எனக்குப்பிடித்த கதைகள் – 4 – ஐஸக் பாஷெவில் ஸிங்கரின் ‘முட்டாள் கிம்பெல் ‘ ஆசை என்னும் வேர்

This entry is part [part not set] of 30 in the series 20020302_Issue

பாவண்ணன்


‘செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே ‘ என்று பரவசத்தோடும் பெருமிதத்தோடும் சொல்லிக் கொள்ளும் காதலர்களின் பதிவுகளைச் சங்ககாலக் கவிதைகளில் ஏராளமாகக் காணலாம். காதலனைப் பற்றிக் காதலிக்கும் காதலியைப் பற்றிக் காதலனுக்கும் உள்ள எண்ண ஓட்டங்கள் அன்பும் நம்பிக்கையும் ஆசையும் ஒருசேரக் குழைந்தவை. உலகிலுள்ள அனைத்து அஃறிணைப் பொருட்களையும் முன்வைத்து காதலனின்/காதலியின் அருமை பெருமைகள் மொழியப்படுகின்றன. இந்தப் பிறப்பு மட்டுமன்றி, இனி வரப்போகிற ஏழேழ் பிறவிக்கும் ‘யானாகுவன் நின் கணவன், நீயாகுவை என் நெஞ்சு நேர்பவளே ‘ என்று கூடச் சொல்லத் தோன்றியிருக்கிறது. இந்த அளவு அன்பில் தோய்ந்த இல்லற வாழ்வு தொடங்கப்பட்ட சில காலத்துக்குள்ளேயே பரத்தையர் பிரிவு வந்து விடுகிறது. ‘நெடும்பல் கூந்தல் குறுந்தொடி மகளிர் நலன்உண்டு துறத்தி ஆயின் மிக நன்று அம்ம-மகிழ்ந-நின் சூளே ‘ என்று வீட்டுக்குள் நுழையத் தடைசெய்யத் தொடங்கி விடுகிறாள் தலைவி. பரத்தையை நாடிச்சென்ற தலைவனைப் பற்றிய புகார்களையும் தவறான கணிப்புகளுக்கு ஆட்பட்டு விட்ட தனது சங்கடத்தையும் பேசுகிற பாடல்வரிகளும் ஏராளம். மலரினும் மெல்லிய காமத்தின்பால் சிலர் மட்டும் தலைப்படுவது எதற்காக ? மற்ற பலராலும் ஏன் தலைப்பட முடியவில்லை ? ஆசையையும் அன்பையும் ஒருமுகப்படுத்தி மனமிழக்க ஏன் மனிதர்களால் முடியவில்லை ?

அன்பு என்பது ஓர் உணர்வு. பூமிக்கடியில் நீரூற்று சுரந்து கொப்பளித்தபடியே இருப்பதைப் போல சதாகாலமும் மனத்தின் ஆழத்தில் ஊறிக் கொண்டே இருப்பது. போதும், போதாது என்கிற எல்லைகள் அன்புக்கு இல்லை. அதே சமயத்தில் வேண்டும், வேண்டாம் என்கிற சுவை வேறுபாடுகளும் அன்புக்கு இல்லை. அன்பு எல்லையற்றது, ஆழமானது. ஆகாயம் போல, கடல் போல. அன்பின் நெகிழ்ச்சியால் இணைகிற இருவரால், தொடர்ந்து இணைந்தே இருக்கமுடியாமல் போவது பெரும் சோகம். அந்த இணைப்புக்குக் காரணமான நெகிழ்ச்சியில் உண்மையான அன்பு இல்லை, அன்பின் சிறுசாயல் மட்டுமே இருந்திருக்கிறது என்று பொருளாகும். அன்பின் சாயலையும் அன்பையும் பிரித்துப் பார்க்க மனிதர்களுக்குத் தெரியவில்லை.பல நுாற்றாண்டுகள் கடந்த பிறகும் கூட எப்போதும் தேர்ச்சி பெற முடியாத ஒன்றாக அந்தக் கலை இருப்பது துரதிருஷ்டவசமானதாகும்.

