கற்பக விநாயகம்
அளவுக்கு அதிகமாய் விஸ்வாமித்ரா என்பவரால் திண்ணையில் பல இடங்களில் சொல்லிச் சிலாகிக்கப்பட்ட ‘ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்’ எனும் புத்தகம் பற்றி சென்ற திண்ணை இதழில் கூட விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. மிகப்பெரும் ஆய்வு நூலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அப்புத்தகத்தை வாங்கி வாசித்த பிறகுதான் அதன் உள்ளடக்கத்தை உணர்ந்து கொண்டேன். முன்னுக்குப் பின் முரணான தகவல்களும், லாஜிக்கே இல்லாமல் சொல்லப்படும் விசயங்களும் நிரம்பி வழியும் இப்புத்தகத்தைப் பற்றி எனது கருத்துக்களை இங்கு சொல்லிட முனைகிறேன்.
******************************
பெரியார் தமிழ் மொழிக்கும், தமிழனுக்கும் துரோகியாவார் என்று இந்நூலின் ஆசிரியர் வெங்கடேசன் சொல்கிறார். அதற்கு ஆதாரமாக “பார்ப்பான் கூடச் சொல்லப் பயப்படும் கருத்துக்களை எல்லாம் கூறித் தமிழர்களை நிரந்த கீழ்மக்களாக்கி விட்ட துரோகியாவான்” எனக் கம்பர் மீதான விமர்சனமாகப் பெரியார் எழுதினாராம். (பக்கம் 10)
இதனால் பெரியார் தமிழ்த் துரோகியாம். விமர்சனங்களை இலக்கியப் படைப்பின் மீதும், படைப்பாளியின் மீதும் வைப்பதாலேயே ஒருவர் எப்படி அம்மொழிக்கும், அவ்வினத்துக்கும் துரோகியாவார் என்பது விளக்கப்படவில்லை. பொத்தாம் பொதுவாய் சேற்றை வாரி இறைப்பது இது.
இந்நூலாசிரியரிடம் ‘தமிழுக்காகவே தமிழிலக்கியம் படைத்தேன்’ என்று கம்பர் எப்போது சொன்னாரோ தெரியவில்லை, அதனாலோ என்னவோ ‘தமிழுக்காகவே தமிழ் இலக்கியம் படைத்த’ கம்பனைப் பழித்தால் அவரெல்லாம் தமிழ்த் துரோகிகளாகின்றனர்.
‘கலை கலைக்காகவா? மக்களுக்காகவா?’ என்று ரொம்ப காலம் சண்டை நடந்து கொண்டிருக்கும் சூழலில் ‘தமிழிலக்கியம் தமிழுக்காகவே’ என்று நெத்தியடி அடிக்கிறார்.
*********************************
இந்த நூலிலே சொல்லப்பட்டிருக்கும் உயர்வான தர்க்கம் ஒன்றைப் பார்க்கலாம். “கடவுளும், கோவிலும் வேண்டாம்” என்று சொல்லுகின்ற தி.க.வினர் கோவிலில் எந்த மொழியில் வழிபாடு நடத்த வேண்டும் என்று சொல்ல உரிமை இல்லைதானே.”
இதே கருத்தை அப்படியே நீட்டித்தால், மாட்டுக்கறி / ஆட்டுக்கறி பிரியாணியின் வாசனையையே அறியாதவர்கள், மாட்டை மட்டும் வெட்டாதே எனக் கூக்குரல் எழுப்ப உரிமையற்றவர்கள் ஆகி விடும் மாயம் இருக்கிறதே, இல்லையா?
ஆதிக்கம் ஹிந்தி வடிவிலோ , சமஸ்கிருத வடிவிலோ, பிராமணீய / சாதிய வடிவிலோ வந்தாலும் எல்லா வகை ஆதிக்கத்தையும் எதிர்ப்பதே பெரியாரியலின் தத்துவம்.
