இரா முருகன்
இதை எழுதுகிற விடிகாலை நாலரை மணி மைனஸ் நாலு டிகிரி குளிரில் தோப்புத்தெரு சர்வமும் அடங்கி முடங்கிக் கிடக்கிறது. கல்பாளம் பதித்த நடைபாதையில் டகரடகரடக் என்று யாராவது மூட்டை முடிச்சுகளை இழுத்துக்கொண்டு பக்கத்து வைக்கோல்சந்தை ரயில் நிலையத்தில் கிளாஸ்கோ போகிற வண்டியைப் பிடிக்க தலையில் குல்லாவும் – இதுக்குப் பெயர் பலக்லோவா – வாயில் சிகரெட்டுமாக விரைந்து கொண்டிருப்பது ஜன்னலுக்கு வெளியே தெரிகிறது. ராத்திரி முழுக்க சுதி ஏற்றிக்கொண்ட குடிமகன் ஒருத்தன் டயரிக்காரனின் ஜன்னலில் விளக்கு எரிவதைப் பார்த்து எதிர்சாரியில் நின்று உச்சக்குரலில் பாடி, கைதட்டி கவன ஈர்ப்பு நடவடிக்கை எடுத்தது பலிக்காமல் அழுகையா வசவா என்று தெரியாமல் புலம்பிக்கொண்டு போகிறான்.
டயரிக்காரன் மனதால் இப்போது இருபத்தைந்து வருடம் பின்னால் போயிருக்கிறான். ரயில் நிலையத்தில் நிற்கிற கூட்டத்தில் இவனும் அடக்கம். எடின்பரோ வைக்கோல்சந்தை ஸ்டேஷனை விடச் சிறிய தென்னிந்திய ரயில்வே ஸ்டேஷன். இவனும் சேக்காளிகளும் வழியனுப்பப் போன பத்துப்பேர் சென்னைக்குப் போகிறார்கள். ரயிலை எதிர்பார்த்து ஒரு காத்திருத்தல்.
படித்து உத்தியோகத்தில் சேர்வதற்குக் கொஞ்சம் முன்னால் அரசியல் கட்சி அனுதாபியாக இருந்த காலம் அது. கட்சி மாநாட்டுக்காகச் சென்னை போகிற மூத்த சகாவு மற்றும் அடுத்த தரத் தலைகளின் பயணத்துக்கு நிதி திரட்டி, பாக்கெட் மணியை முழுக்கச் சமர்ப்பித்ததில் ஆகா என்று யுகப்புரட்சி எழப் பங்கு வகித்த பெருமிதம் டயரிக்காரனுக்கும் மற்ற இளைய சகாக்களுக்கும்.
கட்சி மாநாடு முடிந்து வெற்றியோடு திரும்பி வரோம். கட்சியைக் கட்டற பணியில் சோர்ந்துடாம துடிப்போடு வேலை செய்யுங்க, என்ன ?
மூத்த சகாவு வலது கையில் பேவர் லூபா கடியாரத்தைப் பார்த்து, அப்புறம் அதைக் காதுப்பக்கம் வைத்துக் கேட்டுவிட்டு, கழற்றி சாவி கொடுத்தபடி முன்னால் நிற்கிற இளைஞர் கூட்டத்துக்கும் உற்சாகச் சாவி கொடுக்கிறார்.
மாநாடு முடிந்து ஒருவாரத்தில் வந்து சேரப்போகிறார். ஏழு நாளில் கட்சியைக் கட்டுகிற பணி என்னத்தைச் செய்யறது ? கட்டல் என்ற வார்த்தை அதன் மலையாள அர்த்தத்தில் மனதில் பதிவாகி சிரிப்பு வர அடக்கிக்கொள்ள வேண்டிய கட்டாயம்.
