எனது (முழுமையற்ற) பதில் !

This entry is part [part not set] of 34 in the series 20080424_Issue

ஜோதிர்லதா கிரிஜா



கார்கில் ஜெய் குமார் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்திராவிடில் நான் திண்ணையில் அவரது கட்டுரையை உடனடியாய்ப் படித்திருந்திருக்க மாட்டேன் என்றே தோன்றுகிறது. பிறகொரு நாள் ஓய்வாக இருக்கையில் படித்திருப்பேன். காரணம் நான் கணினிக்கு முன் தேவையற்று உட்கார்வதில்லை. எனது பழு-பிறழ்வு நிலை (slip-disc) தான் காரணம். சில ஆண்டுகளுக்கு முன் கீழே தவறி விழுந்து முதுகுத் தண்டில் ஏற்பட்ட சேதத்தின் விளைவு. தொடர்ந்து நீண்ட நேரம் ஒரே நிலையில் உட்கார்ந்திருக்கக் கூடாது என்பது மருத்துவரின் அறிவுரை. இதனாலேயே நான் இப்போதெல்லாம் கணினிக்கு முன் அமர்ந்து அவ்வளவாக வேலை செய்வதில்லை.

நண்பர் ரவிசங்கரின் தாக்குதல் கடிதத்துக்கு நானும் பதில் சொல்லலாம்தான். ஆனால் அவர் எழுப்பியுள்ள அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்ல நான் நிறைய எழுத வேண்டியதிருக்கும். அதற்கு எனது உடல் நிலை இடம் கொடுக்கவில்லை. சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு மட்டும் பதில் சொன்னால், மற்றவற்றுக்கு என்னிடம் பதில்கள் இல்லை என்று முடிவு கட்டி, நண்பர் மறுபடியும் ஒரு கடிதம் எழுதுவார்.

புரிந்துகொள்ளாதவர்களுடன் மோதி, வாதிடுவதைக் காட்டிலும், அவர்களை நாம் புரிந்துகொண்டு விலகி, அமைதி காத்தல் நல்லதோ என்றும் எனது வயதும் உடல்நிலையும் என்னை நினைக்க வைக்கின்றன!

‘தமிழில் இரண்டு ஒலிகளையேனும் ஏற்படுத்தினால் பிறமொழியினரும் அயல்நாட்டவரும் அதைக் கற்பது மேலும் எளிதாகும், அது அம்மொழிக்கே நல்லது, எனவே அது பரவும், மெல்லோசைகளைத் தவிர்க்காதிருப்பின் அதன் இனிமை கூடும்,’ என்று ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டிய யோசனையைச் சொன்னதற்கு இவ்வளவு காழ்ப்பா! சம்ஸ்கிருதம் போல், அதனினும் மூத்த மொழியான தமிழ் ஆகிவிடக்கூடாது என்னும் எனது எண்ணத்துக்கு இப்படி ஒரு பரிசா! அட, ஆண்டவனே!

நான்கு ஒலிகள் சம்ஸ்கிருதத்திலும் இந்தியிலும் மட்டுமே உள்ளனவா என்ன? திண்ணையில் முன்னம் வெளியான எனது இந்தி எதிர்ப்புக் கட்டுரையைப் படித்திருப்பின், சில கருத்துகளை அவர் சொல்லியிருந்திருக்க மாட்டார்.

சம்ஸ்கிருதம் வழக்கொழிந்ததற்குக் காரணம், ‘உயர்ந்த இனத்தினர்’ என்பதாய்த் தங்களுக்குத் தாங்களே முத்திரை குத்திக்கொண்ட அம்மொழிக்குச் சொந்தக்காரர்கள் திமிருடனும், அகந்தையுடனும் ‘அது தேவ பாஷை! அதை நாங்கள் மட்டுமே கற்போம். உங்களுக்கு அந்தத் தகுதி இல்லை’ என்று பிறரை மட்டந்தட்டிச் சொன்னதே அன்றோ!