‘கோவிலிலே தமிழ் முழங்க வேண்டும்’ என்பதெல்லாம், பக்தி வளர்க்க அல்ல. அங்கும் கூட நம் மொழி இழிவுபடுத்தப்படுகிறதே. இதனைத் தட்டிக் கேட்க ஒருவன் ஆத்திகனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.தமிழனாய் இருந்தாலே போதும்.
பெரியாருக்கு ‘கடவுள் வேண்டாம் என்றவர், கோவில் வழிபாட்டு மொழியில் தலையிட உரிமை இல்லை’ என ஓரிடத்தில் எழுதுபவர் (பக்கம் 21), அதே பக்கத்தில் ‘மசூதிக்கு எதிராய் ஏன் அவர் குரல் எழுப்பவில்லை’ என அடுத்ததாய் எழுதி முரண்பட்டுக் கொள்ளும் விநோதமும் இருக்கிறது.
இப்புத்தகத்தை எழுதிய ஆசிரியர், பெரியாரின் நாத்திகமே, கோவில் விசயத்தில் தலையிடத் தடை என்று சொல்லி விட்டு அதன் பிறகு, மசூதிக்கு ஏன் பெரியாரை அழைத்துச் செல்கிறார்? மசூதி என்ன! நாத்திகப் பிரச்சாரம் செய்யும் இடமா?
*****************************************
தமிழ் வழிபாடு நடத்தியற்காக ஜமாத் தை ‘பிரஷ்டம்’ செய்ததாகச் சொல்லும் வெங்கடேசனுக்கு,சிதம்பரம் கோவிலில் சிவனடியார், தமிழில் பாடியதற்காக அடி வாங்கியதும், கரூரில் தமிழில் குட முழுக்கு செய்யக் கோரி உண்ணாவிரதம் இருந்த சிவ பக்தர்கள் போலீசால் கைது செய்யப்படுவதும் நினைவில் வருமா?
பெரியார் செய்த காரியம், கூவத்தை துப்புரவு செய்யச் சொன்ன செயல் மாதிரி என்றால், இந்நூல் ஆசிரியர் எதிர்பார்ப்பதோ, கூவத்துக்கு பக்கத்தில் இருக்கும் வீடுகளுக்கு ஏன் பெரியார் கொசு வர்த்தி கொளுத்தக் கோரவில்லை? என்பது போல் உள்ளது.
*******************************
‘ஈ.வெ.ரா.தான் தென்னாட்டில் முதன்முதலில் ஹிந்திக்கு வித்திட்டவர். 1922ல் ஈரோட்டில் ஹிந்திப் பள்ளி ஆரம்பிக்க இலவசமாய் நிலம் கொடுத்தார்” என்று பக்கம் 24ல் சொல்லப்பட்டுள்ளது.
பெரியார், 1922ல் இருந்த இடம் காங்கிரஸ் கட்சி. காங்கிரசில் இருக்கையில் அதன் கட்டுப்பாடு, திட்டங்களைத் தானே, பெரியார் அனுசரிக்க முடியும்.
காஞ்சிபுரம் காங்கிரசில், பெரியார் வெளியேறி, ‘காங்கிரசை ஒழிக்க’ப் புறப்பட்டு சுயமரியாதை இயக்கம் காண்கிறார். இன்னமும் இவரிடம் காங்கிரசின் ஹிந்தித் திட்டத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?
வெங்கடேசனின் தர்க்க ஞானத்தின்படி பார்த்தால், “1962,1967, 1971 தேர்தல்களில் உதய சூரியனுக்கு வாக்குக் கேட்டு அக்கட்சியை வளர்த்தவர் எம் ஜி ஆர்தான். அவர் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று முன்னுக்குப் பின் முரணாகப் பேசியவர்” என்றும் கேட்கலாம். இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள தமாசுகளின் எண்ணிக்கையைக் கூட்ட உதவிடலாம்.
*********************************
நூலாசிரியர் குறிப்பிடுகிறார் “ஆங்கிலக் கலைக் கல்லூரிக்கு ஈவெரா ஐந்திலக்கம் ரூபாய் கொடுத்துள்ளார். தமிழ் வழிக் கல்லூரிக்கு அல்ல”. ( பக்கம் 31)
திருச்சி மாதிரி பெரும் நகரங்களில் கூட தலித் மாணாக்கரும், பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களும் சேர்ந்து கல்வி கற்றிட அரசுக்கு சொந்தமாய் கல்லூரிகள் இல்லாமல் இருந்தது அப்போது. திருச்சி தேசியக் கல்லூரி போன்ற இடங்களில் யார் யாருக்கெல்லாம் சீட் கிடைத்தது என்பதை இங்கு விளக்கத் தேவை இல்லை. அப்போது அரசு ஒரு கல்லூரியை நிறுவி ஒடுக்கப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு மேற்படிப்புக்கு உதவ வேண்டும் எனும் உயர்ந்த நோக்கில், தம் தொண்டர்களிடம் சிறுகச் சிறுகத் திரட்டிய தொகையையும், தன் பங்கையும் சேர்த்து 5 லட்சம் ரூபாயைப் பெரியார் அரசுக்குத் தந்தார். (60களில் 5 லட்சம் என்பது மிகப்பெரும் தொகை என்பதை நினைவில் கொள்ளவும்) அவரின் இம்முயற்சிக்காக, அரசு தாம் தொடங்கிய கல்லூரிக்கு அவரின் பெயரைச் சூட்டி கவுரவம் செய்தது. பெரியாரின் நோக்கம், மேற்படிப்பை அடித்தட்டு மக்களும் பெற வழி செய்வதே தவிர, பயிற்று மொழி அங்கு ஆங்கிலமா? தமிழா? என்பதில் இல்லை.
ஆங்கிலக் கலைக்கல்லூரி என்றால், அக்கல்லூரியில் ஆங்கில இலக்கியம் மட்டுமே கற்பிக்கப்படும் என அர்த்தப் படுத்தினால்,நூலாசிரியர் குறிப்பிடும் செய்தியில் உண்மை கிடையாது. திருச்சியிலுள்ள பெரியார் கல்லூரியில் கலை,அறிவியல் அனைத்தும் கற்பிக்கப்பட்டன.இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது, பக்தவச்சலம் முதல்வராய் இருந்த (1963-1967) காலகட்டத்தில். அப்போது அனைத்துக் கல்லூரிகளிலும் ஆங்கிலமே பயிற்று மொழியாகும்.
கல்லூரிகளில் தமிழ் மூலம் அறிவியல் பாடங்களைப் பயில 70களில் கலைஞரின் அரசு வழி செய்தது. அதே நேரத்தில் ஆங்கில மீடியமும் இருக்கும் எனத் திட்டமிடப்பட்டது. அப்போது ராஜாஜியும் காமராஜும் திமுக வை வீழ்த்த இணைந்து நின்று தமிழ் வழிக் கல்விக்கு எதிராக மாணவர்களைத் திரட்டிப் போராடினர். (தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என எப்போதோ ஒரு கட்டத்தில் பெரியார் சொன்னதை வைத்து அவரை விமர்சிப்பவர்கள், கல்லூரியில் தமிழைப் பயிற்று மொழியாக்கும் அரசின் முடிவை பெரியார் ஆதரித்ததை எண்ணிப்பார்க்க வேண்டும்) பாளையங்கோட்டையில் லூர்து நாதன் எனும் கல்லூரி மாணவர், போலீசின் அடக்கு முறைக்குப் பலியானார். (பாளை சித்த மருத்துவக்கல்லூரிக்கருகில் இவருக்கு ஒரு சிலை உள்ளது)
கடும் எதிர்ப்பை சந்தித்த திமுக அரசு, குன்றக்குடி அடிகளாரின் பரிந்துரையை ஏற்று, இத்திட்டத்தில் இருந்து தற்காலிகமாகப் பின் வாங்கியது. அத்திட்டத்தின் மூலமாக 500க்கும் மேற்பட்ட அறிவியல் சார்ந்த கல்லூரிப் பாடநூல்களை தமிழ் நாட்டுப் பாட நூல் நிறுவனம் தமிழில் மொழிபெயர்த்தது. அப்போதைய கல்வி அமைச்சர் நெடுஞ்செழியனின் ஆர்வம் மிகவும் பாராட்டத்தக்கது.
ஆக, 70களில்தான் தமிழ் போதனை மொழி ஆக முயற்சிக்கப்பட்டிருக்கின்றது. பெரியார் கல்லூரியை அரசு ஆரம்பித்தது 60களில்.
வரலாறே தெரியாத அல்லது வரலாற்றைத் திரிக்கிற ஒருவர்தான் ‘அவர் தமிழ் வழிக்கல்லூரிக்குப் பணம் தரவில்லை’ எனச் சொல்ல முடியும்.
எங்கள் வட்டாரத்தில் வழங்கும் ஒரு புதிர் நினைவுக்கு வருகிறது. “தங்கச்சி மகன், தனக்கு மூத்தவன் ஆக இருந்தால், என்ன முறை சொல்லி அழைப்பாய்?”
************************************************
“திராவிடத்தார்கள் ஆங்கில மாயைக்கு அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். சைமன் குப்புசாமி, எட்வர்டு மாணிக்கம் என்று மேல் நாட்டாரின் ஆங்கிலப் பெயர்களைத் தங்கள் பெயர்களுக்கு முன்னே முடி சூட்டியது போன்று வைத்துக் கொள்வதில் ஆனந்தப்பட்டார்கள்” (பக்கம் 49)
ஹிந்து மதம் விதித்திருந்த சாதி ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை பெறலாம் எனும் எண்ணத்தில் அக்கால கட்டத்தில் கிறிஸ்துவம் போன தலித் மக்களையும், நாடார் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களையும்தான் இவ்வாறு கொச்சைப் படுத்தி மறுபடியும் அம்மக்களை ஒருமுறை அவமானப்படுத்துகிறார் இந்நூலை எழுதியவர்.
*****************************************
முஸ்லிம் மதத்தில் இருக்கும் கோட்பாட்டளவில் வேறுபாடுகளைக் கொண்டிருக்கும் பிரிவுகளான ஷியா,சுன்னி,வஹாபி ஆகியவற்றைப் பட்டியல் இட்டு, இம்மதத்திலும் இத்தனை ஜாதிகள் இருக்கின்றன எனத் தன் மேதைமையை வெளிப்படுத்தி உள்ளார் இப்புத்தகத்தை எழுதியவர். (பக்கம் 54)
பிறப்பின் அடிப்படையில் ஜாதிகளாய்ப் பிரிக்கப்பட்டு, தீண்டாமை, காணாமை, கலந்து உண்ணாமை, மண உறவு கொள்ளாமை ஆகியவற்றை அனுசரித்து, இதில் ஏதாவது ஒன்று மீறப்படும்போது, அதாவது தர்மம் அழியும்போது, அறிவாள் தூக்கச் சொல்லும் மன உணர்வே சாதி எனப்படுகின்றது. இதனை முசுலீம் மதத்திற்குப் பொருத்த முடியுமா?
கோவிலை மையமாக வைத்து பிரிக்கப்பட்ட சாதிகள் போன்று இசுலாமில் எங்கு உள்ளது?
வஹாபியிசம் எப்படி சாதியாகும்?
பெந்தேகொஸ்தே, ரட்சண்ய சேனை, ரோமன் கத்தோலிக்கம், ஆகியன எல்லாம், கிறிஸ்தவத்தில் இருக்கும் சாதிகள் என்றிடலாமா?
