இரா முருகன்
பனி பெய்யாமலேயே கூடுதலாகப் படரும் தணுப்பும், சூரியன் தட்டுப்படாத வானமும், வானத்தில் அவ்வப்போது நீள ஓசையிட்டுப் போகிற ஒற்றைப் பறவையும், ஆள் அரவம் இல்லாத தெருக்களும், அடைத்த கடைவாசல்களில் சாப்பாட்டு மிச்சங்களும், காகிதக் குப்பையுமாக லண்டனில் இந்த கிறிஸ்துமஸ் கடந்து போனது.
கென்சிங்டன் வீதி வழியாக ஒற்றை நபர் ஊர்வலமாக நடந்தபோது ஆயிரம் வருடம் சரித்திரம் கொண்ட மாநகரம் காலம் உறைந்த அமைதியில் கனமாக மேலே கவிந்தது. குட்டநாட்டு கிராமப் பிரதேசங்களில் காயல் ஓரமாக நடக்கும்போதும், பழைய தில்லியின் குறுக்குச் சந்துகளில் இலக்கில்லாமல் திரும்பி வளைந்து மீண்டும் திரும்பி குளிர்கால சாயந்திரங்களில் அலைந்து திரியும்போதும் அவ்வப்போது ஒரு நினைப்பு தோன்றும். இந்த வினாடியில் இந்தச் சூழலோடு கலந்து கரைந்து ஒன்றுமில்லாமல் போக முடியுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்! கிறிஸ்துமஸ் தின லண்டன் அளித்த லயிப்பு இதே தரத்தில் தான்.
கென்சிங்டன் பூங்காவில் குளிருக்கு அடக்கமாக அணைத்தபடி ஈர பெஞ்சுகளில் உட்கார்ந்திருந்த ஜோடிகளைக் கடந்து ஹைட் பார்க்கில் நுழைந்தானது. பச்சை விரிப்பில் நீர்ப் பறவைகளையும், தண்ணீரில் குதித்து அவற்றைப் பிடிக்கப்போவதுபோல் போக்குக்காட்டி திரும்ப ஓடிவந்து மண்ணில் புரளும் வளர்ப்பு நாய்களையும், மவுனமாக அடிவானத்தை வெறித்தபடி உட்கார்ந்திருந்த முதியவர்களையும் பார்த்தபடி ஹைட் பார்க்கை விட்டு வெளியே வந்து பிக்கடலி சர்க்கிள் பக்கம் நீண்ட நடை. பாதையில் பெரிய விளம்பரப் பலகை. காவல்துறை வைத்தது.
இதே இடத்தில் ஒரு மாதம் முன்னால் காலை ஏழு மணிக்கு இருபது வயது ஆங்கிலேய இளைஞனை பலாத்காரம் செய்த நடுவயது, குறுந்தாடி அராபியனைத் தேடிக்கொண்டிருக்கிறோம். விவரம் அறிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய காவல்துறை தொலைபேசி எண்.
சுரங்க நடைபாதையைத் தவிர்த்து தெருவில் குறுக்கே நடந்து கடந்து, எதிர்ப்பக்கம் போக, கார் ஷோரூம் கண்ணாடித் தடுப்புக்கு வெளியே நின்று சுவாரசியமாகப் பார்த்தபடி இரண்டு போலீஸ்காரர்கள். உள்ளே நிறுத்தியிருந்த சொகுசு மெர்சிடிஸ் காரை வாங்க அவர்கள் சம்பாத்தியத்தில் முடியாது என்றாலும், ஆர அமர நின்று பார்க்கவாவது இன்று நேரம் கிடைத்ததே என்ற ஆசுவாசம் முகத்தில். ஊரே விடுமுறையில் ஓய்ந்து கிடக்கும் மாநகரில் இவர்கள் எப்படி வேலைக்கு வந்தார்கள் ?
