என் தந்தையார் பற்றி சிறு விளக்கம்

This entry is part [part not set] of 30 in the series 20020302_Issue

ஞாநி


‘தீம்தரிகிட ‘ மறுபடியும் வெளியிடப்படுவது பற்றிய என் வேண்டுகொள் தொடர்பாக ஜெயமோகன் எழுதியுள்ள கட்டுரையில் என் அப்பாவைப் பற்றிய ஒரு குறிப்பு உள்ளது. அதற்கு சில திருத்தங்கள் இதோ: என் அப்பா பெயர் வேம்பு அய்யர் அல்ல. அவர் சாதி அடையாளங்களில் ஈடுபாடு இல்லாதவர்.அவர் பெயர் ந. வேம்புசாமி என்பதாகும். அவர் தமிழ் இதழாளராக இருக்கவில்லை. சில நேரங்களில் தமிழிலும் எழுதியதுண்டு. சுமார் 50 ஆண்டுகள் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் நிருபராகத்தொடங்கி, தலைமை நிருபர் பொறுப்பு வரை வகித்தார். நேரு, காமராஜர், அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். சென்னை நிருபர்கள் சங்கத்தின் நிறுவனர்-தலைவர், செயலாளர். நேருவின் சோஷலிசத்தில் நம்பிக்கை கொண்டிருந்த அவர்தான் என்னை அரசியல்படுத்தியவர். 1997ல் அவர் தனது 90வது வயதில் காலமானபோது, அன்று முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி பத்திரிகையாளர்களுக்கான புதிய திட்டம் ஒன்றை அறிவித்திருந்தார். ஒரு பத்திரிகையாளர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு அரசு 25 ஆயிரம் ரூபாய் வழங்கும் என்ற இந்தத் திட்டம் என் அப்பா காலமானபோது முதல்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. முதல்வர் அறையில் என் தாயாரிடம் வழங்கப்பட்ட இந்தப் பணத்தை என் குடும்பத்தினர் அப்பா பெயரிலான அறக்கட்டளை ஏற்படுத்தி, ஏழை பள்ளி மாணவர்களுக்கு உதவுவதற்குப் பயன்படுத்தியுள்ளனர். ஒரு பத்திரிகையாளன் தனிப்பட்ட லாப நஷ்டங்களுக்கு அப்பால் நின்று செய்திகளை, கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்பதை என் அப்பா தமது துறையில் எப்போதும் வலியுறுத்தி வந்தார். இதழியலில் அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டது அது ஒன்று மட்டுமேயாகும்.

ஞாநி

2-3-2002

Series Navigation

ஞாநி

ஞாநி