புதியமாதவி, மும்பை
மலர்கள் மாலையாகிறது, பூச்செண்டுகளாகிறது, அலங்கார ஜரிகைகளுக்கு நடுவில் அலங்காரப் பொருளாகிறது, நறுமணம் தரும்
வாசனைத்திரவியமாகிறது.. மனிதன் கைப்பட்டப் பின் மலர் பல நிலைகளில் பயன்பாடுகளில் வித்தியாசப்படுகிறது. ஆனால் எல்லா மலர்களும் செடியின் கிளைகளில் பூத்திருக்கும்போது அதற்கான இயற்கை அழகு மிளிர பயன்பாடுகள், இருப்பிடங்களுக்கு அப்பாற்பட்டு மனசைத் தொடுகிறது,,மலர்கள் மட்டுமல்ல மனிதர்களும் அப்படித்தான். புனைவுகள் இன்றி அலங்காரங்கள் விலக்கி அவரவருக்கான முகங்களுடன் அவரவர் மொழியில் காட்சியளிக்கும்போது அதுவே அவர்களுக்கான அலங்காரமாக அழகுதருகிறது.
கலப்பையும் கன்றுகளும் இருந்த இடங்களை இலவச தொலைக்காட்சிகள் பிடுங்கிக்கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் மனிதர்களை இனி புனைவுகளின்றி சந்திப்பதும் அவர்களுக்கான மொழியில் உரையாடுவதும் காட்சிப் பொருளாகிக் கொண்டிருக்கும் காலம். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் வட்டார மொழி சொற்களைக் கையாளுவதைப் பற்றி சொல்லும்போது ” எனது ஆத்தாள் கைக்கெட்டாத இடத்தில் ஒரு பொருளை வைப்பதற்கு ‘கடைக்கே’ வை என்று சொன்னாள். என் அம்மா அந்தச் சொல்லை அறிந்திருந்தாள். ஆனால் கையாண்டதில்லை. என் மனைவி அந்தச் சொல்லை அறிந்திருக்கவில்லை. என் மகனுக்கு அந்தச் சொல் ஒரு கண்டுபிடிப்பாக இருக்கும்” என்பார்.(நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று: பக் 32)
மென – மெனப் புடிச்சி அரிக்கிறது
கொளஞ்சி – கொளஞ்சிப் போக
சிங்கியடிக்கணும்-
வெளாவி
உரும நேரத்துல
விதுக்கு விதுக்குனு-
இப்படி எண்ணற்ற எரங்காட்டு மனிதர்களின் சொற்கள் இவர் கதைகளில் பதிவாகியுள்ளன.
நீர்வளங்களையும் நில வளங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக் கொண்டிருக்கிறோம்.
‘எடும்மா அந்தக் கடப்பாரையையும் மமுட்டியையும். கட்டுனவங் கைவிட்டாலும் நம்மளமாரி மண்ணையும் மானத்தையும் நம்பி பொழைக்கிற சனங்கள அதுவோ என்னிக்கும் கைவுட்றதல்ல. நமக்குக் கையாவும் காலாவும் என்னிக்கிமெ உழைச்சிச்
சோறு போட்றது இந்த ஆயுதங்கள் தாம்மா, எரங்காட்டுக்குப் போயி அருவுக்கட்ட அடியோட நோண்டி எடுத்து பொரட்டிக்
காயவெச்சிட்டு அப்புறம் மழபேஞ்சா இருக்கவே இருக்கு எளச்சவங்கப் பயிருன்னு எதாவது வெரச்சிப்போட்டா..
