உங்கள் சாய்ஸ்

This entry is part [part not set] of 46 in the series 20080529_Issue

ராஜு


வர வர தொலைக்காட்சியில் வரும் இந்த நேயர் விருப்பம் நிகழ்ச்சி ஒரு பெரிய கடி என்றே தோன்றுகிறது. பல‌ வருடங்களாக பிரபலமான (?) தொலைக்காட்சி ஒன்றில் இதை நடத்தி வரும் கனவுக்கன்னி (!) கொக்கோ கோலா பாமா என்கிற பாட்டியை பற்றி தான் இந்த இழை. முதலிலேயே இதை ‘கற்பனை’ என்று கூறி விட்டால் பிறகு வம்பில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வசதியாக இருக்கும் அல்லவா, அதனால் இதை அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள்! 15 வருடங்களாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் உங்கள் கோக் பாமா வின் உரையாடல் எப்படி இருக்கும் தெரியுமா?

ட்ரிங் ட்ரிங்……..

ஹலோ, கொக்க கோலா உங்கள் சாய்ஸ்..

“ஹலோ, நான் காத்தவராயன் பட்டி கந்தசாமி பேசறேங்க”

“வணக்கம் கந்தசாமி”

“ஹலோ”

“ம் சொல்லுங்க வணக்கம்”

“ஹலோ”

“வணக்கம் கந்தசாமி, சொல்லுங்க”

“ஹலோ, நான் காத்தவராயன் பட்டி கந்தசாமி பேசறேங்க”

பாமா ஒரு போலி புன்னகையுடன்
“சொல்லுங்க கந்தசாமி, எப்படி இருக்கீங்க?”

“வணக்கங்க, நான் காதவராயன் பட்டி…”

பாமா இடை மறித்து
“கந்தசாமி, உங்க டீ.வீ. வால்யூமை கொஞ்சம் கம்மியாக்குங்க”

“ஹலோ, கொக்க கோலா பாமா பேசறீங்களா?”

“ஆமாங்க, நான் பாமா தான் பேசறேன்”

“நீங்க நல்ல இருக்கீங்களா?”

“நான் நல்லா இருக்கேன். நீங்க நல்லா இருக்கீங்களா?”

“ஹலோ, நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?”

“நான் நல்லா இருக்கேன் கந்தசாமி. நீங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா?”

நமக்கு அதற்குள் பொறுமை எல்லை மீறி ரிமோட்டை தேடுவதற்குள்,

“கந்தசாமி, நான் இங்க ரொம்ப நல்லா இருக்கேன். உங்க டீ.வீ. வால்யூமை கம்மி பண்ண்றீங்களா?”

“பாமா மேடம், நீங்க ரொம்ப அளகா இருக்கீங்க ஹீ ஹீ”

பாமா வழிந்து கொண்டே “அப்படியா? ரொம்ப நன்றி கந்தசாமி”

“உங்களுக்காக நான் ஒரு மணி நேரமா ட்ரை பண்ணிக்கிட்டே இருக்கேங்க. இப்ப தான் லைன் கிடச்சுது”

“ஓ அப்படியா? சரி சரி. இப்போ சந்தோஷம் தானே”

“ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. என்னால நம்பவே முடியலீங்க. ஹீ ஹீ, இருங்க என் வூட்டுகாரம்மா கிட்ட குடுக்கறேன்”

” சரி குடுங்க”

“ஹலோ, கொக்க கோலா பாமாவுங்களா?”

“ஆமாங்க, நீங்க யாருங்க பேசறது?”

“எம்பேரு முனியம்மாங்க. நீங்க நல்லகிறீங்களா?”

“நான் ரொம்ப நல்லா இருக்கேன்”

இதற்குள் நேரமாகிறது என்று ப்ரொட்யூசர் பின்னாலிருந்து முறைக்க

“சரி முனியம்மா, உங்களுக்கு என்ன பாட்டு வேணும் சொல்லுங்க”

முனியம்மா அதை காதில் வாங்காதது போல
“இருங்க உங்களோட பேச என் தம்பி சேகர், தங்கை கோமதி, மச்சினன் கோவாலு எல்லாரும் இருக்காங்க”

பாமா இடைமறிப்பதற்குள்

“ஹலோ கொக்க கோலா பாமாவுங்களா, நான் காத்தவராயன்பட்டி சேகர் பேசறேங்க. நீங்க ரொம்ப செவப்பா அளகா இருக்கீங்க. நீங்க நல்லா இருக்கீங்களா?”

“நான் நல்லா இருக்கேன் சேகர். உங்க எல்லாருக்கும் எந்த பாட்டு வேணும் சீக்கிரம் சொல்லுங்க”

அதற்குள் சேகர் கையிலிருந்து கோவாலு தொலைபேசியை பிடுங்கி

“ஹலோ கொக்க கோலா பாமாவுங்களா? நான் காத்தவராயன்பட்டி கோவாலு பேசறேங்க. நீங்க நல்லா இருக்கீங்களா?”

ப்ரொட்யூசருக்கு வெறி ஏறிக்கொண்டே செல்ல பாமா அவசரம் அவசரமாக

“நான் நல்லா இருக்கேன். நீங்க நல்லா இருக்கீங்களா? உங்க எல்லாருக்காகவும் என்ன பாட்டு வேணும் சீக்கிரம் சொல்லுங்க”

“கில்லி படத்துலேந்து ஏதாவது பாட்டு போடுங்க”

“உங்களுக்காகவும் உங்க எல்லாருக்காகவும் உங்கள் மூன் டீ.வியில் அடுத்து வருவது கில்லி பட பாடல்.
அப்பாடா ஒரு வழியாக முடித்தார்கள் என்று நாம் பெருமூச்சு விடுவதற்குள்

“அந்த பாடலை கேட்பதற்கு முன் ஒரு சின்ன் ப்ரேக்”

நியாயம் தான். நமக்கு தான் தேவை இது போன்ற சேனல்களிடமிருந்து ஒரு ப்ரேக், அல்லவா?


nraju99@gmail.com

Series Navigation

ராஜு

ராஜு