மஞ்சுளா நவநீதன்
தாலிபனின் சிலையுடைப்புப் பற்றி உலகம் முழுவதிலிருந்தும் பல கருத்துகள் தாக்கியும் , புகழ்ந்தும் வெளிவந்துள்ளன. ஆனால், சின்னக் கருப்பன் ஒருவர் தான் Cultural Relativism என்ற கோட்பாட்டை முன்னிறுத்தி நியாயம் கற்பிக்கிறார் என்று நினைக்கிறேன்.
இந்தக் கலாசார வித்தியாசக் கோட்பாடு என்ன சொல்கிறது ? ஒவ்வொரு கலாசாரமும் ஒவ்வொரு பிரசினைக்கும் வெவ்வேறு அணுகுமுறையைக் கொண்டுள்ளன. அதனால், ஒரு கலாசாரத்தில் தவறு என்பது இன்னொரு கலாசாரத்தில் தவறாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உதாரணமாய், மாமன் மகன், அத்தைமகளை மணம் செய்து கொள்கிற இந்தியப் பழக்கம் மற்ற கலாசாரங்களில் இல்லை. யூதர்களும், முஸ்லிம்களும் ஆண்குழந்தைகளின் உறுப்பின் முன் தோலை வெட்டுவதை மதம் விதித்த கடமை என்கின்றனர். கத்தோலிக்கர்கள் முதலியவர்கள் இது பற்றி எந்தக் கருத்தும் கூறவில்லை. சில ஆப்பிரிக்க நாடுகளில் பெண்களுக்கும் இது போல் நடக்கிறது. எங்கள் கலாசாரத்தில் கூறப் பட்டது இது. எனவே தலையிடாதீர்கள் என்று தான் அவர்களும் சொல்கிறார்கள்., முஸ்லிம்களும், மார்மன் கிறுஸ்தவர்களும் பலதார மணம் அவர்களின் மதத்தினால் அங்கீகரிக்கப் பட்ட ஒன்று என்பதால் அரசாங்கங்கள் இதில் தலையிடலாகாது என்று சொல்கிறார்கள். மனித உரிமை மீறல்களை ,மலேசியா, சிங்கப்பூர், சீனா முதலிய நாடுகளும் இந்தக் கோட்பாட்டை முன்னிறுத்தியே நியாயப் படுத்துகின்றன.
இந்தியாவிலேயே கூட பால்ய விவாகத் தடைச் சட்டமும், பலதார மணத் தடைச் சட்டமும் பல தடைகளுக்கிப் பின்பு தான் நிறைவேறியது. அப்போதும் கூட சில மதத் தலைவர்கள் மத உரிமையில் தலையிடுவதாய்த் தான் ஆங்கிலேய அரசினைக் குற்றம் சாட்டினர். தீண்டாமை கூட சனாதன தர்மப் படி நியாயப் படுத்தப் பட்டது. இப்படிப்பட்ட தீய நடைமுறைகளுக்கு எதிரான பல சட்டங்கள் இயற்றப் பட்டதன் முக்கியமான காரணம் என்று இதைச் சுட்டிக் காட்டலாம். உலக அரங்கில் எல்லாக் குழுக்களுமே அங்கம் வகிக்கின்றன, நாம் நம் மூச்சுக் காற்றாலும், பங்கிடப்பட்ட நம் வரலாறாலும் ஏதோ ஒரு வகையில் பந்தம் கொண்டவர்கள் என்று மதத் தலைவர்களுக்கும், சீர்திருத்தக் காரர்களுக்கும் ஏற்பட்ட உள்ளுணர்வு தான், இதை அறிவு பூர்வமான ஒன்று என்று கூட நான் சொல்ல மாட்டேன். இப்படி எழுகின்ற சமூகச் சீர்திருத்தக் காரர்களுக்கு வேண்டிய ஓர் இடத்தை சமூகம் அளிக்க வேண்டும். அப்படி அளிக்க வில்லையெனில், உள்நாட்டுக் குழப்பங்களும், நாடுகள் மதங்கள் பிரிவதும் நிகழ்கின்றன.
எல்லா சமூகங்களுக்கும், எல்லாக் காலத்திற்கும், எல்லாச் சூழ்நிலைகளுக்கும் இயைபான ஒரு சட்ட திட்டம் என்பதோ விதி என்பதோ சாத்தியமில்லை என்பது இதன் சாராம்சம். இதன் அர்த்தம் ஒரு சமூக என்ன செய்தாலும் உலக நாடுகள் அதில் தலையிட உரிமை இல்லை என்பதா ? நிச்சயமாய் இல்லை. அடிப்படை மனிதாபிமானமும், பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்ட சில நியாய விதிகளும் எல்லாச் சமூகங்களுக்கும் அடிப்படையானவை என்ற கோட்பாட்டுடன் இணைந்து தான் நாம் கலாசார வித்தியாசங்களைக் கருத வேண்டுமே தவிர, கலாசார வித்தியாசம் எல்லாச் செயல்பாடுகளையும் நியாயப் படுத்திவிட முடியும் என்று நினைப்பது தவறு.
