கிஸ்வர் நஹீத்
உனக்கு நானொரு சாளரமாய் இருந்தேன்.
நீயே என்னைத் திறந்தாய்.
நீ விரும்பிய காட்சியை ரசித்தாய்.
தென்றலையும் நிறங்களையும் முகர்ந்தாய்.
புயலினின்று அடைக்கலம் தேடி
சாளரக் கதவுகளைச் சாத்தினாய்.
உன்னைப் பாதுகாப்பாய்த் தழுவிய போர்வையாக
நான் ஆகினேன்.
உனக்கு நானொரு முடிவுறா குகையாய் இருந்தேன்.
நீ விரும்பினால்
தங்குமிடமாக நானிருந்தேன்.
நீ விரும்பினால் என்னை மறைத்தும் வைத்தாய்.
பிறர் பார்வையினின்று உன் காலடிகளைப் பாதுகாப்பதற்காக
வாழ்க்கையென எனக்குள் நீ
மிதித்து நடந்தாய்.
உனக்கு நானொரு கனவாயிருந்தேன்.
தண்ணீராக
மணலாக
ஆக்கினைகளுக்கு நிஜமாக ஆனேன்.
ருசித்த பின் பாவித்த
அஜீரண மாத்திரை போல மறக்கப் பட்டேன்.
உனது கனவில் நீ பேசிக் கொண்டிருந்த
போதும் நான்
விழித்துக் கிடந்து அதைக் கேட்க வேண்டும்.
ஆனால் எனது விழிப்பு நிலை வார்த்தைகளை
எந்தக் கனவும் கேட்கவேயில்லை.
(தமிழில் : யமுனா ராஜேந்திரன்
எனக்குள் பெய்யும் மழை – கவிதைத் தொகுப்பிலிருந்து.
கிஸ்வர் நஹீத் பாகிஸ்தானின் பெண் கவிஞர் )
திண்ணை
|