துணுக்குகளை மனப்பாடம் செய்து விட்டு இடைவெளி விடாமல் வந்து வாந்தி எடுப்பதற்குப் பெயர் “Stand-Up Comedy”-யாம்.
அதுவும் ஒரு பெண் வந்து இது போன்று ஜோக் அடித்து விட்டால் போதும். “ஆஹா.. ஓஹோ .. இதுபோன்ற துணிச்சல் ஒரு பெண்ணுக்கு வருவதென்றால் அது பெரிய விஷயம்.. மறுபடியும் ஆஹா.. ஓஹோ..”
என்னய்யா பேச்சு இது? கல்பனா சாவ்லா விண்வெளிக்கு சென்று வந்துட்டாள். பொம்பளைங்க ப்ளைட் ஓட்டுறாங்க, ட்ரக் ஓட்டுறாங்க என்னென்னமோ துணிச்சலான காரியங்களெல்லாம் பண்ணுறாங்க. அதை எல்லாம் விட்டுட்டு “Stand-Up Comedy” “Sit-Down Comedy”-ன்னு சொல்லிட்டு “என்ன ஒரு சாதனை? அட்டடா” என்று உங்களை நீங்களே புகழ்ந்துக்கிறீங்க?
இந்த படப்பிடிப்பை நேரில் பார்ப்பவர்களுக்குத்தான் இதில் உள்ள சித்து வேலை, ஒட்டு வேலை, வெட்டு வேலை எல்லாம் புரியும். எத்தனை இன்டர்வெல்? எத்தனை ரீ-டேக்கு? எத்தனை எடிட்டிங்? இதற்கிடையில் டைரக்டர் சாருக்கு எத்தனை டென்ஷன்?
எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைப்பூவில் எம்.ஜி.ஆர். சிவாஜியைப் பற்றி ஏதோ எழுதப் போக, அதை ஆனந்த விகடன் பூதக்கண்ணாடியை வைத்துக் கொண்டு தேடி பிரசுரம் செய்யப் போக, சினிமாக்காரர்கள் ஆளாளுக்கு அவர்கள் பங்குக்கு “ஜெயமோகன் முகத்தில் காறி உமிழ வேண்டும்” என்றெல்லாம் கூறி ஸ்டண்ட் அடித்து வருகிறார்கள். இது ஒரு பக்கம்.
எழுத்தாளர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்க வேண்டுமானாலும் புற்றீசல்களைபோல் ‘திமு திமு’ வென்று ஒன்று கூடி விடுவார்கள். இது வழக்கமாகி விட்டதொன்று. இதனை எதிர்த்து சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவிக்காமல் ‘கம்’மென்று இருந்தால் அதுவும் அவர்களுக்கு பெரிய தொல்லையாகி விடும். “காறித் துப்புங்கள், கரும்புள்ளி செம்புள்ளி குத்துங்கள், கழுதை மீது ஏற்றுங்கள்” என்று ஏதாவது அறிக்கை விட்டுத்தான் தொலைக்க வேண்டும்.
“இந்த மி.ம. இப்படி உங்களை போட்டு நாற அடிக்கிறார்களே; இது மட்டும் பரவாயில்லையா?” என்று கேட்கத் தோன்றுகிறது.
மக்கள் திலகத்திற்கு குண்டடி பட்ட பிறகு குரல் சிதைந்துப் போய்விட்டது. ‘ர’வும் ‘த’ வும் தெளிவாக உச்சரிக்க முடியாத நிலை. ‘ஓரம் போ” என்பதை “ஓதம் போ” என்று அவர் சொல்லுவதாக இந்த மி.ம. கிண்டலடிப்பார்கள். மிமிக்ரி நடிகர் ஒருவர் கலைநிகழ்ச்சியின்போது “இங்கு கூடியிருக்கும் மக்களே!” என்ற வசனத்தை அவர் பாணியில் சொல்லி விட்டு ஜனங்களை சிரிக்க வைத்தார்.
