எட்டாயிரம் தலைமுறை

This entry is part [part not set] of 46 in the series 20060217_Issue

தமிழ்மகன்


(காதலர் தின சிறப்புக் கதை)

எட்டாயிரம் தலைமுறைக்கு முன்னால் எங்கள் பரம்பரையில் நிகழ்ந்த கதை இது. வெளியில் சொல்ல வெட்கப்பட்டோ, இதையெல்லாம் யாரும் நம்ப மாட்டார்கள் என்றோ, எங்கள் குடும்ப வாரிசுகள் அன்றி வேறு யாருடனும் இதைப் பகிர்ந்து கொள்வதில்லை.

ஏறத்தாழ எட்டாயிரத்து ஒன்றாம் தலைமுறையில் இது வெளியுலகுக்குத் தெரிய வருகிறது. ராமானுஜர் தனக்குப் புண்ணியம் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்று சொர்க்கத்துக்குப் போகும் மந்திரத்தை கோபுரத்தில் ஏறி மக்களுக்குச் சொன்னதுபோல நானும் சொல்லும் முடிவுக்கு வந்துவிட்டேன்.

முந்தாநாள் நடந்த இந்திய சுதந்திரத்தைப் பற்றியே ஆளுக்கொரு முரண்பாடுகள் சொல்லிக் கொண்டிருக்கும்போது இந்த எட்டாயிரம் தலைமுறைக் காதலில் எத்தனை கண்கள் காதுகள் மூக்குகள் ஜோடிக்கப் பட்டிருக்கும் என்று பயப்பட வேண்டாம். இதில் என் மூதாதையரின் சொந்தக் கற்பனைகளோ சொந்தச் சரக்கோ வந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் அவர்களுக்கு எந்த ஆதாயமும் இல்லை என்பதோடு நான் அறிந்தவரை என் தாத்தா என் அப்பாவிடம் சொல்லியதைத்தான் சத்தியமாக உங்களிடம் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.

ஓர் உண்மை இந்த சயநல யுகத்தில் மூன்று தலைமுறையாக ஒரேமாதிரியாக இருப்பதே அசாதாரணம் எனும் பட்சத்தில் இதற்க முந்தைய அப்பழுக்கற்ற மனிதர்களின் புயத்திலும் அதற்கு முந்தைய மொழியே உருவாகாத காலத்திலும் எந்தக் கற்பனையும் கலப்படாகியிருக்காது என்றே உறுதியாகத் தோன்றுகிறது.

விஷயத்துக்கு வருவோம்.

என் தாத்தா ஏழாயிரத்தித் தொள்ளாயிரத்துத் தொண்ணுாற்று ஒன்பதாவது தடவையாக இந்தக் கதையை என் அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே நான் ஒட்டுக் கேட்டுவிட்டேன். ஒவ்வொரு புதிய வாரிசு உருவாகும்போதும் நெல்லைப் பரப்பி அதில் வாரிசு எண்ணை எழுதும் வழக்கம் எங்கள் மரபில் இருந்து வருகிறது. ஒரு தலைமுறைக்கு முப்பது ஆண்டுகள் என்று கணக்கிட்டாலும் இருபத்தி நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கதை இது.

சொல்லப்போனால் அப்போது தமிழ்மொழிகூட எழுத்துக்களை உருவாக்கி யிருக்கவில்லை. எழுத்து என்ன எழுத்து ? தமிழன் ஒரு கோடு போடுவதற்குக் கூட அறிந்திருக்கவில்லை. காட்டெருமை ஒன்றைக் கல்லால் அடித்து வீழ்த்தி ரத்தம் சொட்டச் சொட்ட அதை குகைக்கு இழுத்து வந்தபோது மண்புழுதியில் ரத்தத்தால் ஏற்பட்ட கோடு அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவனுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது. விரலால் காட்டெருமையின் ரத்தத்தைத் தொட்டு குகையிலும் இங்கும் அங்கும் கோடுகள் போட்டான். அவனுக்கு பிரமிப்பு தாளவில்லை. திகைத்துப் போய் அந்தக் கோடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். ரத்தத்தை இப்படி விரயமாக்குவதற்காக சக கூட்டாளிகளின் கோபமான கர்ஜனைக்கு ஆளானான் அவன். அந்த கர்ஜனையைத் தமிழ் கர்ஜனை என்றுதான் இன்று நினைக்கத் தோன்றுகிறது.

மொழியோ ஆடையோ கலாபூர்வமான சிந்தனைகளோ இன்றி அந்தக் கூட்டத்தினர் வாழ்ந்த பிரதேசமே கூட எது என்று இன்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை. ஹரப்பா, மொஹஞ்சதாரோ பகுதியா, அதற்கும் மேலே இருக்கும் பிராந்தியமா என்று தெரியவில்லை.

நல்ல நிலவொளியில் காட்டெருமை இறைச்சியைப் புசித்துவிட்டு குகைவாசலில் ஆளுக்கொரு தினுசாய் மல்லாந்திருந்த வேளையில், எதிர்ப்பாறையில் சாய்ந்திருந்த இளம்பெண் நிலவொளியின் பிரதிபலிப்பில் ஒளிவிளிம்பாகத் தெரிந்தாள், ரத்தக்கோடு போடும் நம் கதாநாயகனுக்கு.

ஆரம்பத்தில் எதேச்சையாகப் பார்த்த அவனுக்கு அந்தப் பெண்ணின் ஒளிவளைவுகளில் எதோ வசியம் ஏற்பட்டு மீண்டும் மீண்டும் பார்த்தான். இதற்கு முன்பெல்லாம் பசிநேரத்தில் அகப்படும் ஏதோ கிழங்குவகையோ முயலோ அவளை அப்படிப் பார்க்கத் துாண்டியிருந்தாலும் இது வித்தியாசமான பார்வை என்பது அவனுக்குப் புரிந்தது. மற்றவர் யாரும் தன்னுடைய நடவடிக்கையை வித்தியாசமாகப் பார்க்கிறார்களா என்றும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான் அவன். இனப்பெருக்க வேட்கை போன்ற வழக்கமான உணர்வுகள்போல் அவள்மீது தாவாமல் வெறுமனே ஏக்கப்பார்வை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது அவனது நோக்கமாக இருந்தது.

இது என்னமாதிரியான உணர்வு என்பதை அவனது மூளையால் இனம்காண முடியாமல் மகா அவஸ்தையோடு திடாரென்று கத்தினான். ஒருவிதமான ஊளை. காலைப் பின்னிக்கொண்டு பாறைமீது சாந்திருந்த பெண்ணுக்கு இந்த ஊளைச்சத்தம் தன்பொருட்டு எழுந்ததுதான் என்பது புரிந்து சட்டெனத் திரும்பிப் பார்த்தாள்.

அவளுடைய தோரணையும் நிலவொளி அவள்மீது ஏற்படுத்தி யிருக்கும் ஒளித்தடயமும் நம் கதாநாயகனைப் பரிதாபமான நிலைக்குத் தள்ளியது. அவளை… அவள் இருக்கும் காட்சியை எப்படியாவது பதிவுசெய்ய வேண்டும் என்ற பொருள்படும் படியான ஒன்று அவன் மூளையில் ஒரு சலனத்தை ஏற்படுத்தியது. சிந்தனையின் அழுத்தத்தால் திணறினான்.

அவளை எழுதுகோலால் கவிதையாக வடிக்கவோ, இசைக்கருவி கொண்டு சங்கீதமாக வாசிக்கவோ, ஒரு துாரிகைகொண்டு ஓவியமாக்கவோ அவன் நினைத்திருக்கக் கூடும்!

ஆவேசமாக ஒரு கூரான கல்லை எடுத்தான். மிகுந்த சிரமப்பட்டு அவன் அமர்ந்திருந்த பாறையின்மேல் பெருக்கல் குறி போன்ற ஒன்றைக் கீறினான். அந்தப் பெருக்கல் குறிக்கு மேலே ஒரு வட்டம் போட்டான். அவள் அமர்ந்திருக்கும் காட்சியைத்தான் அப்படிப் பதிவாக்கினான்.

அவன் அடைந்த பூரிப்பில் தலை, நாடி, வயிறு என்று பல இடங்களில் தானே பிறாண்டிக் கொண்டான்.

ஒரு பெண்ணின் அழகைக் கண்டு மயங்கி மனிதன் படைத்த முதல் படைப்பு அது. மனிதன், கல் ஆயுதங்களைப் பயன்படுத்தத் தெரிந்த தொழிலாளியாகி, இப்போது கலைஞனாகவும் மாறிவிட்டான் என்பதைக் கொண்டாடத் தெரியாத அவனுடைய சகக் கூட்டம் மிதப்பான குறட்டையில் அயர்ந்து கிடந்தது.