வெளஞ்சிட்டுபோவுது. எடையனுக்குப் போட்டதும் எறங்காட்லப் போட்டதும் என்னைக்கும் வீண்போவதுங்கிற மாதிரி
என்னியும் ஒன்னியும் இந்தப் புள்ளயையும் எறங்காடு காப்பாத்தும்மா” (எரங்காடு பக் : 41)
எரங்காட்டின் மனிதர்கள் தன் மண்ணுடனும் மண் தந்த வளத்துடனும் எப்படி தங்கள் வாழ்க்கையை எதிர்காலத்தைப் பிணைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற கடந்த காலத்தின் பதிவாக இவருடைய கதை மாந்தர்கள் நம் கண்முன்னே வலம் வருகிறார்கள். அணு ஆயுத போருக்குப் பின் சிதைந்துவிடும் மனித அடையாளமாய் இராட்சத காற்றாடிகளின் ஆக்கிரமிப்புக்குப் பின், உலகமயமாதலின் பொருளாதர மண்டலங்களின் தாக்குதலுக்குப் பின் மிச்சமிருக்கும் நினைவுகளாகவே எரங்காடு காட்சியளிக்கிறது. விளைநிலங்களையும் வீட்டு மனைகளாக்கி அடுக்குமாடிக் கட்டிடங்கள், தொழில் நுட்ப பூங்காக்கள் கம்பீரமாக எழுந்து நிற்கும் காலக்கட்டத்தில் இந்த இடங்களில் வாழ்ந்த எங்கள் மனிதர்களும் மண்மீது அவர்கள் கொண்ட நம்பிக்கையும் எப்படி எல்லாம் இருந்தன என்பதை எதிர்காலத்திற்கு எழுதி வைத்திருக்கும் சித்திரமாக அரங்கநாதனின் எரங்காடு காட்சியளிக்கிறது.
“பொண்ணாப் பொறந்துட்டாலே புருசன் வூடுதான் சாசுவதம்”
“நாங் கேக்கறன்..ஒரு பொண்ண பொறந்தவளுக்கு தன்ன உசுருக்கு உசுரா நேசிக்கிற.. பாசம் வெச்சிருக்கிற
புருசனைவிட வேற என்னாடி வேணும்?.. அதைவிட சொர்க்கம் கூட இந்த ஒலகத்துல இருக்காடி..?”
(மனமாற்றம் : பக் 19) என்று பேசும் எரங்காட்டு பெண்கள் அதே புருசன் தன்னையும் தன் உறவையையும் சந்தேகப்படும் போது திருமண உறவுகளையும் தூக்கி எறியும் வல்லமையுடையவர்களாக இருப்பதையும் காட்டுகிறார். வாத்தியாருடன் மனைவி சிரித்துப் பேசுவதாலெயே அவளையும் வாத்தியாரையும் தொடர்பு படுத்திப் பேசி அவள் பெற்ற அவன் குழந்தையையும் வாத்தியாருக்குப் பிறந்த குழந்தையாக சந்தேகப்பட்ட கணவன், வாத்தியார் விபத்து காரணமாக ஒரு குழந்தைக்குத் தகப்பனாக முடியாது என்பதை அறிந்தவுடன் திருந்தி வருகிறான். ஆனால் அவள் அவனை நிராகரிக்கிறாள்.
‘அப்ப பக்கத்தூட்டுக்காரனைச் சம்மந்தப்படுத்திச் சொன்ன. நாளைக்கு எதிர்வூட்டுக்காரங்கூட என்னச் சம்பந்தப்படுத்திப்
பேசுவ, ஒஞ் சாவுகாசமே வேணாம் சாமி, நீ போய்ச் சேரு. சாத்தானோட குடும்பம் பண்ணுனாலும் பண்ணலாம், சந்தேகத்தோட குடும்பம் பண்ணவே முடியாது…. பொழக்க உறுதியும் ஒடம்புல தெம்பும் இருக்குற வரைக்கும் யார நம்பியும் பொழைக்க விரும்பல” என்று எரங்காட்டு பெண்ணின் இன்னொரு முகத்தைக்காட்டுகிறார்.
