யமுனா ராேஐந்திரன்
I
கீதாமேத்தா :
நீர் நிலம் நெருப்பு
1991 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான ‘கிரேக்கிங் இன்டியா ‘ ( பாக்கிஸ்தானில் ‘ஜஸ் கான்டி மேன் ‘ ) எனும் நாவலின் திரைவடிவம் தான் ‘எர்த் ‘ திரைப்படம். புத்தகம் 1947 ஆம் ஆண்டு எட்டுவயதாக இருந்த லெனி எனும் பார்ஸிக் குழந்தையின் அனுபவங்களைச் சொல்லும் சுயசரிதமாக அமைந்தது. 1999 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான 1947 எனும் இத்திரைப்படம் 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆங்கிலத் துணைத் தலைப்புக்களுடன் ‘எர்த் ‘ எனும் பெயரில் தற்போது வெளியாகியிருக்கிறது. நாவலாசிரியை பாப்ஸி ஸித்வா பாகிஸ்தானைச் சார்ந்தவர். தற்போது அமெரிக்காவில் வாழ்கிறார். இயக்குனர் தீபா மேத்தா இநதியாவைச் சார்ந்தவர். தற்போது கனடாவில் வாழ்கிறார் . தீபா பஞ்சாபைச் சேர்ந்தவர் நாவலாசிரியை லாகூரைச் சேர்ந்தவர். இப் பெண்கள் இருவரதுமே பெற்றோர்கள் பிரிவினையின் துயரத்தையும் அழிவையும் வலியையும் நேரடியாக அனுபவித்தவர்கள்.
தீபா மேத்தா சமீப காலமாக அதிகமாக தகவல் தொழில்நுட்ப ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படுபவராகியிருக்கிறார். அவரது ‘பயர் ‘ திரைப்படம் சிவசேனைத்தலைவர் பால் தாக்கரேயின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் சிவசேனைக் குண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியது. ‘நீர் ‘, ‘நிலம் ‘, ‘நெருப்பு ‘ எனும் முப்பட ( ‘டிரிலாஐி ‘) வரிசையில், முதல் படமாக ‘பயர் ‘ படத்தை அடுத்து வெளியாகியிருக்கும் படம் ‘எர்த் ‘. மூன்றாவது படமான ‘வாட்டர் ‘ படத்தின் படப்பிடிப்பு வாரணாசியில் நடந்தபோது இந்து முன்னணி குண்டர்கள் படப்பிடிப்புத் தளத்தை அடித்து நொருக்கியிருக்கிறார்கள். தமிழகத்தின் மிக முக்கியமான மறுமலர்ச்சி சினிமா இயக்குனராக அறியப்பட்ட மகேந்திரன் தீபா மேத்தாவினது படப்பிடிப்புக் குழுவினர் மீதான வன்முறையை ஆதரித்துப் பேசியிருப்பது அவரது கருத்தியல் குறித்த ஆழமான கேள்வியை அவரை நேசிப்பவர்களிடத்தே தோற்றுவித்திருக்கிறது.
இச்சூழலில் ‘வாட்டர் ‘ படத்தின் மூலக் கதை பற்றிய புதியதொரு சர்ச்சையினால் இதுவரையிலும் தீபா மேத்தாவை ஆதரித்து வந்த இடதுசாரிகள், தாராளவாத சிந்தனையாளர்கள், இலக்கியவாதிகளதும் விமர்சனத்துக்கும் தீபா ஆளாகியிருக்கிறார். வங்காளத்தின் பிரபல நாவலாசிரியரான சுனில் கங்கோபாத்யாவின் அந்த நாட்கள் ( ‘தோஸ் டேஸ் ‘)நாவலில் வரும் இரண்டு பிரதான பாத்திரங்களே தீபா மேத்தாவினதும் பிரதான பாத்திரங்கள் என்பதோடு கதைக்கருவும் தன்னுடையதே என அவர் தெரிவித்திருக்கிறார். தீபாவும் அந்நாவலை வாசித்திருப்பதாக ஒப்புக் கொள்கிறார். ஆயினும் தனது திரைப்படப் பாத்திரங்கள் 17 எனும் தீபா, சுனில் கங்கோபாத்யாவின் பாத்திரங்களோ 218 என்கிறார். ‘நாவலிலிருந்து உத்வேகம் பெறுவது வேறு; அதன் மையக் கருவைத் திருடுவது வேறு ‘ எனும் தீபா வாட்டர் படத்துக்கான உத்வேகம் நூற்றுக் கணக்காக நூல்களிலிருந்து தனக்கு வந்ததாகக் குறிப்பிடுகிறார். தனக்கு அபகீர்த்தி உருவாக்குவதாக வழக்குமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் தீபா மேத்தா. தான் கதைத்திருட்டு செய்யவில்லை என்பதில் தீபா பிடிவாதமாக இருக்கிறார்; தேவையானால் அப்படத்தைத் தயாரிப்பதை நிறுத்திவிடவும் செய்வார் என்கிறார் தீபாவின் வழக்கறிஞர் சந்தர் லால். ( ‘தி கார்டியன் ‘ : பிரைடே ரிவியூ: ஏப்ரல் 21, 2000 : லண்டன்)
வழக்குமன்றத்துக்குச் சென்றிருக்கும் இலக்கியம் குறித்த இப்பிரச்சினை தீராமல் தான் இந்தியா வரப் போவதில்லை என்றும் பட்பிடிப்பைத் தொடரப்போவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார் தீபா. கங்கோபாத்யாவின் நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரான அருணா சக்கரவர்த்தி குறிப்பிடுகிறபோது, சுனிலின் நாவல் வேதனைகளின்று முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு சித்திரத்தை வழங்குகிறது. தீபாவின் சித்தரிப்பு, இறுகிப் போன ஒரு சமூக அமைப்பைச் சித்தரிக்கிறது என்கிறார். ‘வாட்டர் ‘ படத்துக்காக மொட்டை அடித்துக் கொண்டதற்காக பிறப்பில் முஸ்லீமான ஸப்னா அஸ்மி மீது இந்திய இஸ்லாமியத் தலைவர்கள் ‘பத்வா ‘ விதித்திருக்கிறார்கள்.
