எது உள்ளுணர்வு ?

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

புதியமாதவி, மும்பை.


இந்தியாவில் அனைவரும் இந்துக்களே என்று எழுதுவதிலும் தன் முடிவுகளுக்கு

பல்வேறு காரண காரியங்களை, உண்மை நிகழ்வுகளைச் சொல்லிச்செல்வதிலும்

மதிப்பிற்குரிய திரு. மலர்மன்னன் அவர்களுக்கு தனி ஆனந்தம். இருந்துவிட்டுப்

போகட்டும்.

தந்தை பெரியாரின் வட இந்திய பயணத்தின்போது பெரியாரை குருவாகவும் அவர்

அருகில் அப்போது இளைஞராக இருந்த அண்ணாவை அவருடைய சீடராகவும்

எண்ணி மக்கள் வணங்கிச் சென்றுள்ளதை பெரியார், அண்ணா இருவருமே பதிவு

செய்துள்ளார்கள். ஏன் தந்தை பெரியார் அவர்கள் இந்துமதக் கோவிலுக்கு

தர்மகர்த்தவாகவும் இருந்திருக்கிறார்! குன்றக்குடி அடிகளாரிடம் நெருங்கிப் பழகி

இருக்கிறார். தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் விருந்தினராக தங்கி இருந்தபோது

அதிகாலையில் அவர் குளியல் முடித்து வரும்போது கையில் விபூதி

தட்டுடன் நின்றிருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக இந்து மதத்தில் இருந்து

கொண்டேதான் இந்து மதத்தின் சீர்க்கேடுகளை எதிர்க்க வேண்டும் என்பதில்

மிகவும் தெளிவாக இருந்திருக்கிறார். அதனால்தான் மதமாற்றத்திற்கு

தலித்துகளின் தலைவர் அம்பேத்கர் துணிந்தப்போது ‘மக்கள் மதம் மாறட்டும்,

நீங்கள் மதம் மாறாதீர்கள் ‘ என்று சொல்லி இருக்கிறார்.

மதம் மாறியபின் இந்து மதத்தை விமர்சித்தால் அதற்கு கொடுக்கப்படும் விளக்கம்

எப்படி இருக்கும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். அதனால் தான்

‘கடவுள் இல்லை ‘ என்ற கொள்கையை நிலைநிறுத்துவதற்கு கூட ஆயிரம்கோடி

கடவுள்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், அவர்களின் தர்மபத்தினி, காதலியர்கள்

சகிதம் கற்பிக்கப்பட்டிருந்த இந்து மதத்திலேயே இருக்க வேண்டிய கட்டாயம்

அவருக்கு இருந்தது.

இதெல்லாம் கத்துக்குட்டி என் போன்றவர்களுக்கும் புரிகிறது. ஆனால் பக்குவம்

படைத்தவர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

காலம் காலமாய் நம்மில் திணிக்கப்பட்டிருக்கும் சில பழக்க வழக்கங்கள் மதத்தின்

அடிப்படையில் வந்ததாக இருந்தாலும் காலப்போக்கில் மதம் என்ற தளத்திலிருந்து

விலகி நம் அன்றாட காரியங்களில் எங்காவது முகம்காட்டத்தான் செய்யும்.

எல்லோரும் இந்துக்களே, நம் பழக்க வழக்கங்களில் இருப்பதெல்லாம் இந்து என்ற

உணர்வின் எச்சங்களே என்று எடுத்துக் கொண்டாலும்

>இங்கே யார் இந்துக்கள் ?

>இந்துக்களின் பழக்க வழக்கங்கள் என்ன ?

>இந்துக்கள் போற்றும் புனித நூல்களில் இந்த இந்துக்களின் பழக்க வழக்கங்கள்

சொல்லப்பட்டிருக்கிறதா ?

>அப்படி சொல்லப்பட்டிருக்கும் பழக்க வழக்கங்களுக்கும் நம் வாழ்விலும் மற்ற

மதத்தவர்களின் மதச்சடங்குகளில் காணப்படும் (இந்துமத) வழக்குகளும்

ஒன்றா அல்லது வேறு வேறா ?

இப்படி எத்தனையோ கேள்விகள் எழும். இவைகளுக்கான விடைகளில் கூட நாம்

எதையும் நூறு விழுக்காடு சரி என்ற முடிவுக்கு வர முடியாதுதான். ஏனேனில் சில

புரிதல்களுக்கு நாம் அதாக இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். அதுவரை நாம்

கண்டதும் உணர்ந்ததும் உண்மையின் ஒரு பகுதி மட்டும்தான்.

—-

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை