சி. ஜெயபாரதன், கனடா
அணு ஆயுதப் பெருக்கத்தை ஆரம்பித்த அமெரிக்க விஞ்ஞானி!
அணு ஆயுதப் படைப்புக்கு ஐம்பது ஆண்டுகளாக நேரிடை யாகவோ அன்றி மறைமுக மாகவோ வழி வகுத்தவர்கள், முக்கியமாக ஐந்து விஞ்ஞான மேதைகள்! முதலில் கதிரியக்கம் [Radioactivity] கண்டு பிடித்த மேரி கியூரி! அடுத்து செயற்கைக் கதிரியக்கம் [Artificial Radioactivity] உண்டாக்கிய அவரது புதல்வி ஐரீன் கியூரி! அதன்பின் அணுவைப் பிளந்து, முதல் தொடரியக்கம் [Nuclear Chain Reaction] புரிந்த என்ரிகோ ஃபெரிமி! இரண்டாம் உலகப் போரின் போது, ஹிட்லர் தயாரிக்கும் முன்னே, அமெரிக்க ஜனாதிபதியை அணு ஆயுதம் ஆக்கத் தூண்டிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்! முடிவில் போர் முடியும் தறுவாயில் பன்னாட்டு விஞ்ஞானிகளைப் பணி செய்ய வைத்து வெற்றிகரமாய் அணுகுண்டை உருவாக்கிச் சோதனை செய்த ராபர்ட் ஓப்பன்ஹைமர்!
ஐன்ஸ்டைன் & ஓப்பன்ஹைமர்
ஜப்பான் ஹிரோஷிமா நாகசாகியில் அணுகுண்டுகள் விழுந்து கோர விளைவுகள் நிகழ்ந்த பின் உலகின் வல்லரசுகளும், மெல்லரசுகளும் உடனே அணு ஆயுதங்களை ரகசியமாய் உற்பத்தி செய்ய முற்பட்டன! 1945 இல் அமெரிக்கா ஆக்கியதை, ஒற்று மூலம் பிரதி அடித்து, 1949 இல் ரஷ்யா தனது முதல் அணுகுண்டைச் சோதித்தது! அதன் பிறகு 1952 இல் பிரிட்டன், 1960 இல் பிரான்ஸ், 1964 இல் சைனா, 1974 இல் இந்தியா, 1998 இல் பாகிஸ்தான் போன்ற நாடுகள் அணு ஆயுதப் பந்தயத்தில் பின் தொடர்ந்தன! உலக நாடுகளில் 115 தேசங்கள் முன்வந்து அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு [Non Proliferation Treaty, NPT] உடன்படிக்கையை மதித்துக் கையெழுத்துப் போட்டுள்ளன! ஆனால் அர்ஜென்டைனா, பிரேஸில், சைனா, பிரான்ஸ், இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் ஆகிய பல நாடுகள் அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பில் கையெழுத்திட ஒருங்கே மறுத்து விட்டன!
ஓப்பன்ஹைமர் இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த, ஆனால் முரண்பாடுகள் உடைய ஓர் பெளதிக விஞ்ஞானி! அவரே உலக அணு ஆயுதங்களின் பிதா! நெருங்கிய நண்பர்களுக்கு அவர் ஒரு பெரும் தீரர்! சிலருக்குப் புரிந்து கொள்ள முடியாத ஓர் புதிர் மனிதர் அவர்! மற்றும் பலருக்கு அவர் ‘துரோகி ‘ என்று தூற்றப் பட்டவர்! அமெரிக்க சோவியத் ரஷ்யாவுக்கு இடையே எழுந்த ஊமைப் போர் அரசியல் ஊழலில் [Cold War Politics] பழி சுமத்தப் பட்ட ஓர் பலியாளி [Victim] என்று அவர்மேல் அனுதாபப் பட்டவரும் உண்டு! 1942 முதல் 1954 வரை அவர் புகழ் வானளவு உயர்ந்து பின்பு, அமெரிக்க அரசின் பாதுகாப்பில் ஐயப்பாடு நபராகி [National Security Risk], அணுசக்திப் பேரவையிலிருந்து வெளியே தள்ளப் பட்டவர்! வான வில்லாய்ப் போன அவரது அரிய வாழ்க்கை முள்ளும் மலரும் நிறைந்த ஓர் விந்தை வரலாறு!