இயக்குனர் மகேந்திரனும் துக்ளக் சோவும் நடத்திய உரையாடலில் ( ‘துக்ளக் ‘ இரு இதழ்கள் : பிப்ரவரி 20000) தீபா மேத்தாவின் கதையில் வருகிறமாதிரி பிராமண விதவைகள் மொட்டையடிக்கப்படடு துன்புறுத்தப்ப பட்டதோடு விபச்சாரத்தில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் இல்லை என இருவருமே தெரிவிக்கிறார்கள். ‘பரீக்ஷா ‘ ஞானி அதற்கான சான்றுகளை நிறுவி மறுப்புக் கட்டுரையும் எழுதியிருக்கிறார்.. வாரணாசியில் படப்பிடிப்புத் தளம் நொறுக்கப்பட்டபின்னால் மேற்கு வங்காள மார்க்ஸிஸ்ட் அரசு படப்பிடிப்பு நடத்த பாதுபாப்புத் தருவதாகச் சொன்ன பிறகு, தீபா மேத்தாவுக்கு ஆதரவாக கல்கத்தா நகரில் வாழும் 1500 விலைமாதர்கள் ஊர்வலமொன்றை நடத்தியிருக்கிறார்கள். தம்மில் பலரும் தீபா மேத்தா படப் பாத்திரங்கள் போலவே விபச்சாரத்துக்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் என்கிற நிதர்சனத்தையும் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இரண்டாயிரமாண்டு மார்ச் மாதம் இந்தியாவுக்கு விஐயம் செய்த தஸ்லீமா நஸ்ரீன் தீபா மேத்தாவுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியிருக்கிறார். ‘பயர் ‘ படமும் சரி, ‘வாட்டர் ‘ படமும் சரி, இவ்வளவு சர்ச்சை ஏற்படுத்த காரணம் தான் என்ன ? இந்துப் பெண்களின் பாலுறவு ஒடுக்குமுறையும் போலி மதிப்பீடுகளும் தொடர்பாக இப்படங்கள் விசாரணை செய்வதுதான். ‘பயர் ‘ படம் இரண்டு இந்துப் பெண்களுக்கிடையிலான பாலுறவைச் சொல்ல, ‘வாட்டர் ‘ படம் பாலுறவு விளைதலை ஒடுக்கியதான மூர்க்கமாக விபச்சாரத்துக்குத் தள்ளியதான நடைமுறையை விசாரிக்கிறது. இது தான் மிகப் பெரிய கோபத்தை இந்து அடிப்படைவாதிகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
காலனியாதிக்க எதிர்ப்பு எனும் வகையில் மேற்கத்திய ஆதிக்க மதிப்பீடுகளுக்கான எதிர்ப்பு எனும் போர்வையில் கருத்தியல் ரீதியிலான வலதுசாரிகள், இடதுசாரிகள் போல் கோஷம் எழுப்ப முனைந்திருக்கும் நேரம் இது. இடதுசாரிகளின் வலதுசாரிமுகம் வெளிப்படும் நேரமும் இது. தாராளவாதியான மகேந்திரன் போன்ற கலைஞர்கள் தீபா மேத்தா மீதான வன்முறையை நியாயப்படுத்துவதும் முன்னைய டிராட்ஸ்கியவாதியான ‘இந்தியா டுடே ‘ பத்தி எழுத்தாளர் ஸ்வப்பன்தாஸ் குப்தா போன்றவர்கள், வலதுசாரிப் பத்திரிகையாளர் அருண்சோரிக்கு வக்காலத்து வாங்கும் பொருட்டு இடதுசாரி வரலாற்றாசிரியர்களை வசை பாடுவதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மும்மாத தமிழ் சித்தாந்தஇதழான – பிராக்கிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘வொர்ல்ட் மார்க்ஸிஸ்ட் ரிவியூ ‘வின் தமிழ் பதிப்பாக வெளிவந்து கொண்டிருந்த – மார்க்சீய ஒளியின் முன்னாள் ஆசிரியரான ஆ.சீனிவாசன், லால் அத்வானியின் முன்னிலையில் தொழிலாளிகளின் பாசறை என அறியப்பட்ட தமிழக கோயமுத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பூரில், ‘இந்திய வகை மார்க்ஸீயம் பாரதீய ஐனதாவின் கருத்தியலே ‘ என முழங்கி பாரதீய ஐனதாவில் இணைந்து கொண்டதும் இதனது அரசியல் விளைவுகள் தான்.
மதவழி தேசியம் குறித்தும் அதையொட்டிய தேசபக்தி குறித்தும் அதன் விளைவான ஐாதியம் குறித்தும் மிக நுணுக்கமாக விமர்சனம் செய்து கொள்ளவேண்டிய சூழ்நிலை இன்று இடதுசாரிகளின் முன் எழுந்து நிற்கிறது. மதவழி தேசியத்திற்கு மானுட விடுதலைக்கான எதிர்கால வெளியில் எத்தகைய இடமும் இருக்கமுடியாது என்பதை வரலாறு நிரூபித்துவிட்டது. பாசிசமும் நிறவெறியும் மத அடிப்படைவாதமும் தேசியமும் மனித குலத்தின் இரத்தத்தில் கை நனைத்த குரூரம் ெஐர்மனி தொடங்கி, ஈராக், ருவாண்டா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கொசவா, இந்திய பாப்ரி மஐுத் என சான்றாதாரமாகி நிற்கிறது..