திருமணமான கோவலன், மனைவியிடமிருந்து விலகி மாதவியுடன் கூடி வாழ்ந்து குழந்தை பெற்றுக் கொண்ட கதையைச் சிலப்பதிகாரம் பேசுகிறது. பரத்தையர் பக்கம் தலைவைத்தும் படுக்க மாட்டேன் என்று பலவாறு வாக்குறுதிகள் தந்துவிட்டு பொழுது சாய்ந்ததும் பரத்தையர் தெருவுக்குப் போகும் தலைவனைப் பற்றிய பாடல்களும் ஏராளமாக உள்ளன. விருப்பப்பட்ட பெண்களுடன் அடுத்தடுத்து மணம் செய்து கொண்டு எல்லாரோடும் சுகமாக இருந்த உதயணன் கதையும் காவியமாக எழுதப்பட்டிருக்கிறது. இவற்றின் இன்னொரு முகமாக, கள்ளப்புருஷன்மார்களோடு சுகமாக இருக்கிற மனைவிமார்களைப் பற்றிய சித்திரங்கள் நாடோடிப் பாடல்களில் காணப்படுகின்றன.

ஒரு பெண்ணோ, ஆணோ இன்னொரு ஆணுடன் அல்லது பெண்ணுடன் இணைந்து வாழத் தொடங்கிய பின்னர், வாழ்வின் இனிமையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள இயலாதபடி பலரின் வாழ்விலும் புயல் வீசத் தொடங்கி விடுவது புரியாத புதிர். புரிந்து கொள்ள முடியாத பெரும்புதிராக மனம் இருப்பதுதான் இப்புதிருக்குக் காரணம். இப்புதிருக்குக் காரணம் இதுவாக இருக்கலாம் என்று நாமாக ஊகித்துப் பலவாறு சொல்கிறோம். எழுதுகிறோம். ஆனால் அப்புதிரை நம்மால் ஒருநாளும் துல்லியமாகப் படம் பிடித்து விட முடிவதில்லை. ஆசையும் வெறுப்பும் எப்போது பிறக்கும், எப்போது விலகும் என்று சொல்லவும் முடிவதில்லை. பிரியவே பிரியாத ஜோடி என்று நாம் நம்பத் தொடங்கும் கணவனும் மனைவியும் அற்பமான ஒரு காரணத்தை முன்னிட்டுப் பிரிந்து போய் விடுவதுண்டு. பிரிந்து போவதைத் தவிர வேறு வழியில்லை என்னும் எண்ணத்தைத் துாண்டுவது போல நாள்முழுக்க வசைபாடிக் கொண்டும் ஒருவரையொருவர் நோகடித்துக் கொண்டும் வாழ்கிறவர்கள் சாகிற வரைக்கும் ஒரே கூரையின் கீழே வாழ்ந்து விடுவதுமுண்டு. மனத்தின் புதிர்தான் காரணம்.

அன்னா கரினினா நாவலைப் படிக்கும் போது விரான்ஸ்கியின் மீது அன்னாவுக்கு நாட்டம் தோன்றுவதைத் தவிர வேறு வழியே இல்லை எனத் தோன்றும் வண்ணம் காட்சியையும் சூழலையும் உருவாக்கிக் காட்டுகிறார் தல்ஸ்தோய். மறந்து பிரிந்து போக வேண்டும் என்று துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளும் விரான்ஸ்கியின் தற்கொலை முயற்சி எல்லாருடைய எண்ணங்களுக்கும் மாறாக, அன்னாவின் அன்பை அதிகரித்து விடுகிறது. மருத்துவத் துறையில் மிக நல்ல இடத்தைப் பெற்றிருக்கும் கணவனைக் கொண்டிருந்தாலும் கூட மீண்டும் மீண்டும் காதல் வயப்படுகிறாள் மேடம் பவாரி. தண்டபானி போன்ற அன்பான கணவனும் கனிவான பிள்ளைகளும் இருக்கும் சூழலிலும் அம்மா வந்தாள் அலங்காரத்தம்மாளுக்கு அடுத்த ஆண்மீது நாட்டம் பிறந்து விடுகிறது. எல்லாம் புரியாத புதிர்.