ஓப்பன்ஹைமர் பெற்ற உயர்தரக் கல்வி வரலாறு
நியூ யார்க் நகரில் ஜெர்மனியிலிருந்து புலம்பெயர்ந்த ஓர் செல்வந்த யூத குடும்பத்தில் ராபர்ட் ஓப்பன்ஹைமர் 1904 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி பிறந்தார். தந்தையார் ஜூலியஸ் ஓப்பன்ஹைமர் துணிகள் இறக்குமதியில் பெருநிதி திரட்டிச் செல்வந்த ராகப் பெயர் எடுத்தவர்! தாயார் எல்லா பிரையெட்மன் ஓர் உன்னத ஓவியக்கலை மாது! ராபர்ட் அறிவாற்றல் பெற்றுப் பெரும் திறமைசாலி யாக வருவதற்கு, அவரது பெற்றோர்களே காரண கர்த்தாக்கள்! சிறிய வயதிலேயே ராபர்ட் கணக்கிலும், பெளதிகத்திலும் மிகுந்த ஆர்வத்தைக் காட்டினார்! உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, கால்குலஸ் கணிதத்தில் [Calculus] கைதேர்ந்த வல்லுநராக இருந்தார்! ஒழுக்கவியல் கலாச்சாரப் பள்ளியில் [Ethical Cultural School] படிப்பு முடிந்ததும், ராபர்ட் முதலில் ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தில் நுழைந்தார். ஹார்வேர்டில் படிக்கும் காலத்தில் லாட்டின், கிரேக்க மொழிகளில் சாமர்த்தசாலி யாகவும், பெளதிகம், ரசாயனம் ஆகியவற்றில் மிஞ்சிய திறமைசாலி யாகவும் விளங்கினார். மேலும் அவர் கிழக்காசிய வேதாந்தம் [Oriental Philosophy], மனிதவியல் [Humanities], சமூக விஞ்ஞானம் [Social Sciences] ஆகியவற்றையும் பயின்றார். அப்போது அவர் எழுதிய முதல் கவிதைத் தொகுதியும் வெளியானது! 1925 இல் B.A. பட்டம் பெற்ற பிறகு, இங்கிலாந்தில் மேற்படிப்பிற்குச் சென்று, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் காவென்டிஷ் ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சி செய்ய விரும்பினார். அங்கே அப்போது பேராசிரியராக
இருந்தவர், அணுவின் அமைப்பை முதலில் விளக்கிய நோபெல் பரிசு விஞ்ஞான மேதை, ஏர்னஸ்டு ரூதர்ஃபோர்டு [Ernest Rutherford (1871-1937)]! உலகப் புகழ் பெற்ற ரூதர்ஃபோர்டு அணு அமைப்பு ஆராய்ச்சியில் பல முன்னோடி ஆய்வுகளை நடத்தியவர்! மேலும் பிரிட்டனில் பணி யாற்றிய பல பெரும் விஞ்ஞானிகளுடன் அணுத்துறை ஆராய்ச்சிகளில் ஓப்பன்ஹைமரும் கூட்டுழைக்க ஏதுவாயிற்று!
என்ரிகோ ஃபெர்மி
அடுத்து ஜெர்மன் விஞ்ஞானி மாக்ஸ் பார்ன் [Max Born (1872-1970)] ஓப்பன்ஹைமரைக் காட்டிங்கன் [Gottingen] பல்கலைக் கழகத்திற்கு வரும்படி அழைத்தார். மாக்ஸ் பார்ன் கதிர்த்துகள் யந்திரவியலில் [Quantum Mechanics] சிறப்பாக ஆராய்ச்சிகள் செய்து, நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞான மேதை. அங்கே விஞ்ஞான மேதைகளான நீல்ஸ் போர்[Neils Bohr], பால் டிராக் [Paul Dirac], என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi], வெர்னர் ஹைஸன்பர்க் [Wenner Heisenberg], ஜேம்ஸ் பிராங்க் [James Franck], யூஜீன் விஞ்னர் [Eugene Wigner] ஆகியோருடன் ஆய்வுகள் செய்துப் பழகும் வாய்ப்புக்கள் அவருக்கு நிறையக் கிடைத்தன! அவர்களில் பலர் பின்னால் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்து, ரகசிய மன்ஹாட்டன் திட்டமான [Manhattan Project] அணு ஆயுதப் படைப்பில் சேர்ந்து ஒப்பன்ஹைமரின் கீழ் பணியாற்றினார்கள்!
ஓப்பன்ஹைமர் ஜெர்மனியில் மாக்ஸ் பார்னுடன் ஆராய்ச்சிகள் செய்து, பரமாணுக்களின் மோதல்களை [Collision between Particles] விளக்கி ‘மோதல் நியதி ‘ [Collision Theory] ஒன்றை எழுதி, 1927 இல் தனது 23 வயதில் அதற்கு Ph.D. பட்டத்தையும் பெற்றார். அதன் பின் 1929 இல் அமெரிக்காவுக்குத் திரும்பி, கலிஃபோர்னியா பொறியியற் கூடத்திலும் [California Institute of Technology], கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்திலும் [University of California] ஒருங்கே துணைப் பேராசிரியராகப் பணி புரிந்தார். அடுத்துப் பேராசிரியராக 1935 இல் உயர்த்தப் பட்டார்.
இந்தக் காலங்களில்தான் ஓப்பன்ஹைமர் பல முக்கிய விஞ்ஞானப் படைப்புகளை வெளியீடு செய்தார். குறிப்பாக கதிர்த்துகள் யந்திரவியல் [Quantum Mechanics], அணுவியல் கோட்பாடு [Atomic Theory] ஆகிய பெளதிகப் பகுதிகளில் தனது புதிய அரியக் கருத்துக்களை வழங்கி யுள்ளார். அவர் எழுதிய நூல்கள்: ‘விஞ்ஞானமும் பொதுவாய்ப் புரிதலும் ‘ [Science & Common Understanding (1954)], ‘மின்னியல் சொற்பொழிவுகள் ‘ [Lectures on Electrodynamics (1967)]. அதே சமயம், அமெரிக்க ஐரோப்பிய இளம் விஞ்ஞான வல்லுநர்களைத் தன் திறமையால் கவர்ந்து, கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தை நோக்கி வரும்படிச் செய்தார், ஓப்பன்ஹைமர்! அவரது காலத்தில் கலிஃபோர்னியா பல்கலைக் கழகம் கோட்பாடு பெளதிகத்தின் அமெரிக்க மையம் [American Center of Theoretical Physics] என்று பெயர் பெற்றது! 1940 ஆம் ஆண்டு ராபர்ட் ஓப்பன்ஹைமர், காதிரைன் என்னும் மாதை மணந்து கொண்டார். அவர்களுக்குப் புதல்வன் ஒருவனும், புதல்வி ஒருத்தியும் உள்ளார்கள்.
அமெரிக்காவில் முதல் அணு ஆயுதச் சோதனை
ஐன்ஸ்டைன் & லியோ ஸிலார்டு
1939 இல் ஹிட்லர் போலந்தைக் கைப்பற்றியதும், ஐரோப்பாவிலிருந்து ஓடிவந்த முப்பெரும் ஹங்கேரியன் விஞ்ஞானிகள் லியோ ஸிலார்டு [Leo Szilard], எட்வெர்டு டெல்லர் [Edward Teller], யூஜீன் விக்னர் [Eugene Wigner] உலகப் புகழ் பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை ஒப்பவைத்து அவரது கையொப்பமுடன் ஒரு கடிதத்தை, அமெரிக்க ஜனாதிபதி ரூஸவெல்டுக்கு அனுப்பினார்கள்! ஹிட்லர் அணு ஆயுதத்தைத் தயாரித்து உலகை அழிப்பதற்கு முன், அமெரிக்கா அணு ஆயுதத்தை உருவாக்கி இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த வேண்டுமென, அக்கடித்ததில் எழுதி யிருந்தது! உடனே மன்ஹாட்டன் மறைமுகத் திட்டம் உருவாகி, அதற்கு ராணுவத் தளபதியாக லெஸ்லி குரூஸ் [Leslie Groves] தேர்ந்தெடுக்கப் பட்டார்! அவருக்குக் கீழ் விஞ்ஞான அதிபதியாக ராபர்ட் ஓப்பன்ஹைமர் நியமனம் ஆயினர்! மன்ஹாட்டன் அணு ஆயுதப் பணிக்கு அறுபதுக்கும் மேற்பட்ட அமெரிக்க, பிரிட்டிஷ், கனடா நாடுகளின் அரும்பெரும் விஞ்ஞான மேதைகள் அழைத்து வரப்பட்டார்கள்! இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் மன்ஹாட்டன் திட்டம் உருவாகி அழிவுக்கும், ஆக்கத்திற்கும் வழி வகுத்த அணு யுகம் உதயமானது, மாபெரும் ஓர் ஒப்பற்ற விஞ்ஞானச் சாதனைக் கருதப்படுகிறது!
லெஸ்லி குரூஸ்
அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் ஒரே சமயத்தில் அணு ஆயுத ஆரம்பப் பணிகள் துவங்கப் பட்டன! முப்பெரும் தளங்கள் W,X,Y என்னும் மறைவுப் பெயர்களில் தேர்ந்தெடுக்கப் பட்டன! யாவரையும் ஓரிடத்திலிருந்து கண்காணிக்க மறைவுத் தளம் Y, லாஸ் அலமாஸ் நியூ மெக்ஸிகோவில் [Los Alamos, New Mexico] குறிக்கப் பட்டது! டென்னஸி மாநிலத்தில் ஓக் ரிட்ஜ் [Oak Ridge] ஆராய்ச்சித் தொழிற் கூடங்களில் இரண்டு தளங்கள் W & X நிர்ணயமாயின! அணு ஆயுதப் படைப்பிற்கு நான்கு முக்கிய இமாலயப் பணிகள் நிறைவேற வேண்டும். முதலில் அணுப்பிளவு நிகழ்த்தத் தேவையான அளவு யுரேனியம்235 தயாரிக்க வேண்டும்! இயற்கை யுரேனியத் தாதுவில் [Natural Uranium Ore] மிகச் சிறிய அளவு [0.714%] இருக்கும் யுரேனியம்235 [U235] உலோகத்தை வாயுத் தளர்ச்சி முறையில் சேர்த்து [Gaseous Diffusion Process] மின்காந்தக் களத்தில் பிரித்து [Electromagnetic Separation] எடுக்கப்பட வேண்டும்.
Fatman Bomb on Nagasaki
அந்தப் பணியை அமெரிக்க விஞ்ஞானி எர்னஸ்ட் லாரென்ஸ் [Ernest Lawrence], ஆஸ்திரேலிய விஞ்ஞானி மார்க் ஒலிஃபன்ட் [Mark Oliphant] இருவரும் தளம் X இல் 440 மில்லியன் டாலர் செய்து முடித்தார்கள். இரண்டாவது பணி அணு உலையில் நியூட்ரான் கணைகளைக் கொண்டு இயற்கை யுரேனியத்தை தாக்கி புளுடோனியம்239 [Plutonium, Pu239] உலோகத்தை உண்டாக்கிப் பிரித்தெடுக்க வேண்டும். அந்தப் பணியை கெலென் சீபோர்க் [Glenn Seaborg] குழுவினர் 500 மில்லியன் டாலர் செலவில் செய்து வேண்டி அளவு புளுடோனியம்239 தயாரித்தார்கள். மூன்றாவது பணி சிகாகோவில் முதல் ஆய்வு அணு உலையை அமைத்து 1942 டிசம்பர் 2 இல் முதல் அணுக்கருத் தொடரிக்கத்தை இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ஃபெர்மி வெற்றிகரமாகச் செய்து காட்டினார். நான்காவது பணி அணுகுண்டுச் சோதனை! 20 கிலோ டன் TNT அழிவாற்றல் உள்ள முதல் அணுகுண்டு தயாராகி 1945 ஜூலை 16 இல் நியூ மெக்ஸிகோ அலமொகாட் ரோவுக்கு [Alamogordo] அருகில் வெடிப்புச் சோதனையில் வெற்றிகரமாய் முடிந்தது! நியூ மெக்ஸிகோவில் முதல் அணுகுண்டு வெடித்த இடம் ‘டிரினிடி ‘ [Trinity] என்று அழைக்கப் பட்டது!
புளுடோனியம் தயாரிப்பதில் மாபெரும் சிரமங்கள் உள்ளன! புளுடோனியம்
இயற்கையாகப் பூமியில் கிடைப்ப தில்லை! அந்த உலோகம் அணு உலைகளில்தான் உண்டாக்கப்பட வேண்டும்! ஒரு டன் [1000 kg] இயற்கை யுரேனியத்தை நியூட்ரான் கணைகளால் அடித்து அதன் அணுக்கருக்களைப் பிளந்தால், சுமார் 100 கிராம் புளுடோனியம்239 கிடைக்கிறது! அத்துடன் தீவிரமாய்த் தீங்கிழைக்கும் 10 மில்லியன் கியூரி காமாக் கதிரியக்கமும் [Gamma Radiation] எழுகிறது! ஆதலால் புளுடோனியத்தைப் பிரித்தெடுக்க தூரக் கையாட்சி [Remote Handling] முறைகளைக் கையாள வேண்டும்! யுரேனியம்235 உலோகம் இயற்கை யுரேனியத் தாதுக்களில் மிகச் சிறிய அளவு [0.714%] பூமியிலேயே கிடைக்கிறது.
ஜப்பானில் உண்டான முதலிரு பிரளயங்கள்!
‘உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான்! ‘ என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் பார்த்திபனுக்கு ஓதிய ஒரு வேத மொழியை, நியூ மெக்ஸிகோ டிரினிடி [Trinity] பாலை வனத்தில் சரித்திரப் புகழ் பெற்ற முதல் சோதனை அணு குண்டை 1945 ஜூலை 16 ஆம் தேதி வெடித்த போது, ராபர்ட் ஓப்பன்ஹைமர் உதாரணம் காட்டினார்!
Death Rate Growths
அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் அணு ஆயுதச் சோதனை முடிந்து சரியாக 21 நாட்கள் கழித்து, ஆகஸ்டு மாதம் 6 ஆம் தேதி ஹிரோஷிமாவில் முதல் அணுகுண்டு வீசப்பட்டது! எனோலா கே [Enola Gay] B29 வெடி விமானத்தில் கொண்டு சென்ற ‘லிட்டில் பாய் ‘ [Little Boy] என்னும் யுரேனிய அணுகுண்டு விழுந்து உலகில் முதல் பிரளயம் உண்டானது! அடுத்து மூன்று நாட்கள் கழித்து ஆகஸ்டு 9 ஆம் தேதி ‘ஃபாட் மான் ‘ [Fat Man] என்னும் புளுடோனிய அணுகுண்டு நாகசாகியில் போடப் பட்டு இரண்டாம் பிரளயம் உண்டானது! ஹிரோஷிமாவில் நொடிப் பொழுதில் 80,000 பேருக்கும் மேலாக வெடிப்பிலும், தீப்புயலிலும், அதிர்ச்சியிலும், கதிரியக்கத்திலும் தாக்கப்பட்டு மாண்டு போயினர்! அடுத்து 135,000 பேருக்கும் மேல் படுகாய முற்று செத்துக் கொண்டும், சாவை எதிர்பார்த்துக் கொண்டும் துடித்தனர்! அடுத்து நாகசாகியில் 45,000 பேர் மாண்டு, 64,000 பேர் படுகாயப் பட்டனர் என்று 1946 இல் கணக்கிடப் பட்டது!
ஜப்பானுக்குச் சென்று ‘அமெரிக்க வெடிவீச்சுத் திட்டப் பதிவுக்குழு ‘ [The United States Strategic Bombing Survey Team] 1946 ஜூன் 30 இல் வெளியிட்ட, ‘ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணுகுண்டுகளின் விளைவுகள் ‘ [The Effects of Atomic Bombs on Hiroshima & Nagasaki] என்னும் தகவல் கூறுகிறது: முக்கியமான விளைவு ஒரே சமயத்தில் நிகழும் மித மிஞ்சிய மரண எண்ணிக்கை! அடுத்து மூன்று வித உருவில் அணு ஆயுதம் பேரழிவுச் சக்தியாய் கோரக் கொலை புரிகிறது! முதலில் அளவற்ற வெப்பம்! இரண்டாவது பயங்கர வெடிப்பு அல்லது வாயு அழுத்தம்! மூன்றாவது தீவிரக் கதிரியக்கம்! பாதிக்கப் பட்டவர்களில் (20-30)% தீக்காய மரணங்கள்! அதிர்ச்சி, வெடிப்பு, வேறு விதங்களில் (50-60)% மரணங்கள்! மற்றும் (15-20)% கதிரியக்கக் காய்ச்சலில் பாதிப்பு [Radiation Sickness]! மூன்றிலும் மிக மிகக் கொடியது, கதிரியக்கத் தாக்குதல்! கதிரியக்கம் நொடிப் பொழுதில் சித்திரவதை செய்து மக்களைக் கொல்வதோடு, தொடர்ந்து உயிர் பிழைத்தோரையும், அவரது சந்ததிகளையும் வாழையடி வாழையாகப் பல்லாண்டுகள் [Acute (Lethal) & Long Term Effects] பாதித்துக் கொண்டே இருக்கும்! பிறக்கும் குழந்தைகள் கண்கள் குருடாகி, கால்கள் முடமாகி, கைகள் சிறிதாகி அங்க ஈனமாய் பிறக்கும்! மேலும் பலவிதப் புற்று நோய்கள் தாக்கி மக்கள் மரண எண்ணிக்கை அதிகமாகும்!