பெண்ணுக்கு புருசன் வீடுதான் சாசுவதம் என்ற அதே சமுதாயத்தில் தான் செண்பகங்களும் வாழ்கிறார்கள். பெண்ணின் இந்த தன்னம்பிக்கை, மனவுறுதிக்கும் காரணமாக அவள் மண்ணையும் மண்ணின் வளத்தையும் நம்பிய அவள் உழைப்பை முன்வைக்கிறார். மண்ணும் மண்ணின் வளமுமே கொள்ளையடிக்கப்பட்டால் அதை நம்பியிருக்கும் பெண்ணின் உழைப்பும் சிதைக்கப்படுவதை நம்மால் உணர முடிகிறது. இக்கதையில் கிறிஸ்டின் டெல்பி (ChristineDelphy) முன்வைக்கும் உயிரியல்வாத மறுப்பு கொள்கையின் கருத்தும் இழையோடியிருப்பதைக் காணலாம்.பிறப்பின் காரணமாக பெண் உடற்கூற்றுச் செயல்பாடுகளும் மகப்பேறும் அவளை வீட்டில் முடக்கிப் போட்டு ஆணின் துணையின்றி வாழ இயலாது என்ற உயிரியல்வாதக் கருத்தால் பெண்ணின் சுயேச்சையான வாழ்க்கை மறுக்கப்படுகிறது. இக்கருத்தையுன் இதற்கு எதிர்மறையான கருத்தையும் சமூக – பண்பாட்டுத் தளத்திலிருந்து விளக்கம் கொடுக்க வேண்டும். எப்போதுமே ஒரு பொருள் அல்லது நிகழ்வு குறித்த மதிப்பீடுகளை அவை தோன்றிய பொருள் மற்றும் சமூக அமைப்புடன் தொடர்பு படுத்தியே காண வேண்டும். உயிரியல்வாத கருத்துகளின் தீவிரத்தை உடல் உழைப்புச் சாதிப் பெண்களிடம் காண இயலாது என்ற சமூக பண்பாட்டு பின்புலத்தில் ஒரு காலக்கட்டத்தின் குறிப்பிட்ட பின்புலத்தில் வாழும்- வாழ்ந்த பெண்களின் வாழ்வியல் நிலைகளாக இக்கதைகளைச் சொல்லலாம்.
நல்லதம்பி சிறுகதை ஒரு குறும்படம் போல மனதில் காட்சிகளுடன் கச்சிதமான உரையாடல்களுடனும் படைக்கப்பட்டுள்ளது. பாத்திரப்படைப்புகள், பின்புலக்காட்சிகள், துணைப்பாத்திரங்கள் என்று ஒரு குடும்பத்தின் திருமண நிகழ்வையும் அம்மக்களின் நம்பிக்கைகள், விளையாட்டுகள், உடல் உழைப்பு என்று பல்வேறு தளங்களில் காட்சிகளை விரித்துக் கோண்டு போகிறது அரங்கநாதனின் படைப்புத் தளம்.
எரங்காடு என்னவோ மண்ணில் மனிதர்களின் சொர்க்கம் என்று சொல்லவில்லை அரங்கநாதன். எரங்காட்டில் இன்று
செங்கானும் வெள்ளச்சிகளும் இல்லை. ஏன் இரவோடு இரவாக பக்கத்து டவுணுக்கு வந்து சித்தாளு வேலைச் செய்து
பிழைத்துக்கொள்ளலாம் என்று வந்துவிட்டதையும் இவர் ஊர்த்தொழிலாளி என்ற கதையில் பதிவு செய்துள்ளார்.
ஒரு சில கதைகளில் கதை முடிந்தப் பின் கதைக்கரு குறித்து கதை மாந்தர்கள் பேச்சும் விளக்கமும் தவிர்க்கப்பட்டிருந்தால்
கதையின் கருப்பொருள் உத்தியுடன் சேர்ந்து ஓர் உன்னத படைப்பாக்கமாகியிருக்கும். குறிப்பாக ‘நமக்குள்ள என்னா இருக்கு..?’
கதையில் ‘அதையேதான் நானுங் கேக்கறேன்.. நமக்குள்ள என்னா இருக்கு..?’என்ற பொன்னியின் வரிகளில் கதை
முடிந்துவிடுகிறது. அதன் பின் பொன்னி பேசும் ஒன்றரைப் பக்கமும் கதையின் படைப்பம்சதைக் கேள்விக்குறியாக்கிவிடுகிறது.