இத்தகையதொரு வரலாற்றுச் சூழலில்தான், மதம், தேசியம், பெண் உடலின் மீதான எல்லை கடந்த வன்முறை போன்றவை குறித்த முப்படங்களின் பிரவேசம் நிகழ்கிறது. உலகெங்கிலுமிருந்த இடதுசாரி, மற்றும் தாராளவாத சினிமா விமர்சகர்கள் ‘பயர் ‘ படம் பற்றி இரு வகையிலான விமர்சனங்களை முன் வைத்தார்கள். முதலாவதாக இப்படம் ‘பாலிவுட் ‘ சினிமாவின் ‘ரொமாண்டிஸிஸ ‘ வகைச் சினிமாவிலிருந்து விடுதலை பெறவில்லை என்பதும் அத்தோடு சமப்பாலுறவு அரசியலைப் புரிந்து கொள்ளாத படம் என்றும் விமர்சிக்கப்பட்டது. இரண்டாவதாக, இப்படம் இதுவரையிலும் இந்தியச் சூழலில் பேசப்படாத பிரச்சினையைப் பேசியிருப்பதால் வரவேற்கப்படவேண்டும எனச் சொல்லப்பட்டு இப்படத்துக் கான இந்து அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலுக்கு எதிராக இப்படத்திற்கான வெளியீட்டுச் சுதந்திரத்திற்கான தார்மீக ஆதரவு தரவேண்டும் எனப் பார்க்கப்பட்டது.
‘பயர் ‘ படமும் இன்னும் படப்பிடிப்பே தொடங்காத ‘வாட்டர் ‘ படமும் ஏற்படுத்திய சர்ச்சையில் தகவல் தொழில்நுட்ப சாதனங்களால் அதிகம் கவனிக்கப்படாத படமாக அதிகம் பேசப்படாத படமாக ஆகிவிட்ட படம்தான் ‘எர்த் ‘ திரைப்படம். ‘பயர் ‘ படம் குறித்து காட்டமான அபிப்பிராயங்கள் கொண்டிருந்த எனக்கு ( ‘கனவு ‘ : தமிழ்நாடு : மார்ச 1997; ‘ஈழமுரசு ‘: பிரான்ஸ் : ஐனவரி 1997 ) அதிர்ச்சியளிக்கும் விதமாக பரவசப்படுத்திய படமாக அமைந்தது ‘எர்த் ‘ திரைப்படம். மனத்தை மிகவும் அலைக்கழித்த படமாக மிகுந்த மனக்கொந்தளிப்பை ஏற்படுத்திய சமநிலை கொண்ட குழந்தைக்காவியமாக ‘எர்த் ‘ படம் எனக்கு பாதிப்பைத் தந்தது.
II
பிரிவினை :
குர்தாஸ்பூர் கல்கத்தா லாகூர்
‘லேனி பேபி ‘ எனும் போலியோ நோயினால் கால் ஊனமுற்ற எட்டுவயதுப் பெண்குழந்தையின் அனுபவத்தனூடே தொடர்ந்து அக்குழந்தை முழு பெண்ணாக வளர்ச்சியடையும் சமகாலம் வரை கதை நிகழ்கிறது. அன்பு, துரோகம், வன்முறை, பொறாமை, பாதுகாப்பின்மை, மதக்குருதி போன்றவற்றைக் கற்றுக் கொண்ட பெண்குழந்தையொன்றின் நினைவுகள்தான் ‘எர்த் ‘ திரைப்படம். கலைப் படைப்புக்களில் உன்னதமானவைகள் என நாம் கருதும் அனைத்துமே மானுட வாழ்வின் சோகமும் துயரமும் குறித்தவைதான்.
அது தாஸ்தயாவ்ஸ்க்கியின் ‘கரமசோவ் சகோதரர்கள் ‘ ஆயினும், ெஐயகாந்தனின் ‘ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் ‘ ஆயினும், பாலுமகேந்திராவின் ‘அழியாத கோலங்கள் ‘ ஆயினும், செர்ஐி ஜஸன்டானின் ‘பாட்டல்சிப் போதம்கின் ‘ ஆயினும், அகிரா குரஸோவாவின் ‘செவன் சமுராய் ‘ ஆயினும், தஸ்லீமா நஸ்ரீனின் ‘அம்மாவின் மரணம் ‘ கவிதை ஆயினும், லாங்க்ஸ்டன் ஹூக்ஸின் ‘தற்கொலை குறித்த குறிப்பு ‘ கவிதையாயினும், இதுவே பொது உண்மையாக இருக்கிறது. திமித்ரி ஹென்றி டாச்சரின் மரணம், செங்குத்தான படிகளில் இறங்கும் குழந்தைவண்டி, சமுராய் வீரர்களின் மரணமேடுகள், அம்மாவின் உயிரற்ற உடல், முத்தம் கேட்கும் நதி போன்ற சில பிம்பங்கள் நினைக்கும்தோறும் நமது ஆன்மாவை அலைக்கழிப்பதாக இருப்பதும் இதன் பொருட்டுத்தான். லெனி எனும் தத்தித் தத்தி நடக்கும் சின்னஞ்சிறு பெண்ணும் அப்படித்ததான் நடந்து முடிந்த ஒரு மாபெரும் வரலாற்றுச் சோகத்தின் சாட்சியமாக நினைக்குந்தோறும் நம்மை அலைக்கழிக்கும் தன்மை கொண்டவளாக இருக்கிறாள்.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பத்து லட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பதின்மூன்று லட்சம் மக்கள் நினைவுகளையும் உறவுகளையும் விட்டு இடம் பெயர்ந்தார்கள். இன்றளவிலும் உலக வரலாற்றில் இதுவே மிகப்பெரிய இடப்பெயர்வாக இடம் பெறுகிறது. லெனி எனும் பெண்குழந்தை இதனது சாட்சியமாக இருந்திருக்கிறாள். அரசியல்வாதிகள் ஐவகர்லால் நேருவும் முகமதலி ஐின்னாவும் தமது சுதந்திரதினப் பிரகடனத்தை வானொலியில் விடுதலை எனச் சொல்லிக் கொண்டிருந்த அதே சமவேளையில்தான் இந்துக்களால் சூறையாடப்பட்டு சாக்குப்பைகளில் அறுக்கப்பட்ட முஸ்லீம் பெண்களின் மார்புகளும் வெட்டிச் சிதைக்கப்பட்ட உடல்களும் இந்தியாவின் குர்தாஸ்பூரிலிருந்து பாகிஸ்தானின் லாகூர் ரயில் நிலையம் போய்ச் சேர்ந்தன. முஸ்லீம்களால் வெட்டிச் சிதைக்கப்பட்ட இந்துக்களின் பிணங்கள் இந்தியாவின் பஞ்சாபின் நகரங்களுக்குப் போய்ச்சேர்ந்தன.