ராமேஸ்வரத்திலிருந்து கிளம்பிய ரயில் வருகிறது. பயணம் போகிற சகாக்களின் டிக்கட்டில் கண்ட த்ரீ டயர் ஸ்லீப்பர் – எஸ் கோச் எங்கே என்று லொங்கு லொங்கென்று அவர்களுடைய மூட்டை முடிச்சுகளைத் தூக்கியபடி ஓடிக் கண்டுபிடித்து குண்டுக்கட்டாக தாங்கிப் பிடித்து ஏற்றிவிட்டானது. கதவுப் பக்கமும் ஜன்னல் வழியாகவும் முஷ்டி மடக்கி அவர்களின் வீர வணக்கம். பதிலுக்கு பிளாட்பாரத்தில் நிறைய சோனிக் கைகள் அதே ரீதியில் உயருகின்றன. ஒரு வருடம் விரதம் இருந்து ராமேஸ்வரத்தில் குளித்துக் கும்பிட்டுச் செம்பில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு காசிக்குப் போய் அடுத்தபடி குளிக்க உத்தேசித்து அந்த த்ரீ டயர் ஸ்லீப்பர் கோச்சில் பயணம் போகிற வடநாட்டு யாத்திரீகர்கள் கலவரத்துடன் பார்க்கிறார்கள். மதராஸிகள் பிரதேசம். ஆ ஊ என்றால் முஷ்டியை மடக்கிக்கொண்டு கிளம்பிவிடுகிறார்கள். ஜாக்கிரதையாக இருக்கவேணும் என்று அவர்களின் பார்வை சொல்கிறது.
இப்படி கோலாகலத்தோடு கிளம்பின போர்ப்படை ஆறு நாள் கழித்து ஓசைப்படாமல் மத்தியான பாசன்சரில் வந்து சேர்ந்தது. செயற்கரிய செயலாக மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு தாய்மண்ணுக்குத் திரும்பி வருகிற வீரர்களுக்கு முஷ்டி மடக்கி சல்யூட் வைத்தால் வேஷ்டியை இடுப்பில் இறுக்கிக்கொண்டு, எடுத்துப் போனதை விட இரண்டு மடங்கு மூட்டை முடிச்சுகளை இறக்கச் சொல்லி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. வீட்டுக்கு வாங்கிட்டுப் போற சரக்கு எல்லாம். பம்பு செட் மோட்டார் ரிப்பேருக்கு ஸ்பேர் பார்ட். சைக்கிள் டைனமோ. ரெண்டு கிலோ பெல்லாரி வெங்காயம், டேபிள் பேன் இத்யாதி.
மாநாடெல்லாம் எப்படி ? பொதுவாகக் கேள்வி வைக்கப்பட்டது.
ரொம்ப சிறப்பா நடந்தது. மதியத்துக்கு விருந்துலே வடை பாயாசம் போட்டாங்க பாரு, ஏகப் பிரமாதம். ராத்திரிதான் உப்புப் பத்தாம கோதுமை உப்புமா, வேகாத சப்பாத்தின்னு போட்டுக் கஷ்டப்படுத்திட்டாங்க. வெளியே போய் பரோட்டா சால்னா சாப்பிட்டு வரவேண்டிப் போச்சு.
மாநாட்டுலே பேச்சு எல்லாம் ?
இதைப் பத்தி ஒரு தீர்மானம் கொண்டுவரலாமான்னு நம்ம இன்னார் கேட்டார்
போறது விடுங்கன்னுட்டோம். அடுத்த கான்பரன்ஸ் கேரளாவாம். மலையாளச் சாப்பாடு தனி டேஸ்ட் ஆச்சே. அப்பப் பார்த்துக்கலாம்.
நம்ம வீரர்கள் போய்த் திரும்பிய மாநாடு வெற்றிகரமாக நடந்தது என்றும் இந்த இந்தத் தலைவர்கள் இந்த இந்த மாதிரி – எல்லாம் ஒரே மாதிரித்தான் – பேசினார்கள் என்றும் அடுத்தவாரம் வந்த கட்சிப் பத்திரிகை சொன்னது. அதை எழுதியவர்களுக்குச் சரியான பதத்தில் கோதுமை உப்புமாவும் சப்பாத்தியும் கிட்டியிருக்கலாம்.
இடதோ வலதோ நடுவாந்திரமோ அரசியல் எல்லாம் சாப்பிட்டுவிட்டுப் பேசவேண்டிய சங்கதி.