“இயற்கையோடு இயைந்த வாழ்வு என்பது நம் மரம், செடி கொடிகளோடு சேர்ந்து வாழ்வது மட்டுமே ஆகாது. நம் மண்ணோடும் மண்ணின் மக்களோடும் அவர்களுடைய வாழ்க்கையோடும் அவர்களின் அன்றாட பேச்சு மொழியோடும் சேர்ந்து வாழ்வதும் இந்த வாழ்க்கையைப் பதிவு செய்வதுமாகும். கோ.அரங்கநாதன் எழுதிய கதைகள் ஓர் இலக்கியப்பணி என்பது மட்டுமல்லாமல் ஒரு சமுதாயப்பணியாகவும் சொல்லத்தக்கவை” என்றுஅணிந்துரையில் எழுத்தாளர் பேராசிரியர் பழமலய் அவர்கள் சொல்லியிருப்பதை
ஒவ்வொரு கதையும் கதை மாந்தர்களும் அவர்தம் மொழியும் வெவ்வேறு தளத்தில் முன்வைக்கின்றன.
நூல்: எரங்காடு
(15 சிறுகதைகள்)
ஆசிரியர்: கோ. அரங்கநாதன்
வெளியீடு: சரவணா பதிப்பகம், விருத்தாசலம்.
பக்: 96 விலை:ரூ.35 மட்டும்
puthiyamaadhavi@hotmail.com
- விருதுநகரில் விடியல் விழா நாள் 8/3/2007 வியாழன் மாலை 5.30 மணி
- எண்ணச் சிதறல்கள் – சாரு, சாய் பாபா, அமிர்தானந்தமயி, தமிழக முதல்வர், கனிமொழி,அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
- தொலைந்த ஆன்மா
- நீர்வலை – (13)
- உண்மை கசக்கும்
- “மும்பை டப்பா வாலாவுக்கு ஜே…ஏஏ!!!”
- சுதந்திரமும் சுதந்திரம் துறத்தலும்
- கடல் மெளனமாகப் பொங்குகிறது
- நியூசிலாந்து பயண நினைவுகள்
- அம்பைக்கு விளக்கு விருது வழங்கும் விழா
- சினிமா – BABEL
- ‘பெரியார்’ வருகிறார்!!
- காதல் நாற்பது (11) காதலுணர்வு எழிலானது !
- புதுமைப்பித்தன் இலக்கியச்சர்ச்சை 1951 – 52 நூல்வெளியீடு
- எரங்காட்டின் எல்லைக்கல்
- அரசியல் கலந்துரையாடல்
- கலவியில் காயம் – நடேசன்
- கடித இலக்கியம் -47
- திரு அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ‘புஷ்யமித்திரரும் பிரச்சார படுகொலைகளும்’
- ஜெயமோகனின் “இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?” கட்டுரை குறித்து
- சமுதாய மாற்றத்தில் தமிழ் இதழ்கள்
- கந்தர்வன் நினைவு சிறுகதைப்போட்டி
- வாழும் விருப்பமுள்ள மனிதர்கள் ( நாஞ்சில்நாடனுடைய கதையுலகம்)
- கவிதையின்மீது நடத்தப்படும் வன்முறை……
- வால்மீனில் தடம் வைத்து உளவப் போகும் ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல்
- கவிதைகள்
- கவிதைகள்
- நாங்கள் புதுக்கவிஞர்கள்
- தூரமொன்றைத் தேடித்தேடி..
- குருதிவடியும் கிறிஸ்து
- பெரியபுராணம்-124 திருமூல நாயனார் புராணம் தொடர்ச்சி
- நிலவு “டால்பின்”
- ஹிந்து குடிமைச் சட்டத்திற்கு அடிப்படை மனு ஸ்மிருதியா?
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:7 காட்சி:2)
- மடியில் நெருப்பு – 27