ராபர்ட் ஓப்பன்ஹைமர் ஜப்பானில் விளைந்த கோர மரணங்களைப் பற்றி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தார்! ஹிரோஷிமா, நாகசக்கி மரண விளைவு களுக்கும், கடும் கதிரியக்கத் தாக்குதலுக்கும் காரணமான தான் ஒரு குற்றவாளி என்று மனச்சாட்சி குத்தி மனப் போராட்டத்தில் வேதனை யுற்றார்! அணு குண்டுகள் போட்டு இரண்டு மாதங்கள் கழித்து, 1945 அக்டோபர் 16 ஆம் தேதி லாஸ் அலமாஸ் அணு ஆயுதக் கூடத்தின் ஆணையாளர் [Director, Los Alamos Laboratory] பதிவியிலிருந்து, ஓப்பன்ஹைமர் காரணம் எதுவும் கூறாமல் திடாரென விலகினார்!
தேசியப் பாதுகாப்பில் ஓப்பன்ஹைமர் மீது நம்பிக்கை இழப்பு!
பல்லாண்டுகள் முயன்று இமயத்தின் சிகரத்தில் ஏறியவர் அங்கேயே தங்கி இருக்க முடியாது! உச்சியை அடைந்த பின் ஒருவர் கீழே இறங்க வேண்டிய நிலை வந்து விடுகிறது! ஓப்பன்ஹைமர் 1945 நவம்பரில் தான் முன்பு வேலை பார்த்த கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்தார். 1946 இல் ஐக்கிய நாடுகளின் அணுசக்திப் பேரையின் [United Nations Atomic Energy Commission] அமெரிக்க ஆலோசகராகப் பணியாற்றினார். 1947 இல் ஓப்பன்ஹைமர் பிரின்ஸ்டன் மேற்துறை விஞ்ஞானக் கூடத்தின் ஆணையாளராக [Director, Institute of Advanced Study, Princeton, N.J.] ஆக்கப் பட்டார். 1947-1952 ஆண்டுகளில் அமெரிக்க அணுசக்திப் பேரையின் [U.S. Atomic Energy Commission] அதிபதியாக ஆக்கப் பாடு பணி செய்து வந்தார்.
அந்தச் சமயத்தில் ரஷ்யா புளுடோனியத்தைப் பயன்படுத்தி, 1949 செப்டம்பர் 3 இல் தனது முதல் அணு ஆயுதச் சோதனையைச் செய்து, அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது! 1947 இல் ரஷ்யக் குழுவினர் இகோர் குர்சடாவ் [Igor Kurchatov] தலைமையில், ரஷ்ய அணுவியல் மேதை பீட்டர் கபிட்ஸா [Peter Kapitsa], அமெரிக்காவில் என்ரிகோ ஃபெரிமி செய்து காட்டிய அணுக்கருத் தொடரியக்கத்தைத் தானும் ரஷ்யாவில் செய்து முடித்தார்! முக்கியமான ரகசியம் என்ன வென்றால், 1942-1945 ஆண்டுகளில் லாஸ் அலமாஸ் மறைமுகத் தளத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் யாவும், சோவியத் உளவுத் தொடர்பு மூலம் [Soviet Spy Network] ரஷ்யாவில் உள்ள பீட்டர் கபிட்ஸாவின் மேஜைக்கு வந்தடைந்தன!
1953 டிசம்பர் 21 ஆம் தேதி ஓப்பன்ஹைமருக்கு எதிராக அமெரிக்க ராணுவ உளவாளிகள் [Military Secret Service] ஓர் ஒற்று மனுவைத் தாக்கல் செய்தனர்! அமெரிக்க அணுசக்திப் பேரவையின் அதிபதியாக இருந்த சமயத்தில், அமெரிக்கா 1949 அக்டோபரில் திட்ட மிட்ட ஹைடிரஜன் குண்டு தயாரிப்பை ஒப்பாது நிராகரித்தார்! அதுவே அவர் செய்த முதல் குற்றம்! சென்ற காலங்களில் ஓப்பன்ஹைமர் பொதுடமைத் தோழர்களோடு [Communists] நட்பு கொண்டிருந்த தாகவும், அதைப் பற்றிக் கேட்கும் போது, சோவியத் ரஷ்யாவின் அணு ஆயுத உளவு செய்த ஒற்றர்களின் பெயரைத் தருவதில் அவர் காலம் கடத்திய தாகவும் பழிசுமத்தப் பட்டார்! அது அவர் செய்த இரண்டாவது குற்றம்! ஒரு காலத்தில் ஓப்பன்ஹைமர் பொதுடமைக் கட்சிக்கு அன்பளிப்புப் பணம் தந்து கொண்டிருந்தார்! அடுத்து ஒரு சமயம், அவர் ஹாகன் செவலியர் [Haakon Chevalier] என்னும் பொதுடமைத் தோழருக்கு சோவியத் இடைநபர் மூலம் கதிரியக்க ஆய்வுக்கூடம் பற்றித் தகவல் அனுப்பி யிருக்கிறார்! அத்துடன் லாஸ் அலமாஸ் திட்டத்தில் கம்யூனிஸ்டுகள் வேலை செய்ய வாய்ப்புக்கள் அளித்தார்! ராபர்ட் ஓப்பன்ஹைமர் தனையனும், அவரது மனைவியும் கம்யூனிஸ்டுக் கட்சியில் ஏற்கனவே 1930 முதல் உறுப்பினராகச் சேர்ந்துள்ளவர்கள்! மேலும் ராபர்டின் மனைவி காதிரைனும், அவளது பழைய கணவனும் பொதுடமைக் கட்சியின் அங்கத்தினராக
இருந்தவர்கள்! அமெரிக்க ராணுவ உளவாளிகள் ஓப்பன்ஹைமர் பொதுடமைத் தோழன் என்று நிரூபித்துக் காட்டப் பல காரணங்கள் கிடைத்தன!
உடனே அமெரிக்கா அணுசக்திப் பேரவை அதிபதிப் பதவியைப் பிடுங்கி, ஓப்பன்ஹைமரை அரசாங்கப் பங்கெடுப்புகளிலிருந்து அகற்றி வெளியே தள்ளியது! 1954 ஏப்ரல் 12 இல் அமெரிக்க அணுசக்திப் பேரவையின் பாதுகாப்புக் குழு [Security Board of the Atomic Energy Commission] ஓப்பன்ஹைமர் மீது அரசியல் வழக்குத் தொடர்ந்து, விசாரணை ஆரம்ப மானது! 1954 மே மாதம் 6 ஆம் தேதி விசாரணை முடிவில் நல்ல வேளை, ‘நாட்டுத் துரோகி ‘ என்று குற்றம் சாடப் படாமல், ‘பாதுகாப்பு முறையில் நம்பத் தகுதி யற்றவர் ‘ என்ற நாமத்தை, ஒப்பற்ற விஞ்ஞான மேதை ஓப்பன்ஹைமருக்குச் சூட்டியது! அந்த அபாண்டப் பழியை எதிர்த்து, அமெரிக்க விஞ்ஞானிகளின் ஐக்கிய சபை [The Federation of American Scientists] அவருக்குப் பக்க பலமாக இருந்து, பேரவைக்குக் கண்டனம் தெரிவித்தது!
அமெரிக்காவின் மதிப்பு மிக்கப் பதக்கம் பெற்ற ஓப்பன்ஹைமர்.
ஒருபுறம் ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சைனா ஆகிய நாடுகள் அணு ஆயுத உற்பத்திக்கு முற்படும் போது, அமெரிக்காவில் அணுசக்தியை ஆக்க வழிகளுக்குப் பயன்படுத்த, டென்னஸிப் பள்ளதாக்கு ஆணையகத்தின் அதிபதி [Chairman, Tennessee Valley Authority] டேவிட் லிலியெந்தால் [David Liliyenthal] 1947 ஏப்ரல் 19 இல் வாஸிங்டன் D.C. ஸ்டாட்லர் ஹோட்டலில் [Statler Hotel] காங்கிரஸ் தலைவர்கள், செனட்டர்கள், விஞ்ஞானிகள், அரசாங்கப் பதவியாளர்கள் ஆகியோர் முன்பாகப் பேசினார்! அவரது கையில் வெள்ளியில் செய்த சிகரெட் பாக்ஸ் ஒன்று இருந்தது! ‘பாருங்கள், இது யுரேனியம். இந்தச் சிறு பெட்டிக்குள் அடங்கி உள்ள அபார சக்தியைக் கட்டுப் படுத்தி, 2500 டன் நிலக்கரி எரிவதால் வரும் சக்தியை உண்டாக்கலாம்! அணுசக்தியை மின்சாரம் உற்பத்தி செய்ய நாம் ஆக்க வழியில் பயன்படுத்த வேண்டும் ‘ என்று அமெரிக்காவுக்கு ஓர் புதிய வழியைக் காட்டினார்! அவரே உலகின் முதல் அணு மின்சக்தி நிலையம் அமெரிக்காவில் நிறுவிட அடிகோலியவராகக் கருதப்படுகிறார்!