&&&&
கிறிஸ்துமஸுக்கு அடுத்த பெட்டி தினத்தன்று காலை ஆறரைக்கு தீபம் தொலைக்காட்சி அலுவலகத்துக்கு அழைத்திருந்தார் நண்பர் இளைய அப்துல்லாஹ். எட்டே கால் தொடங்கி ஒரு மணி நேரத்துக்குக் கலந்துரையாடல்.
அலுவலக கான்பரன்ஸ் அறையில் தீபம் டிவி பார்த்தபடி மடிக் கணினியில் ‘ப்ராஜக்ட் எம்’ பத்திரிகைத் தொடருக்கான அடுத்த ஈடு உருவாக்கிக்கொண்டிருந்தபோது, நான் இன்னும் சந்திக்காத இளைய அப்துல்லாஹ் திரையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார். ஈழ அரசியல் பிரமுகர் பரராசசிங்கம் நத்தார்தினப் பிரார்த்தனையின்போது மாதாகோவிலில் படுகொலை செய்யப்பட்ட துயரச் சம்பவத்தைப் பற்றி இலங்கை நாளிதழ்களில் வெளியான தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார் அவர்.
சுடச்சுட மின்னஞ்சலில் சுவிட்சர்லாந்திலிருந்து ஈழத்தமிழர் ஒருவர் அஞ்சலிக் கவிதை அனுப்பியிருந்ததை வாசிக்கத் தொடங்கினார் அப்துல்லாஹ்.
மீடியா – கணினி யுகத்தில், ஈழத் துயர சம்பவம் இருபத்துநாலு மணிநேரத்தில் கொழும்பு பத்திரிகையில் கதைக்கப்பட்டு, லண்டனில் படிக்கப்பட்டு, சுவிட்சர்லாந்தில் உடனடியாகத் தமிழ்ப் புதுக்கவிதையாகி நல்லடக்கம் ஆவதின் இயந்திரகதியான சோகம் ஒரு வினாடி மனதில் படிந்து விலகிப்போனது.
இளைய அப்துல்லாஹ்வின் இதமான நட்புக்கலந்த உரையாடல் பற்றி, நிகழ்ச்சி முடிந்ததும் அதே அன்போடு உபசரித்து வழியனுப்பிவைத்து அடுத்த நிகழ்ச்சி நடத்த ஓடிய சுறுசுறுப்பு பற்றி, அன்பளித்த அவருடைய கவிதைத் தொகுதியான ‘பிணம் செய்யும் தேசம்‘ பற்றி, அதன் முன்னுரையில் தனித்துவமான தீவிரத்தோடு ‘முஸ்லீம்கள் இலங்கை வடபுலத்திலிருந்து விரட்டப்பட்டது ஒரு வரலாற்றுத் துரோகம். எம் பூமி. எம் நிலம். நாம் கஷ்டப்பட்டு வியர்ப்பு ஒழுகி, காடு வெட்டி, வீடு கட்டி இருந்தது. நாம் அள்ளித் தின்ற எமது மண். அது எமக்கு வேண்டும். அது எம்முடையது’ என்று ஒலிக்கும் அவருடைய கம்பீரமான கவிக்குரல் பற்றி எல்லாம் நிறையக் கதைக்க வேண்டும். விரைவில் அது.
&&&&
பிளய்ஸ்டோ போகாமல் எந்த லண்டன் பயணமும் பூர்த்தியாவதில்லை. டிஸ்ட்ரிக்ட் லைன் பாதாள ரயில்பாதையில் விடுமுறைக்காக அடைத்துப் பூட்டியிருந்த நிலையங்களின் அமானுஷ்ய மவுனத்தை கிட்டத்தட்ட காலியான ரயில்பெட்டி ஜன்னல் வழியாகப் பார்த்தபடி பிளய்ஸ்டோ வந்துசேர்ந்து பத்மனாப ஐயர் வீட்டுப் படியேற, உள்ளே கர்னாடக இசை முழங்கிக் கொண்டிருந்தது.
யார் சொல்லுங்கள் பார்க்கலாம் என்றார் வழக்கமான சிரிப்போடு ஐயர். குறுவட்டில் நந்தன் சரித்திரக் கீர்த்தனை. அந்தக் கம்பீரமான குரலை எங்கோ எப்போதோ கேட்ட நினைவு. ஆனால் பழக்கமான எந்த இசைக் கலைஞரும் இல்லை. பழைய நாடக மேடை இசையும், தேர்ந்த கர்னாடக சங்கீதமும் இணைந்த அற்புதமான கலவை அது.
மணக்கால் ரங்கராஜன்.
ஐயர் சொல்ல ஆச்சரியத்தோடு பார்த்தேன். சிறு பிராயத்தில் எப்போதோ கேட்டு மனதில் பதிந்த குரல் மணக்கால் ரங்கராஜனுடையது. மேதமையின் சகல லட்சணங்களோடும் ஒலிக்கும் அந்தக் குரலைச் சென்னை இசைவிழா நேரத்து சபாக்காரர்கள் சீந்துவதுகூட இல்லை. குரலை மட்டும் இல்லை, மணக்கால் ரங்கராஜன் பற்றி யாரும் பேசிக்கேட்டே எத்தனையோ வருடம் ஆகிவிட்டது.
எண்பது வயது. நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார். இன்னும் அதே உற்சாகத்தோடு குரல் நடுக்கமில்லாமல் சுஸ்வரமாகப் பாடுகிறார் மணக்கால். சிறுவயதில் நாடக மேடையில் நடித்த அனுபவம் உள்ளவர் என்று தகவல் தந்தார் ஐயர்.
இலக்கியத்தோடு இசையிலும் நாட்டம் மிகுந்த அவர் மணக்காலை ஒருக்கால் தேடியழைத்து வந்து தோடியும் பைரவியும் பாடவைக்கலாம் என்று தெரிகிறது.
&&&&
இங்கிலாந்தில் பதிப்பகத் துறை தொடர்பான ஒரு சட்டம் உண்டு. இந்த நாட்டில் எந்த மொழியில் ஒரு புத்தகம் பதிப்பிக்கப் பட்டாலும் அதன் ஒரு பிரதி லண்டன் அரசு நூலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இப்படி வந்து சேரும் புத்தகங்களை அடுக்கி நிறுத்தினால் லண்டன் நூலகம் மைல்கணக்கில் நீண்டு விரிவடைய வேண்டி வரும்.
அந்தச் சட்டப் பிரதி கைக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும் ஒரு சந்தேகம் உண்டு. இங்கிலாந்தில் மட்டுமில்லாமல் உலகில் எங்கு தமிழ்ப் புத்தகம் வெளியானாலும் சில பிரதிகள் லண்டன் பத்மனாப ஐயரின் ப்ளய்ஸ்டோ
இல்லத்துக்குப் போய்ச் சேர வேண்டுமென விதிக்கப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது.
ஐயரின் வீட்டுப்படி ஏறும் நண்பர்கள் அவரை நலம் விசாரித்த கையோடு நோட்டம் இடுவது அவருடைய புத்தகங்களைத்தான். நேற்றைக்குத்தான் பார்த்துப் பேசிப்போயிருந்தாலும், இன்றைக்கு மீண்டும் சந்தித்தால் அவருடைய அறையில் அச்சுத்தாள் வாசனையோடு இன்னொரு புதுப் புத்தகம் எங்கிருந்தோ முளைத்திருக்கும்.
சந்தித்த இரண்டு வருட இடைவெளியில் ப்ளய்ஸ்டோ வீட்டுப் புத்தகங்கள் கணிசமாகக் கூடியிருக்கின்றன. என்றாலும் இன்னும் ஐயரின் ஒற்றைக் கட்டில், கம்ப்யூட்டர்-எழுதுமேசை, எதிரே உட்கார்ந்து கதைக்க ஒரு நாற்காலி, சாயாக் கோப்பை வைக்க ஒரு மர முக்காலி வைக்க எப்படியோ அங்கே இடம் பாக்கி இருக்கிறது.