மேற்படி வெள்ளிவிழாக்காலத்துக்கு முற்பட்ட நிகழ்ச்சி ஸ்காட்லாந்து குளிர்நேரப் புலர்காலைப் பொழுதில் நினைவு வரக் காரணம் இங்கே சமீபத்தில் நடந்த பர்ன்ஸ் இரவு.
ஸ்காட்லாந்துக்காரரான ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் பர்ன்ஸின் பிறந்ததினத்தை நாட்டு மக்கள் உற்சாகமாக வருடாவருடம் கொண்டாடுவது வழக்கம் என்று கேட்டதும் யுகப்புரட்சி பற்றிய எதிர்பார்ப்புக்குக் குறையாத உற்சாகம் டயரிக்காரனுக்கு ஏற்பட்டது. இலக்கியத்தை, கவிதையை, கவியை இத்தனை போற்றிக் கொண்டாடக்கூடிய இந்த மக்களின் ரசனையும் கலாச்சாரமும் தான் எத்தனை உயர்வான சங்கதிகள்!
ராபர்ட் பர்ன்ஸ் பிறந்த நாள் ராத்திரியை எப்படிக் கொண்டாடுவீங்க ?
உள்ளூர் நண்பரிடம் கேட்டபோது விஸ்தாரமாகச் சொன்னதைக் கொஞ்சம் சுருக்கினால் – நாலு பேர் சேர்ந்து ராபர்ட் பர்ன்ஸ்னு ஒரு தடவை சொல்லிட்டு ஸ்காட்லாந்து தேசிய பானமான ஸ்காட்ச் விஸ்கி ரெண்டு பாட்டில், அப்புறம் தேசிய உணவான ?ாகிஸ் ரெண்டு தட்டு நிறைய வச்சுக்கிட்டு ஆரம்பிக்க வேண்டியதுதான். அப்பப்போ ராபர்ட் பர்ன்ஸ் நினைவு வந்துடும். இன்னும் கொஞ்சம் விஸ்கி. ?ாகிஸ். தேசியக் கவியோட நினைவை ராத்திரி ரெண்டு மணி வரைக்குமாவது போற்றணுமே.
அது சரி, ராபர்ட் பர்ன்ஸ் கவிதை ?
ராபர்ட் பர்ன்ஸ் ஸ்காட்ச் விஸ்கி பற்றிக் கவிதை எழுதியிருக்கிறாரா என்று தெரியாது. ஆனால், சாப்பாட்டு விஷயமான ?ாகிஸ் பற்றி ‘To a Haggis’ அப்படான்னு ஒரு அம்சமான கவிதை எழுதியிருக்கிறார். தெரியுமோ ?
?ாகிஸ் கவிதையை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு மற்றதை எல்லாம் காக்கா இந்தா பிடி என்று தூக்கிப் போட்டுவிட்டார்கள் போல என்று நினைத்தபடி கடைவீதியாகிய பிரின்சஸ் தெருவில் நடந்துகொண்டிருந்தபோது ஒரு கடை வாசலில் அறிவிப்பு கவனத்தைக் கவர்ந்தது.
‘ராபர்ட் பர்ன்ஸ் பிறந்த நாளை முன்னிட்டு, அவருடைய எந்தக் கவிதையை இங்கே வந்து ஒப்பித்தாலும், விலையில் இருபது பர்செண்ட் தள்ளுபடி.’
கவிதை உணர்வு உந்த உள்ளே போக யத்தனித்தபோதுதான் அது பெண்களின் உள்ளாடை விற்கிற கடை என்று தெரியவந்தது.
உள்ளே கவிதை யாராவது சொல்லிக்கொண்டிருக்கலாம். அவர்களுக்குத் தள்ளுபாடி கிடைத்திருக்கலாம். ராபர்ட் பர்ன்ஸ் வாழ்த்தப்படட்டும்.
&&&&
ஸ்காட்லாந்து slang கொச்சைமொழி, வசவுகள், அவமதிப்பு என்று கற்றுக் கொடுக்கிற ஒரு புத்தகத்தைப் படித்து முடித்தேன்.
டாக்டரிடம் போய் இந்தச் சுகக்கேட்டை விவரிக்க வேண்டும் .