ஓப்பன்ஹைமர் & ஜான்ஸன்
இரண்டாம் உலகப் போர் நெருக்கடியில் பன்னாட்டு விஞ்ஞான மேதைகளைப் பணிபுரிய வைத்து, சக்தி வாய்ந்த அணு ஆயுதத்தை உண்டாக்கிப் பந்தயத்தை ஆரம்பித்த ஓப்பன்ஹைமர் தாழ்ச்சி நிலைக்குத் தள்ளப்பட்டு அவமதிக்கப் பட்டாலும், உலக வரலாற்றில் அவருக்கு ஓர் உன்னத இடம் நிச்சயமாக உள்ளது! உலகில் ஊமைப் போர் [Cold War] சற்று குளிர்ந்து போனதும், ஓப்பன்ஹைமரின் மதிப்பு மறுபடியும் தலை தூக்கியது! அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜான்ஸன் ஓப்பன்ஹைமரின் உன்னத போர்த்துறை விஞ்ஞானப் பணிக்கு 1963 டிசம்பர் 2 இல் அமெரிக்காவின் மதிப்பு மிக்க ‘என்ரிகோ ஃபெர்மிப் பதக்கத்தை ‘ [Enrico Fermi Award] அளித்து அவரைப் போற்றினார். ‘நீங்கள் இந்த தேசத்தில் நீண்ட காலமாய் விஞ்ஞான மேன்மைக்குச் செய்த சாதனைகளுக்கு, இப்பரிசு அளிக்கப் படுகிறது. விஞ்ஞான அடிப்படைப் பணிகளில் நீங்கள் இயற்றிய பங்கு, உங்கள் சாதனைகளை உலகில் ஒப்பில்லா நிலைக்கு உயர்த்தி யுள்ளது ‘.
ராபர்ட் ஓப்பன்ஹைமர் தனது 63 ஆவது வயதில் கழுத்துப் புற்று நோயில் அவதியுற்றுப் பிரின்ஸ்டன் நியூ ஜெர்ஸியில் 1967 பிப்ரவரி 18 ஆம் தேதிக் காலமானார்!
***************************
- முற்றும்
- மனம்
- மழை.
- கடிதங்கள்
- விருப்பமும் விருப்பமின்மையும் (எனக்குப் பிடித்த கதைகள் -33 -வண்ணதாசனின் ‘தனுமை ‘)
- சிறைக்குள்ளிருந்து ஒரு கவிதை (ரஷ்ய கவிஞர் மூஸா ஜலீல் பற்றி)
- இலக்கிய உலகில் விருது வாங்குவது எப்படி ? சில ஆலோசனைகள்.
- உலகின் முதல் அணு ஆயுதம் ஆக்கிய ராபர்ட் ஓப்பன்ஹைமர் (1904-1967)
- அறிவியல் மேதைகள் கேலன் (Galen)
- தண்டனை
- அன்னையும் அண்ணலும்
- கண்களின் அருவியை நிறுத்து…!
- நகரம் பற்றிய பத்து கவிதைகள்
- எனக்குள் ஒருவன்
- நான்காவது கொலை !!! (அத்யாயம் 13)
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது … (தொடர்கவிதை -1)
- நிகழ்வு
- புலம் பெயர்ந்த தமிழர் ஒருவரின் சந்தேகம் ?
- வாழ்க சிலுக்கு!!! ஒழிக சூர்யாவும் , எஸ் ராமகிருஷ்ணனும்!!!
- தலித்துகள், இந்து மதம், மதமாற்றம்
- லுடோ டெ விட்டே எழுதிய ‘லுமும்பா படுகொலை ‘ புத்தக விமர்சனம்
- யாதும் ஊரே….
- மரபணுக்கள் மூலம் ஆரிய படையெடுப்புக் கோட்பாடு நிரூபிக்கப்படுகிறதா ?
- மதமாற்றம் பற்றி காந்தி
- ஓட்டைக் காலணாக்கள்
- அங்கிச்சி
- விடியல்