நம் கதாநாயகனின் படைப்புசார் பூரிப்பால் ஏற்பட்ட குதியாட்டம் நம் நாயகிக்கு ‘இது என்னடா இம்சை ‘ என்பது போன்ற கவன ஈர்ப்பை ஏற்படுத்தியது. அவள் அப்படியே முட்டிபோட்டு நகர்ந்தவாறே நம் நாயகனை நெருங்கி, அவன் பாறையில் ஏற்படுத்தி யிருந்த படைப்பை, சித்திரத்தை, அவனது கிறுக்கலைப் பார்த்தாள். அவள் கண்களில் திகைப்பு. அவன் படைத்தது என்ன என்று புரிந்துவிட்டது அவளுக்கு. முதல் வாசகி, முதல் ரசிகை, முதல் விமர்சகி.

எத்தனையோ இஸங்களாக, இலக்கியச் சர்ச்சைகளாக, காப்பியங்களாக தமிழும், அதன் இலக்கியங்களும் காலவோட்டத்தில் செய்யவிருக்கிற அதியற்புதமான மாற்றங்களை யூகிக்கமுடியாத ஆதிமனித ஆச்சர்யம் அது. பாராட்டும் விதத்திலோ நன்றி தெரிவிக்கும் பொருட்டோ பூனைபோல அவனை உரசினாள் அவள்.

மறுநாட் காலை முட்புதர்களை அகற்றிக் கொண்டிருந்தான் நாயகன்.

அந்த மனிதக் கூட்டம் வசித்துவந்த குகைப் பகுதியில் நிரந்தரமான ஒரு பெருந்தொல்லை நிலவி வந்தது. விலங்குகளிடமிருந்து ஏற்பட்ட தொல்லையைவிட கொடுமையானதாக இருந்தது அது. எந்த விலங்கும் ஒருமுறை கல்லால் அடித்துக் கொன்றபின் மீண்டும் உயிர்கொண்டு வருவதில்லை.

அந்த இனம் பாடுபட்டுக் கொண்டிருந்தது முட்செடிகளால். குகையைச் சுற்றி புதர் மண்டிக் கிடக்கும் அந்த முட்செடிகளால் நாம் வசிப்பிடம் இன்றி அழிந்துவிடும் அபாயம் இருப்பதாக சைகைகளால் தீர்மானமாகச் சொல்லி யிருந்தாள் அவர்களின் குழுத்தலைவி. அப்போது தாய்வழி சமூகஅமைப்பு நிலவியது. ஆகவே பசியாறுதல், இனப்பெருக்கம் செய்தல், ஓய்வெடுத்தல் போன்ற இயல்பான உணர்ச்சிகளோடு, தீ மூட்டுதல், முட்செடிகளை அழித்தல் போன்ற கடமைகளும் அவலர்களுக்கு இருந்தது. இந்த இனக்கரிசனம் காரணமாக உந்தப்பட்டு புதர்களை வேரடிமண்ணாக அழித்துக் கொண்டிருந்தான் நாயகன்.

நம் நாயகியும் அங்கே வந்துசேர்ந்தாள். அந்தப் பெருக்கல்குறி ஓவியம் அவன்மீது அவளுக்கு மரியாதையை ஏற்படுத்தி யிருந்தது. எதிர்பார்க்காத வண்ணம் அவனைநோக்கிப் பற்களைக் காட்டினாள். நம் நாயகனுக்கு அது ஓநாயின் சீற்றத்தை ஞாபகப் படுத்தியது. பயந்துதான் போனான். ஆனால் அது சீற்றம் இல்லை என்று உடனடியாக விளங்கி விட்டது. காலையில் புதிதாகப் பார்ப்பதற்கு அடையாளம் போல அப்படிச் செய்தாள். பதிலுக்கு நாயகனும் அப்படிச் செய்தான். பிற்காலங்களில் இந்த வழக்கத்துக்கு ‘பு ன் ன கை ‘ என்று பெயரிட்டனர்.