பிரிவினையால் அதிகம் பாதிக்கப்படட்ட மாநிலங்கள் வங்காளமும் பஞ்சாபும் தான். பாதிக்கப்பட்ட மக்கள் இம்மாநிலங்களைச் சேர்ந்த முஸ்லீம்களும் இந்துக்களும் சிக்கியர்களும்தான். கல்கத்தா நகரமும் அமிர்தசரசும் லாகூரும்தான் இந்த நரவேட்டையின் மைய நகரங்களாக இருந்தன். கல்கத்தாவில் நடந்ததை கமல்ஹாஸன் ‘ஹே ராமி ‘ல் காட்சிப்படுத்தியிருக்கிறார். பஞ் சாபில் நடந்ததை குஷ்வந்த் சிங்கின் படமான ‘டிரெயின் டு பாகிஸ்தான் ‘ திரைப்படம் காட்சியாக்கியிருக்கிறது. லாகூரில் நடந்ததை ‘எர்த் ‘ காட்சிப்படுத்தியிருக்கிறது.
படக் கதையின் சமநிலை பாத்திரத் தேர்வுகளின் முன்னோக்கிய தன்மை என்கிறபோது பிற இரண்டு படங்களும், ‘ஹே ராம் ‘படத்திலிருந்து வெகு தூரம் முன்னோக்கி நிற்பதாக அமைகிறது. பெண்ணுடல் மீதான பாலியல் பலாத்காரத்தை ஒரு பக்கச் சார்பாகச் சித்தரித்திருக்கிறது ‘ஹே ராம் ‘ படம். மத அடிப்படைவாதிகளும் வெறியர்களும் இரண்டு பக்கத்திலும் வெறியாட்டம் ஆடினார்கள் என்பதை மிகுந்த சமநிலையுடன் சொல்லியிருக்கிறது ‘எர்த் ‘. திரைப்படம். ‘டிரெயின் டு பாகிஸ்தான் ‘ இன்னும் மேலே போய் தனது கதா பாத்திரங்களில் ஒன்றாக கம்யூனிஸ்ட் சோசலிஸ்ட் ‘யுனிடி சென்டரி ‘ன் நடவடிக்கையாளர் ஒருவரைத் தேர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட கலவரப் பிரதேசத்தில் நடைபெற்ற வகுப்புவாதக் கொலைகளின் பின்னணியை அந்தக் கிராமத்தில் நிலவிய நிலப்பிரபுத்துவ உறவுகளின்வழி பார்க்க முயல்கிறது அப்பாத்திரம். கந்துவட்டிக்காரர் ஒருவரின் கொலை மதப்பரிமாணம் கொள்வதையும் படம் விசாரணை செய்கிறது. ‘ஹே ராமி ‘ன் கல்கத்தா பற்றிய சித்தரிப்பு கோபால் கோட்ஷேயின் உணர்ச்சிவசமான சித்தரிப்புக்கு மேல் போகவில்லை. ‘எர்த் ‘ படம் இக்கொலைகளின் பின்னுள்ள சமூகக் காரணங்களை அணுக முயல்வதோடு இவைகளுக்கான தனிநபர் உளவியல் காரணங்களையும் அமீர்கான், நந்திதா போஸ் பாத்திரங்களுக்கிடையிலான உறவை முன்வைத்து அணுகுகிறது.
‘எர்த் ‘ படத்தின் பிரதான பாத்திரங்கள் எட்டுப் பேர்தான். எட்.டுவயதுப் பெண்குழந்தை லெனி ( மையா சேத்னா), அவளது ஆயாவான இந்து இனப்பெண் சாந்தா ( நந்திதர் தாஸ்), அவளது தாயான பன்ட்டி ( கிது கித்வானி), அக்குழந்தையின் கனவு நாயகனும் ஜஸ்காரனும் முஸ்லீமுமான தில் நவாஸ் ( அமீர் கான்), அவளது ஆயாவின் காதலனான ஹஸன் ( ராகுல் கன்னா), அவள் வீட்டு சமையல்காரரான இமாம் தின் ( குல்புஸன் கர்பந்த்தா), அவளது பக்கத்து வீட்டு சீக்கிய நண்பரான சிங் ( குல்ஸன் குரோவர்), அவளது உறவுக்காரப் பையனும் சமவயதுக்காரனுமான இதி போன்றவர்களே அவர்கள்.
இவர்களைச் சுற்றியதுதான் அவளது உலகம். இவர்களோடு அவள் லாகூரின் பூங்காவுக்குப் போவாள். மிருகக் காட்சிச் சாலையைக் கண்டு பயப்படுவாள். சாந்தாவுக்கும் ஹஸனுக்கும் இடையிலான காதலுக்கு ஒற்றைச் சாட்சியமாக இருப்பாள். தனது சமவயதுச் சிநேகிதிக்கு கிழவனுடன் திருமணம் நடக்கும்போது அதிர்ச்சியடைவாள். ஊனமுற்ற தன்னை தில் நவாஸ் மணந்து கொள்ள வேண்டுமென குழந்தைத்தனமாக ஆசைப்படுவாள். தில் நவாஸ் தனது மணந்து கொள்ளும் ஆசையைச் சாந்தாவிடம் சொல்லும்போது மணமுடைந்து போகிற குழந்தையும் இவள்தான்.