காலையிலே டாய்லட்டிலே இருந்தேனா ? டெலிபோன் மணி அடிச்சுது. அரக்கப் பரக்க அப்படியே ஓடி வந்ததுலே பேண்ட் தடுக்கி விழுந்துட்டேன். அந்த இடத்துலே யாரோ மடையன் தரையிலே பியர் பாட்டிலை நட்டக் குத்தலா நிப்பாட்டி வச்சிருந்தான். எழவெடுத்த பாட்டில் பின்னாலே புகுந்து அடைச்சுக்கிடுத்து. ஆமா, நானா அதை எடுத்து அங்கே சொருகிக்கலே. எடுக்க முடியுமா இல்லே அப்படியே விட்டுடலாமா ?
இதை ஸ்காட்டிஷ் கொச்சை இங்கிலீஷில் எப்படிச் சொல்வது தெரியுமா ? தெரிஞ்சு என்ன ஆகணும் ?
—-
eramurukan@gmail.com
- கடிதம் – ஆங்கிலம்
- உண்மையின் ஊர்வலங்கள்.. -1
- அவுஸ்திரேலியாவில் தமிழ் போதனாமொழி -மூத்த – இளம் தலைமுறையினர் சங்கமித்த எழுத்தாளர் விழா -“ உயிர்ப்பு” நூல் வெளியீடு
- நீதிக்குத் தவித்த நெஞ்சம் – டி.வி.ஈச்சரவாரியாரின் ‘ஒரு தந்தையின் நினைவுக்குறிப்புகள் ‘
- சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள்-3
- பயணக்கிறக்கம் (Jet lag)
- நான் கண்ட சிஷெல்ஸ் – 11 சிஷெல்ஸின் சில முக்கிய தீவுகள்
- பழையத் துறவியும் ஜானி வாக்கரும் !
- விவாதம்:சூபிசம் – வகாபிசம் -உள்ளும் புறமும்
- புனித முகமூடிகள்
- உயிர்மெய் – பெண்கள் காலாண்டிதழ்
- தகவல் பிழைக்கு வருந்துகிறேன்
- பின் நவீன இசை : ஒரு திருப்புமுனை
- கலைச்செல்வன் ஓராண்டு நினைவொட்டிய நாள் – 5 மார்ச் 2006
- மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும்
- புலம்பெயர் வாழ்வு (1)
- துக்ளக்கில் வெளிவந்த மலர் மன்னன் கட்டுரையும், கிறிஸ்துவர்கள் விநியோகித்த துண்டுப்பிரசுரமும்
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘
- செலாவணியாகாத நாணயங்களைத் திரும்பப் பெறுகிறேன்
- மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 2
- இரு கவிதைகள்
- கவிதைகள்
- கீதாஞ்சலி (62) உனை நாடிச் செல்வது! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- வரலாற்றை எழுதுவதை முன்வைத்து
- பூவினும் மெல்லியது…
- பார்வைகள்
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! (இலக்கிய நாடகம், பகுதி மூன்று)
- எட்டாயிரம் தலைமுறை
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 9
- வர்க்க பயம்
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் மூன்று: நல்லூர் ராஜதானி: வரலாற்றுத் தகவல்கள்!
- காந்தம் போல் எல்லோரையும் கவர்ந்தவர் கோல்வல்கர்
- முஹம்மது நபி(ஸல்) என்ன செய்திருப்பார்கள் ? ( ஆங்கிலத்தில்: இப்ராஹீம் ஹூப்பர் )
- தீக்குளித்து மாண்ட 8000 நகரத்தார் குடும்பங்கள்
- ஹர்ஷன், அவுரங்கசீப், ஐயா வைகுண்டர் மற்றும் விவேகானந்தர் பாறை நினைவாலயத்திற்கு திமுகவின் பங்கு
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-10) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- சில கதைகளும், உண்மைகளும்
- எடின்பரோ குறிப்புகள் – 9
- கவிதைகள்
- கவிதைகள்
- ஒரு பாசத்தின் பாடல்
- பெரியபுராணம் – 77 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- அல்லாவுடனான உரையாடல்
- அருவி
- தியானம் கலைத்தல்…
- நூறாண்டுக்குப் பிறகு நீடிக்கும் ஐன்ஸ்டைன் கோட்பாடுகள் [100 Years of Einstein ‘s Theories]