மனித வரலாற்றில் மதங்கள், மொழிகள் , கலாசாரங்கள் தோன்றுகின்றன . அழிகின்றன. மனிதர்கள் , மதத் தலைவர்கள் தோன்றுகிறார்கள். அந்தத் தலைவர்களின் பின்னால், வேறு தலைவர்கள் அவர்கள் கருத்துகளைச் சார்ந்தும், தாண்டியும் உருவாகிறார்கள். ஒரு காலகட்டத்தில் எதுவுமே தேங்கி நின்று விடலாகாது.
சமூக விதிகள் ஒரு சமூகம் வாழ்வதற்கான தேவைகளை முன்னிறுத்தி, அந்தக் காலகட்டத்தில் அவசியமாகிற சில விதிகளையும் நியமங்களையும் உருவாக்கிக் கொள்கிறது., இதற்கு மதம், மற்றும் வேறு காரண காரியங்கள் சுட்டப் படுகின்றன. காலம் மாறும் போது, மற்ற கலாசாரங்களுடன் ஒட்டுறவு ஏற்படும் போது எல்லா சமூகங்களுமே ஒரு விதமான சுய விமர்சனத்திற்கும், திரும்பிப் பார்த்தலுக்கும் தயாராகின்றன. இப்படித் திரும்பிப் பார்ப்பதற்கு அவசியமான வரலாற்றின் ஆற்றொழுக்கை ஒரு சமூகம் வாய்வழியாகவும், எழுத்து வழியாகவும் தக்க வைத்துக் கொள்கிறது. அப்படித் தக்க வைத்துக் கொள்ளாமல், வரலாறு ஒரு ஒற்றையடிப் பாதையாகவும், அந்தப் பாதையைத் தவிர்த்த மற்றெல்லாம் இருட்டு என்றும் வர்ணித்துத் தன் தனிமைப் படலைத் தனித்தன்மையாய் ஒரு சமூகம் கற்பித்துக் கொள்கிறது, என்றால் அது மிகத் துயரமான செயல். துரதிர்ஷ்டவசமாக ஆஃப்கானிஸ்தானத்து தாலிபான் இப்படிப் பட்ட ஒரு சமூகமாய் உருவாகியுள்ளது.
இது எவ்விதமாய் இப்படி உருவாயிற்று என்று திரும்பிப் பார்ப்பதே அந்தச் சமூகத்திற்குள் ஒரு சிந்தனையாய் இல்லாத அளவு வன்முறையும் – கருத்துருவ வன்முறையும், நிஜமான வன்முறையும் சேர்ந்தே – இங்கு பெருகியுள்ளது. காந்தாரம் என்று அறியப் பட்ட , பெளத்தம் பெருகி வளர்ந்த ஒரு சூழல் இது. சோவியத் யூனியன் ஆக்கிரமிப்பும் அதற்குப் பதில் அமெரிக்க ஆதரவுடன் போரிட்ட வீரர்களும் என எழுந்த சூழலில், ஜியா-வுல் ஹக் என்ற ஒரு பாகிஸ்தானியச் சர்வாதிகாரி, மதப் பள்ளிகளை உருவாக்கி மதபோதனையில் மற்ற விஷ போதனைகளயும் கலந்து ஆஃப்கானிஸ்தானத்தில் போரிட அனுப்பி வைத்தான். அதன் பலன் தான் இன்று இப்படி உருவாகியுள்ளது. இந்தப் போர் உத்திமுறைக்கு அமெரிக்காவும் பெரும் பொறுப்பு ஏற்க வேண்டும்.
காபுல் கலாசாரச் சிறப்பு மிக்க ஒரு நகரமாய் இருந்தது. காபுல் அருங்காட்சியகம் பல வரலாற்றுப் பொக்கிஷங்களை உள்ளடக்கியிருந்தது. இந்தப் பொருட்கள் உள்நாட்டுப் போரின் போது , திருடப்பட்டு, பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் விற்பனை செய்யப்பட்டதும் சமீபத்திய வரலாறு தான்.