சாந்தாவுடன் லாகூர் பூங்காவுக்கு வரும் லெனிக்கும் நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள். வீட்டு வேலைக்காரியான சாந்தாவைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். இயல்பாக அவள் மார்புச் சேலை விலகிக் கிடப்பதை பார்க்கும்போது மெளனம் காக்கிற நண்பர்கள் அவர்கள். சீக்கியன், முஸ்லீம், இந்து, பார்ஸி என அனைத்து மதத்தினரும் பங்கு பெறும் அவைக்கூட்டம் அந்தப் பூங்காவில் அடிக்கடி நடக்கும்.
1947 ஆம் ஆண்டு 15 ஆம் தேதி நள்ளிரவிற்குப்பின், இவர்களது வாழ்வு முற்றிலும் மாறப் போய்விடுகிறது. தில் நவாஸ் , தேசப்பிரிவினை ஏற்பாட்டின்படி குர்தாஸ்பூரிலிருந்து ரெயிலின் மூலம் லாகூருக்கு வரவிருக்கும் தனது தங்கையை வரவேற்க ரயில்நிலையம் போகிறான். நான்கு சணல் சாக்குகள் நிறைய அறுக்கப்பட்ட பெண்மார்புகளுடன் பிணங்களுடன் ரயில் வந்து சேர்கிறது. லாகூர் நகரிலுள்ள இந்துக்கள், முஸ்லீம்களை உயிருடன் வாகனங்களில் பிணைத்து உடல்களை பிளந்து கொல்கிறார்கள். சீக்கியர்கள் வாள்களால் வெட்டிச்சாய்கிறார்கள். தீயணைக்க வரும் வாகனத்திலிருந்து தீயணைப்பு வீரர்களாக வந்த முஸ்லீம்கள் தண்ணீருக்குப் பதிலாக பெட்ரோலை இந்துக் குடியிருப்புக் கட்டிடங்களில் தெளித்துவிட்டுச் செல்கிறார்கள்.
லாகூர் பூங்காவின் நண்பரகளுக்கிடையில் கூண்டை உடைத்து வெளிவரக் காத்திருந்த மதவெறிச் சிங்கமான மிருகம் கூண்டை உடைத்து வெளியேற்ிவிட்டதற்குச் சாட்சியமாக நண்பர்களுக்கிடையிலேயே கொலைகள் இடம்பெறுகிறது. ஹஸன் சாந்தாவோடு அமிர்தசரசுக்கு வெளியேறி மதம் மாறி திருமணம் செய்ய உறுதிமொழி கொடுக்கிறான். அன்றிரவில் அவர்களுக்கிடையில் நிகழும் உடல் உறவை நேரில் பார்த்தவிடும் தில் நவாஸூக்குள் பொறாமையும் வெஞ்சினமும் கொழுந்துவிட்டெறிகிறது. சாந்தாவை மணந்து கொள்ளக் கேட்டபோது, முன்தினம் தான் சாந்தா மறுத்திருந்தாள். சீக்கியக் குடும்பமொன்று அமிர்தசரசுக்கு தப்பிச்செல்ல ஏற்பாடு செய்து விட்டுத்திரும்பும் ஹஸன் வெட்டிக் கொல்லப்படுகிறான்.
லெனியின் வீட்டுக்கு வரும் முஸ்லீம் கும்பல் அனைத்து இந்துக்களையும் தம்மிடம் ஒப்படைக்குமாறு கேட்கிறது. அல்லாவின் மீது சத்தியமாக இந்துக்கள் யாரும் இல்லை என்கிறார் இமாம் தின். இருந்த ஒரு குடும்பம் இஸ்லாமுக்கு மாறிவிட்டது என்கிறார். சாந்தாவைக் கேட்கிறார்கள். லெனியும் தாயும் தின்னும் சாந்தா வெளியேறிப் போய்விட்டதாகச் சொல்கிறார்கள். கும்பல் நம்புவதாக இல்லை. தில் நவாஸ் அங்கே வருகிறான். லெனியின் கனவு நாயகன் தில் நிவாஸ். லெனிக்கு விளையாட்டுக் காட்டிய ஜஸ் வாங்கித்தந்த சாந்தா ஆயாவை மணந்து கொள்ள விரும்பிய தில் நிவாஸ். ‘சாந்தா ஆன்ட்டியை நான் காப்பாற்றுகிறேன்; சாந்தா ஆன்ட்டிக்காக நான் எதையும் செய்வேன் என்பது உனக்குத் தெரியும் தானே ? ‘ என்கிறான் லெனியிடம் தில் நிவாஸ். லேனியைக் கையிலேந்தி தன் மார்போடு அணைத்தபடி கேட்கிறான் தில்நிவாஸ்.
தில் நிவாஸின் காதருகில் வாஞ்சையுடன் சென்று, ‘சாந்தா ஆன்ட்டி வீட்டுக்குள் மறைந்திருக்கிறாள் ‘ என்கிறாள் குழந்தை. குழந்தையைக் கீழிறக்கிவிட்டு கும்பலைப் பார்த்துத்திரும்பி, ‘சாந்தா உள்ளே இருக்கிறாள் ‘ என்று சொன்னபடி துாரத்தில் போய் தரையில் அமர்ந்து சிகரெட்டைப் பற்றவைக்கிறான் தில் நிவாஸ். லெனி கதறுகிறாள். வீட்டிலிருந்து கதறக்கதற வெளியே இழுத்துவரப்படும் சாந்தா தில் நிவாஸ் ஓட்டுநர் இருக்கையில் தயாராக இருக்கும் வண்டியில் ஏற்றப்பட்டு, எங்கெங்கும் ஓலம் நிறைய சாந்தா கும்பலான ஆண் உடல்களுக்குள் அழுந்தி மறைய வண்டி விரைகிறது.
இலையுதிர் காலம். பிரிட்டாஸ் சாம்ராஜ்யத்தின் சிலைகள் சில வீழ்ந்து கிடக்க, பிரிட்டாஸ் அரசியின் சிலை அலங்கரித்த அந்தப் பழைய லாகூர் பூங்காவின் சிதைந்த சிலையொன்றின் பீடமொன்றில் அமர்ந்தபடி, தான் கற்றுக் கொண்டவையும் இழந்தைவையும் குறித்த நினைவு கூரலுடன் தத்தியபடி ஊனமுற்ற காலுடன் எழுந்து நடக்கத் தொடங்குகிறாள் இப்போது வளர்ந்த பெண்ணாகிவிட்ட லெனி.
