எதிர்காலத்துப் பணம் உண்மையிலேயே பேசலாம்

This entry is part [part not set] of 30 in the series 20020302_Issue

எகானமிஸ்ட் இதழிலிருந்து


அமெரிக்க டாலர் காகிதங்களில் ‘கடவுளை நம்புகிறோம் ‘ (In God we trust) என்று எழுதியிருக்கிறது. அமெரிக்க உளவு நிறுவனத்தை கிண்டல் செய்வதற்காக மக்கள் சொல்வது ‘மற்ற எல்லோரையும் நாங்கள் கண்காணிக்கிறோம் ‘ (All Others, we monitor) என்பது. இந்த ஜோக் உண்மையாகக்கூடிய காலம் வெகு விரைவில் வந்து கொண்டிருக்கிறது. சொல்லப்போனால், மேற்கண்ட ‘மற்ற எல்லோரையும் நாங்கள் கண்காணிக்கிறோம் ‘ என்று எழுதியே டாலர் காகிதங்கள் வந்தால் கூட சரியாகத் தான் இருக்கும்.

Radio-frequency identification tags (RFIDs) என்று சொல்லப்படும் ‘வானலை அடையாள குறிகள் ‘ ஏற்கெனவே பல பாதுகாப்பான இடங்களுக்கு அனுமதி வழங்க அட்டைகளில் கொடுக்கப்படுகின்றன. இவைகள், புத்தக நிலையங்களிலும், விற்பனை செய்யப்படும் பொருள்களை பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் பயனுள்ள குணம் என்னவென்றால், இவை ஒவ்வொன்றும் ஒரு தனி அடையாளத்தைக் கொண்டவை. இதனால், ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே அடையாளம் காண முடியும். அது மட்டுமல்ல, இவைகளை வெகு தூரத்திலிருந்து கொண்டே அறிந்து கொள்ளலாம். சமீப காலத்தில், இந்த அடையாள அட்டைகளை உருவாக்கும் தொழிற்சாலை அதிபர்கள், இவைகளை வங்கிகளின் பண காகிதங்களில் உபயோகப்படுத்துவதால் கிடைக்கும் லாபத்தை யோசித்து ஆசைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வங்கிகளின் பணக்காகிதங்களில் அடையாள குறிகளை போட்டால், சட்டரீதியான பணமா, எவ்வளவு பணம், இந்தப் பணம் எங்கே எங்கே சென்றது ஆகிய அனைத்தையும் அறியலாம்.

இந்த RFID குறிகளில் ஒரு சின்ன மைக்ரோசிப் சில்லு-வும், உள்ளே ஒரு ஆண்டெனாவும் (சின்ன கம்பி) இருக்கும். இவைகளை ஒரு சின்ன பிளாஸ்டிக் பேப்பருக்குள் அழுத்தப்பட்டு உள்ளே இருக்கும். உள்ளே எந்த பாட்டரியும் இருக்காது. இந்த குறியை எந்த மெஷினாவது படிக்க முயன்றால், அந்த ரேடியோ அலைகளினால் இந்த கம்பிக்குள் ஒரு சின்ன அளவு மின்காந்த சக்தி பாய்ந்து

அமெரிக்காவின் டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ், ஜப்பானின் ஹிடாச்சி, ஜெர்மனியின் இன்ஃபினியன் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்கள், புதிய வகை RFID குறிகளை உருவாக்கி இருக்கின்றன. இந்த மிகச்சிறிய கருவிகளின் அளவு சுமார் 1 மில்லி மீட்டர்தான். இவைகள் மிக அதிக அளவில், மிகக்குறைந்த செலவில் உருவாக்கவும், இவைகளை எளிமையாக வங்கி பணக்காகிதங்களின் உள்ளே புதைக்கவும் இயலும்.

இந்த வங்கிப் பணக்காகிதங்களை எவ்வளவு தூரத்திலிருந்து படிக்கலாம் என்பது எப்படிப்பட்ட சில்லுகள் இந்த பணக்காகிதங்களின் உள்ளே பொறுத்தப்பட்டுள்ளன என்பதைப் பொறுத்தது. சுமார் 10 செமீயிலிருந்து 1 மீட்டர் வரைக்கும் தூரம் இருக்கலாம். ஒரு சில தொழில்நுட்பம் மூலம், சுமார் 30 வங்கி காகிதங்களை ஒரே வினாடியில் படிக்கவும் இயலும். ஆரம்பத்தில் பணக்கட்டுகளை படிக்க முடியாது. ஒவ்வொன்றாக தரப்படும் பணம் எளிதாக படிக்க இயலும்.