உலக அரங்கில் அவரவர் நடைமுறைக் கலாசார வித்தியாசங்கள் என்று எல்லாவற்றையும் நியாயப் படுத்திவிட முடியாது. சில கலாசாரங்களில் 16 வயதில் பெண்களுக்குத் திருமணம் செய்வது சட்டப் படி சரியாகலாம். மற்ற சமூகங்களில் 18 வயதாய் இருக்கலாம். ஆனால் ஐந்து வயதில் திருமணம் என்று, கலாசாரத் தனித்தன்மையைக் கோருவது அனுமதிக்க முடியாது. இதன் காரணம், சிறு குழந்தைகளுக்குத் தம் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பக்குவம் இல்லை அதனால் அவர்களுக்கு இந்த உறவை ஏற்படுத்திக் கொடுப்பது ஒரு வித வன்முறை என்பதால் இந்தப் பிரசினை எழுகிறது.
ஃப்ரான்ஸில் , உதாரணமாக, ஒரு பிரசினை எழுந்தது. முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிந்து பள்ளிக்கு வருவது கூடாது என்று சொல்லப் பட்டது. எங்களின் தனிக் கலாசாரப் பண்பு இது என்று முஸ்லிம்கள் திரண்டனர். (இதுவே சவூதி அரேபியாவில் பெண்கள் – முஸ்லிம் அல்லாதார் உட்பட — முகத்திரை அணிய வேண்டும் என்று சட்டம் உள்ளது. கலாசாரத் தனித்தன்மையைச் சுட்டிக் காட்டி முஸ்லிம் அல்லாத பெண்கள் அங்கு முகத்திரை அணியாமல் போக அனுமதி இல்லை.)
வீட்டிற்குள் தான் கும்பிடும் சிலையை உடைக்க ஒருவனுக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. ஆனால், பொது இடத்தில் வரலாற்றின் அங்கமாய் மாறிவிட்ட ஒரு சிலையை உடைக்க யாருக்கும் சுதந்திரம் இல்லை- இருக்கலாகாது. ஆனால், சொந்த நிலத்தில் கிடைக்கும் பொருட்களைப் பொறுத்தும் கூட நாடுகள் சட்ட ரீதியான விதி விலக்குகள் கொண்டுள்ளன. ஒருவனுடைய நிலமே யானாலும், அதனில் தோண்டும் போது பழங்காலப் பொருட்கள் கிடைத்தால், அது அரசிடம் ஒப்புவிக்க வேண்டும் என்று கிட்டத் தட்ட எல்லா நாடுகளிலும் சட்டம் உண்டு.
ராமர் படத்திற்குச் செருப்பு மாலை அணிவித்த பெரியார், கோயிலுக்குள் புகுந்து சிலைகளை உடைக்கவில்லை — அது அவருக்கு எதிரான ஒரு வஸ்து என்ற போதும் கூட. தொடர்ந்த பிரசாரம் – ஜனநாயகத்தன்மை என்று இயங்கிய ஒரு நியதி அது. சிலை வழிபாட்டிற்கு எதிராகத் தன் கருத்துகளைச் சொல்லும்கிற ஒரு கருத்துப் பறிமாலலில் தாலிபன் ஈடுபடுமானால் அது சரியானதாய் இருக்கும்.
ஆனால் தாலிபனின் சிலை உடைப்பு இந்தக் கலாசார வித்தியாசத்தைத் தாண்டி , ஓர் இனவாதக் கோட்பாடு என்று சொல்ல வேண்டும். சிலைகளை உடைப்பது என்பது, சிலைகளை வழிபடும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை இழிவு படுத்துகிற சமாசாரம். இது பெளத்தர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, இந்துக்கள், கத்தோலிக்கர்கள், ஆதிவாசிகள், சீக்கியர்களின் வழிபாட்டு முறை அனைத்தையும் ஒரு சேர அவமதிக்கும் விஷயமாகும். இது முதல் படி தான், இதனைத் தாண்டி நாங்கள் உங்களிடமும் வருவோம் என்பது தான் இதன் குறிப்பீடு. இந்தக் குறிப்பீடை விமர்சனம் பண்ணாமல், இந்த உலகப் பார்வையை விமர்சனம் பண்ணாமல், தாலிபன் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவதில் எந்தப் பயனும் இல்லை. யூதர்கள் அழிக்கப் படவேண்டியவர்கள் என்ற கோட்பாட்டுக்கும், விக்கிரகங்களும், விக்கிரக ஆராதனை புரிபவர்களும் அழிக்கப் பட வேண்டியவர்கள்மென்பதற்கும் ஒரு வேறுபாடும் இல்லை. தாலிபனை விமர்சனம் செய்த சில முஸ்லிம் அறிவு ஜீவிகளும் கூட (சையத் ஷகாபுதீன் போன்றவர்கள்) ‘இப்போது அங்கே யாரும் பெளத்தர்கள் இல்லை, அது வழிபாட்டுப் பொருளல்ல. அதனால் இதை உடைக்க வேண்டாம் ‘ என்கிறார்கள்.இதன் அர்த்தம் இது வழிபாட்டுக்கு என்றால் உடைப்பதில் தப்பில்லை என்பதாகும்.