மக்கள் திலகத்திற்கு நேர்ந்த இந்த குறைபாடு பிறவியிலேயே ஏற்பட்டதல்ல. ஒரு விபத்தின் காரணமாக ஏற்பட்ட குறைபாடு இது என்பதை எல்லோரும் அறிவர். ஒரு காலத்தில் ‘கணீரெ’ன்ற வசனம் பேசி புரட்சி செய்த மாபெரும் நடிகர் இவர். பிறப்பில் மலையாளியாக இருந்தாலும் தன் தெளிவான செந்தமிழ் உச்சரிப்பாலும், வீர வசனங்களாலும் கோடானுக் கோடி தமிழ் ரசிகர்களின் அன்பையும், பாரட்டையும் பெற்ற கதாநாயகன்.
அப்படிப்பட்டவர்களை கார்ட்டூன் கேரக்டர்களாக்கி, கிண்டலடித்து, ரசிகர்களை கிச்சு கிச்சு மூட்டுவது தேவைதானா? நினைத்துப் பாருங்கள். ஒருமுறை செய்தால் அது நகைச்சுவை. சரி போகட்டும் என்று சிரித்து மறந்து விடலாம். இல்லாததையும், பொல்லாததையும் சித்தரித்துக் காட்டுவது ‘டூ மச்’ மட்டுமல்ல ‘த்ரி மச்.’
இப்பொழுது டிவியை ‘ஆன்’ பண்ணினாலே இந்த எழவுதான். “அரைச்ச மாவை அரைப்போமா? துவைச்ச துணியை துவைப்போமா” என்ற டி.ஆர். பாடிய பாட்டை போட்டு விட்டு நிகழ்ச்சியைத் தொடங்கினால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.
அதிலும் இந்த ‘ரோபோ ஷங்கர்’ என்ற மி.ம. இருக்கிறாரே; அவருக்கு எம்.ஜி.ஆர். சிவாஜி மீது அப்படி என்ன பகையோ தெரியாது. உதட்டை பிதுக்கி, கையை மார்பிலிருந்து ஆகாயத்தை நோக்கித் தூக்கி, Flying Kiss கொடுத்து எம்.ஜி.ஆரை. வேடிக்கை காட்டுவதை ஒரு வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்.
இந்த கிண்டல் பேர்வழிகள் முதலில் டி.எஸ்.பாலையா, சுருளிராஜன், நம்பியார், லூஸ் மோகன், இதுபோன்ற சில குறிப்பிட்ட நடிகர்களைத்தான் ‘இமிடேட்’ பண்ணி வந்தார்கள். போகப் போக இவர்களது திறமை அபாரமாக வளர்ந்து விட்டது. வாழ்க மிமிக்ரி கலை!.
“எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி” என்று பாரதி ராஜா படத்தில் தலை காட்டிய அவ்வளவு பிரபலம் இல்லாத குணச்சித்திர நடிகரரையெல்லாம் போட்டு ‘மீங்கொரி’யாக வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
சமீப காலமாக நடிகர் ரகுவரன் இவர்களிடம் செமையாக மாட்டிக் கொண்டவர். ‘பாம் வைத்து விடுவேன்’ என்று ஆளாளுக்கு ரகுவரன் குரலில் பயமுறுத்தத் தொடங்கி விட்டார்கள்.
அதிலும் பாக்கியராஜ் என்றால் இவர்களுக்கு அவல் சாப்பிடுவது போல. கண்ணாடியை பதுசாக எடுத்து கழற்றி வைத்து விட்டு கையை காலை தூக்கி எக்ஸர்சைஸ் பண்ணி விட்டு போகிறார்கள். ஹ.. ஹா.. வென்று ரசிகர்களும் விழுந்து விழுந்து சிரித்து தொலைக்கிறார்கள்.
டி.ராஜேந்தர் – அதை விடச் சுலபம். “மாரி, லாரி, சாரி, பூரி” என்று அடுக்குமொழியில் வசனம் பேசிவிட்டு முடியை கோதி விட்டு தலையை சொடக்கு எடுப்பதுபோல் ஆட்டி விட்டால் போதும் கைத்தட்டல் ‘கியாரண்டி’.