இயல் விருது பற்றி விசாரித்தபோது விழாவில் திரு மு.நித்தியானந்தன் தயாரித்துத் திரையிட்ட ஆவணப்படம் பற்றிப் பேச்சினிடையே குறிப்பிட்டார் ஐயர். அந்தப் படத்தை அவசியம் பார்க்கணுமே.
பார்க்கலாமே. இதைப் படிச்சிருக்கீங்களா ? தெரிதல்னு பேரு. யேசுராசாவின் புதிய பத்திரிகை. இளைஞர்களுக்கு இலக்கியத்தை எடுத்துப்போக யாழ்ப்பாணத்தில் தொடங்கியிருக்கார்.
தன்னைப் பற்றிப் பேச்சு என்றால் கூச்சத்தோடு தவிர்த்துவிட்டு இலக்கியம் பேசத் தொடங்கிவிடுவார் ஐயர். அவர் கொடுத்த பத்திரிகையை வாங்கி மடியில் வைத்துக்கொண்டு திரும்பவும் ஆவணப் படத்தைப் பற்றி விடாக்கண்டனாக நச்சரிக்க, தொல்லை தாங்காமல் தொலைக்காட்சிப் பெட்டியில் படத்தைத் திரையிட்டார்.
பதினைந்து நிமிடத்தில் பத்மனாப ஐயரை நேர்த்தியாக ஆவணப் படுத்தும் இந்தப் படத்தில் சட்டென்று மனதில் பதிகிறவர் திருமதி மீனாள் நித்தியானந்தன்.
ஊருக்குப் போறேன்னு யாராவது சொன்னால், சரி, இந்தப் புத்தகங்களைக் கொஞ்சம் எடுத்துட்டுப் போய் யாழ்ப்பாணத்துலே இன்னார்கிட்டே கொடுத்திடறீங்களா என்று உடனே விசாரிப்பார் ஐயர். இதுக்குப் பயந்தே சிலபேர் சொல்லாமக் கொள்ளாமக் கிளம்பிப் போயிடுவாங்க.
மீனாள் நித்தியானந்தன் சிரிக்காமல் சொல்ல, பளிச்சென்று அந்தப் பகடிக்கு இடையே அவரும் நித்தியும் மற்ற நண்பர்களும் ஐயர்மேல் வைத்திருக்கும் அன்பும் மரியாதையும் புலனாகிறது.
இயல் விருது பற்றி விசாரிக்க, அதை விடியோ படமாக்கியிருப்பதும் தெரியவந்தது. அதையும் பார்க்கணுமே.
ஒரு வழியாக, கம்ப்யூட்டரில் அந்தக் குறுவட்டைப் போட்டார் ஐயர். அவர் பேசியது, மற்றவர்கள் பேசியது, விருது அளித்து முடிந்து விருந்து மண்டபத்தில் இரைச்சலுக்கு இடையே எழுத்தாளர் முத்துலிங்கம், கவிஞர் சேரன், நண்பர் வெங்கட், அன்புச் சகோதரி மதி இன்னும் பலரும் பேசியது என்று சுவாரசியமாக ஓடிய படத்தின் ஒரு பிரதியையும் ஐயரிடமிருந்து வாங்கிக் கொண்டானது.
ஆமா, ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டாங்களே ?
கேளுங்க.
இந்தப் படத்துலே எல்லாம் வருது. நீங்க விருது வாங்கறதே காணோமே. கனடாக்காரங்க கொடுத்திட்டாங்க இல்லே ?
ஐயர் அடக்க மாட்டாமல் சிரிக்க ஆரம்பித்தார்.
விருது கொடுக்கற நேரம் பார்த்து விடியோகிராபர் வெளியே போய்ட்டார். அதான் விஷயம்.
காலையில் மொபைல் அழைத்தது. ஐயர்தான்
உமா வரதராசனோடு கதைக்கறீங்களா ?
பரஸ்பரம் நலம் விசாரிப்பு. உமாவின் கதையை இந்தியா டுடே இலக்கிய மலரில் படித்ததை நினைவுகூர அவர் எடின்பரோ டயரிக்காரன் அதே மலரில் எழுதிய கதையைப் பற்றிக் குறிப்பிட்டார்.
எப்ப லண்டன் வந்தீங்க உமா ? எத்தனை நாள் இருப்பீங்க ?
லண்டனா ? நான் இலங்கையிலிருந்து பேசறேன். ஐயரோடு தொலைபேசும்போது நீங்க வந்திருக்கறதாச் சொன்னார்.
ப்ரிட்ஜ் கால் ஆக இலங்கை உமா வரதராசனோடு பேச ஏற்பாடு செய்துவிட்டார் ஐயர்.
ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் இவர் இலக்கியப் பாலம் அமைக்கிறார் என்று எத்தனை தடவை தான் எழுதுவது ?
—-
eramurukan@gmail.com
- ஹெச். ஜி. ரஸூலின் திண்ணை கட்டுரைக்கான எதிர்வினை
- இன்று சொல்லிச் சென்றது
- அணுவும் ஆன்மீகமும்
- செவ்வாய்க் கோளின் தளத்தை உளவும் விண்வெளி ஊர்திகள் [Rover Explorations on Planet Mars (2006)]
- கற்பு என்றால் என்ன ?
- கவிதையில் வடிகட்டிய உண்மை
- அந்த பொசங்களின் வாழ்வு….
- உறுபசி (நாவல்) – எஸ்.ராமகிருஷ்ணன் – மரணமடைந்த நண்பனைப் பற்றின குறிப்புகள்
- விளக்கு விருது – ஒரு கொண்டாட்டத்தின் அடையாளம்
- நான் கண்ட சிஷெல்ஸ் – 9. ஊடகங்கள், காட்சி சாலைகள்.
- மஸ்ஸர்ரியலிசம்:புதிய புரிதலுக்காக
- சிவா ! ராமா ! – 2060
- சிரிப்பு
- கடிதம்
- K. இரவி சிறீநிவாசின் கடாவுக்கு விடை
- மலர்களும் முட்களும்
- ‘ வடக்கு வாசல் ‘ – மாத இதழுக்கு உதவுங்கள்
- திருவள்ளுவர் கல்வி நிலையம்
- கடிதம் – ஆங்கிலம்
- இனி காலாண்டிதழ் அறிமுகம் – No More Tears ஆவணப்படக்காட்சி
- டொரோண்டோ பல்கலைக்கழகம் – மே 11-14 2006 தமிழ் ஆய்வு கருத்தரங்கு
- எதிர் வினைகளுக்கு விளக்கங்களா, வேறு விஷயங்களா, எது வேண்டும் ?
- சமாதானப் பிரபுவின் ரகசியம் (Secret of Prince of Peace)
- கீதாஞ்சலி (60) காதல் பரிசென்ன ? ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- மண்டைக்காடு: நடந்ததெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்
- சொ ல் லி ன் செ ல் வ ன் ( அன்டன் செகாவ்/ருஷ்யா)
- மன்னனின் கெளரவம் சதுரங்க நடுவிலே!
- கறுப்புப் பூனை
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 7
- பாலம்
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! – இலக்கிய நாடகம்
- மோகினிப் பிசாசு ( பிரெஞ்ச் மூலம் : தனியெல் புலான்ழே )
- எடின்பரோ குறிப்புகள்-8
- மீள் வாசிப்பில் சூபிசம்
- உறைப்பதும் உறைக்கச் செய்வதுமே கோல்வல்கர் பரம்பரை
- காசி விசுவநாதர் ஆலயம், காஷ்மீர கர்ஷன், கன்னியாகுமரி கலவரம்
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-8) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- ஊடகங்களில் சில கரும்புள்ளிகள்
- இணையவழி தமிழ் கற்பித்தல் – தொடக்கக்கல்வி அறிமுகமும், சிக்கல்களும், தீர்வுகளும்
- நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு – 1
- மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 1
- பெரியபுராணம் – 75 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- இளமையா முதுமையா
- எதுவுமில்லாத போது
- மீண்டும் மரணம் மீதான பயம்
- கவிதைகள்
- சிரிப்பு
- புனித உறவுகள்