எனக்குப் பிடித்த கதைகள் – 2 – லியோ தல்ஸ்தோயின் ‘மோகினி ‘ (குழப்பமும் தெளிவும்)

This entry is part [part not set] of 31 in the series 20020217_Issue

பாவண்ணன்


ஏழாம் வகுப்பு. எங்கள் தமிழாசிரியர் ரங்கநாதன் ஐயா பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ‘ஆறடிநிலம் ‘ என்பது பாடத்தின் தலைப்பு. அது ஒரு கதை. புத்கத்திலிருந்து தலைப்பை மட்டும் பார்த்துப் படித்துவிட்டுக் கவிழ்த்து வைத்தபின்னர் உற்சாகத்துடன் கதையைச் சொல்லத் தொடங்கி விட்டார் அவர். கதையைத் தொடங்கும் முன்பு வகுப்பிலிருந்த ஒவ்வொரு மாணவனிடமும் ‘உன் உயரம் என்ன ? ‘ என்று கேட்டார். 42 பேர் கொண்ட எங்கள் வகுப்பில் மிக உயரமானவன் தியாகராஜன். நாலரை அடி. எழுந்து நின்றால் ஆசிரியரின் நெஞ்சுக்கு வருவான். மிகவும் குள்ளமானவன் நான். மூன்றரை அடி. என் உயரத்தைச் சொன்னதும் வகுப்பில் இருப்பவர்களெல்லாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கள்ளச் சிரிப்பைப் பரமாறிக் கொண்டார்கள். ஐயா தன் உயரம் ஐந்தரை அடி என்றார். ‘ஆசியர்களின் சராசரி உயரமே ஐந்தரை அடிதான் ‘ என்று மேலும் சொன்னார் ஐயா. ‘அதிகபட்ச உயரம் ஆறடிதான் ‘ என்றார். ‘விதிவிலக்கானவர்கள் எங்காவது இருக்கலாம் ‘ என்றும் சேர்த்துக் கொண்டார். ‘ஒருவர் மரணமடைந்து விட்டால் அவரைப் புதைக்கத் தோண்டும் குழியின் நீளம் அதிகபட்சம் ஆறடிநிலம்தான் ‘ என்றார். ‘எழுபது, எண்பது வயது வரை வாழ்ந்து மறைகிற பெரியவர்கள் அடைக்கலமாவது அந்த ஆறடிப் பள்ளத்துக்குள்தான் ‘ என்றார். மரணம் என்கிற பேச்சைக் கேட்டதும் எங்கள் மனங்களில் மெளனம் கவிந்தது. எல்லாருடைய முகங்களிலும் ஒரு திகைப்பு. சோகம். தொடர்ந்து ‘ஏழைக்கும் ஆறடிப் பள்ளம்தான். பணக்காரனுக்கும் ஆறடிப் பள்ளம்தான் ‘ என்றார் ஐயா. தொடர்ந்து புத்தகத்திலிருந்த கதையைச் சொன்னார்.

மண்வெட்டியால் அடையாளமிட்டு வளைத்துக் கொள்ளும் இடம் முழுக்க அடையாளமிட்டவர்களுக்கே சொந்தம் என்று சொல்கிறார்கள். சூரியன் உதித்தபிறகு வளைக்கத் தொடங்கி மறைவதற்குள் வந்துவிட வேண்டும் என்பதுதான் ஒரே விதி. நிலத்துக்கு ஆசைப்பட்ட ஒருவன் அதிகாலையிலிருந்து மண்வெட்டியால் அடையாளம் செய்தபடியே செல்கிறான். சோறு தண்ணீர் இல்லாமல் வளைத்துக் கொண்டே போகிறான். சூரியன் அஸ்தமிக்கும் பொழுதில் விதி நினைவுக்கு வருகிறது. வளைத்ததெல்லாம் கைவிட்டுப் போய்விடுமோ என்கிற பதற்றத்தில் ஓடோடி வருகிறான். தொடங்கிய இடத்தைத் தொம் சமயத்தில் அவன் உயிர் பிரிந்து விடுகிறது. ஆயிரக்கணக்கான சதுர மைல் நிலத்துக்கு ஆசைப்பட்டவனுக்குத் தேவைப்படுவது இறுதியில் ஆறடி நிலம்தான். ஐயா அக்கதையை அரைமணிநேரம் சொன்னார். ‘ஆசை தப்பில்லை, ஆனால் தனக்கு என்ன வேண்டும் என்கிற தெளிவும் தீர்மானமும் ஒவ்வொருவரிடமும் அவசியம் வேண்டும் ‘ என்றார் ஐயா. ‘ஆறடிநிலம் என்பது நீதியின் படிமம் அல்ல, நெறிமுறைகளின் படிமம் ‘ என்றார். வகுப்பு முடியப் போகும் நேரம். அந்தக் கதையை எழுதியவர் பெயர் லியோ தல்ஸ்தோய் என்றும் அவர் ரஷ்ய நாட்டின் மிகப்பெரிய மேதை என்றும் சொன்னார். புத்தகத்தில் அவர் பெயர் இல்லை. ஆனால் கூடுதலான தகவலாகச் சொன்னார் ஐயா.