**************************************
நாத்திகப் பத்திரிக்கையில் ஆத்திகக் கருத்துக்களை ஈ வெ ராமசாமி நாயக்கர் ஏன் அனுமதித்தார்? என்றொரு கேள்வியை பெரியாரின் ஆரம்ப காலக் குடியரசை முன் வைத்து வெங்கடேசன் கேட்டுள்ளார் (பக்கம் 65)
நியாயமான கேள்விதான். பெரியாரின் ‘கடவுளைக் கற்பித்தவன் காட்டுமிராண்டி’ எனும் கருத்து பின்னாளில்தான் பூரணமாகிறது. ஆரம்பத்தில் அவர் தீவிர நாத்திகர் எல்லாம் இல்லை. அதன் சிற்சில கூறுகள் இருக்கலாம். அவை முழுமையாகப் பரிணமித்து வளர்வது 50, 60 களில் தான் என்பதால், அவரின் ஆரம்ப காலக் கட்டுரைகளிலே இறைவன், கடவுள் எனும் சொற்கள் ஆங்காங்கே நிரவி வருதல் இயல்பே. எந்த ஒரு மனிதனும் தனது கொள்கை/நம்பிக்கைகளில் ஒரு வளர்ச்சிப்போக்கில் பரிணமிப்பவன் தானே.
குடியரசுப் பத்திரிக்கையை அவர் ஆரம்பிக்கையில் அதனை ‘நாத்திகப்’ பத்திரிக்கை என்றெல்லாம் பிரகடனம் செய்யவில்லை.
அந்நூலில் பக்கம் 66ல், குடியரசுப் பத்திரிக்கை ஆரம்ப விழாவில் பெரியார் பேசிய ‘இப்பத்திரிகாலயத்தை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்றோர் கிடைத்தது அரிதேயாகும்’ எனும் பத்தியை எழுதி வைத்து விட்டு, அதற்கு முந்தைய பக்கத்தில் “ஏன் ஈவெரா நாத்திகப் பத்திரிக்கையில் ஆத்திகக் கருத்துகளை அனுமதித்தார்?” என அறிவாளியாகக் கேட்கிறார்.
1926ல் பெரியாரே குறிப்பிடாத ‘நாத்திகப் பத்திரிக்கை’ விசயத்தை 1960/70களுடன் பொருத்தி வைத்து குழம்பி இருக்கிறார் நூலாசிரியர்.
***********************************
இந்த நூலை வாசிப்பதால் வாய் விட்டுச் சிரிக்கலாம் என்பதற்கு பக்கம் 68ல் இருக்கும் ஒரு பெட்டிச் செய்தி ஓர் உதாரணம்.
ஈவெரா தலைமை தாங்க வேண்டி இருந்த பகுத்தறிவாளர் மாநாட்டுக்கு பந்தல் போடப்பட்டதாம். அப்பந்தலுக்கு மாவிலை, வேப்பிலை கட்டப்பட்ட முகூர்த்தக் கால் நடப்பட்டதைப் பெட்டிச் செய்தி ஆக்கி தினமணி புளகாங்கிதம் அடைந்ததை அப்படியே பக்கம் 68லும் போட்டுள்ளார். (அப்போது தினமணி – ஏ என் சிவராமனால் ஆளப்பட்டிருக்கும். அவரிடம் இதைத் தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும்.)
