வெளி ரங்கராஜன்
சிலப்பதிகாரத்தில் கோவலன் கொலையுண்ட பிறகு மாதவியின் துயரை மையப்படுத்தி கன்னட நாடகாசிரியர் ஹெச்.எஸ்.சிவப்பிரகாஷ் எழுதிய ‘மாதவி’ நாடகத் தயாரிப்பில் நான் ஈடுபட்டிருந்தபோது அதன் எதிரொலிகள் பின்னர் எழுதப்பட்ட மணிமேகலை காப்பியத்தில் எவ்வாறு பிரதிபலிப்பு பெற்றுள்ளன என்பதை அறிந்து கொள்வதற்காக நான் மணிமேகலையை ஆழ்ந்து படிக்கும் ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. சிலப்பதிகாரத்தில் மதநோக்கம் தவிர்த்து வாழ்க்கை உணர்வுகளால் அலைக்கழிப்படும் மனித நிலைமைகள் குறித்த கலைத்தன்மை கொண்ட ஒரு ஆழ்ந்த பரிவு வெளிப்படுகிறது. ஆனால் பல்வேறு சமயவாதிகள் தம்முடைய சமயமே உயர்ந்த சமயம் என்பதை நிலைநாட்ட பிரசாரம் செய்துவந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட மணிமேகலை அறம், பொருள், இன்பம் ஆகியன கடந்த துறவு நிலையை இலக்காகக் கொண்டு பௌத்தம் போதிக்கும் துறவொழுக்கம் மற்றும் சமுதாயத் தொண்டு கலந்த ஒரு சமன நிலையை விழைவதால் பாத்திரங்கள் அதற்கேற்ப முன்வினைப்பயன் காரணமான அலைக்கழிப்புக்கும் தெளிவு பெறலுக்கும் உள்ளாகிறார்கள். ஆனால் இத்தகைய மையச் சரடுகளுக்கு இடையில் ஆங்காங்கே வெளிப்படும் பல்வேறு சிறுகதையாடல்களும், பாத்திரங்களின் இயக்கங்களும், குறுக்கீடுகள் கடந்த ஒரு தனித்த ஓட்டத்தை சாத்தியப்படுத்துகின்றன. மாந்திரீகம், இடுகாட்டுச் சூழல், பேய்க்கூத்து எனப் பலவாறாகப் பிரிந்து செல்லும் மைய இழைகள் ஒருவாறான அடர்த்தியையும் அவ்வப்போது வெளிப்படும் பாத்திரங்களின் உணர்வுப் பெருக்கு சார்புகள் கடந்த ஒரு இயக்கத்தையும் சாத்தியப்படுத்தி, ஒரு இலக்கியப் படைப்பின் நம்பகத்தன்மையை உறுதி செய்கின்றன.
அவ்வகையில் மணிமேகலையைப் பின்தொடர்ந்து செல்லும் சோழ இளவரசன் உதயகுமரனின் ஒவ்வொரு பிறப்பிலும் தொடரும் தீராத வேட்கை, காமத்தால் அலைக்கழிப்படும் மனித உயிர்களின் ஒரு முடிவற்ற போராட்டத்தை கவனப்படுத்துகிறது. மணிமேலையைப் பார்த்ததிலிருந்து அவள் மேல் தீராத மோகம் கொண்டு அவளைத் தேடி அவள் செல்லுமிடமெல்லாம் உதயகுமரன் பின் தொடர்ந்து செல்லுகிறான். முதுமை, சாவு மற்றும் கொடிய நோய்களுக்கு இருப்பிடமான மனித உடலின் தன்மைகளை உணரச்சொல்லும் சுதமதி (மணிமேகலையின் தோழி)யின் அறிவுரைகள் மணிமேகலையின் உருவம் கண்டதும் உதயகுமரனுக்கு மாயமாய் மறைகின்றன. மணிமேகலை முன்வினைப் பயனால் தவநெறி புகுந்தவள் என்று சுதமதி கூறுகிறபோது, “செழுமையான நீர், அளவு கடந்து பெருகும்போது அதனை தடுக்கத் தடையும் உண்டோ ” என்கிறான். உதயகுமரன் அங்கிருந்து அகன்றதும் பளிக்கறையினுள் மறைந்திருந்த மணிமேகலை வெளியே வந்து,
புதுவோன் பின்றைப் போனதுஎன் நெஞ்சம்
இதுவோ அன்னாய் காமத்து இயற்கை –
என்று, அதாவது, மரபு வழியில் தனக்கொரு காவல் அற்றவள் என்றென்னை எண்ணியவன் என்றும் கருதாது இப்புதியவன் பின்னே என் மனம் செல்கிறதே, இதுதான் காமத்தின் இயல்போ என்று மணிமேகலையும் உதயகுமரன் மீது தான் கொண்ட ஈர்ப்பை அடக்க வழிதேடி மனம் உழல்கிறாள்.
பின்னர் மணிமேகலா தெய்வத்தால் மணிபல்லவத்தீவுக்கு எடுத்துச்செல்லப்படும் மணிமேகலை அங்கு தன் முற்பிறப்பை அறிகிறாள். உவவனத்தில் உன்னிடம் வந்த உதயகுமரனே உன்னுடைய முற்பிறப்புக் கணவனாகிய ராகுலன். அதனால்தான் அவன் உன்னிடம் நீங்கா விருப்பம் கொண்டான். உன் உள்ளமும் நீங்காது அவனை விரும்பியது என்று மணிமேகலா தெய்வம் கூறுகிறது. அதற்குமுன் மணிபல்லவத்தில் யாரையும் காணாது தனிமையில் சுற்றித் திரியும் மணிமேகலை தன் தந்தை கோவலனுக்கு நேர்ந்த துன்பத்தை எண்ணி அழுது புலம்புகிறாள்.
கோல்தொடி மாதரொடு வேற்றுநாடு அடைந்து
வைவாள் உழந்த மணிப்பூண் அகலத்து
ஐயாவோ என்று அழுவாள் –
என இவ்வாறு கண்ணகிக்கும் கோவலனுக்கும் நேர்ந்த துன்பத்தை நினைத்து மனம் கலங்குகிறாள்.
பின்னர் அறவாணர் அறிவுரை பெற்று மணிமேகலை பிக்குணிக் கோலத்துடன் புகார் நகரப் பெருந்தெருவிற்கு வந்தபோது உதயகுமரன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட இம்மணிமேகலை துறவியாகப் பிச்சைப் பாத்திரம் ஏந்திச் செல்வது பெரும் வியப்பே என மக்கள் வருத்தம் அடைகின்றனர். மணிமேகலையின் பாட்டி சித்திராபதி மணிமேகலையின் துறவு நிலை நீங்க உதயகுமரனை நாடவே பெரும் பசியாளர்க்கு பாத்திரமேந்தி சோறு தந்துகொண்டிருந்த மணிமேகலையை உதயகுமரன் காண்கிறான். அப்போதும் தனக்குள் பெருகிய காமத்தை அவனால் கட்டுப்படுத்திக்கொள்ள இயலவில்லை. இவன் முற்பிறவியில் என்னை விரும்பிய கணவனாகிய ராகுலன். இவன் அடிகளைத் தொழுதலும் தகுதியானதே என நினைத்து மணிமேகலை அவனை வணங்குகிறாள். நெஞ்சம் கட்டிழந்து போய் அவனிடத்தே சென்றாலும் வளை குலுங்கும் என் கையை இவன் பற்றினாலும் முற்பிறப்புக் கணவனாகிய இவன் பேச்சை எதிர்மறுத்தல் நன்றில்லை என்று நடுக்கமுற்று மயங்கி அங்கிருந்து மறைகிறாள். காயசண்டிகையின் வடிவம் பெறுகிறாள். உதயகுமரன் மணிமேகலையைத் தந்தருள் என இறைஞ்சி நிற்கிறான். ஆனால் காயசண்டிகையின் கணவன் அவளைக் காணவே உதயகுமரன் வந்திருப்பதாக நினைத்து அவனை வெட்டிக் கொல்கிறான். உதயகுமரன் இறந்ததை அறிந்து மணிமேகலை அழுது புலம்பி மீண்டும் தன் உரு பெற்று அவனிடம் செல்லும்போது கந்திற்பாவை தெய்வம் தோன்றி ‘பலபிறவிகளாக நீங்கள் கணவன் மனைவியாகத் தொடர்கிறீர்கள். எனவே அவன் சாவிற்காகத் துயரம் கொள்ளாதே’ என்று உதயகுமரன் மரணத்திற்கான காரணங்களைக் கூறி மணிமேகலையைத் தேற்றுகிறது.