III
இந்தியாவை உடைத்தல் :
வரலாறு நாவல் திரைப்படம்
தில் நவாஸினால் வஞ்சகமாக இழுத்துச் செல்லப்படும் சாந்தா பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகிறாள். தில் நவாஸினால் திருமணத்துக்கு உட்படுத்தப்பட்டு பிற்பாடு நாட்டியக்காரி ஆகிறாள். பிற்பாடு இந்தியாவுக்குத் தப்பிச் செல்கிறாள். அவளைத் தொடர்ந்து தில் நவாஸூம் இந்தியாவுக்குள் மறைகிறான் என நாவல் முடிகிறதாயினும் திரைப்படம் சாந்தாவின் கடத்தலுடன் முடிவடைகிறது. ‘டிரெயின் டு பாகிஸ்தான் ‘ நாவலை எழுதிய குஷ்வந்த் சிங் இந்தியப் பிரிவினை குறித்த நாவல்களில் முதல்தரமான நாவல்களில் ஒன்று என இந்நாவல் குறித்துச் சொல்லியிருக்கிறார். ஐஸ்வந்த் தால்வியின் ‘தமஸ் ‘ நாவலும் இந்தியப் பிரிவினை பற்றிப் படமாக்கப்பட்ட இன்னொரு நாவலாக இருக்கிறது.
இந்த நாவல் தன்னை அதிகம் பாதித்ததற்கான காரணம், இதனது பார்ஸிக் குழந்தையின் வழியிலான பார்வைதான் என்கிறார் தீபா மேத்தா. யுார் இந்த பார்ஸிக்கள் ? இவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் ? ஆறாம், மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளில் பெர்ஸியாவில் முஸ்லீம் ஆட்சியாளர்களின் மனித வேட்டைக்குத் தப்பி இந்தியா வந்தவர்கள். இஸ்லாமியர்கள் அங்கு வருவதற்கு முன்பாக பெர்ஸியாவில் வாழ்ந்தவர்கள். கடவுளின் இரட்டைத் தன்மையை நம்புகிறவர்கள். நல்லவற்றின் கடவுள் என்றும் தீயவற்றின் கடவுள் என்றும் கடவுளிடம் இரட்டைத்தன்மையைக் காண்கிற இவர்கள் இறுதியில் நல்லவற்றின் கடவுள் வாகை சூடுவார் என்றும் நம்புகிறவர்கள். இவர்கள் பற்றிய ஒரு கதை நாவலிலும் அதே வகையில் திரைப்படத்திலும் வருகிறது. தாய் மகளுக்குச் சொல்லும் அக்கதையில் சொல்கிறாள்: ‘இந்தியாவை நோக்கிக் கலத்தில் வந்து கொண்டிருந்த பார்ஸி அகதிகளைக் கடலிலேயே சந்திக்கும் இந்திய அரசனின் பிரதிநிதி ஒருவன், தான் கொண்டுவந்த பால் நிரம்பிய கோப்பையைக் காட்டி, ‘ஏற்கனவே இந்தியா நிரம்பி வழிகிறது, உங்களுக்கு இடமில்லை ‘ எனச் சொல் கிறான். அங்கே இருந்த அகதி மக்கள், ‘தம்மிடமிருந்து சர்க்கரையை அந்தப் பாலில் கலக்கி நாம் இனிப்புப்போல் இந்தியமக்களில் கரைவோம் ‘ எனச் சொன்னார்கள் ‘ என்கிறாள் அம்மா.
பார்ஸிக்களும் கிறித்தவர்களும்தான் இந்தத் தாக்குதலில் வன்முறைக்கு ஆட்படாதவர்கள். இவர்கள் இந்தக் கலவரங்களிற் சார்புநிலை மேற்கொள்ளாததும் அதற்கான காரணங்களிலொன்றாகும். கதையில் இடம் பெறும் லெனியின் தோட்டக்காரரான தீண்டத்தகாதவர் முஸ்லீம் மதத்திற்கு மாறியதின் மூலம் தாக்குதலினின்று தப்பிக்கிறார். அவரது இளம் மகள் வயதுமுதிர்ந்த கிறிஸ்தவருக்கு மணமுடிப்பதால் தப்பிக்க்ிறாள். அவ்வீடடிடல் வாழும் பிறிதொருவர் கிறிஸ்தவமதத்திற்கு மாறுவதால் தப்பிக்கிறார். சாந்தாவை மணமுடிப்பதாகச் சொல்லும் ஹஸன் தான் அவளோடு இந்தியா வந்து இந்துவாக மாறுகிறேன் எனச் சொல்கிறான். மத மாற்றம் என்பது இங்கு இரண்டு எல்லைகளிலும் உயிர் வாழ்தல் எனும் நெருக்கடியில்தான் மேற்கொள்ளப்படுகிறது.
சசிதாருர் போன்ற விமர்சகர்கள் இந்நாவலை ெஐர்மனியின் பாசிச காலகட்டத்து மனித அவலங்களை நாவல்களை வெளிப்படுத்திய நாவல்களோடு ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். ‘மேற்கத்திய எழுத்துக்களோடு ஒப்பிடுகிறபோது கே.ஏ.அப்பாஸ், ஐஸ்வந்த் தால்வி, குஷ்வந்த்சிங், ருஸ்டி, ஸித்வா போன்ற ஒரு சிலர்தான் பிரிவினை குறித்த குறிப்பிடத்தக்க நாவல்களை எழுதியிருக்ிறார்கள் ‘ என்கிறார் தாருர்.
