உனக்காகப் பாடுகிற குருவி

This entry is part [part not set] of 31 in the series 20051118_Issue

சாரங்கா தயாநந்தன்


பொழுதின் வெளிப்பின் முன்னதாக
மலராதிருக்கிற உன் விழி மலர்களில்
மெல்ல முத்தமிட்டு
எழுந்திருந்ததும்
இருகால்களிலும் அணிந்து கொள்கிறேன்
இரவில் கழற்றி வைப்பதும்
பகல் முழுதும் ஓயாததுமான
இரு மாயச் சக்கரங்களை.
பின்னர் குழந்தைகளதும் உனதுமான
புறப்படுகைகளைத் தயார்ப்படுத்தி
நிமிர்கிற பொழுதில்
எனது பேருந்தின் கடப்பு கருதி
மனது திடுக்கிடும்.
பாதியுறிஞ்சிய தேனீரை
காலையுணவாகப் பாவனை பண்ணி
கண்ணாடி முன்னின்று
என்னைச் சரிப்படுத்தி
ஒட்டுப் பொட்டொன்றையும்
உதட்டுச் சிரிப்பொன்றையும்
ஒட்டிக் கொள்கிற போது
மறுநாள் சமையலுக்கு
வாங்கியாக வேண்டிய
காய்கறிகளைப் பட்டியலிடுகிறது
மனசு.

அந்திப் பொழுதில்
இருவரும் மீண்டு வருகிற வீடு
என்கர வேலைகளுக்காக
மட்டும் காத்திருக்கிறது.
மறுநாளின் பகல் கடமைகளும்
முன்னகர்ந்து உட்கார்ந்துள்ளன
இரவின் மலர்வில்.
அவற்றின் முடிவிலும்
இருகுழந்தைகளதும் உறக்கவாரம்பத்திலும்
உன்னிடம் துளிர்க்கிற
அழகிய கனவுகள் வருடி
விழிகள் மூடுகிற பொழுதில்
மனதில் தொக்கத்தான் செய்கிறது
அந்தக் கேள்வி
உனக்காக நாளெலாம்
பாடுகிற குருவி நான்
எனக்காகப் பாடுபவர் எவர் ?

—-
nanthasaranga@gmail.com

Series Navigationஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மணற்கடிகை ‘ – காலத்தின் பரமபத விளையாட்டு >>

சாரங்கா தயாநந்தன்

சாரங்கா தயாநந்தன்