இந்தத் தொழில்நுட்பத்துக்கு ஆகும் செலவு ஒரு சில்லுக்கு 10 ரூபாய் (30 அமெரிக்க காசுகள்) ஆகலாம். எப்படிப்பட்ட பாதுகாப்பு வேண்டும் என்பதைப் பொறுத்து விலையும் மாறும். இன்னும் சில 30 மாதங்களுக்குள் சில தொழில்நுட்பப் பிரச்னைகள் தீர்க்கப்பட்டுவிடும் என்று இன்ஃபினியன் நிறுவனம் கூறுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் விமர்சகர்கள், நீண்டகால தாமதத்தின் காரணமாக, உலகளாவிய பணப்பாதுகாப்பு தரங்கள் பற்றி ஒரு ஒப்பந்தத்துக்கு வருவது பாதிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

ஐரோப்பாவின் யூரோ பணம் இவ்வாறு குறியிடப்பட்டு வரும் சாத்தியம் இருக்கிறது. ஹிடாச்சி ஏற்கெனவே சில ஐரோப்பிய வங்கிகளுடன் இது சம்பந்தமாக பேசிவருவதாக அறிவித்து உள்ளது.

இப்படிப்பட்ட குறிகள், போலி பணம் தயார் பண்ணுபவர்களின் வாழ்க்கையை மிகவும் சோதனைப்படுத்திவிடும். ஏற்கெனவே, போலிப்பணத்துக்கு எதிரான வழிமுறைகள் மிகவும் உறுதியாக இருந்தாலும், இப்படிப்பட்ட ஆர்எஃப்ஐடிகள் மிகவும் உறுதியாகவும் ஆகிவிடும்.

இப்படிப்பட்ட குறியிடப்பட்ட பணக்காகிதங்கள், நேரடியாக ஒரு வங்கியின் உள்ளே இருக்கும் பணத்தை வெகுவிரைவில் கணக்கிட உதவும். எந்தப்பணம் யார் வாங்கிக்கொண்டு சென்றார்கள் என்பதும் மிகவும் நேரடியாக வங்கிகளால் செய்தி சேமிக்க உதவும். அதே போல, திருடப்பட்ட பணத்தை இப்போது யார் உபயோகித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறியவும் இது உதவும். எவ்வாறு பணம் நாட்டில் உலவுகிறது, எந்தப்பணம் புழக்கத்திலேயே வரவில்லை, எந்தப் பணம் மிக அதிகமாக உலவுகிறது ஆகிய அனைத்தும் இதன் மூலம் அறியலாம்.

இதற்கு இன்னும் பல வாய்ப்புகள் இருக்கின்றன. வெளிப்படையாக இல்லாத அடித்தள பொருளாதாரத்தில் எப்படி பணம் புழங்குகிறது, கடைசியில் எங்கு சென்று சேர்கிறது என்பதையும் இதன் மூலம் அறியலாம். ஆள்களைக் கடத்தி மீட்க பணம் கேட்கும் கடத்தல் காரர்களும், போதை மருந்து விற்கும் குற்றவாளிகளும் இந்தப் பணத்தின் மூலம் எளிதாக கண்டுபிடிக்கப்படலாம்.

இந்த தொழில்நுட்பம் மிகவும் தீவிரமாக தனி மனிதனின் அந்தரங்கத்தைப் பாதிக்கிறது என்பது உண்மைதான். ஒரு புறம், போதைப்பொருள்போன்ற தவறான பொருள்களில் வியாபாரம் செய்பவர்களும், விபச்சாரம் போன்ற தொழில்களில் ஈடுபடுபவர்களும், தங்களுடைய அந்தரங்கத்தையும், அனாமதேயத்தையும் இழக்கிறார்கள். மறுபுறம், அப்பாவியானவர்களும், இந்தப்பணம் இவர்கள் வழியே சென்றது என்ற ஒரே காரணத்துக்காக குற்றவாளியாகும் சூழ்நிலையும் இருக்கிறது.

இருப்பினும், பயங்கரவாதம், தீவிரவாதம், அமைப்புரீதியான குற்றங்கள் பெருகிய இந்த நாட்களில், சில பல உபரி விளைவுகள் இருந்தாலும் அவற்றைப் பொறுத்துக்கொண்டு, வலிமையாக பணத்தை தடயப்பொருளாக ஆக்கும் இந்த உத்திகள் வலிமைபெறும் என்றே தோன்றுகிறது. இந்த குறிகளின் விலைகள் இன்றைய தேதிக்கு மிக அதிகம் என்பது உண்மையானாலும், அதிகமதிப்பு கொண்ட (100 யூரோ, 500 யூரோ போன்றவைகளில்) ஆரம்பிக்கப்பட்டு, இதன் மூலம் விலைகுறைவு பெற்றதும் குறைந்த மதிப்பு காகிதங்களிலும் உபயோகிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதன் பக்க விளைவாக, இந்த தேசங்கள் இந்தியா போன்ற தேசங்களிலும் இந்த குறிகள் உள்ள பணத்தை புழக்கத்துக்கு அனுப்ப வற்புறுத்தும், ஆதரிக்கும், அல்லது மானியம் அளிக்கும் நிலைமையும் வரலாம். அதன் பின்னர், குற்றவாளிகளைப் பொறுத்த மட்டில், பணம் பேசாது, பதிலாக காட்டிக்கொடுக்கும்.

***

Series Navigation

எகானமிஸ்ட் இதழிலிருந்து

எகானமிஸ்ட் இதழிலிருந்து