எதிர்கொள்ளுதல்

This entry is part [part not set] of 28 in the series 20090319_Issue

கே.எஸ்.சுதாகர்


கொழும்பு இரத்மலானை ‘எயாப்போட்’டிலிருந்து விமானம் மேலெழும்புகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வடபகுதிக்கு பிளேன் வெளிக்கிடுகின்றது.

“அக்காவிற்குக் கடுமை. ஒருக்கா வந்து பாத்துவிட்டுப் போனால் நல்லது.”
இவ்வளவும்தான் கடிதத்தில இருந்தது. இத்தனை காலத்தில அத்தான் எனக்கு ஒருபோதும் கடிதம் போட்டதில்லை. என்னவென்றாலும் அக்காதான் போடுவா. அத்தான் எழுதின கடிதத்தின்ர சுருக்கத்தில இருந்து நிலமையைப் புரிஞ்சு கொண்டன். அக்காவின் கடைசிப் பக்கங்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடிதம் கிடைச்ச மூண்டு நாளைக்குள்ள அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிக்கிட்டு சிறீலங்கா வந்திட்டன். வடபகுதி நிலமையள் மிக மோசமா இருந்தன. நாலு கிழமையா பலாலிக்கான விமானப் போக்குவரத்து நடக்கேல்லை. வடபகுதி முற்றாக ஏனைய பகுதிகளிலையிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது.

அக்கா!
அம்மாவிற்கு வருத்தம் வந்ததிலையிருந்து குடும்பத்தின்ர பொறுப்பு முழுதும் அக்காவின்ர தலையில விழுந்தது. சமைக்கிறதில இருந்து வீட்டைக் கட்டுக்கோப்பாக வைக்கிறது வரைக்கும் எல்லாம் அக்காதான். வறுமை நிலையிலையிருந்து இந்த நெருக்கடிகளையெல்லாம் அக்கா எதிர்கொள்ளப் பழகிக் கொண்டா. அக்காவுக்குக் கீழை என்னோடை சேத்து ஆறு பேர் இருந்தோம். அப்ப நாங்களெல்லாம் ஒரு நீளமான மேசையில இருந்து பள்ளிக்கூடப் பாடங்களைப் படிப்பம். ஆராவது நித்திரை தூங்கி விழுந்தால், கண் மூடி முழிக்கிறதுக்கிடையில பிடரி மண்டையில ஒரு குட்டு விழும். திரும்பிப் பாத்தா அக்காவைக் காணக் கிடைக்காது. அவ்வளவு வேகமாப் போய் மறைஞ்சு விடுவா.

பாடசாலை முடிஞ்சு வீட்டை வந்ததும் கிரிக்கட் விளையாடுவம். விளையாடி முடிஞ்சாப்போலையும் எங்கட தியானம் முழுக்க கிரிக்கட்டிலைதான் இருக்கும். அதாலை எங்கட படிப்புக் குலைஞ்சு போடும் எண்டு அக்கா நினைச்சா. மற்றது புழுதிக்கை நிண்டு விளையாடுறதாலை வருத்தங்களும் வந்து போகும். அப்ப எங்களிட்ட ஒரு விலையுயர்ந்த ‘பற்’ இருந்தது. அதாலை அடிச்சா பந்து நல்ல தூரத்துக்கும் உயரத்துக்கும் போகும். ஒருநாள் அந்த ‘பற்’றைத் தூக்கி அக்கா ஒழிச்சு வைச்சிட்டா. அதுக்குப் பிறகு அதை எங்கை தேடியும் கண்டு பிடிக்க முடியேல்ல. அதைக் கொத்தி விறகா அடுப்பு எரிக்கப் பாவிச்சிட்டா எண்டு நாங்கள் நினைச்சம். இற்ரை வரைக்கும் அது எங்கை போனதெண்டே தெரியேல்ல. அக்காவைக் கேட்டா எப்போதும் ஒரு சிரிப்புச் சிரிப்பா. சொல்லவே மாட்டா.

எனக்கு ‘சிவப்புக்கறி’ எண்டா நல்ல விருப்பம். ஒருநாள் அக்கா அரிவாளிலை ‘பீற்றூட்’ வெட்டிக் கொண்டிருக்கேக்கை தன்ர கை விரலையும் சேத்து நறுக்கிப் போட்டா. ரத்தம் கொட்டோ கொட்டெண்டு கொட்டி வெட்டி வைச்சிருந்த பீற்றூட்டுக்குள்ளையும் போனது. அக்கா ஒண்டுமே நடக்காதது போல எழும்பி கையைக் கழுவிப் போட்டு துணியொண்டைக் கட்டிக் கொண்டு வந்தா. வெட்டி வச்சிருந்த பீற்றூட்டை ரத்தம் போகக் கழுவிப் போட்டு கறி சமைச்சா. அண்டையிலை இருந்து எனக்கு ‘சிவப்புக்கறி’யிலை இருந்த ஆசை போட்டுது. அக்கா மேலையும் ஒரு தீராத வெறுப்பு நீண்ட நாட்களாக இருந்தது. பிறகு என்னுடைய தவறை உணர்ந்த போது, அக்காவை நினைச்சு கலலைதான் வந்தது.

வீட்டு வளவின் ஒதுக்குப் புறமாக, வட்ட வடிவாக மறைப்புக் கட்டி அதற்குள் குப்பை கூழங்களைப் போடுவம். காலமை எழும்பினவுடனை அக்காதான் வளவு கூட்டி பிறகு வீடும் கூட்டுவா. தீபாவளி வாற மாசத்தில, அப்பா அந்தக் குப்பையை ஆரேன் தோட்டக்காரருக்கு வித்துப் போடுவார். அதோடை வளக்கிற ஆடுகளிலையும் நல்ல கிடா ஆடாப் பாத்து ஒண்டை வித்துப் போடுவார். அந்தக் காசையும் சேத்து அப்பா அக்காவிட்டைக் குடுப்பார். அக்கா நாலைஞ்சு வீடு தள்ளி இருக்கிற சரசக்காவையும் கூட்டிக் கொண்டு யாழ்ப்பாணம் ‘ரவுண்’ போயிடுவா. இரண்டு பேருமா ஒரு சினிமாப்படமும் பாத்து, எல்லாக் கடையளும் ஏறி இறங்கி பின்னேரமா வருவினம். வரேக்கை எல்லாருக்கும் உடுப்புகளும் எடுத்துக் கொண்டு பென்னாம் பெரிய சைஷிலை இருக்கிற வடைப் பார்சலும் கொண்டு வருவினம். வடைக்குச் சம்பலும் வரும். காசு மிச்சமாக் கிடந்தா தேன்குழலும் வரும். வருஷத்திலை ஒருக்கா இது நடக்கும்.

அடிக்கடி வயித்துக்கை வலிக்குதெண்டு சொல்லி அக்கா ‘டிஸ்பிரின்’ போடுவா. அப்பெல்லாம் பனடோலும் நியூறபினும் இருந்ததோ எனக்கு ஞாபகம் இல்லை. “உவளுக்கு ஒரு கலியாணத்தைச் செய்து குடுத்திட்டியள் எண்டா உந்த வயித்து வலியும் பறந்து போம்” என்று வீட்டுக்கு வரும்போதெல்லாம் சரசக்கா அம்மாவிட்டைச் சொல்லுவா. அக்காவுக்குக் கலியாணம் நடந்தால்தானே! அம்மாவும் அப்பாவும் அக்காவுக்கு ஒரு கலியாணம் தேடிக் களைச்சுப் போச்சினம். அக்கா வடிவில்லை எண்டு சொல்லுறத்துக்கில்லை. செவ்வாய்க் குத்தமுமில்லை. சீதனம்தான் பிரச்சினை.

பத்துப் பதினைஞ்சு சாதகங்கள் பாத்திருப்பினம். இரண்டு பேர் வீட்டை வந்து அக்காவை நேரிலையும் பாத்தவை. கடைசியா ஒரு மொட்டந்தலை வாத்தியார் அளவெட்டியிலையிருந்து வந்து பாத்துவிட்டுப் போனவர். அக்காவுக்கு தலைமயிர் குட்டையாக்கிடக்கு எண்டு அவர் சொன்னதா ஞாபகம். இந்தா சரி வருகுது எண்டு இருக்கேக்கை அதுவும் குழம்பிப் போச்சு.

அக்கா கலியாணத்தை மறந்தே போனா.

எங்கட வீட்டில ஒரு பெரிய அலுமாரி இருந்தது. அது நிறையப் புத்தகங்கள். அதுக்கு மேலை பெரிய ‘டிரான்ஸ்சிஸ்டர் ரேடியோ’ இருந்தது. அதுக்கும் முதலாழி அக்காதான். வேறை ஒருத்தரும் அதைத் தொட முடியாது. காலமை பள்ளிக்கூடம் வெளிக்கிடுகிற நேரத்திலை பொங்கும் பூம்புனல். பின்னேரங்களிலை எப்போதாவது குங்குமம் மாதர் மங்கையர் நிகழ்ச்சி, இசையும் கதையும். சனி இரவுகளிலை கொஞ்சம் முஸ்லிம் நிகழ்ச்சி முடியிற இடத்திலையிருந்து நாடகம். அந்த ரேடியோவின்ர சத்தம் பத்துப்பதினைஞ்சு வீட்டுக்குக் கேட்கும்.

திடீரென்று ஒருநாள் திரும்பவும் அக்காவுக்கு கலியாணப்பேச்சு. எல்லாரும் மறந்து, இனிமேல் அக்காவுக்குக் கலியாணமே நடக்காது எண்டிருந்த வேளையிலை ஒரு நாற்பத்தியிரண்டு வயதுடைய ராசகுமாரன் வானத்திலிருந்து இறங்கி வந்தார். அவரும் தன்ர தங்கைச்சிமாருக்கெல்லாம் கலியாணம் செய்து குடுத்து, ஒரு பெரிய வீடும் கட்டிப் போட்டு இந்தக் கண்ராவிக்குள்ளை காலடி எடுத்து வைக்கிறார் எண்டு என்ர மாமா சொன்னார். மாமாவுக்கு அந்தக் கலியாணத்திலை விருப்பம் இல்லை. நான் மாமாவெண்டு சொல்லுறது என்ர அம்மாவின்ர தம்பியை. சத்தியமாச் சொல்லுறன் அந்த ராசகுமாரனைப் போல ஒரு தங்கமான மனிசனை என்ர வாழ்நாளிலை காணவேயில்லை. அக்காவுக்கு யோகம் அடித்தது. காத்திருந்தது வீண் போகவில்லை.

அத்தான்!
கொஞ்சம் கறுத்துப் போன குட்டையான உருவம். தோட்டம் செய்து முறுக்கேறின உடம்பு. எப்போதும் கலகலவெண்டு அக்காவைச் சீண்டிக் கொண்டே இருப்பார். இல்லாட்டி என்ர தங்கைச்சியோடை கொளுவிக் கொண்டிருப்பார். தங்கைச்சி எந்த நேரமும் வளவளவெண்டு கதைச்சுக் கொண்டு இருப்பாள். எங்கட வீட்டிலை அத்தானை எல்லாருக்குமே பிடிச்சுப் போச்சு.

அக்கா கலியாணம் முடிஞ்ச கையோடை அழுதா. அப்பா ‘உனக்கென்ன விசரா’ எண்டு அக்காவைப் பேசினார். எனக்கு என்ன நடக்குது எண்டு ஒண்டும் விளங்கேல்ல. அப்ப நான் சின்னன். ‘அவர் தன்ர ஊருக்கு மலரைக் கூட்டிக் கொண்டு போகப் போறாராம்’ எண்டு அம்மா அப்பாவின்ர காதுக்குள்ளை முணுமுணுத்தா. ‘உது என்ன விசர்க்கதை’ எண்டு அப்பா சத்தம் போட்டார். ஒருத்தருமே அக்கா வீட்டை விட்டுப் போகப் போறா எண்டதை நம்பேல்ல. அக்கா அத்தானைவை எங்களோடைதான் இருப்பினம் எண்டு நாங்கள் நினைச்சம். பிறகு எல்லாருமா கதைச்சுப் பேசி அப்பாவைச் சமாதானம் செய்திச்சினம். அக்கா அத்தானோடை அவையின்ர ஊருக்குப் போயிட்டா.

கலியாணம் முடிஞ்சு ரண்டாவது மாசம் அத்தான்ர வேலை பறிபோச்சு. மன்னாரிலை ‘பாங்’கிலை வேலை செய்து கொண்டிக்கேக்கை ஏதோ ஒரு இயக்கப்பெடியன்கள் போய் ‘பாங்’கைக் கொள்ளையடிச்சினம். அப்ப அங்கை வேலை செய்த அவ்வளவு பேருக்கும் விசாரணை முடியுமட்டும் வேலை இல்லை எண்டிட்டினம். அக்கா வந்த யோகம் சரியில்லையெண்டு அத்தான்ர வீட்டுக்காரர் கதைச்சது ஒருநாள் என்ர காதிலை விழுந்தது. நான் அதைப் பெரிசு படுத்தேல்ல. அத்தான் அதாலையொண்டும் விரக்தி அடையேல்ல. சலிச்சுப் போகேல்ல. எனக்கு அவரிலை பிடிச்சதே அதுதான். உறுதியான நெஞ்சம்.

சின்ன வயசிலை அவர் தன்ர அப்பாவோடை தோட்டம் வயல் எண்டு கடுமையா உழைச்சவராம். தன்ர தம்பி தங்கைச்சிமாரை படிப்பிச்சு ஒரு நல்ல நிலைக்கு அவையளை உயத்தி விட்டதாலை, அவர் தன்னைப் பற்றியொண்டும் நினைக்கேல்ல.

ஆறுமாதம் வேலையில்லாமல் அத்தான் இருந்தபோது சரியாக் கஸ்டப்பட்டுப் போனார். வசதியாக இருந்த உறவுகள் ஒண்டும் எந்தவித உதவியும் அவருக்குச் செய்யேல்ல. அப்பதான் அத்தான் ஒரு கடை வீட்டுக்கு முன்னாலை போட்டார். பெட்டிக்கடை. மரக்கறி மற்றும் மளிகைச் சாமான்கள். பக்கத்திலை ஒரு பள்ளிக்கூடம் இருந்ததாலை புத்தகம் கொப்பியள். கடை ஓகோவெண்டு ஓடிச்சுது. அதுக்கு அக்காதான் ‘கஷியர்’. அக்கா கடையோடை மும்மரமாகிப் போனா. அத்தான் கடைக்கு வேண்டிய வேலைகளைச் செய்து போட்டு தோட்டத்துக்குப் போயிடுவார்.

நான் இடைக்கிடை அவையிட்டைப் போய் வருவன். சிலவேளை அவையின்ர வீட்டிலை நிண்டும் வருவன். ஒருநாள் காலிலை செருப்பில்லாமல் சைக்கிளோடிக் கொண்டு போனபோது, அத்தான் பேசிப்போட்டு எனக்கு ஒரு சோடி செருப்பு வாங்கித் தந்தார். அக்காவோடை கடையிலை நிக்க எனக்கும் புளுகம். கதிரையிலை ஒரு பெரிய ‘பொஸ்’ போல கல்லாவுக்குப் பக்கத்தில இருப்பன். பள்ளிக்கூடப்பிள்ளையள் அம்பது சதத்தை நீட்டிக் கொண்டு ‘அதைத் தா, இதைத் தா’ எண்டு கேப்பினம். அக்காவுக்குச் சிரிப்பு வரும். ஏதோ அதுகளின்ர கையிலை குடுத்து சமாளிச்சுப் போடுவா.

கடையிலை கிடக்கிற அழுகின மரக்கறியளை ஒரு பெட்டிக்குள்ளை தூக்கி வைச்சுக் கொண்டு “நான் சமைச்சுப் போட்டு வாறன்” எண்டு அக்கா சொன்னா. “உதுகளைச் சாப்பிடுறதாலைதான் வருத்தம்” எண்டு அத்தான் பேசிப் போட்டு அதுகளைப் பறிச்சு குப்பைக் கூடைக்குள்ளை போட்டுவிட்டு புதுசா மரக்கறியளை எடுத்துக் கொடுத்தார். “இஞ்சாரும் தம்பியிட்டைச் சொல்லட்டுமே?” என்று அத்தான் புதிர் போட்டார். “உங்களுக்கென்ன விசரே!” எண்டு போட்டு கடையின் பின்பக்க வாசலாலை வீட்டுக்கு ஓடிப் போனா. பின்பக்கம் ஒருக்கா எட்டிப் பாத்து, அக்கா போய் விட்டா எண்டதை உறுதி செய்துவிட்டு “அக்கா வயித்திலை பெரிய தழும்மா வச்சிருக்கிறா” எண்டார். “உதை அப்பிடியே விட்டா பின்னாளிலை ‘கான்சர்’ வந்திடும். ஹொஸ்பிட்டல் போய்க் காட்டுவோம் எண்டாலும் வாறா இல்லை” எண்டு ஏக்கத்தோடை சொன்னார். அத்தான் மனமுடைஞ்சு பேசினதை அண்டைக்குத்தான் முதலிலை அவதானிச்சன்.

மெதுவா கடையிலையிருந்து விலகி வீட்டை போனன். அப்ப அக்கா உரலுக்கை சம்பல் இடிச்சுக் கொண்டு நிண்டா. என்னை மேலும் கீழும் பாத்தா. நான் நிண்ட நிலை அப்படி. “அத்தான் சொல்லுறது உண்மையா?” எண்டேன். அதுக்கிடையிலை அத்தானே வந்திட்டார். அக்காவின்ர சட்டையைத் தூக்கிக் காட்டினார். ‘கறுத்தை அட்டையைப்’ போல நீண்டு ஒரு பேனை நீளத்தில ஒரு தழும்பு தொப்பூளிற்குப் பக்கமாக ஓடியது. “அதொண்டுமில்லை. இஞ்சை பாருங்கோ நான் எப்பிடி வேலை செய்யிறன்” எண்டு சொல்லி உலக்கையைத் தூக்கி மேலும் கீழும் தொப்புத் தொப்பெண்டு போட்டு சம்பல் இடிச்சுக் காட்டினா. நான் திகைச்சுப் போனன். “உது மாத்திரமா? அல்லாட்டி வேறையும் உடம்பிலை எங்கேனும் இருக்கா” நடுங்கிக் கொண்டு அக்காவைக் கேட்டன். அத்தான் என்னைப் புதிராகப் பாத்துவிட்டு “மார்பிலும் ஒண்டு சின்னனா இருக்கு” எண்டார். “இஞ்சாருங்கோ போங்கோ கெதியிலை. கடையிலை ஒருத்தரும் இல்லை. ஆரேன் சாமானுகளைக் களவெடுத்துப் போடுவினம்” எண்டு சொல்லி அத்தானைக் கலைச்சா. அண்டைக்கு முழுக்க நான் ‘அப்செற்’றாகிப் போனன். அக்கா தனக்கொண்டுமில்லை எண்டாப்போல் கிணற்றிலை தண்ணி வீச்சு வீச்சாக அள்ளிக் காட்டினா. வேலையளை எல்லாம் பப்பரமாகச் செய்தா. மத்தியானம் சாப்பிடும் போதுதான் ஒண்டைக் கவனிச்சன். வீட்டுப் பாத்திரங்கள் எல்லாம் மண் பாத்திரங்களா மாறிப் போய்க் கிடந்தன. அலுமினியப் பாத்திரங்களிலை சமைச்சா வருத்தம் வந்திடுமெண்டு சொல்லி அத்தான் எல்லாப் பாத்திரங்களையும் மாத்திப் போட்டார்.

ஆறேழு மாதம் கழிச்சு அத்தானுக்குத் திரும்பவும் வேலை கிடைச்சுது. பாங்கிலை வேலை செய்த அத்தனை பேரையும் – அவையளிலை பிழை இல்லையெண்டு சொல்லி – விரும்பினால் வேலைக்கு வரலாம், அல்லது ஒரு தொகையை ரொக்கமாகப் பெற்றுக் கொண்டு வேலையிலிருந்து நிக்கலாம் எண்டு சொன்னார்கள். அத்தான் ரொக்கமாக பணத்தைப் பெற்றுக் கொண்டார். கடையைப் பெருப்பிச்சுக் கொண்டார். A – 9 தரைவழிப் பாதை போக்குவரத்துக்காக தடை செய்யப் பட்டுக் கிடந்த நேரம். பாதைக்கு இடைக்கிடை பூட்டுப் போட்டு பூட்டி வைச்சிருந்தது இராணுவம். சேறும் சகதியும் தாண்டி கிளாலிப் பாதையால – படகாலைதான் – வடபகுதிக்கு அங்காலை போக வேணும். கிளாலிக்குப் போற வாற ஆக்கள் அக்கா வீட்டுக்கு முன்னாலையிருந்த பாதையை அடிக்கடி பாவிச்சதால, வீதி எப்பவும் களை கட்டியிருக்கும். அதாலை கடைக்கு நல்ல ‘பிஸ்னஸ்’ எண்டு அக்கா சொல்லுவா.