புரியாத புதிரின் முடிச்சைக் கண்டுபிடிக்கப் பயணப்படுவதே நல்ல இலக்கியத்தின் பண்பு. இந்த முடிச்சைப் பற்றி யோசிக்கத் தொடங்கும் ஒவ்வொரு கணமும் மனத்தில் தவறாமல் தோன்றுவது ஐஸக் பாஷெவில் ஸிங்கரின் ‘முட்டாள் கிம்பெல் ‘ சிறுகதையாகும். அப்பாவி அவன். ரொட்டிக் கடையில் மாவு பிசைபவன். முதலாளிகளிடமும் சக தொழிலாளிகளிடமும் வசை பெறுபவன். தன் மனைவி எல்கா மற்ற ஆண்களுடன் பழகுவதை அறியாதவன். பார்த்து விடுகிற ஒன்றிரண்டு தருணங்களில் கூட அது தன் பார்வைக் கோளாறு என்று எண்ணிக் கொள்பவன். அடுத்தவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளைக் கூடத் தன் பிள்ளைகளாக எண்ணி வளர்ப்பவன். ஒவ்வொரு கட்டத்திலும் கிம்பலின் அப்பாவித் தனத்தை நேர்த்தியாகக் காட்டுகிறார் ஸிங்கர். அக்கதையின் இறுதிக்கட்டம் மிக முக்கியமானது. மரணத்தறுவாயில் தன் தகாத உறவுகளைப் பற்றிய மனச்சுமைகளைக் கிம்பலின் முன்னால் இறக்கி வைத்து விட்டுக் கண்ணை மூடிக் கொள்கிறாள். மனைவியின் மரணத்துக்குப் பிறகு, அவள் காதலர்களின் கடிதங்களைப் பார்க்கிற டாக்டர் பவாரியைப் போல கிம்பலும் ஒருகணம் இடிந்து போகிறான். காலம் தன்னைக் கொடுமையாக நடத்துவதாக நினைத்துப் பழிவாங்கத் துடிக்கிறான். ஆவேசத்தின் வெறியில் ரொட்டி சுட வைத்திருக்கும் மாவில் சிறுநீரைக் கழித்து வைக்கிறான். அடுத்த கணமே அதன் விபரீதம் அவனுக்குப் புரிந்து விடுகிறது. காலத்தை மன்னித்து விடுகிறான். தனக்குப் பரலோக வாழ்வு கிட்டாமல் போகும் என்று அஞ்சுகிறான். மனம்மாறி தயாராகியிருந்த ரொட்டிகளையெல்லாம் உறைந்து கிடந்த தரையில் பள்ளமொன்றைத் தோண்டிக் கொட்டிப் புதைத்து விடுகிறான். பிள்ளைகளிடம் எல்லாப் பொறுப்புகளையும் ஒப்படைத்து விட்டு ஊரைவிட்டுச் சென்று விடுகிறான்.