நாயகன் வெட்டியெறிந்த செடிகளில் வண்ணமயமான ஒரு பகுதி அவளை வசீகரித்தது. அது அந்தத் தாவரத்தின் பூ என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. அவள் இன்னும் சற்று நெருங்கிவந்து அந்தப் பூக்களை மட்டும் தனியே கிள்ளி எடுத்தாள் கைநிறையப் பூக்களோடு அவள் நிற்பது அவனுக்குப் பயங்கரமான.கிளர்ச்சியை உண்டுபண்ணியது. மீண்டும் ஒரு சித்திரம் தீட்டும் நிலைக்கு அவன் தள்ளப்பட்டான். உடனே அவளை அந்தப் பூக்களோடு குகைவாசலுக்கு இழுத்துவந்தான். ஒரு கூரான கல்லை எடுத்து சித்திரம் கீறத் தொடங்கினான். குச்சி உருவ சித்திரம். அவனுடைய படைப்புத் தவிப்பின் நேர்த்தி அதில் மிளிர்ந்தது. கீறி முடியும் தறுவாயில்தான் தங்களைச் சுற்றி தம் இன மக்கள் சூழ்ந்து கொண்டிருப்பது தெரிய வந்தது அவர்களுக்கு.

தலைவி மிகுந்த ஆவேசத்தோடு ஒரு கல்லை எடுத்து நாயகன்மீது எறிந்தாள். சுற்றி நின்றிருந்த மற்றவர்களும் உடனே ஆளுக்கொரு கல்லை எடுத்தனர். தங்கள் குல எதிரியாகக் கருதிவந்த முட்செடியின் ஒரு பகுதியை ஒரு பெண் கையில் சுமந்து கொண்டிருப்பதும் அதை ஒருவன் குகையில் சித்திரமாகத் தீட்டிக் கொண்டிருப்பதும் ஒரு பேராபத்தின் முன்னறிவிப்பாகத் தோன்றியது அவர்களுக்கு.

எல்லோரும் சொல்லிவைத்தது மாதிரி கற்களை எறியத் தொடங்கினர். உருட்டுக்கட்டை கொண்டு அவர்களைக் கொன்றுவிடும் நோக்கத்தில் சிலர் பாய்ந்தனர். பூக்களை வைத்திருந்த நாயகனுக்கும் நாயகிக்கும் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பேராபத்து புரிந்தது. இருவரும் ஓட ஆரம்பித்தனர்.

தங்கள் கூட்டத்தை விட்டு வெகுதுாரம் ஓடினர். வேறொரு குகையில் வாழ்க்கையைத் தொடங்கினர். முட்செடிகளைப் பயிரிட்டு மகிழ்ந்தனர். பின்னாட்களில் அது ரோஜா என்று பெயர்பெற்றது. இப்போதும் காதலின் அடையாளமாகப் போற்றப்பட்டு வருகிறது.

புதுக் குகையில் வாழ்க்கையைத் தொடங்கிய அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு (8000 – 1 தலைமுறைக்கு முன்) ஏகப்பட்ட சைகைகளின் மூலமாகவும், சித்திரக் கோட்டோவியங்கள் மூலமாகவும் தங்கள் கதையைச் சொன்னான் நம் நாயகன். இந்தக் கதையின் அடையாளமாகத்தான் எங்கள் வீட்டுத் தொட்டியில் ஒரு ரோஜாச்செடி இருக்கிறது இப்போதும்,

(தமிழ்மகன்

இயற்பெயர் வெங்கடேசன். 1984ல் இளைஞர் ஆண்டை ஒட்டி நடத்திய நாவல் போட்டியில் /இதயம் பேசுகிறது/ இதழ் முதல் பரிசு அளித்தது – நாவல் – ‘வெள்ளை நிறத்தில் ஒரு காதல். ‘ 1996ல் தமிழக அரசு விருது ‘மானுடப்பண்ணை ‘ நாவலுக்காகப் பெற்றார். மூன்றாவது நாவல் ‘சொல்லித் தந்த பூமி ‘ 1998ல். புதிதாய் இப்போது ‘ஏவியெம் ஏழாவது தளம் ‘ நாவல் வெளியாகி யுள்ளது. தவிர ‘மொத்தத்தில் சுமாரான வாரம், ‘ ‘முன்னாள் தெய்வம் ‘ – இரு சிறுகதைத் தொகுதிகள். கவிதைத் தொகுதிகள் ‘பூமிக்குப் புரிய வைப்போம் ‘, ‘ஆறறவு மரங்கள். ‘ தற்போது குங்குமம் வார இதழில் பொறுப்பாசிரியர். )

அனுப்பியவர் : storysankar@gmail.com

Series Navigation

தமிழ்மகன்

தமிழ்மகன்