“இருங்கோ, தண்ணி அள்ளிக் கொண்டு வாறன்” அத்தான் இடுப்பிலை ஒரு குடத்தைச் செருகிக் கொண்டு, மறு கையிலை வாளியையும் தூக்கிக் கொண்டு போனார். அவர்கள் வீட்டு கிணத்துத்தண்ணி நல்ல உவர்ப்பா இருந்தது. அதாலை அத்தான் நாலைஞ்சு வயல் தாண்டி நல்ல தண்ணி எடுத்து வந்து அக்காவுக்கு சமைக்கக் குடுப்பார். அந்த நேரமாப் பாத்து மாமா (அத்தானின்ர அப்பா) நொண்டி நொண்டி ஒரு புத்தகத்தையும் தூக்கிக் கொண்டு வந்து கடைக்கு முன்னாலை குந்தினார். மாமா எப்போதாவது அதாலை போனால் கடைக்கு வராமல் போகமாட்டார்.

“என்ன மாமா புத்தகம் சீரியஷா வாசிக்கிறியள் போல. கண் தெரியுதே?” அக்கா கேட்டா.
“அது பிள்ளை ராசி பலன் புத்தகம்” மாமா சொன்னார்.

“மிதுனத்துக்கு என்ன போட்டிருக்கு எண்டு பாருங்கோ மாமா”
“மலட்டுக் குடும்பம் எண்டு சொல்லுது!”
சொல்லிவிட்டு மாமா எழுப்பிப் போய்விட்டார்.

எங்களையெல்லாம் அக்கா பிள்ளைமாதிரிப் பாத்ததாலோ என்னவோ அக்காவுக்கு ஆண்டவன் பிள்ளைகளைக் கொடுக்கேல்ல. ஊரிலுள்ளவைக்கு பலதும் பத்தும் பேச அது வாய்ப்பானது.
‘கண் தெரியுதோ?’ எண்டு கேட்டது மாமாவுக்குப் பிடிக்கேல்லையோ அல்லது சிண்டு முடிய எண்டு வந்தரோ யாருக்குத் தெரியும்?

இன்னொருநாள் அக்காவின்ர வீட்டிலை வந்து நிக்கிறன். ஊருக்குள்ளை மறைஞ்சிருக்கிறதுக்காக இயக்கப் போராளிகள் ஒரு கூட்டமா வந்து சேந்தினம். அவையள் ஊருக்கை வர, ஊர்மக்கள் வெளியேறி கோயிலிலை போய் தஞ்சம் அடைஞ்சினம். அக்காவுக்கு சனம் கோயிலிலை போய் தஞ்சம் அடைஞ்சது பிடிக்கேல்லை. அண்டு முழுக்க கோபத்திலை புறுபுறுத்தபடியே இருந்தா. எதையும் எதிர்கொள்ளுற தைரியம் எங்கட ஊர்மக்களிட்டை இல்லை எண்டு சனத்தைப் பேசினா.

“இஞ்சாரும் நீரும் கோயிலிலை போய் இருக்கப் போறீரே?” என்று அத்தான் அக்காவைச் சீண்ட, அக்கா அவரை ஒருக்கா முழுசிப் பாத்தா.

நல்லகாலம். இரவு தெய்வாதீனமாக் கழிந்தது. விடிய ‘சக் புக்’ எண்ட வெடிச் சத்தத்தோடை எல்லாம் ஒரு முடிவுக்கு வந்தது.

அதுக்குப் பிறகு பல்கலைக்கழகப் படிப்புக்காக கொழும்புக்குப் போய் விட்டன். கொஞ்சம் ‘பிஷி’யாகிப் போனன். லீவு நாட்களிலை அக்காவிட்டைப் போறதுதான். எனக்குப் படிப்பதற்காக அத்தான் நிறையவே உதவி செய்தார்.

படிப்பு முடிஞ்சதும் கொழும்பிலேயே வேலை செய்தன். அக்காவையும் ஹொஸ்பிட்டலுக்குக் காட்ட கொழும்பு நல்ல இடமாக எனக்குப் பட்டது. எப்போதாவது அக்காவிடம் வருத்தம் பற்றிக் கேட்டா, “சீ, எனக்கென்ன வருத்தம்! ஒண்டுமில்லை” என்பா. கொழும்புக்கு வந்தா நல்ல டொக்ரரிட்டைக் காட்டலாம் எண்டு சொன்னன். அத்தான் அதுக்குச் சம்மதிச்சார். அக்கா கிளாலி தாண்டி ஒரு இடத்துக்கும் வரமாட்டன் எண்டிட்டா. சிங்களப்பகுதிக்குப் போனா தன்னைக் கொண்டு போடுவான்கள் எனப் பயந்திருக்கலாம். உடலைக் கீறிக் கிழிச்சு சின்னாபின்னமாக்கிப் போடுவினம் எண்டு நினைச்சிருக்கலாம்.

கனநாளா அத்தான் அக்காவோடை புடுங்குப்பட்டு, கடைசியிலை யாழ்ப்பாணத்திலை ஒரு டொக்ரரிட்டைக் காட்டச் சம்மதிச்சா. இடையிலை மருந்து மாந்திரீகம் எண்டும் கொஞ்ச நாள் அலைஞ்சு போட்டினம். தசையிலை ஒரு துண்டு வெட்டி கொழும்புக்கு பரிசோதனைக்கு அனுப்பிச்சினம். கான்சர் ‘இன்னிஷியல் ஸ்ரேஜ்’ எண்டு முடிவாச்சு. ஆனா அக்கா அப்பவும் தனக்கு ஒண்டுமில்லையெண்டுதான் சொன்னா. போர்க்கால சூழலிலை யாழ்ப்பாணத்திலை மருந்து ஒண்டும் இருக்கேல்ல. ‘பனடோல்’தான் அதிக பட்சம். வடபகுதியிலை ஒரு கான்சர் ஹொஸ்பிட்டல் இருந்திருந்தா ஒருவேளை அக்காவைக் குணப்படுத்தியிருக்கலாம்.

எத்தினை வருஷங்கள்?

கொழும்பில ஒரு நாலைஞ்சு. புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில ஒரு ஏழெட்டு. கொழும்பில இருக்கும் காலங்களில எத்தினை தரம் அக்காவைக் கொழும்புக்கு வரச் சொல்லி கெஞ்சிப் பாத்திருப்பன். கடைசிவரை கிளாலி தாண்டி வரவே மாட்டன் எண்டிட்டா. அக்காவின்ர தைரியமும் ஓர்மமும் அவவை விடவில்லை.

புலம்பெயர்ந்த நாட்களில் எனது அனுபவம் பட்டறிவு எப்படி முத்தியதோ, அந்த வேகத்திலை அக்காவின்ர வருத்தமும் முத்தியது.

விமானம் கீழை இறங்கிறதுக்கு அறிகுறியா பணிப்பெண்கள் அங்குமிங்குமா ஓடித் திரிஞ்சினம். விமானம் பலாலி ஓடுபாதையில் மெல்லத் தரையிறங்கியது. என் மனமும் கீழிறங்கியது. இன்னும் ஒருசில மணித்தியாலங்களில அக்கா அத்தானைச் சந்திச்சு விடலாம். மனசு பயமாக இருந்தது.

யாழ்ப்பாண நகரத்தை நோக்கி ‘வான்’ நகருகிறது. பலாலியைச் சுத்தி ஏராளமான நிலபுலங்கள் விவசாயம் செய்யப்பட்டுக் கிடந்தன. ஆங்காங்கே புதுசா வீடுகளும் முளைச்சிருந்தன. ‘உவங்கள் இப்போதைக்கு இந்த இடத்தை விட்டுப் போகாங்களப்பா’ எண்டு அருகிலிருந்த மனிதரொருவர் சலித்தார். ஆமிக்காரங்கள் எங்களையெல்லாம் கலைச்சுப் போட்டு, எங்கட நிலபுலங்களையெல்லாம் ஆக்கிரமிச்சுப் போட்டாங்கள். ‘வான்’, பற்றைகள் மண்திடல்கள் வழியே போகிறது. எனக்கு ஒரு இடமும் சரியாப் பிடிபடவில்லை. எல்லாம் சிதைஞ்சு சீரழிஞ்சுபோய்க் கிடந்தன. பண்ணைக்குக் கிட்ட ஏதோ ஒரு இடத்திலை கொண்டுவந்து இறக்கி விட்டான்கள்.

அங்கையிருந்து காரொண்டை வாடகைக்குப் பிடிச்சு வீட்டை போக முடிவு செய்தேன். கார் ஏ – 9 நெடுஞ்சாலை வழியே விழுந்து எழும்பிப் போகுது. செம்மண் புழுதி எங்கும் பரவுது. ‘இதிலை இறக்கினாப் போதும்’ எண்டு கண்டி றோட்டும் தச்சன்தோப்பு வீதியும் சந்திக்குமிடத்திலை இறங்கிக் கொண்டன். முன்பு எண்டா இந்த இடம் எவ்வளவு ‘சொர்க்க புரி’யாக் களை கட்டியிருக்கும். இப்ப வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. வெயிலின் அகோரத்தில எல்லாமே தகித்துக் கிடந்தது. மனிச சஞ்சாரமற்ற அந்தப் பிரதேசத்தினூடாக நடக்கிறதுக்கு பயமாக் கிடந்துது.

தூரத்தே ஒரு மெல்லிய உருவம் நிலத்தோடை ஒட்டி விடுமாப் போல சரிஞ்சு நடந்து போனது. கொஞ்சம் கெதியா நடந்து அவரைக் கடந்து திரும்பிப் பாத்தன். அக்காவின்ர கடைக்கு வாழைக்குலை விக்க வாற சீனியப்பு.

“எட சிவா! கொக்காவின்ர செத்தவீட்டுக்கு வந்து நிக்கிறாய் போல கிடக்கு” எண்ட அவரது பேச்சு என்னுடைய நினைப்புகள் எல்லாத்துக்கும் முழுக்குப் போட்டது. நெஞ்சு திக்கெண்டு போச்சு. அவர் நடந்தது எல்லாத்தையும் ஒண்டும் விடாம சொல்லிக் கொண்டே வந்தார். ஒரு மாசமா கொழும்பிலை நிக்கிறன். முன்னூறு கிலோ மீட்டருக்குள்ளை நடந்த செத்தவீட்டைத் தெரிஞ்சு கொள்லேலாமல் கிடக்கெண்டா நாட்டு நிலமைகளைப் பற்றி யோசிச்சுப் பாருங்கோவன்.

“ஒரு மாதமா பேயறைஞ்சது மாதிரிக் கிடந்த உன்ர கொத்தான், இப்பத்தான் கொஞ்சம் தெளிஞ்சு போய்க் கிடக்கிறான். போய்க் கெதியிலை பார்”

கடை பூட்டிக் கிடந்தது. வளவின்ர படலை திறந்தே கிடந்தது. மெதுவா தயங்கித் தயங்கி வளவுக்குள்ளை அடியெடுத்து வைக்கிறன். வீட்டுக் கதவும் திறந்தே கிடக்குது. உள்ளே சாய்வனைக் கதிரையில் அத்தான் மேல் சட்டையும் போடாமல் ஒரு சாரத்துடன் சரிந்து கிடக்கின்றார். நல்லா உருக்குலைஞ்சு போனார். ஒண்டுமே நடவாதது போல, “ஆர் சிவாவே! எல்லாம் கேள்விப்பட்டிருப்பாய். நாலு கிழமையாகுது” எண்டபடி கட்டிலிலிருந்து எழும்பினார். எப்பிடித்தான் இவராலை எல்லாத்தையும் தாங்கிக் கொள்ள முடிகிறது.

“இல்லை அத்தான். இப்பத்தான் வழியிலை சீனியப்பு எல்லாத்தையும் சொல்லிச்சு”

“அந்தாளின்ர மகன் மகேந்திரன் எனக்கு நல்ல உதவி. அப்பிடி மனிசர் கிடைக்காது. வா… உள்ளுக்கை வா” என்று ஹோலின் மற்றப்பக்கம் கூட்டிச் சென்றார். அங்கே ஒரு மேசையிலை அக்காவின்ர படமும் வைச்சு விளக்கு ஒண்டும் கொழுத்திக் கிடந்தது. என் கண்கள் பனித்தன. கதைக்கிறதுக்கு ஒரு வார்த்தையளும் வரேல்ல. அக்கா படத்திலிருந்து புன்முறுவல் செய்கின்றா. அது அக்கா அல்ல. எங்களையெல்லால் வளர்த்தெடுத்த அம்மா.

“ஒரு ரீ ஒண்டு போடுறன். நல்லாக் களைச்சு விழுந்து வந்திருப்பாய்” குசினிக்குள் போய் அடுப்பு மூட்டினார் அத்தான். இப்பவும் மண் பானை சட்டிகளே குசினிக்குள்ள இருந்தன.

“கடையைத் திறக்க இன்னமும் மனசு வரேல்ல. வயல் விதைப்பு தொடங்கிவிட்டுது. பருவம் தப்பினா பிறகு ஒண்டும் செய்து கொள்ளேலாது. முந்தியைப் போல இப்ப வயலும் செய்யேலாது. சும்மா வீட்டுத் தேவைக்குத்தான்.”

என்னிடம் ஒரு ரீ கப்பைத் தந்துவிட்டு தானும் ஒண்டை எடுத்துக் கொண்டு வெளியே வருகின்றார்.

“கடைசி நேரத்தில அக்கா சரியாக் கஸ்டப்பட்டுப் போனா. அப்ப ஊரடங்குச்சட்டம். சாகிறதுக்கு முதல் கிழமை நானும் மகேந்திரனுமா சேந்து பின்வளவு வேலியை வெட்டி, பள்ளிக்கூடத்துக் காணிக்குள்ளாலை அக்காவைத் தூக்கிக் கொண்டுபோய், அடுத்த றோட்டிலை இருக்கிற டொக்டர் வேலுப்பிள்ளையின்ர கிளினிக்கிலை வைச்சிருந்தம். அவற்ர கிளினிக்கிலை ரண்டு மூண்டு நோயாளியளை வைச்சு பராமரிக்கிற வசதியிருக்கு. நல்ல மனிசன்”

சொல்லிக் கொண்டே வீட்டின் பின்புறமா என்னைக் கூட்டிக் கொண்டு போனார். பள்ளிக்கூடத்துக்கும் வீட்டிற்கும் குறுக்கா இருந்த வேலியிலை ஒரு ரண்டு மூண்டு அடி நீளத்துக்கு வேலி வெட்டப்பட்டுக் கிடந்தது. பள்ளிக்கூட மைதானம் தண்ணீரிலை மிதந்து கிடந்தது.

