நேசகுமார்
சாரு சாய்பாபா பற்றி எழுதியிருந்ததை மடலில் அனுப்பியிருந்தார் நண்பர் அருணகிரி. விஷயம் அந்தக்காலத்தய ஷீரடி பாபா பற்றியல்ல. இன்று வாழும் சாய் பாபா பற்றியது. அன்று வாழ்ந்தவர்களைப் பற்றி என்ன சொன்னாலும், அது சர்ச்சைக்காளாகாது. இன்று வாழ்பவர்கள் பற்றிச் சொல்வது சர்ச்சைகள் பலவற்றிற்கு இடம் கொடுக்கும் விஷயம். இந்நிலையில், சாருவின் எழுத்து பலரது புருவங்கள் உயரக்காரணமாயிருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.
சாருவின் நண்பருக்கு மோதிரம் வரவழைத்து கொடுத்த சாய்பாபா, அதை திடீரென்று தங்கச்சங்கிலியாக மாற்றிக் கொடுத்தாராம். பிறகு சாருவிடம் அவரது நண்பர், தாம் மனதில் மோதிரம் வேண்டாம் தங்கச்சங்கிலி வேண்டும் என்று நினைத்ததாகவும், அப்படி அவர் நினைத்தவுடன் பாபாவும் மாற்றிக் கொடுத்ததாகவும் எழுதியிருந்தார் சாரு. பலவருடங்களுக்கு முன்பு, ( ஐ.நா பணியிலிருந்து சமீபத்தில் விலகிக்கொண்ட) ஷஷி தாரூர் இதே போன்றதொரு விஷயத்தை தாமும் பாபாவின் முன்னிலையில் அனுபவித்ததை எழுதியிருந்தார்.
அருணகிரி அடுத்ததொரு மடலில், அதை அனுப்பிய பின்பு ஸ்மைலி போட மறந்துவிட்டதாக எழுதியிருந்தார். அவரது கருத்தின் படி சாருவை சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆம், படிக்கிறவர்கள் யாருக்கும் தோன்றும். இந்த மனிதர் திடீரென்று வேதத்தை மலம் என்று எழுதுகிறார். அம்முடிவுக்கு அவர் வர காரணமாயிருந்த விஷயங்கள் அதைவிட தீவிரமாக இருந்தும், குரானைப் புகழ்கிறார். திடீரென்று வெள்ளியங்கிரி அதிசயங்களைப் பற்றி எழுதுகிறார், இவரைப் போய் சீரியஸாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று பலரும் கருதுவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதான்.
***
சாய்பாபா விஷயம் ஒரு புறமிருக்கட்டும். வேதங்களைப் பற்றி சாரு எழுதியதற்கு வருவோம். இந்து மத வேதங்களைப் பற்றி நம்மில் எத்துனை பேருக்கு தெரியும்? வேதத்தில் என்ன சொல்லப் பட்டுள்ளது? நான் வேதத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்திருக்கிறேன். வேதத்தின் முடிவு, சிகரம் என்றெல்லாம் புகழப்படும் வேதாந்தத்தின் மீது எனக்கு அபரிதமான மரியாதை உண்டு. ஆனால், வேதங்கள்? அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்ததில் எனக்கு இது நமக்கு விளங்காத விஷயம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன்.
சாருவைப் போன்று வேதங்களை திட்டத் தோன்றாததற்குக் காரணம் – உபநிஷத்துக்கள். வேதத்தின் சாரமென்று சொல்கிறார்களே அந்த உபநிஷத்துக்கள்
உன்னதமானவை, இந்த பூமியில் என்றோ இத்துனை உயர் கருத்துக்களை சிந்தித்து போதித்துள்ளார்களே, அந்த முன்னோர்களை , மகான்களை நினைத்து
பெருமைப்படுகின்றேன். அதே சமயம், வேதத்தின் பக்கம் போக வேண்டாம். உபநிஷத்துக்களுடன் நமது தேடலை நிறுத்திக்கொள்வோம் என்ற முடிவுக்கு
வந்துவிட்டேன்.
***
இந்து மதத்தில் இதுதான் பிரச்சினை. வேதத்தில் என்ன ரகசியம் வேண்டிக்கிடக்கிறது? எதற்கு ஒரு ஜாதி மட்டுமே படிக்க வேண்டும், பாராயணம் செய்ய வேண்டும்? தினசரி விவாதங்களில் நண்பர்களிடம் நான் காணும் விஷயம், பிராம்மணரல்லாத நண்பர்களுக்கு தெரிந்த அளவுக்கு இந்து மதத்தின்
தத்துவங்களைப் பற்றி பிராமண நண்பர்களுக்கு தெரியாது. இது மேலோட்டமாக நான் சொல்வதுதான். உண்மை இதற்கு நேர்மாறாகக் கூட இருக்கக்கூடும். ஆனால், பொதுவாக அதீத தற்பெருமை ஒரு விஷயத்தை திறந்த மனதுடன் அணுகுவதற்கு தடைக்கல்லாக இருந்து விடுகிறது. மூடிய கோப்பையில் தேநீர் ஊற்றினால் வெளியே ஓடிவிடுகிறார்போல். பிராம்மணர்களுடைய தற்பெருமையுடன் ஒப்பிடும்போது, அவர்களின் ஆன்மீகம் ஓடிய தேநீர்தான்.
***
எனக்கு அடிக்கடி தோன்றும் ஒரு விஷயம், நமது கோவில்களையும், மடங்களையும் தலித்துக்கள் கையில் கொடுத்து விடலாம். வெறுமனே சடங்காய் , வயிற்றுப் பாட்டிற்காக பூஜை செய்யும் , தன்னை உயர்ந்த சாதி என்று நினைத்துக் கொள்ளும் பிராமணனை விட தாழ்ந்த சாதி என்று இத்தனை நாள் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு தலித்தின் பூஜையை கடவுள் நிச்சயமாய் ஏற்பார். செய்த தவறுகளுக்கு பிராயச்சிதமாகவும் இருக்கும்.
சமீபத்தில் ஒரு இராம மடத்திற்கு சென்றிருந்தேன். அதை நிர்வகிப்பவர் ஒரு நாயுடு. அரசு உத்யோகத்தில் இருந்து கொண்டு மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் மடத்தில் பூஜை செய்கிறார். அவர் கிருஷ்ணனை பாடி, அழைத்து, ஆடி , ஒன்றினைந்து பக்தியுடன் பூஜை செய்ததை ஒரு பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். எந்த பெருமாள் கோவிலில் அர்ச்சகர் இப்படி ஆழ்ந்து பூஜை செய்கிறார்? அதே போன்று முன்பெல்லாம் ஞாயிறு தோறும் தி.நகரில் இருக்கும் ஹரே கிருஷ்ணா ஆலயத்துக்கு சென்று(அங்கு இரவு சாப்பிட்டு) வருவது வழக்கம் எதேதோ ஜாதியினர், விதவிதமான மொழிபேசக் கூடியவர்கள், பலவித நாடுகளைச் சேர்ந்தவர்கள் அர்ச்சகராக இருப்பார்கள், உரை நிகழ்த்துவார்கள். அவர்களது பக்தியும் மெய்சிலிர்க்க வைக்கக் கூடியதாக இருக்கும். இதனாலேயே, ஆகமக் கோவில்களில் பரம்பரை அர்ச்சகர் முறையை அரசே முன்வந்து இருப்பவர்களுக்கு ஒரு வி.ஆர்.எஸ் கொடுத்தாவது மற்ற சாதியினரையும் நியமிக்கத் துவங்கலாம் என்பது எனது எண்ணம். மற்ற சாதியினர் எனும் போது அதில் தலித்துக்களுக்கு முதலிடம் தரலாம். பிராமணர்களை முழுவதுமாக நீக்கிவிடவேண்டும் என்று சொல்லவில்லை. அதிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பவர்களும் இருக்கட்டும், அதே சமயம் மற்ற சாதியினரும் கோவில்களில் அர்ச்சகராக இருக்கட்டும்.
திருவிடைமருதூர் கோவில் வாயிலில் பிரம்மஹத்தி உட்கார்ந்து கொண்டிருக்கும். நமது கண்ணுக்குப் புலப்படா தலித்ஹத்திகள் ஒவ்வொரு கோவில் வாயிலிலும் அமர்ந்து கொண்டிருக்கின்றன. பிராம்மணக் கொலைகளுக்காக பிரம்மஹத்திகள் நம்மை பிடிப்பது பொய்யாகக் கூட இருக்கலாம், ஆனால் இந்த தலித்கத்திகள் இருப்பது நிஜம். தலித்ஹத்திகள் நம்மை விரட்டுமுன், நாமே முன்வந்து மாற்றங்களைச் செய்தல் நலம். பெருவாரியான சனங்களுக்கு போய்ச்சேராத வேதங்களும், ஆகமங்களும், உபநிஷத்துக்களும், அறுவகைத்தத்துவங்களும் இருந்தால் என்ன, இல்லாவிட்டால்தான் என்ன.
விஷயம் இப்படியெல்லாம் இருக்கும்போது, சாருவை திட்டி என்ன பயன்?
***
சாய் பாபாவின் சிறந்த பக்தராக எனது நண்பர் ஒருவர் இருந்தார். இருந்தார் என்று சொல்வது சரியா தவறா என்று தெரியவில்லை. ஏனெனில், இப்போது அவர் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாது. இருந்திருந்தால், இப்போது அவருக்கு வயது 75 இருக்கும். கடின உழைப்பாளி. தமிழ் கலந்த தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட மலையாளி அவர். சாய்பாபா பற்றி கதைகதையாய்ச் சொல்வார். சொல்லும்போதெல்லாம் கண்ணீர் விடுவார்.
எனக்கு சாய்பாபா பற்றி எந்தவொரு எண்ணமும் கிடையாது. காரணம் – தெரியாது.இந்த பிஸியான வாழ்க்கையில் , என்னைவிட பன்மடங்கு பிஸியாக இருக்கும் சாய்பாபா உண்மையிலேயே பெரிய மகானா இல்லையா என்று ஆராய்ந்து நான் என்ன செய்யப் போகின்றேன்? ஆய்வின் முடிவில் அவர் ஒரு மகான் என்று அறிய நேர்ந்தால் கூட, அவரை நெருங்கி நாலுவார்த்தை பேசக்கூட முடியாது என்கிற நிலையில் இதனால் என்ன பிரயோசனம்?
***
தமிழக முதல்வர் சாய்பாபாவையும் மாதா அமிர்ந்தானந்தமயி அவர்களையும் சந்தித்தது வலைப்பதிவுகளில் காரசாரமாய் விவாதிக்கப் பட்டது. சரி, தவறு என்று வழக்கம் போல இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இதையும் அமைதியாக நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
எப்படியோ, வெகுஜன ஆன்மீக வாதிகளை முதல்வர் சந்தித்தது நல்ல விஷயமே. முதல்வரின் இந்த சந்திப்பு, அதில் அவர் தொடுத்த புகழாரங்கள், அவரின் இந்து மத எதிர்ப்பு என்பது, மேல் ஜாதியினர் மீதான வெறுப்பின் விளைவே என்பது மீண்டும் நிரூபணமாயிருக்கின்றது. மேல் ஜாதி என்றால், அனைத்து மேல் ஜாதியினரும் அல்ல. பிராமணர்கள் மட்டும்தான். இப்படி ஏன் மற்ற மேல்ஜாதியினரைக் குறிவைக்காமல் பிராமணர்களை மட்டும் ‘திராவிட’ இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் குறிவைக்கிறார்கள் என்ற கேள்வி எழலாம். தனியாய் விவாதிக்க வேண்டிய, நீளக்கூடிய விவாதம் அது.
எனக்கு இந்த விஷயத்தில் கருணாநிதி அவர்கள் மீது எந்தவிதமான வருத்தமும் கிடையாது. கோவில் முறை பலரை எக்ஸ்ப்ளாய்ட் செய்தது என்கிற கோபம் அவருக்குள் இருந்திருக்கலாம். இன்றைய மதிப்பீடுகளை வைத்து அன்றைய முறைகளை மதிப்பீடு செய்ய முடியாது என்று நான் நண்பர்களுக்கு சொல்வதுண்டு.
***
கோவில் என்றதும் ஆடல் மகளிர் பாரம்பர்யம் நினைவுக்கு வருகிறது. ஆடல் மகளிர் பாரம்பர்யம் என்பது நிறுவனப்படுத்தப்பட்ட மதங்களினூடேயும் தவழ்ந்து வந்த பாரம்பர்ய பெண் சுதந்திரத்தின் அடையாளம். இன்று செக்ஸ் என்பது அருவருப்பானதாய் பிரச்சாரம் செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டதால் அன்றைய முறைகளும், ஆலயங்களின் செக்ஸ் சிற்பங்களும் அவதூறாய் நம் கண்களுக்குத் தென்படுகின்றன. ஒருவகையில் ஆபிரகாமிய மதங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இந்த வக்கிரப்படுத்துதல் என்று நினைக்கின்றேன். தொண்டைய தமிழர் வாழ்வும் கலாச்சாரமும் அறியாத இன்றைய தமிழ்க்காவலர்கள் மட்டும் இந்தத்தவற்றைச் செய்யவில்லை. இந்து மதக்காவலர்களாக தம்மைக் கருதிக்கொள்பவர்களும் இப்படி காவிமுண்டாசு கட்டிய முல்லாக்களாக மாறிவிட்டதுதான் வேதனை. இந்த விஷயமும் விரிவாக விவாதிக்கப்படவேண்டிய ஒன்று என்பதால் இத்துடன் இதை இங்கேயே விடுகின்றேன். பிறிதொரு சமயத்தில் இது குறித்து விரிவாக எனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.
***
சாய்பாபா, மாதா அமிர்ந்தானந்தமயி ஆகிய இருவருமே பொதுஜன சேவையிலும் முன்னணியில் இருப்பவர்கள். சுனாமி பணிகளில் மாதா அமிர்ந்தானந்தமயி அவர்கள் புரிந்துள்ள சாதனைகள் மகத்தானவை. சுனாமி சமயத்தில் ஓடிவந்த என்.ஜி.ஓக்களில் 90% இன்று அங்கில்லை. அப்போதைக்கு சில காஸ்மெடிக் சேவைகளைச் செய்துவிட்டு நகர்ந்து சென்றுவிட்டனர். ஆனால், அமிர்தானந்தமயி அவர்களின் ஆசிரமம் செய்துள்ளவையோ மிகவும் சிறப்பானவை. முதன்முதலாக வீடுகளை கட்டி முடித்து மீனவர்களுக்கு வழங்கியவர்கள் அவ்ர்கள் தாம். இத்தனைக்கும் அந்த வீடுகள் ஐ.ஐ.டி நிபுனர் ஒருவரின் வடிவமைப்பில் மீண்டும் சுனாமி வந்தாலும் பாதிக்காத வகையில்(நீர் பிரிந்து வீடுகளைக் கடந்து சென்று விடும் வகையில் வடிவமைத்துள்ளனர்) கட்டியுள்ளனர். மீனவர்களுக்கு மீன்பிடித்தொழிலில் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். மீன் வாசனையைத் தாளாது மூக்கைப் பொத்திக் கொண்டு உபதேசிக்கும் ‘மடாதிபதிகளை’ விட, அவர்களின் கஷ்ட நஷ்டங்களில் பங்குபெற்று, அவர்களில் ஒருவராக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு சேவை செய்யும் இவர்கள் கோடி மடங்கு உயர்ந்தவர்கள். இன்றைய இந்து மத்திற்கு இது போன்ற மகான்கள் தாம் தேவைப்படுகின்றார்கள். உப்பரிகையில் அமர்ந்து கொண்டு புரியாத பாஷையில் முனுமுனுப்பவர்கள் இருந்தால் என்ன, போனால் என்ன!
அந்த வகையில் தமிழக முதல்வர் சிறந்ததொரு முன்மாதிரியை ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றார் என்றே தோன்றுகிறது. பொதுவாக தி.மு.க பற்றியும் கருணாநிதி அவர்கள் பற்றியும் எனக்கு நல்ல அபிப்ராயம் இருந்ததில்லை. தமிழகத்தை மீண்டும் ஜிகாதிகளின் போர்பூமியாக மாற்றிவிடுவார்கள் இவர்கள், இதெல்லாம் சும்மா இந்துக்களுக்கு குச்சி மிட்டாய் விற்பது என்று எழுதியிருந்தார் நண்பர் அரவிந்தன் நீலகண்டன். தி.மு.க ஜிகாதிகளின் சுவன பூமியாக தமிழகம் மாறுவதற்க்கு வழிவகுக்கின்றது என்று கோபப்படும் பல இந்துத்துவ நண்பர்கள் இருக்கின்றார்கள். ஓரளவிற்கு எனக்கும் இந்தக்கருத்துக்களில் உடன்பாடு உண்டு. இதனாலேயே இவர்களைவிட ஊழல் மிகுந்திருந்தாலும், ஜெயலலிதா பரவாயில்லை என்று நினைத்துக் கொள்வேன். முதல் முறையாக வரவேற்கும்படியான செயலைச் செய்திருக்கின்றார் முதல்வர்.கருணாநிதி அவர்கள்.
***
முதல்வரைப் பற்றிக் குறிப்பிடும்போது, இது சம்பந்தமாக நண்பர்கள் நாங்கள் நேற்று பேசிக்கொண்டது நினைவுக்கு வருகிறது. “பாருங்கள் நேசகுமார், கனிமொழி எனது கலைவாரிசு மட்டும்தான், வாரிசு அல்ல என்று சொல்லியுள்ளார் முதல்வர்” என்றார் சிவக்குமார். தனிப்பட்ட முறையில் நான் ஸ்டாலின் வருவதை விரும்பாதவன். அவர் இத்தனை ஆண்டுகாலம் அரசியலில் இருந்தும் , தம்மை தமிழகத்தலைவராக தயார் படுத்திக்கொள்ளவே இல்லை என்பது எனது எண்ணம். கனிமொழி சிறந்த அரசியல் வாரிசாக மட்டுமல்ல, ஜெயலலிதா அவர்களின் பாரம்பர்ய வாக்கு வங்கியிலும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது எனது கருத்து. திடீரென்று டெல்லியில் தயாநிதி நுழைக்கப்பட்டு அவர் அதை சிறந்த முறையில் தக்கவைத்துக் கொண்டது போலவே, கனிமொழியும் அரசியலில் இறங்கினால் முதல்வருக்கு சிறந்த வாரிசாக, தமிழகத்திற்கு சிறந்த தலைவராக வருவார் என்றே தோன்றுகிறது. கட்சியைக் கட்டிக்காப்பாரா அவர் என்ற சந்தேகம் முதல்வருக்கு இருக்கிறது போலும். அல்லது மகன் தரப்பிலிருந்து நிறைய நிர்ப்பந்தங்கள் இருக்கலாம்.
கனிமொழி எம்.பி ஆகிறார் என்றார் இன்னொரு நண்பர், குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த செய்தியை சுட்டிக் காட்டி. அவரது கருத்துப்படி ஸ்டாலினே மேல். கனிமொழி வந்தால் , ஜெயலலிதாவை விட பன்மடங்கு பெரிய சர்வாதிகாரியை தமிழகம் சந்திக்கும் என்பது அவரது கருத்து. “எதனால் இப்படி சொல்கிறீர்கள்” என்று கேட்டேன். ஜெயலலிதாவுக்கு சித்தாந்த சார்பு கிடையாது, கனிமொழியோ தீவிர சார்பு நிலை எடுப்பவர். மேலும் இவருக்கு தாம் ஒரு பெரிய அறிவுஜீவி என்கிற நினைப்பு வேறு. இவருக்கு மாற்றான விஷயத்தை புரியவைக்க முடியாது. இப்படிப்பட்டவர்கள் அதிகாரம் கிடைத்தால் பெரிய சர்வாதிகாரியாக உருவெடுப்பார்கள் என்றார். தனியே விவாதிக்க வேண்டிய விஷயம் இது என்பதால், அந்த நண்பரின் கருத்துக்களை பிறகு விரிவாக பகிர்ந்து கொள்கிறேன்.
***
கனிமொழி என்றதும் மீண்டும் சாரு நினைவுக்கு வருகிறார். தமது தப்புத்தாளங்களில்(கோணல் பக்கங்கள்) அவர் ஒரு ஒப்பீட்டை தந்துள்ளார். எழுதுவதற்கு முன்பாகவே ஸ்மைலி போட்டுவிடுகிறேன். படிக்கும்போது பக்கத்தில் யாரும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள், இல்லையேல் படித்து நீங்கள் குபீரென்று சிரிக்க, அவர்கள் ஒரு மாதிரியாக பார்க்கப் போகின்றார்கள்.
“முன்னர் ஒருமுறை தமிழ் எழுத்தாளர் ஒவ்வொருவருக்கும் ஜோடியாக ஒரு நடிகரைக் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். உருவ ஒற்றுமையை வைத்து அல்ல; சில குணாம்சங்களை ஒப்பிட்டு செய்தது அது. அப்பட்டியல் குறித்து அப்போது
பரவலாக பேசப்பட்டது. அதில் என்னைக் கவர்ந்த ஒப்பீடுகளில் சில:
ரங்காராவ் – சுந்தர ராமசாமி
ரஜினி – ஜெயமோகன்
கமல் – சாருநிவேதிதா
விஜயசாந்தி – திலகவதி
வில்லன் நடிகர் பொன்னம்பலம் – காலச்சுவடு கண்ணன்
இதே போல் இப்போது சில பெண் எழுத்தாளர்களுக்குத் தோதான சினிமா படங்களைப் பட்டியலிட்டேன். சம்பந்தப்பட்டவர்கள் பூமிக்கும் ஆகாயத்த்க்குமாக எகிறிக் குதிக்காமல் சற்றே நகைச்சுவை உணர்வுடன் இதை எடுத்துக் கொள்ளவும்.