இந்த எனது கூற்றையும் தப்பாய்ப் புரிந்துகொண்டு, ‘சம்ஸ்கிருதத்தை வேறு எவரும் கற்கக்கூடாது என்றெல்லாம் சாத்திரங்களில் கூறப்படவில்லை’ என்று கூறி, பார்ப்பனர் அல்லாதாரில் எத்தனை வடமொழி வல்லுநர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் முன்னரே இருந்துள்ளனர் என்பதை எடுத்தெழுதி, எனக்குச் சிலர் “பதிலடி” கொடுக்கக் கூடும்! நானும் திருப்பி, ‘சாத்திரங்களில் என்ன சொல்லியிருந்தது என்பது எனது கேள்வியன்று. அம்மொழிக்காரர்கள் அதைப் பின்பற்றி நாணயமாக நடந்தார்களா என்பதே எனது கேள்வி’ என்று சொல்லிக்கொண்டிருக்கவேண்டும். மேலும் சில துணைக் கேள்விகளையும் சிலர் எழுப்புவர். ஒரு நெடிய நூலையே பல பதில் கடிதங்களில் நான் எழுதும்படி நேரும். அதற்கெல்லாம் எனக்கு நேரமோ, உடல்நலமோ இல்லை !

சோதிர்லதா கிரிசா என்று குறிப்பிட்டமைக்கு நண்பர் ஜெயபாரதனின் பதிலே என்னுடையதும். அப்படி என்னை அழைப்பதில் தமக்கு ஏற்படுவதாக அவர் கருதும் அற்ப மகிழ்ச்சியில் குறுக்கிட மாட்டேன்! (ஜெயபாரதனின் கடிதத்தை இன்று தான் படித்தேன் – அதாவது இந்தியாவில் 23, ஏப்ரல்)

மற்றொரு நண்பர் அந்தஸ்து என்னும் உருதுச் சொல்லுக்கு இணையான சொல் தகுதி என்கிறார். தகுதி என்பதற்கு ‘உற்றது’, ‘ஏற்றது’, ‘பொருத்தம்’ என்றெல்லாம் அகராதிகள் பொருள் கூறுகின்றன. ஆனால், அந்தஸ்து என்பதற்கோ ‘தகுதிகளால் ஏற்படும் உயர்ந்த / சிறந்த /மேன்மையான நிலை’ என்று அகராதிகள் கூறுகின்றன. தகுதி என்பதை ஆங்கிலத்தில் fitness என்கிறார்கள். அந்தஸ்து என்பதை ஆங்கிலத்தில் status என்று சொல்லுகிறார்கள். Fitness வேறு, Status வேறு தானே? எனது குறைந்த ஆங்கில அறிவு அப்படித்தான் சொல்லுகிறது. எனது குறைவான தமிழறிவும், “அந்தஸ்து” என்பது “தகுதி” என்பதை விடவும் அடர்த்தியான, பரந்த பொருட் செறிவுள்ளது என்று கூறுகிறது.

எனது கட்டுரையில் தமிழ்ப்பாடகர் இந்திப் பாடலைப் பாடும்போது அதன் இனிமை குறைவதாக நான் சொல்லவே இல்லை. இந்திப் பாடல் அமைக்கப்பட்ட அதே பின்னணி இசையில், இந்திப்பாடகரின் குரல் வளமைக்கு எந்த வகையிலும் குறையாத ஒரு தமிழ்ப்பாடகர் அதே மெட்டில் தமிழ்ப்பாடலைப் பாடும்போது, (original) இந்திப் பாடலின் இனிமை அதில் வருவதில்லை என்று புகழ் பெற்ற தமிழ்ப் பின்னணிப் பாடகி ஒருவர் சொன்னதைத்தான் எடுத்து எழுதியிருந்தேன்.

நண்பர்களுடைய கடிதங்களுக்கு வரிக்கு வரி (எனக்குத் தெரிந்த வரையில்) பதில் எழுத என் மனம் அவாவுகிறது. ஆனால், எனது உடல் நிலையால், அது என்னால் இயலாது. பதில் சொல்ல எனக்குப் போதிய அறிவோ ஆற்றலோ இல்லை என்றும் அதனால் நான் நழுவுவதாகவும் நினைக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு!

ஜோதிர்லதா கிரிஜா


jothigirija@hotmail.com

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா