உண்மை நின்றிட வேண்டும்!

This entry is part [part not set] of 32 in the series 20051216_Issue

ஆ. இரா. வேங்கடாசலபதி


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

வணக்கம்.

சென்ற இதழில் வெளிவந்த ‘சு.ரா.வுடனான கலந்துரையாட’லில் பேராசிரியர் இ. அண்ணாமலை ‘காலச்சுவ’டில் வெளிவந்த தம் நேர்காணல் பற்றிச் சில சொல்லியிருக்கிறார். அந்நேர்காணலை நிகழ்த்தியவன் என்ற முறையில் ஒரு சிறு விளக்கத்தை இங்கே அளிக்க விரும்புகிறேன்.

2003ஆம் ஆண்டின் தொடக்கத்தில் யேல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் அண்ணாமலையைச் சந்தித்தபொழுது, ‘காலச்சுவடு’க்காக நேர்காணல் நிகழ்த்தும் என் விருப்பத்தைத் தெரிவித்தேன். அதற்கு அவர் இசைந்தார். என் வேலைச் சுமை காரணமாக (சோட்டா கல்வியாளர்களுக்கும் வேலை இருக்கத்தானே செய்கிறது) மைசூருக்குச் சென்று அவரை நேர்காண இயலாதென்று நான் கூறியபொழுது, தாம் இந்தியாவுக்குச் சென்னை வழியே திரும்பவிருப்பதாகவும், அந்தச் சமயத்தில் நேர்காணலை வைத்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். ‘ஜெட் லாக்’ தொந்திரவு தராதா என்று கேட்டபொழுது, அது ஒரு பொருட்டல்ல என்றும் அவர் கூறினார்.

பேராசிரியர் அண்ணாமலை கேட்டுக்கொண்டபடி எம்.ஐ.டி.எஸ். விருந்தினர் அறையில் தங்க ஏற்பாடு செய்தேன். நேர்காணல் ஒரு முழு நாள் நிகழ்ந்தது. உடன் ஆனந்த் செல்லையா இருந்தார். மாலையில் நேர்காணல் முடிந்தபொழுது, அவர் தம் மனநிறைவினை வெளிப்படுத்தினார்.

எப்பொழுதுமே நேர்காணலின் படியை நேர்காணப்படுபவரிடம் காட்டி, ஒப்புதல் பெற்று வெளியிடுவதே ‘காலச்சுவ’டின் வழக்கம். அவ்வாறே கணினியில் உள்ளிட்ட அச்சுப்படியைப் பேராசிரியர் அண்ணாமலைக்கு அனுப்பினேன். அவர் அதனைப் பார்வையிட்டுத் திருத்தப் படியை 9.6.2004 என்ற நாளிட்ட கடிதத்தோடு திருப்பி அனுப்பினார். “சில திருத்தங்களும் சேர்க்கைகளும் செய்திருக்கிறேன். கோர்வை இல்லாத இடங்களை நிரப்புவதும், தவறான குறைவான தகவல்களைத் திருத்துவதும்தான் பெரும்பான்மை” என்று குறிப்பிட்டதோடு, தான் யேல் பல்கலைக்கழகத்தில் வருகைதரு முதுநிலைப் பேராசிரியராகப் பணியாற்றவுள்ளதையும் குறிப்பிட வேண்டும் என்று எழுதியிருந்தார். (அக்கடித நகலை அலகீடு செய்து இணைத்துள்ளேன்.)

இந்நிலையில், நேர்காணல் வெளிவந்த கொஞ்ச நாளுக்குப் பிறகு எனக்கு அவர் அனுப்பிய மின்னஞ்சலிலும், ‘காலச்சுவடு’க்கு விடுத்த எதிர்வினையிலும் ‘நேர்காணலில் கோணல்’ என்று புகார் தெரிவித்திருந்தார். நேர்காணல் எடுக்கப்பட்டு, பெயர்க்கப்பட்டுச் செப்பம் செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டு வெளிவருவதற்கு ஓராண்டுக்கு மேல் ஆயிற்று. நேர்காணல் முறையாக நிகழ்த்தப் படவில்லை என்ற உணர்வு இந்த ஓராண்டுக் காலத்தில் அவருக்கு ஒரு முறைகூட ஏற்படவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. ‘காலச்சுவடு’ ‘குமுதம்’ போன்றதொரு ‘காசிப்’ பத்திரிகை என்ற செய்தி அவருக்கு முன்பே எப்படித் தெரியாமல் போனது என்பதும் வியப்புக்குரியது. திருத்தியும் சேர்க்கைகள் செய்தும் ஒப்புதல் கொடுத்து வெளியிட்ட நேர்காணலுக்குப் பேராசிரியர் அண்ணாமலை பொறுப்பேற்காதது அறமாகுமா ? இந்தக் கேள்வியை அவர் தம் மனத்துக்குள் எழுப்பிக்கொள்ள வேண்டும். அதற்கான விடை ‘தன்னெஞ்சறிவது பொய்யற்க’ என்ற பொய்யாமொழிக்குப் பொருந்தியதாக அமைந்தால் நல்லது.

‘திண்ணை’ நண்பர்களுக்கும் ஒரு வார்த்தை. சென்ற 23 ஆண்டுகளாக நான் இலக்கிய உலகத்தில் செயல்பட்டு வருகிறேன். வ.உ.சி., பாரதி, மறைமலையடிகள், புதுமைப்பித்தன், ஏ.கே. செட்டியார் போன்ற பெரும் ஆளுமைகள் குறித்து ஏதோ சில பணிகளை விடாமல் செய்து வந்திருக்கிறேன். இவற்றைப் பற்றியெல்லாம் ‘திண்ணை’ ஒருபோதும் கவனித்ததாகத் தெரியவில்லை. புதுமைப்பித்தன் அக்கப்போரின் பொழுதும், இந்த விவகாரத்திலும் மட்டுமே நான் கவனிக்கப்பட்டிருக்கிறேன். சீரிய பணிகளல்ல, சர்ச்சைகளே விலைபோகும் என்று ‘திண்ணை’ கண்டுபிடித்துள்ள புதிய வெற்றிச் சூத்திரத்திற்கு இதையே சான்றாகக் கொள்ளலாமா ?

Series Navigation

ஆசிரியர் : ஆ.இரா. வேங்கடாசலபதி

ஆசிரியர் : ஆ.இரா. வேங்கடாசலபதி