உமா மகேஸ்வரி – மூன்றாம் பிறை
பெருந்தேவி – ஆழ்வார்
சல்மா – புதுப்பேட்டை
மாலதி மைத்ரி – திமிரு (அல்லது ) முனி
குட்டி ரேவதி – சண்டைக்கோழி
சுகிர்த ராணி – அவளோட ராவுகள்
தென்றல் – தென்றலே என்னைத் தொடு
தமிழச்சி – மொழி
திலகவதி – வேட்டையாடு விளையாடு
கனிமொழி – அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது ”
மேலே கண்டதைப் படித்த போது சிரித்துக்கொண்டே மூன்று விஷயங்களைக் கவனித்தேன். ஒன்று – சாரு, தன்னை கமலாகவும் ஜெமோவை ரஜினியாகவும் உருவகப்படுத்தியிருப்பது. அறிவுஜீவித்தமிழர்கள் என்று தம்மை நினைத்துக்கொண்டிருப்போரிடையே கமல் – ரஜினி பற்றிய மாயப்பிம்பம் ஒன்று உண்டு. அதை குறிவைத்து சாரு இந்த அம்பை எய்திருப்பதாகப் பட்டது. இரண்டாவது, சுகிர்தராணி பற்றிய கமென்ட். என்னதான் நகைச்சுவை என்றாலும் இது கொஞ்சம் அதிகம்தான். அதிலும், அவருக்கெதிராக ஆணாதிக்கச் சிந்தனை கொண்டோர் செய்த தாக்குதல்களை நினைவுகூறும்போது. மூன்றாவது, கனிமொழி பக்கம் பட்டம் விடுகிறார் சாரு என்று தோன்றியது. விளங்காமல் எழுதுவதால் தங்களை விளிம்பு நிலை அறிவுஜீவி என்று கற்பனை செய்துகொள்ளும் அனைத்து தமிழிலக்கிய எழுத்தாளர்களுக்கும் இருக்கும் அபிலாஷையை கொஞ்சம் தைரியமாகவே வெளிப்படுத்தும் சாருவின் தைரியத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை. எனக்கென்னவோ சாருவுக்கும் ரஜினிக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாகப் பட்டது. என்ன, இன்றைய வயதான ரஜினி என்பதுகளின் ரஜினியைப் போல சிகிரெட்டை தூக்கிப் போட்டு பிடித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கின்றன சாருவின் நடவடிக்கைகள், எப்போதும் அல்ல, சில சமயங்களில்.
– நேசகுமார்
01.03.2007
http://nesamudan.blogspot.com
- விருதுநகரில் விடியல் விழா நாள் 8/3/2007 வியாழன் மாலை 5.30 மணி
- எண்ணச் சிதறல்கள் – சாரு, சாய் பாபா, அமிர்தானந்தமயி, தமிழக முதல்வர், கனிமொழி,அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
- தொலைந்த ஆன்மா
- நீர்வலை – (13)
- உண்மை கசக்கும்
- “மும்பை டப்பா வாலாவுக்கு ஜே…ஏஏ!!!”
- சுதந்திரமும் சுதந்திரம் துறத்தலும்
- கடல் மெளனமாகப் பொங்குகிறது
- நியூசிலாந்து பயண நினைவுகள்
- அம்பைக்கு விளக்கு விருது வழங்கும் விழா
- சினிமா – BABEL
- ‘பெரியார்’ வருகிறார்!!
- காதல் நாற்பது (11) காதலுணர்வு எழிலானது !
- புதுமைப்பித்தன் இலக்கியச்சர்ச்சை 1951 – 52 நூல்வெளியீடு
- எரங்காட்டின் எல்லைக்கல்
- அரசியல் கலந்துரையாடல்
- கலவியில் காயம் – நடேசன்
- கடித இலக்கியம் -47
- திரு அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ‘புஷ்யமித்திரரும் பிரச்சார படுகொலைகளும்’
- ஜெயமோகனின் “இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?” கட்டுரை குறித்து
- சமுதாய மாற்றத்தில் தமிழ் இதழ்கள்
- கந்தர்வன் நினைவு சிறுகதைப்போட்டி
- வாழும் விருப்பமுள்ள மனிதர்கள் ( நாஞ்சில்நாடனுடைய கதையுலகம்)
- கவிதையின்மீது நடத்தப்படும் வன்முறை……
- வால்மீனில் தடம் வைத்து உளவப் போகும் ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல்
- கவிதைகள்
- கவிதைகள்
- நாங்கள் புதுக்கவிஞர்கள்
- தூரமொன்றைத் தேடித்தேடி..
- குருதிவடியும் கிறிஸ்து
- பெரியபுராணம்-124 திருமூல நாயனார் புராணம் தொடர்ச்சி
- நிலவு “டால்பின்”
- ஹிந்து குடிமைச் சட்டத்திற்கு அடிப்படை மனு ஸ்மிருதியா?
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:7 காட்சி:2)
- மடியில் நெருப்பு – 27