தல்ஸ்தோய் என்ற பெயர் என் மனத்தில் ஆழமாகப் பதிந்து விட்டது. அந்தப் பெயரின் வினோதமும் அக்கதையின் பாதிப்பும் முக்கியக் காரணங்கள். ஏழாம் வகுப்பைத் தாண்டும் முன்பு இன்னொரு ஓய்வு நாளில் ஐயா இன்னொரு கதையைச் சொன்னார். புத்தகத்தில் இல்லாத கதை அது. மாணவர்களாகிய நாங்கள் ஏகதை கதைஏ என்று அரித்ததும் ‘தல்ஸ்தோய் கதை சொல்லட்டுமா ? ‘ என்று எங்கள் ஆவலைத் துாண்டினார் ஐயா. எங்களுக்கு ‘ஆறடிநிலம் ‘ நினைவுக்கு வந்தது ‘சரி ஐயா ‘ என்று உற்சாகமாகக் குரல் எழுப்பினோம். ‘கடவுள் வருகை ‘ என்று கதையின் தலைப்பைச் சொல்லிவிட்டுக் கதையைச் சொல்லத் தொடங்கினார் ஐயா. செருப்பு தைக்கும் தொழிலாளியின் கனவில் கடவுள் தோன்றி மறுநாள் அவரது கடைக்கு வருவதாகச் சொல்லிச் செல்கிறார். மறுநாள் பரவசத்தின் எல்லையில் கடவுளை வரவேற்கத் தயாராக காத்து நிற்கிறார் தொழிலாளி. ஒரு ஏழைச் சிறுமி வந்து கிழிந்த செருப்பைத் தைத்துத் தருமாறு கேட்கிறாள். எரிச்சலில் சீறி விழுகிறார் தொழிலாளி. இன்னொரு பிச்சைக்காரன் வந்து பசிக்கு ஏதேனும் தருமாறு கேட்கிறான். கோபத்தில் பொங்குகிறார் தொழிலாளி. இப்படியே நாள் கழிந்துவிட்டது. ஏமாற்றத்தில் உறங்கப் போகிறார் தொழிலாளி. மீண்டும் கனவில் கடவுளின் வருகை. ‘என்ன கடவுளே இப்படி ஏமாற்றி விட்டார்களே ‘ என்று குமுறலோடு கேட்கிறார் தொழிலாளி. ‘நான் ஏமாற்றினேனா ? நல்ல கதை போ. மூன்று முறை வந்தேன். நீதான் விரட்டி விட்டாயே ‘ என்று சொல்லிச் சிரிக்கிறார் கடவுள். எல்லாருடைய உருவிலும் இருப்பது கடவுள்தான் என்றும் எல்லாரிடமும் அன்பு பாராட்டும் வழியாகவே கடவுளைக் காணமுடியும் என்றும் கதையை முடித்தார் ஐயா. அகத்தில் கடவுள் உருவம். புறத்தில் மனித உருவம். இப்படித்தான் நாம் இருக்கிறோம் என்றார் ஐயா இறுதியாக. ‘அப்படியென்றால் நாம் அனைவரும் கடவுளா ஐயா ? ‘ என்று கேட்டான் செல்வக்குமார். ‘நமக்குள்ளும் கடவுள் இருக்கிறார் ‘ என்று திருத்தினார் ஐயா.