சந்திப்பும் பிரிவுமான இவ்வுறவுச் சுழற்சிகளின் ஊடாக மரணம் சூழ்ந்துள்ள மனித வேட்கைகளின் தன்மைகள் புலப்படுத்தப்படுகின்றன. ஆயினும் மனித உயிர்களின் வேட்கைகள் சார்ந்த கண்ணோட்டம் தமக்குரிய உயிரோட்டம் கொண்டு முடிவற்றதாகவும் கட்டுகள் அற்றதாகவும் உள்ளது. தன்னுடைய வாழ்வின் அழகியல் சார்ந்த எல்லா நிலைப்பாடுகளும் இந்தப் போராட்டத்தில் கூர்மை பெறுவதையே மனித மனங்கள் அறிய நேர்கின்றன. அழகுணர்வும் வாழ்க்கை உணர்வுகளும் சூழ உயிர்த்தன்மை மிகுந்த இப்போராட்டம் தனக்குரிய நாடகச் சாயல் கொண்டு பல்வேறு வடிவங்களை வழங்கிக்கொண்டு வருவதை நாம் தொடர்ந்து அனுமானிக்கமுடியும். அத்தருணங்கள் நாடகப் பரிமாணங்கள் கொண்டு வெளிப்பாடு கொள்ளும் சந்தர்ப்பத்தையே நான் மீண்டும் மீண்டும் எதிர்நோக்குகிறேன்.
நன்றி: உயிர் எழுத்து, நவம்பர் 2007.
velirangarajan2003@yahoo.co.in
- 20-21.10.07 பாரிஸில் நடைபெற்ற தலித் மாநாடு பற்றிய குறிப்பு
- இழுக்காதே எனக்குரியவனை !
- அன்புள்ள திரு சிவகுமார்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சம் எத்தனை பெரியது ? (கட்டுரை: 2)
- இறந்தவன் குறிப்புகள் – 1
- பி.கே.சிவகுமார் கண்ணோட்டம்
- திரு பி.கே.சிவக்குமார் கடிதம் பற்றி
- நாட்டாமை தீர்ப்பை மாத்திப்போடு
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 2
- நான்தான் சட்டுவம் பேசுகிறேன்
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 6 மூங்கில் காடுகளில் நடந்த மூர்க்கம்
- படித்ததும் புரிந்ததும்..(9) பாகிஸ்தான் நெருக்கடியும் : இந்தியாவின் செருப்புக்கடியும்;
- பாட்டு வாத்தியார் – ஜெ. ராம்கியின் பாகவதர்
- தீபாவளி பற்றி ஒரு கடிதம்
- தமிழ்ப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு!
- இந்திய இளைஞர் பிரதிநிதிக்குழுமத்துக்கு ரியாத் தமிழ்ச்சங்கம் கடந்த நவம்பர் 1ம் நாளில் வரவேற்பு
- பெண்ணியத்தின் மூன்றாம இதிகாசத்தின் அமானுஷ்ய பக்கங்கள்
- சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்டக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்
- உதயகுமரன் கதை
- திரு.பிகே.சிவகுமார் கருத்தைப் படிக்கும்போது
- லா.ச.ரா.வுக்கு அஞ்சலி – 1 – அம்பாளின் தொப்புள்கொடி
- நினைவுகளின் தடத்தில்
- கடிதங்கள் குறித்த கடிதங்கள் குறித்த ஒரு கடிதம்
- கல்லறைக் கவிதை
- கடிதம்
- பி.கே. சிவகுமாரின் கடிதம்…
- த.கோவேந்தனின் ‘வானம்பாடி’ இதழ் அறிமுகம்
- அமெரிக்காவும் விழுமியங்களும்
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 35
- வேரற்றுப் போகிறவர்கள்
- பண்பாட்டிற்கு எதிரானது
- சுநாதர்
- இருபது ரூபாய் நோட்டு
- யார் அகதிகள்?
- “பயன்பாடு”
- குறிப்பேட்டுப் பதிவுகள் சில……
- சிந்தாநதி சகாப்தம்
- நாவடிமை (கண்ணிகள்)
- தாகூரின் கீதங்கள் -2 கண்ணுக்குப் பின்னே அமர்ந்துள்ளாய் !
- இல்லாமல் போனவர்கள்
- தீபாவளித் திருநாளில்
- கிளி ஜோசியம்!
- இலை போட்டாச்சு 37 – ரவா லாடு
- லா.ச.ரா
- இலஞ்சி சொக்கலிங்கனார் கண்ட ‘சமய கிண்டர்கார்டன்(அ) ஆலயங்களின் உட்பொருள் விளக்கம்’