சமீபத்தில் மின் அஞ்சலில் வந்தது!
புத்தரின் காலத்திலே, ஒரு பணக்கார வணிகர் 4 மனைவிகளுடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு 4 மனைவிகள் இருந்தாலும், அவர் தனது 4வது மனைவியை மிகவும் நேசித்தார். அவளைப் பட்டாலும், பணத்தாலும் பரவசப்படுத்தி வந்தார். அந்த மனைவியை மிகவும் அன்புடனும், பாசத்துடனும் கவனித்து வந்தார். அவளுக்கு எது தேவைப்பட்டாலும், கிடைப்பதிலேயே மிக உயர்ந்ததாக தேடிக் கொடுப்பார்.
அவர் தனது 3வது மனைவியையும் மிகவும் நேசித்தார். அந்த மனைவியைப் பற்றி அவர் மிகவும் பெருமை கொண்டிருந்தார். தனது நண்பர்களிடமெல்லாம், அவளைப் பற்றியும், அவளது திறமைகளைப் பற்றியும் பீற்றிக் கொள்வார். இருந்தாலும், அவள் என்றாவது ஒருநாள், யாராவது ஒருவனோடு ஓடி விடுவாள் என அவருக்கு ஒரே பயம்.
அவர் தனது 2வது மனைவியையும் நேசித்தார். அவள் மிகவும் அன்பும் மரியாதையும் கொண்ட பெண்மணி. எப்பொழுதும் பொறுமையுடனிருப்பாள். வணிகருக்கு மிகவும் அந்நியோன்னியமானவள். அவருக்கு பிரச்னைகள் வரும் போதெல்லாம், அவர் தனது 2வது மனைவியிடம்தான் அனுகுவார். அவளும் அவருக்குத் தக்க ஆறுதலும், யோசனைகளும் கொடுத்து உதவுவாள்.
ஆனால், இவர்கள் அனைவரையும் விட அவரது முதல் மனைவிதான் அவருக்கு ஒரு உத்தம துணையாய் இருந்து வந்தவள். கட்டிய நாள் முதள் மிகவும் பாடுபட்டு, அவரது செல்வச் செழிப்பிற்கும், வணிக மேம்பாட்டிற்கும் அவள் ஒரு முக்கிய காரணகர்த்தாவாக இருந்து வந்தாள். மேலும், புகுந்த வீட்டினைக் கட்டி காப்பாற்றுவதில், மிக்க கவனமாய் இருந்து வந்தாள். இருந்த போதிலும், வணிகர், அவளை நேசிக்கவே இல்லை. அவளை நேருக்கு நேர் பார்த்து பேசியதே கிடையாது.
ஒருநாள், வணிகர் நோய்வாய்ப் பட்டு படுத்த படுக்கையானார். அவருக்குத் தான் இன்னும் அதிக நாள் வாழப் போவதில்லை எனத் தெரிந்தது. அவர், இதுவரை கொண்ட செல்வச் செழிப்பான வாழ்க்கையை எண்ணியபடி, சொல்லிக் கொண்டார் தனக்குள்,
‘இதோ, நான் 4 மனைவியரைக் கொண்டிருக்கிறேன். 4 பேரும் என்னை மிகவும் நேசிக்கிறவர்கள். 4 பேரையும், நான் அளவுக்கு மேல் நேசித்திருக்கிறேன். இருந்தாலும், நான் இறக்கும் போது யாரும் என்னுடன் வரப்போவதில்லை. நான் தனியாள். தனிமை எவ்வளவு கொடுமையானது. ‘
இந்த எண்ணப்போக்குடன், தனது 4வது மனைவியை அழைத்து கேட்கிறார்,
‘உன்னை நான் உயிருக்கு மேலாக நேசித்திருக்கிறேன். மிக உயர்ந்த ஆடை அணிகலன்களை உனக்களித்திருக்கிறேன். உன்னை மிக்க கவனத்துடன் பாதுகாத்து வந்திருக்கிறேன். இப்பொழுது நான் சாகக் கிடக்கிறேன். என்னுடன் சேர்ந்து நீயும் வருவாயா ? எனக்குத் துணை தருவாயா ? ‘
‘நிச்சயமாக வர மாட்டேன்! ‘ அவள் பதிலுரைத்து விட்டு மறுவார்த்தை கூறாமல், அவ்விடத்தை விட்டகன்றாள். வணிகருக்கு, தன் இதயத்தில் ஒரு கூரிய கத்தியின் முனை குத்தியது போல் இருந்தது. பின் தனது 3வது மனைவியைப் பார்த்துக் கேட்கிறார்,