அடுத்த வகுப்புக்கு ஐயா வரவில்லை. பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு, பள்ளியிலிருந்து கல்லுாரிக்கு இடம் மாறினேன் நான். ஆனால் தல்ஸ்தோய் என் மனத்தில் நீங்காத இடத்தைப் பிடித்துக்கொண்டார். நுாலகங்களில் அவர் புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தேன். ‘சிறுவருக்கான டால்ஸ்டாய் கதைகள் ‘ புத்தகத்தை விரும்பிப் படித்தேன். தொடர்ந்து கல்லுாரிக் காலத்திலும் எழுத்தாளனாக மலர்ந்த பிறகும் புத்துயிர்ப்பு, அன்னா கரினினா, போரும் அமைதியும் என ஒவ்வொன்றையும் தேடித் தேடிப் படித்தேன். சத்திய சோதனை படித்த போது காந்திக்கும் அவருக்கும் இருந்த கடிதத்தொடர்பை அறிந்து ஆச்சரியப்பட்டேன்.

தல்ஸ்தோயின் எல்லாக் கதைகளும் மனத்தைத் தொட்டவையே. எழுத்துதான் என்னைப் புலப்படுத்திக் கொள்ளும் துறை என்று மாறிப் போனதும் என் மனத்தில் எழுந்த முதல் முகம் தல்ஸ்தோயின் முகம்தான். அவர் என் கனவு. என் லட்சியம். என் மூச்சு. பள்ளிப் பருவத்தில் படித்த ஆறடிநிலம் கடவுள் வருகை கதைகளைக் காட்டிலும் நடுவயதில் படித்த மோகினியைச் சிறந்த சிறுகதையாக நினைக்கிறேன். அளவில் சற்றே நீண்ட கதையாக இருந்தாலும், அதன் முடிச்சின் தன்மைக்கேற்ப அதை ஒரு சிறுகதையாகவே வரையறுத்துக் கொள்கிறேன்.

கதை என்ற அளவில் மிக எளிய கதை அது. எல்லாத் தேசங்களிலும் நடக்கக் கூடிய சம்பவமே. மனக்கோலத்தின் சிக்கல்களை எழுத்தில் வடிக்கத் தொடங்கியதுமே ஒவ்வொரு கதவாகத் தள்ளித் தள்ளிச் செல்கிறது அவர் மொழி. எல்லா அடுக்குகளையும் குலைத்துச் சிதைத்து விடுகிறது. ஓர் இளம்பிரபு. தந்தையின் கடனை அடைக்க விவசாயப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு கிரமாத்துக்கு வருகிறார். நல்ல உழைப்பாளி அவர். கடுமையான உழைப்பின் விளைவால் மெல்ல மெல்ல கடன் அடைபடுகிறது. இளைப்பாறிக் கொள்ள ஊரில் இருக்கிற ஓர் இளம்பெண்ணை ஏற்பாடு செய்கிறான் பண்ணைக் கணக்குப் பிள்ளை. ஆண்டுகள் கழிகின்றன. முற்றிலும் கடன் அடைந்து சொத்துகள் மேலும் சேருகின்றன. திருமணம் நடக்கிறது. அதற்கு முன்பே சுகம்தந்த அந்தப் பெண்ணுக்கு எல்லா வசதிகளையும் செய்து தந்து ஊரை விட்டு அனுப்பி விடுமாறு சொல்கிறார். திருமண வாழ்க்கை இனிதாகக் கழிகிறது. மனைவி கருவுறுகிறாள். திடுமென பண்ணையில் பழைய பெண்ணைப் பார்க்க நேர்கிறது. அதிர்ச்சியும் குற்ற உணர்ச்சியும் ஆவலும் ஒரே நேரத்தில் பொங்குகின்றன. அவள் மீதுள்ள நாட்டமே இறுதியில் வெல்கிறது. மீண்டும் உறவாடுகின்றனர். தனிமையில் இருக்கும் போது தன்னையே அருவருப்பாக நினைத்து நொந்து கொள்பவர் அந்தப் பெண்ணைப் பார்த்ததும் மனம் பேதலித்து விடுகிறார். ஆசையும் மோகமும் அவரை வீழ்த்தி விடுகின்றன. அவள் திருமணமானவள் என்று தெரிந்தும் மறக்க முடியாமல் அல்லாடுகிறார். மனைவியை நெருங்கும் போது வேறொரு விதமான குற்ற உணர்ச்சி. மோகத்துக்கும் குற்ற உணர்ச்சிக்கும் நடுவே ஊசலாடுகிறது அவர் மனம். பைத்தியம் பிடித்தவர் போலத் துாக்கமின்றி அலைகிறார். ஒருநாள் காலையில் அவர் மனம் ஒரு முடிவெடுக்கிறது. இந்தக் குழப்பத்துக்கெல்லாம் காரணம் அந்த மோகினிதான் என்றும் அவளைக் கொன்று விட்டால், எல்லாம் சரியாகி விடும் என்று முடிவெடுத்து இழுப்பறையிலிருக்கும் துப்பாக்கியை எடுக்கிறார். கர்ப்பிணி மனைவி உள்ளே வந்ததும் எடுத்த துப்பாக்கியை உள்ளே வைத்துவிட்டுத் தடுமாற்றத்துடன் பேசுகிறார். ‘என்ன ஒரு மாதிரி இருக்கிறீர்கள் ? ‘ என்று ஆசையோடு நெருங்கும் மனைவியிடம் எதுவுமில்லை என்று மழுப்புகிறார். வாசலில் யாரோ அழைக்கும் சத்தம். போய்ப் பார்க்குமாறு சொல்கிறார் பிரபு. அவள் புறப்பட்டுச் சென்றதும் அவர் மீண்டும் துப்பாக்கியை எடுக்கிறார். அவளைச் சுட்டுவிட்டுத்தான் மறுவேலை என்று தயாராகிறார். ஒரு கணம். ஒரே ஒரு கணம். அவர் மனம் வேறொரு முனையிலிருந்து யோசிக்கத் தொடங்குகிறது. என்ன பைத்தியக்காரத்தனம். ‘அவள் அழகாய் இருப்பது அவள் தப்பா ? அவள் அழகில் பித்தாகி அலைவது என் தப்பா ? அவளைக் கொல்வதால் பிரச்சனை எப்படித் தீரும் ? தப்பு என் மீதிருக்க, தண்டனையை அவளுக்குத் தருவது எப்படி நியாயமாகும் ? ‘ இப்படிச் செல்கிறது அவர் யோசனை. தான் இல்லாமல் போனால், எல்லாம் ஒரு முடிவுக்கு வரும் என்று கருதுகிறார். அடுத்த யோசனைக்கே இடமின்றி, மூளைப் பகுதியில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இறந்து விழுகிறார் அவர்.