“ஒரு மருந்தில்ல. நல்ல சாப்பாடு இல்ல. இந்தப் பனடோலாலை காய்ச்சலையே மாத்த முடியாமக் கிடக்கு. கான்சரை எப்படிக் குணப்படுத்துறது? அக்கா பட்ட வேதனை சொல்ல முடியாது. அதுவும் கடைசி மூண்டு நாளும் கண்ணும் தெரியாமப் போச்சு. யார் போட்ட சாபமோ, எங்கட நாட்டு மக்களுக்கு இப்படியாப் போச்சு” என்னைப் பாக்காம அந்த மைதானத்திலே தேங்கிக் கிடக்கும் அழுக்கு நீரைப் பாத்தபடியே அத்தான் சொன்னார்.

A – 9 பாதையைத் திறந்தாலும் கொஞ்சம் சாப்பாடு மருந்தெண்டாலும் வரும். அதுவும் வருஷக்கணக்கிலை பூட்டப்பட்டுக் கிடக்குது. என்ன நினைத்தாரோ தெரியவில்லை. மீண்டும் வீட்டிற்குள் வந்து சாய்வனைக் கட்டிலில் சரிந்து கொண்டார்.

“‘பாக்’கை எடுத்துக் கொண்டுபோய் றூமிலை வைச்சிட்டு, முகம் கை கால் அலம்பிக் கொண்டு வந்து ‘றெஸ்ற்’ எடு. நான் ஒருக்கா வயல் பக்கம் போய் வரவேணும்” சொல்லிப் போட்டு கண்ணை சற்றே மூடிக் கொண்டார். நான் அவரைத் தொந்தரவு செய்யவில்லை. அறைக்குள் வந்து கட்டிலில் சரிந்தேன். எல்லாமே கனவு போல நடந்து முடிஞ்சு விட்டன.

அக்காவுக்கு உதவும் எண்டு நினைச்சு வரேக்கை கொஞ்சக் காசு எடுத்து வந்திருந்தன். அதை இப்ப அத்தானிடம் குடுக்கலாம் எண்டு நினைச்சு அவரிட்டை நீட்டினன்.

“உங்களுக்கு எத்தனையோ செலவுகள் வந்திருக்கும். இதிலை கொஞ்சக் காசு எடுத்து வந்தனான். இதைத் தயவு செய்து வைச்சிருங்கோ.”

“சிவா, அக்கா காசில்லாமல் செத்துப் போகேல்ல. கொழும்புக்குக் கொண்டுபோய் வைச்சிருந்தா நீங்கள் எல்லாம் உதவி செய்திருப்பியள்தானே! அக்காவின்ர இறப்புக்குக் காரணம் அவவின்ர பிடிவாதம், ஓர்மம், அதீத இனப்பற்று. எனக்கு உந்தக் காசு வேண்டாம் சிவா.”

அத்தான் ஒருபோதும் கை நீட்டிக் காசு வாங்க மாட்டார். “நான் அக்காவின்ர படத்துக் கிட்ட வைக்கிறன்” என்று சொல்லிப்போட்டு அவரின் மறுமொழிக்குக் காத்திராமல் ஹோலின்ர மற்றப் பக்கம் போனேன்.

“சிவா! இஞ்சை வா. உனக்கொண்டு சொல்ல வேணும். இது அக்காவின்ர ஆசையும் கூட. வெளிநாடுகளிலை எல்லாம் தீராத வருத்தங்கள் வந்தா, அதுகளின்ர வேதனை உபாதைகளிலையிருந்து விடுபட மருந்து கொடுக்கிறார்களாமே! சிரித்துச் சிரித்தே அங்கை மனிதர்கள் இறக்கின்றார்களாம்.

கான்சர் தீராத வருத்தம்தான். அது தரும் வேதனைகளிலிருந்து விடுபட எங்கடை மக்களுக்கு ஒரு கான்சர் ஹொஸ்பிட்டல் வேணும். அது உங்களைப்போல புலம் பெயர்ந்த மக்களாலைதான் முடியும். தயவு செய்து அந்தக்காசை ஒரு ஆரம்பப் பணமாக எடுத்துக் கொண்டு எங்கட மக்களுக்கு ஒரு கான்சர் ஹொஸ்பிட்டல் கட்ட ஏதாவது முயற்சி செய்தா நல்லது” அத்தான் தனது உள்ளக்கிடக்கையை வெளியிட்டார்.

என் தலையில ஓங்கி ஒரு குட்டு விழுந்தது. அக்காதான் குட்டினா.

படத்திலிருந்த அக்கா என்னைப் பாத்துச் சிரிக்கின்றா. நான் அந்தக் காசை எடுத்துக் கொள்ளுறன்.

“தம்பி, மறந்திடாதை! கான்சர் ஆசுப்பத்திரி ஒண்டு கட்டவேணும். இன்னும் நிறையப் பேர் இந்த வருத்தத்தோடை இஞ்சை காத்துக் கொண்டு இருக்கினம்”

அக்காவா அத்தானா சொன்னது? இரண்டு பேரும்தான்.


kssutha@optusnet.com.au

Series Navigation

கே.எஸ்.சுதாகர்

கே.எஸ்.சுதாகர்