‘என் வாழ்வு முழுக்க உன்னை மிகவும் நேசித்திருக்கிறேன். இப்பொழுது நான் சாகக் கிடக்கிறேன். என்னைப் பின் தொடர்ந்து எனக்குத் துணையாய் நீ வருவாயா ? ‘
‘மாட்டேன்! ‘ 3வது மனைவி பதிலுரைத்தாள். ‘வாழ்க்கை இங்கே மிகவும் நன்றாக இருக்கிறது. நீ இறந்தவுடன், நான் மறுமணம் செய்து கொள்வேன்! ‘ எனக் கூறினாள். இதனைக் கேட்டவுடன் வணிகர் மிகவும் மனமுடைந்து, 2வது மனைவியை நோக்கிக் கேட்டார்,
‘நான் எப்பொழுதும் உன்னிடமே உதவியை நாடி இருக்கிறேன். நீயும் எனக்கு உதவி செய்திருக்கிறாய். இப்பொழுது மீண்டும் உன்னிடம் உதவி கேட்கிறேன். நான் இறக்கும் போது, என்னைத் தொடர்ந்து வருவாயா ? எனக்கு உறுதுணையாய் இருப்பாயா ? ‘
‘என்னை மன்னியுங்கள். இம்முறை, என்னால் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. வேண்டுமானால், உங்களை என்னால், சுடுகாட்டுக்கு அனுப்ப முடியும். அவ்வளவுதான். ‘
இதனைக் கேட்டு, வணிகருக்கு தன் மேல் இடியுடன் கூடிய மின்னல் பாய்ந்தது போல் வேதனையுற்றார்.
‘நான் உங்களுடன் வருவேன். நீங்கள் எங்கு சென்றாலும், தங்களைத் தொடர்ந்து நான் கண்டிப்பாக வருவேன்! ‘
வணிகர் உற்று நோக்கினால், அவருடைய முதல் மனைவி, அவர் முன்னால் நின்று கொண்டிருந்தாள். அவள் மிகவும் மெலிந்து, எலும்பும் தோலுமாய், முறையான சாப்பாடில்லாமல் கஷ்டப்படும் பிராணி போலத் தோன்றினாள்.
வணிகர் இதைக் கேட்டு, ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு,
‘என்னால் முடிந்த பொழுது, நான் உன்னைப் பேணி, பாதுகாத்திருக்க வேண்டும்! ‘
எனவே புத்தர் கூறுகிறார்,
‘4வது மனைவி நம்முடைய உடம்பைப் போன்றது. எவ்வளவுதான் சிரத்தை கொண்டு, நாம் அதனைப் பேணிக் காத்தாலும், நாம் இறக்கையில் நம் உடம்பு நம்மோடு வரப்போவதில்லை. ‘
‘3வது மனைவி நாம் சேர்த்து வைத்த சொத்துக்கள் போன்றது. நாம் இறக்கும் போது, நம்முடைய சொத்துக்கள் பிறறை சென்றடைவது இல்லையா ? மற்றவர்கள் அவற்றை அனுபவிப்பதில்லையா ? ‘
‘2வது மனைவி நம்முடைய சுற்றமும் நட்பும் போன்றது. எவ்வளவுதான், அவர்கள் நாம் உயிருடன் இருக்கும் போது நம்மைச் சுற்றி இருந்தாலும், கடைசியில் அவர்களால் சுடுகாடுவரைதான் வர முடியும் ‘
‘முதல் மனைவி நம்முடைய எண்ணத்தைப் போன்றது. நெஞ்சத்தைப் போன்றது. வாழும் போது, இதற்கு நாம் வாழும் போது அதிகம் கவனம் கொடுப்பதில்லை. பொருளும் போகமும் தேடும் முயற்சியில், இதனை நாம் மறந்து விடுகிறோம். ஆனால், நம்முடைய மனம்தான் நம்மை எங்கும் தொடர்ந்து வருவது, நாம் எங்கு சென்றாலும். எனவே, நாம் இப்பொழுதே நம் மனத்தைப் பேணி அதை பிரகாசிக்கச் செய்ய வேண்டும். இல்லையேல், நாம் இறக்கும் போது ‘ ‘என்னால் முடிந்த பொழுது, நான் உன்னைப் பேணி, பாதுகாத்திருக்க வேண்டும்! ‘ என்று புலம்பி உருகத்தான் வேண்டும்.
திண்ணை
|