சினிமா நடிகர்கள் மீது கை வைத்ததுப் போக இப்போது வைரமுத்து, பெப்ஸி உமா, பாரதி ராஜா என்று சரமாரியாக எல்லாரையும் பாய்ந்து பிறாண்டத் தொடங்கி விட்டார்கள். சில சமயத்தில் முதன்மை விருந்தினராக வரும் நபர் மெள்ளவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் மாட்டிக் கொண்டு ‘முழி முழி’யென்று கிடந்து முழிப்பார். அவரைப் போலவும் ஆக்டிக் செய்து தர்மசங்கடத்தை ஏற்படுத்தினால் முழிக்காமல் என்ன செய்வார்?
ஆண்களை மட்டும்தான் கிண்டல் செய்கிறார்களா என்றால் அதுதான் கிடையாது. எதிலும் பாரபட்சம் காட்டக் கூடாது என்ற நல்ல எண்ணத்தினால் இருக்கலாம். ‘புன்னகை அரசி’ கே.ஆர்.விஜயா சிவாஜியோடு நடித்த படத்தில் அழுதுக் கொண்டே பேசும் காட்சியை சமீப காலமாக கிளிக்காக்கி விட்டார்கள். “ என்னங்க.. உங்களைத்தானே.. அய்யோ.. கடவுளே..” என்று அழுது புலம்ப ஆரம்பித்து விட்டால் போதும் ஒரே கரோகோஷம்.
பாவம். பழம் பெரும் நடிகைகள் கண்ணாம்பா, பானுமதியைக் கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை.
இந்தக் கூட்டத்தில் அபாரத் திறமைகள் உடையவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதையும் சொல்லித்தான் தீர வேண்டும். அபிநயக் கூத்து (Miming) என்பது மிகச் சிறந்த கலைகளில் ஒன்று. உலகில் எல்லா மொழியினரும் புரிந்துக் கொள்ளக் கூடிய ஒரு ‘பேசும் படம்’ பாஷை இது ஒன்றுதான்.
அவர் பெயர் மதுரை முத்து என்று நினைக்கிறேன். ஒரு ஆள் நடனமாடுவது இருவர் ஆடுவது போலிருக்கும். “இவன் தலை கால் புரியாமல் ஆட்டம் போடுகிறான்” என்பார்களே அதுபோன்று ஒரு ஆட்டம்.
சினிமா பாடல்களை பல குரல்களில் பாடுவது, புதுமையான கற்பனைகள், ‘மோனோ ஆக்டிங்’, ‘ஸ்கிட்’, நகைச்சுவைக் கவிதைகள் இவையாவும் நமக்கு உண்மையிலேயே சிரிப்பை வரவழைக்கின்ற விஷயங்கள் மட்டுமல்ல சிந்தனையைத் தூண்டுவதாகவும் இருக்கின்றன.
நகைச்சுவை ஒரு சிறந்த மருந்துதான். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் தீமை விளைவித்து விடும். ஆரோக்கியமான நகைச்சுவையை வரவேற்பது நம் தலையாய கடமை.
ஒருவர் பிரபலம் ஆவதற்கு எத்தனையோ தடைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. உயர்ந்த நிலைக்கு வந்த பிறகு பலரது பாராட்டை பெறுகிறார். அப்படிப் பட்டவரின் ‘இமேஜை’க் குறைக்கும் வகையில் ‘ஈறை பேனாக்கி, பேனை பெருமாளாக்கும்’ செயல்கள் சற்றும் உகந்ததல்ல.
வெளிநாட்டு மேடை நிகழ்ச்சியில் மிமிக்ரி மனிதர் ஒருவர் ‘அன்பே வா’ பாடத்தில் எம்.ஜி.ஆர். பாடும் “புதிய வானம்; புதிய பூமி; இங்கு பூமழை பொழிகின்றது” என்ற பாடலை அபிநயித்துக் காட்டினார். அந்தப் படத்தில் “புதிய வானம்” என்று சொல்லுகையில் எம்.ஜி.ஆர். கையை தரையை நோக்கி சைகை காட்டுவதாகவும், “புதிய பூமி” என்று சொல்லுகையில் வானத்தைக் காட்டுவதாகவும் தவறான ஒரு தகவலைத் தந்தார். வழக்கப்படி நமது ரசிகர்கள் இந்த ஜோக்கை (?) கைத்தட்டி ரசித்தார்கள்.