உலகின் மிகப் பெரிய முடிவுகள் எல்லாமே ஒரு கணத்தில் தீர்க்கமான சிந்தனையால் விளைந்தவை. அடிமனத்தில் ஊறிப் பெருகும் உணர்வோட்டத்துக்கு இசைவானதாக அந்த முடிவு அமைந்து விடுகிறது. ஒரு கப்பலின் நங்கூரம் போல மனத்தின் ஆழத்தில் அந்த முடிவும் எங்கோ கிடக்கிறது. சதா அலையும் மனஓட்டத்தில் தட்டுப்படாத அந்த நங்கூரம் ஏதோ ஒரு தருணத்தில் தட்டுப்பட்டு விடுகிறது. புத்தருக்கு உலகஞானம் கிடைத்து அரசசபையைத் துறந்த முடிவு ஒரு கணத்தில் எடுக்கப்பட்டதுதான் என்றாலும், அதை ஏற்று அதற்குத் தகுந்தபடி மாறிச் செல்லும் மனப்பக்குவம் அவருக்கு இயல்பாகவே இருந்தது. அஹிம்சைப் போர்தான் தன் வழி என்று காந்தி எடுத்த முடிவு, அவந்தி தேசத்துக்கு நீதான் அதிபதி என்று கர்ணனைப் பார்த்து துரியோதனன் அறிவித்த முடிவு எனப் பல முடிவுகளுக்கு அந்தக் கணங்களே காரணங்களாக அமைந்தன. தல்ஸ்தோயின் பிரபு எடுத்த முடிவும் அப்படிப்பட்ட ஒரு முடிவு. ‘அகத்தில் கடவுள் உருவம் புறத்தில் மனித உருவம் கொண்டவர்கள் நாம் ‘ என்று ரங்கநாதன் ஐயா சொன்ன வாக்கியத்தை மறுபடியும் மறுபடியும் நினைத்துப் பார்க்கிறேன். பல சமயங்களில் கடவுள் உருவம் வெற்றி பெறுவதே இவை போன்ற முடிவுகள் வழியாகத்தான் என்று தோன்றுகிறது.

***

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்