விக்கிரக ஆராதனையை விமர்சிக்க ஒருவருக்கு உரிமை உண்டு. ஆனல் அதனாலேயே அவர்கள் இழிவானவர்கள் என்கிற மாதிரிதான் (யூத – கிறிஸ்தவ – இஸ்லாமிய ) மதங்கள் மற்ற மதங்களைப் பார்க்கின்றன. இந்தப் பார்வை இருபதாம் நூற்றாண்டில் அவ்வளவாக உரத்துக் கூறப் படுவதில்லையே தவிர இந்தக் கருத்து அடி நாதமாய் இந்த மதங்களில் உண்டு. வழிபாட்டு முறையால் கீழானவர்கள் என்று சிலர் கருதப் படுவது, தோலின் நிறத்தால் சிலர் கீழானவர்கள் என்று கருதிய வெள்ளைத் திமிரிலிருந்து மாறுபட்டதல்ல. விக்கிரக ஆராதனை புரிகிறவர்களும் சரி, விக்கிரக வெறுப்பாளர்களும் சரி, நாத்திகர்களும் சரி எல்லாருமே அவரவர் கருத்துக் கொள்ள உரிமை உண்டு. இந்தக் கருத்தின் செயலாக்கம் மற்றவர்களின் மீது வன்முறையாய்ப் பாயும் போது தான் ஆபத்து வருகிறது. உலகம் தட்டையானது என்று நம்புபவர்கள் இருக்கலாம். உலகம் உருண்டை என நினைப்பவர்களையெல்லாம் உலகிலிருந்து அகற்ற வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு வராத வரையில் நமக்கு இவர்களிடம் எந்தப் பிரசினையும் இல்லை.
ஒரு சமூகத்தில் கருத்து சுதந்திரம் இருக்க வேண்டும். விமர்சனங்களை, மனம் புண்படுகிறது என்ற நொள்ளைக் காரணம் காட்டி தணிக்கை செய்கிற ஒரு சமூகம் காலப்போக்கில் ஒரு மூடிய சமூகமாய், வெளிக் கருத்துகள் உள்ளே வராதபடி , இறுகிப் போனதாய் உருவாகும். புத்தர் சிலை என்பது அந்தக் கருத்து சுதந்திரத்தின், இன்றைய இஸ்லாமியமயமாதலுக்கு முன்பும் வரலாறு என்று ஒன்று இருந்தது என்பதை நினைவு படுத்துகிற ஒரு உறுத்தல் . தாலிபனின் சிலை உடைப்பு வரலாற்றுத் திரிபின் ஒரு படியாகும். பின்னாட்களில் இஸ்லாம் தான் ஆஃப்கானிஸ்தானத்திற்கு கலாசாரத்தைக் கொண்டு வந்தது என்று வரலாறு எழுதப் படலாம். இந்தப் பரந்துபட்ட தாக்கங்களையும் , உலகுக்குத் தான் தெரிவிக்க விரும்புகிற ஒரு செய்தியாகவும் தான் தாலிபனின் இந்தச் சிலை உடைப்பு உள்ளதே தவிர , நான் தாடி வைத்துக் கொள்கிறேன் – அது என் கலாசார வித்தியாசம் எனவே நீ அதனை மதிக்க வேண்டும் என்ற விதத்தில் அல்ல. எனவே கலாசார வித்தியாசம் என்று இதனை மலினப் படுத்தி நியாயப் படுத்துவது, உலகெங்கிலும் உள்ள ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகளையும், சுதந்திர வெளிப்பாட்டிற்கு எதிரான சக்திகளையும் ஊக்குவிப்பது போலாகும்.
- அஞ்சு ரூபா
- ஒரு பெண்ணாதிக்கக் கதை
- ஒர் ஆணாதிக்கக் கதை
- மாயை
- மாறுதலான சினிமாவும் மாறிவரும் சினிமா பார்வையும்
- உடைவது சிலைகள் மட்டுமல்ல
- இந்த வாரம் இப்படி – மார்ச் 11, 2001
- பேசடி பிாியமானவளே…
- எலிப் பந்தயம்
- பாட்டி
- உயிர்த்திருத்தல்
- எம் ஐடி டெக்னாலஜி ரிவியூவில் வந்த 10 எதிர்கால தொழில்நுட்பங்கள் -9 – இயந்திர மனித வடிவமைப்பு(Robot Design)
- சிக்கன் எலும்பு சூப்
- வஞ்சிரம் மீன் ஊறுகாய்
- காட்சிப்படுத்தலும் கலை ஊடகங்களும்