இந்நாவலும் சரி, திரைப்படமும் சமகால நோக்கில் இன்னொரு வகையிலும் முக்கியத்துவமுள்ளதாகிறது. இடம்பெயர்ந்த அகதிகள் எதிர்கொள்ளும் தீராத சோகமும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின் பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலமும் தாய்மார்களின் மனச்சிதைவும் மிகப்பெரிய பிரச்சினையாகியிருக்கிறன, இன்று. கொசவாவில் மட்டும் 25000 பேர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு குழந்தைப்பேறு நிலைக்கு வந்திருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. படத்தின் ஒரு காட்சியில் பாகிஸ்தானுக்குள் இடம்பெயர்ந்திருக்கும் முஸ்லீம் அகதிகளின் குடியிருப்பைப் பார்க்கப் போகிறார்கள் லெனியும் அவளது சமவயதுத் தோழனான இதியும். இதியிடம், ‘ ‘ரேப் ‘ என்றால் என்ன ? ‘ என்று கேட்கிறாள் லெனி. தான் ஒரு நாள் அவளுக்கு அதைக் காண்பிக்கிறேன் என்கிறான் இதி. அகதிக்குடியிருப்பில் இருக்கும் ஒரு சிறுவன், தனது தாய் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபின் துாக்கில் தொங்கியதைத் தான் பார்த்ததை லெனிக்கும் இதிக்கும் விவரிக்கிறான். பங்களாதேஷ் பிரிவினையின் இடப்பெயர்வின் போதும் ஏற்படும் அகதிகளின் சோகத்தையும் இவ்விதம் தனது ‘வஸ்துகாரா ‘ படத்தில் பதிவு செய்திருக்கிறார் மலையாள இயக்குனர் அரவிந்தன்.
நுாற்றுக் கணக்கில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் நிலையிலிருந்து தப்பிவரும் ஈழத்தமிழ் அகதிப்பெண்கள், தமிழக காவல்துறையினரின் பாலியல் பலாத்காரத்துக்கு இரையாகும் செய்தியும் இதே தன்மையான வரலாற்று அவலம் கொண்டதுதான். இவ்வகையில் உலகெங்கிலும் இருக்கிற அகதி மக்களைக் குறித்த ஆழ்ந்த சிந்தனையையும் இப்படம் நமக்குள் எழுப்புகிறது.
உலகெங்கிலும் இந்நாவல் இலக்கிய விமர்சகர்களிடம் பெற்ற அற்புதமான மதிப்பீடுகளைப் பார்க்கும்போது, இத்திரைப்படம் அத்தகைய வரவேற்பைப் பெறாததான, பரபரப்பு அரசியற் சூழல் துரதிருஷ்டவசமானது. நாவல் முழுக்கவும் வரும் பாத்திரங்கள் அனைவருமே தொழிலாளி வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் நாற்பதுகளில் நிகழும் இந்த நாவலின் காலநிகழ்வின்படி ஆங்கிலத்தில் திரைக்கதை சொல்வது பொறுத்தமாக இருக்காது என்பதால் இந்நாவலை இந்தியில் மொழிபெயர்த்துப் படமாக்கினேன் என்று குறிப்பிடுகிறார் தீபா. இந்நாவலின் கதை மூன்று காரணங்களுக்காக தன்னைக் கவர்ந்தது என்கிறார் தீபா. முதலாவதாக, தேசம், தேசியம் போன்ற கருத்தியல்கள், நேற்றுவரை சகோதரர்களாக இருந்தவர்களுக்கிடையில் எவ்வாறாக புறவகைத் தாக்கமாக மிருகநிலைக்கு இட்டுச்செல்கிறது என்பதை இந்நாவல் பேசுகிறது. இரண்டாவதாக, ஆண்களின் தீர்மானங்களால் மேற்கொள்ளப்படும் அரசியல் முடிவுகள் எவ்வாறாக எப்போதுமே பெண்களின் உடலின் மீதான வன்முறையாகவே பரிமாணம் பெறுகிறது என்பதையும் இந்நாவல் பேசுகிறது. மூன்றாவதாக, குழந்தமையும் அப்பாவித்தனமும் எவ்வாறாக அரசியல் சழூகக் காரணங்களால் குழந்தைகளிடமிருந்து விடைபெற்றுப்போகிறது என்பதை இந்நாவல் மிகக் கூர்மையாகச் சித்தரித்திருக்கிறது என்கிறார்.
இந்நாவலின் மிகமுக்கியமான அம்சமான குழந்தைகளின் உளவியல் குறித்த மானுடப்பரிமாணம் திரைப்படத்திலும் உள்ளபடியே காப்பாற்றப்பட்டிருக்க்ிறது பாலியல் விழிப்புணர்வு தோன்றும் நிலையில் பெண்குழந்தையின் மன உணர்வுகள் படத்தில் ஒரு கவிதையின் மெளன அர்த்தத்துடன் சொல்லப்பட்டிருக்கிறன.
போலியோ நோய்க்கு உட்பட்ட அப்பெண்குழந்தையை, அவளது தோழியும் கிழவனை மணந்து கொள்பவளுமான சிறுமி, ‘நொண்டியான உனக்கு மணந்து கொள்ள மாப்பிள்ளை கிடைக்குமா ? ‘ எனக் கேட்கிறபோது, லெனி தான் பூங்காவில் சந்திக்கும் தனக்குத்தெரிந்த அனைத்து ஆண்களது பெயரையும் வரிசையாகச் சொல்கிறது. தில் நிவாஸ் தன்னை மணந்து கொள்ளச் சொல்லி சாந்தாவைக் கேட்க, அவள் மறுக்கும் தருணத்தில் இக்குழந்தை, ‘நான் உன்னை மணந்து கொள்கிறேன் ‘ என்கிறாள். ஹஸனைச் சந்திக்க தன்னுடன் லெனியை அழைத்துச் செல்லும் சாந்தா, லெனியைக் கொஞ்சம் தூரத்தில் இருக்கச் சொல்லிவிட்டபின், இருவரும் ஆரத்தழுவி முத்தமிடுவதை குறுகுறுப்புடனும் மிகுந்த சங்கடத்துடனும் ஏக்கத்துடனும் துயரத்துடனும் பார்க் கிறாள் குழந்தை. குழந்தையை வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டு ஹஸனும் சாந்தாவும் சாந்தாவின் குடியிருப்பில் உடல் உறவில் ஈடுபடுவதை திரும்பிவந்து கண்ணாடி ஐன்னலின் வழி பார்க்கிறாள் லெனி; அடுத்த ஐன்னலில் இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் தில் நவாஸின் பார்வையை நேரடியாக எதிர்கொள்கிறாள். இவ்வாறாக மிக ஆதாரமான ஒரு விழிப்பு குறித்த பிரச்சினையை குழந்தையின் மனத்தில் அவளுக்கிருக்கும் ஊனம் குறித்த தனிமையுணர்வுடன் இணைத்து மிகவும் உள்ளார்ந்து பார்க்கப்பட்டிருக்கிறது. இக்காட்சிகள் அனைத்துமே திரைப்படத்தில் மிகுந்த மேதமையுடன் காட்சிகளாகியிருக்கின்றன.
