மனுபாரதி
***
உனக்கும்
எனக்கும்
நடுவில்…
வெறுமை.
எதனையிட்டும்
நிரப்ப இயலா
வெட்ட வெளி.
ஏனிப்படி ?
எதற்கு வந்ததிது ?
உப்புக்காற்றாய்
நெஞ்சுகாிக்கச்செய்யும்
கேள்விக்கணைகள்.
அடிக்கடி நிகழும்
நலம் விசாாிப்புகளில் கூடப்
பாதாளக் கொலுசிற்கு
அகப்படாத
கிணற்றுப்பாத்திரமாய்
வார்த்தைகள்.
– அவைகளுக்கான தேடல்கள்.
சிக்கிய வார்த்தைகளிலோ
காய்ந்து,
கரை ஒதுங்கிய
கடற்பாசியாய்
உயிரற்ற உரையாடல்கள்.
ஒவ்வொரு முறை
சந்திக்கும் பொழுதும்
துள்ளிப் பாய்ந்து
அலை மோதும்
கடலாய் வந்தெனை நீ
தழுவிய
ஞாபக ஈரம் மட்டும்
இன்னும் என்னுள்…
அவ்வப்பொழுது
நீ அளித்த
சிப்பிப்பாிசுகள்
என் காலடியில்
பொக்கிஷமாக…
இன்றும்
பத்திரமாக…
சந்தோஷப் பெளர்ணமிகளில்
நிலவின் ஸ்பாிசம் பட்டதில்,
மேனியெல்லாம்
பொங்கிய பூாிப்பால் நீ,
என் மோனத்துயில் களைத்துச்,
செல்லமாய் அடித்தெழுப்பிச்
சொன்ன கதைகள்
சுமந்த கரையோரக்
கற்பாறையிது.
இன்றோ..
உன் மனது இங்குக்
கல்லாகிப்போனது.
துக்கச் சூறாவளிகளில்
சிக்குண்ட போதெல்லாம்
ஆளுயரத்திற்கு
அலைமுடிகள் பறக்கத்
தலைவிாி கோலமாய்,
நீ என் தோள் பிடித்து,
அழுதரற்றிய கண்ணீர் –
இன்னும்..
சொட்டிக்கொண்டிருக்கிறது
என்மேல்.
உள்ளம் கலந்து,
சுகதுக்கம் பகிர்ந்து,
கருத்துக்கள் பாிமாறிக்,
கற்பனைகள் ரசித்து,
அற்புதங்கள் வியந்து
நீ என்னிலும்,
நான் உன்னிலும் ஆழ்ந்த
அந்த நட்புக்கணங்கள்
இன்று..
தூரத்தில் தொடுவானமாய்.
வாழ்க்கைச் சூாியனின் வெப்பத்தில்
அன்றாட அவசரங்களில்
நீராவியாக
நீ தொலைத்த அந்நினைவுகள் –
என்னுள் மட்டும்
ஏதோ ஒரு மூலையில்
சிறைப்பட்ட
கல்தேரைகளாக….
***
திண்ணை, நவம்பர் 14, 1999
***