வளர்ந்த இன்றைய வாழ்க்கை மரபில் ஒவ்வொன்றையும் ‘இதுஇது இப்படிஇப்படி ‘ என்று நாமாகச் சில கட்டுப்பாடுகளையும் விதித்துக் கொண்டோம். காலம் காலமாக இந்த வாழ்க்கை இப்படித்தான் வந்திருக்க வேண்டும் என்று நாமாகக் கற்பனை செய்து கொள்கிறோம்.இன்றைய மரபிலிருந்து பிசகிய செயல்பாடுகளை அவமானமாகவும் அருவருப்பாகவும் பார்த்து அவசர விமர்சனத்துக்கு உட்படுத்தி விடுகிறோம். நீளத் தொடங்கிய குரோட்டன் கிளையை நறுக்கி விடுவதைப் போல, பிசகுகளில் பிசிறுகளை நறுக்கிச் சுத்தமாக்கிய பிறகுதான் நமக்கு நிம்மதியே பிறக்கிறது. காலவெளியில் ஒரு கட்டத்தில் விருப்பம் போலக் கூடியும் விலகியும் வாழ்ந்த ஆதிமரபு ஒன்று இருந்திருக்கக் கூடும்.இன்றைய நாகரிகத்தில் நமக்குக் கிடைத்திருக்கும் வெளிச்சத்தில் அன்றைய நாகரிகத்தின் தன்மைகளை நாம் எடைபோடுவது தவறு. அம்மரபு காலம் காலமாக மக்களின் ஞாபகங்களில் புதையுண்டு போய்க் கிடந்திருக்கலாம். புதைந்து போன அம்மரபின் வேர் யாரோ ஒருவரின் மனம் வழியாக முளைவிடத் தொடங்க முனையும் போது ஞாபகமரபும் எதார்த்த மரபும் முரண்படத் தொடங்கி விடுகிறது. தள்ளவும் முடியாத கொள்ளவும் முடியாத தத்தளிப்பு கொடுமையானது. பாவப்பட்டவன் கிம்பெல் மட்டுமல்ல, கிம்பெலின் மனைவி எல்காவும்தான்.

கிம்பெலுக்கு மக்கள் வைத்த பட்டப்பெயரான ‘முட்டாள் ‘ என்னும் சொல் நம் கவனத்துக்குரியது. ஸிங்கர் அச்சொல்லைக் கவனமுடன் பயன்படுத்துவதாகத் தோன்றுகிறது. அடுத்தவர்கள் பார்வைக்கு முட்டாளாகப் படுகிறவனுக்குத்தான் பரலோக வாழ்வு பற்றிய பயம் இருக்கிறது. ஆதிமரபின் வேர்கள் தன் எல்காவின் நெஞ்சைக் கிழித்துக் கொண்டு முளைவிட்டதைச் சரியான பொருளில் புரிந்து கொள்ள முடிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அவனால் மட்டுமே மன்னிக்கவும் முடிகிறது. அன்னா தன்னை விட்டுப் பிரிந்து போனதும் அதிகாரியான கரினினா அப்படி ஒரு பெண் தன் வாழ்வில் இடம்பெறவே இல்லை என்பது போலத் தன் மனத்திலிருந்து அவளுக்குரிய இடத்தைத் துல்லியமாகத் துடைத்துச் சுத்தமாக்கிக் கொள்கிறார். எதார்த்த மரபிலிருந்து மட்டுமே அவரால் அன்னாவைப் பார்க்க முடிகிறது. மரணமடைந்த தன் மனைவிக்கு அவள் காதலர்கள் எழுதிய காதல் கடிதங்களைத் தற்செயலாகக் காண நேர்கிற டாக்டர் பவாரியின் மனம் கொள்ளும் அதிர்ச்சி கொஞ்சநஞ்சமல்ல. மனம் குமுறி நொந்து குறுகி விடுகிறார். அடுத்து என்ன செய்வது என்கிற குழப்பம் அவரைத் தவியாய்த் தவிக்க வைக்கிறது. உலகின் பார்வையில் முட்டாளான கிம்பெலுக்கும் கொஞ்ச நேரம் வருத்தமும் குமுறலும் இருப்பினும் சகஜமாக மன்னித்து விடுகிறான். இலக்கியத்தில் கிம்பெலின் இடம் உயர்ந்திருப்பதற்குக் காரணம் இதுதான்.

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்

1 Comment

Comments are closed.