இந்நிகழ்ச்சி என் மனதை நெருடிக் கொண்டே இருந்தது. இதற்காக ‘அன்பேவா’ படத்தின் சி.டி.யை எடுத்து வந்து போட்டுப் பார்த்தேன். சைகை எல்லாமே சரியாகத்தான் இருந்தது.
“ஆயிரம் பொய்யைச் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தலாம்” என்ற பைத்தியக்கார பழமொழியைப்போல எத்தனை பொய்யை வேண்டுமானாலும் சொல்லி ரசிகர்களை சிரிக்க வைக்கலாம் என்ற ‘லாஜிக்’கை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
(உண்மையைச் சொல்லி கல்யாணத்தை நடத்தி வையுங்களப்பா. யாரோ சொன்ன பழமொழியை நம்பி அநாவசியமாக மத்தவங்க மணவாழ்க்கையிலே விளையாடிடாதீங்க)
இனிமேலாவது இவர்கள் பிறர் மனதை புண்படுத்தாத வண்ணம் நகைச்சுவை புரியட்டும். Let their jokes really tickle our funny bones.
இறுதியில் மிமிக்ரி மனிதர்களிடம் ஒரு கேள்வி. எல்லாமே சிரிப்புத்தானா?
திண்ணையில் அப்துல் கையூம்
vapuchi@hotmail.com
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது ?(கட்டுரை: 21)
- வெள்ளித்திரை
- சி புஸ்பராஜா இரண்டாவது நினைவு பகிர்தலும் நூல் அறிமுகமும்
- திருச்சியில் பன்னாட்டுக் கருத்தரங்கு (டிசம்பர் 2007)
- நஸீம்
- சம்பந்தமில்லை என்றாலும் – தமிழ்நாடு-நேற்று இன்று நாளை (எடிடர்: என். முருகானந்தம்)
- எல்லாமே சிரிப்புத்தானா?
- வெடிக்காய் வியாபாரம்
- The Kite Runner – பட்டம் ஓட்டி
- காற்றினிலே வரும் கீதங்கள் – 11 சரண் புகுந்திடுவாள் !
- தாகூரின் கீதங்கள் – 22 கவிஞனைத் தேடுகிறாயா ?
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 3
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- எழுத்துக்கலை பற்றி இவர்கள் …….16 தொ.மு.சி.ரகுநாதன்
- ஒட்டுக் கேட்க ஆசை
- அகண்ட பஜனை
- அஞ்சலியிலும் சாதி துவேஷமா?
- கிழிபடும் POAக்கள்
- வார்த்தை – ஏப்ரல் 2008 இதழில்…
- பன்முக நோக்கில் திருக்குறள் – தேசியக்கருத்தரங்கம்
- கி ரா ஆவணப்பட வெளியீடு
- தமிழ் பிரவாகம் – இலக்கியப் போட்டி
- Tamilnadu Thiraippada Iyakkam
- காக்கை எச்சமிட்டும் களங்கமடையாத பாரதி சிலை
- அநங்கம் சிற்றிதழ்-மலேசியா
- சகோதரர் வஹ்ஹாபியுடன் நேசகுமார் நடத்திக் கொண்டிருக்கும் விவாதம்
- மொழியால் நிகழும் மகத்துவம் நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை- பவா.செல்லதுரை சிறுகதைகள்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 3
- சங்க இலக்கியத்தில் மேலாண்மை – முனைவர் ஆ. மணவழகன் நூல் மதிப்புரை
- சுடர்விடும் வரிகள் – பர்த்ருஹரியின் சுபாஷிதம் (தமிழாக்கம் : மதுமிதா)
- சுஜாதாவோடு..,
- சம்பள நாள்
- இரண்டு கடிதங்கள்
- மாட்டுவால்
- வளர்ப்பு
- ஜீன்களைச் சிதைத்துக் கொண்டு மீண்டும் பிற
- போய் வா நண்பனே
- கவிதைகள்
- விபச்சாரியை பெண்ணென்று ஆங்கீகரிப்பதும், சூசானும்*
- ‘தன்னுணர்வு’: பெருஞ்சித்திரனாரின் தமிழாக்கம்
- ஹிந்துக்களின் குரலை எதிரொலிக்கும் மலேசியத் தேர்தல்