நடிகர்கள் அனைவருமே மிகுந்த சிரத்தையுடன் நடித்திருக்கிறார்கள். இந்திய வியாபார சினிமா நடிகர்களில் பெரும்பாலுமானவர்கள் தொழில்முறையில் சரியான வாய்ப்பும் கதையும் அமையுமானால், அழகாக நடிக்கக்கூடியவர்கள் என்பதற்கான உதாரணங்களாக, டிம்பிள் கபாடியா ( கல்பனா லகமியின் படம், மற்றும் கோவிந்த் நிஹ்லானியின் ‘திருஷ்டி ‘ படம்), மனீஷா கொய்ராலா ( ‘பம்பாய் ‘, மற்றும் ‘1947 எ லவ் ஸ்டோரி ‘), ஊர்மிளா ( ‘சத்யா ‘), சங்கவி ( ‘பாரதிகண்ணம்மா ‘) போன்ற நடிகைகள் இருக்கிறார்கள். இப்படத்தில் அமீர் கான், தில் நவாஸாக அற்புதமாக நடித்திருக்கிறார். கறுப்பு நிறம் நம்மை மெய்மறக்கச்செய்யும் அழகு படைத்தது என்பதை தி.ஐானகிராமனின் வார்த்தைகளுக்குப் பிறகு, நந்திதா தாஸின் தோற்றம் நமக்குச் சொல்கிறது. லெனியாக நடித்த சிறுமி சேத்னாவுக்கு இது முதல் படமாயினும், முதிர்ந்த நடிகையின் மேதமையுடன் அவரது பாத்திரத்தை நிறைவடையச் செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றிக் குறிப்பீடும் ஒவ்வொரு தருணத்திலும் இளையராஐாவை ஒப்பிட்டு விவாதங்கள் வளர்வது ஆரோக்கியமானதல்ல என்பதை ‘ஹே ராம் ‘ படத்துக்கு அடுத்து ‘எர்த் ‘ படத்தைப் பார்பபவர்கள் உணர்வார்கள். இரண்டு பேருமே வேறு வேறு விதங்களில் திறன் கொண்ட முக்கியமான கலைஞர்கள் தான் எனும் வகையில் ஏ.ஆர.ரஹ்மானின் பின்னணி இசை இப்படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி அமைந்திருக்கிறது.
IV
விமர்சனம் :
படைப்பாளி அடிப்படைவாதி சுதந்திரம்
கீதா மேத்தா போன்ற இந்தியாவுக்கு வெளியில் இருக்கிற இந்திய இயக்குனர்கள் பற்றிய நமது நேர்மையான விமர்சனங்களை நாம் வெளிப்படுத்துகிற அதே போதில், உலகமயமாதல் சகல கலைத்துறைகளிலும் நிகழ்ந்து வரும் இந்நாளில் இதன் எதிர் மறை அம்சங்கள் போலவே இதன் ஆக்கபூர் வமான சில பண்புகளும் நம்மைப் பாதிக்கவே செய்கிறன. மனித உரிமைகள் குறித்த அக்கறைகள், சிறை அமைப்பு குறித்த அக்கறைகள், பாலுறத்தேர்வு குறித்த அக்கறைகள், அரசியல் ஐனநாயகம், தனிமனிதஉரிமை போன்ற அக்கறைகளை மேற்கத்திய மதிப்பீடுகள் என்றோ தேசியக் கலாச்சாரத்தக்கு அச்சுறுத்தல் என்றோ நிராகரிப்பது அபத்தம் என்பதைச் சிந்திக்கிறவன் இன்று உணர்ந்திருக்கிறான்.
ஒரு படைப்பாளி எனும் அளவில் தேசிய மத அடிப்படைவாதிகளுக்கு, நாம், தீபா மேத்தா போன்றவர்களின் படைப்புச் சுதந்திரத்தை விட்டுத்தருகிற சூழலை நாம் அனுமதிக்கக்கூடாது. எல்லாவகையிலும் அத்தகைய அச்சுறுத்தல்களுக்கெதிராக நாம் நிற்க வேண்டிய அவசியத்தைத்தான் தீபா மேத்தாவின் ‘எர்த் ‘ திரைப்படம் நம்மிடம் கோருகிறது. தன் மீது சுமத்தப்படும் வெளி நாட்டில் வாழும் இந்தியர் என்கிற துவேஷமான முத்திரை மீது தனக்கு மரியாதை இல்லை எனும் தீபா மேத்தா படைப்பாளி மற்றும் சாதாரண மனுஷி எனும் அளவில் இந்த உலகில் தான் பெறும் இடமே முக்கியம் என்கிறார். ஸல்மான் ருஸ்டி, தஸ்லீமா நஸ்ரீன் போன்றவர்களுக்கு இந்த அங்கீகாரத்தை நாம் தரமுடியுமானால் தீபாவுக்கும் அவ்விடம் உரியதுதான் என்பதில் சந்தேகமில்லை.
திண்ணை
|