ஒன்றை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் எந்தக் கட்சியோ, இயக்கமோ மாநாடு போன்றவற்றிற்கு பந்தல் அலங்காரம் செய்ய எனத் தன் கட்சி ஆட்களை வைத்துச் செய்வது வழக்கம் இல்லை. அது அவர்களின் வேலையும் இல்லை. இதற்கென்று தொழில் முறைக் கலைஞர்கள் இருக்கின்றனர். அவர்களிடம் ஒப்பந்த அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட தொகைக்குள் இவ்வலங்காரங்கள் செய்யக் கேட்டுக் கொள்ளுவதே வழக்கம். அவ்வாறு தொழில் முறையில் செய்பவர்கள், தமது பணியை ஆரம்பிக்கும் முன் பந்தல் காலுக்குப் பூசை செய்வதென்பது அவர்களின் சுதந்திரம். அவ்வாறு பெரியாரால் வரவழைக்கப்பட்ட ஒப்பந்தக் காரர் வழிபட்டால், அதனை விஷமத்தனமாய் ‘பெரியார் மாநாட்டின் பந்தலில் மாவிலை’ எனப் பிரச்சாரம் செய்வது, சிறுபிள்ளைத்தனமன்றி வேறென்ன?
பெரியார், பிரியாணிக்கடையில் சாப்பிடப் போனபோது, பிரியாணி சமைத்த வேலையாள், மதுரை வீரன் சாமிக்குப் பிரியாணி படைத்து விட்டு வந்தார் என இன்னொரு பெட்டிச் செய்தியை அடுத்த பதிப்பில் சேர்த்தால், தமாசின் எண்ணிக்கை இன்னொன்றும் கூடும். நகைச்சுவையாக எழுதுபவர்கள் ரொம்ப குறைச்சலாய் இருக்கிறார்கள். அக்குறையை இப்புத்தகம் எழுதியவர் போக்கலாம்.
பெரியார் மாநாட்டில் மாவிலை கட்டினார் என்றும், பெரியார் கடைசி வரையில் இந்துவாகவே இருந்தார் என்றும் சொல்லும் இவர் இதன் காரணமாகப் பெரியாரைப் பாராட்டத்தானே வேண்டும். ஏன் திட்டுவதற்கென்றே ஒரு புத்தகம் போட வேண்டும்?
***********************************
‘கடவுள் இல்லவே இல்லை; கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி’ என்றெல்லாம் பேசிய ஈ வே ராமசாமி நாயக்கர், ‘ஒரே கடவுளைக் கும்பிடு; கடவுளைக் கும்பிட வேண்டாம் எனக் கூறவில்லை’ எனப் பல்டி அடித்தாராம். (பக்கம் 74). அவர் ‘ஒரே கடவுளைக் கும்பிடு’ எனச் சொன்ன ஆண்டை 1959 (விடுதலை 4-6-1959)க் குறிப்பிடும் வெங்கடேசன், ‘கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி’ என்று பெரியார் சொன்ன ஆண்டைக் குறிப்பிடவில்லை. குறிப்பிட்டால்தான் ராமசாமி நாயக்கரை ‘பல்டி அடித்தவர்’ என அவதூறு செய்ய முடியாதே!
ஆம்! 1967க்கு பிறகு அவர் சொன்னதே ‘கடவுளைக் கும்பிடுபவன் காட்டுமிராண்டி’ எனும் பிரபலமான வாசகம். 67ல் அவர் சொன்ன சொல்லுக்கு 59ல் அவர் சொன்ன சொல்லோடு முடிச்சுப் போடும் அதி புத்திசாலித் தனம், பாரதிய ஞானம் உள்ளவர்களுக்கு மட்டுமே கைவரக் கூடும்.
*************************************
அதே பக்கத்தில் (பக்:74) பெரியார் சொன்னதாக “சாதியை ஒழிக்க வேண்டுமானால் பிராமணர்களை ஒழிக்க வேண்டும்;பிராமணர்களை ஒழிக்க வேண்டுமானால் மதத்தை ஒழிக்க வேண்டும்;மதத்தை ஒழிக்க வேண்டுமானால் கடவுளை ஒழிக்க வேண்டும்” என்று எழுதி வைத்து விட்டு, “இப்படி கடவுளை ஒழித்தால்தான் எல்லாவற்றையும் ஒழிக்க முடியும் என்று சொல்கிறபோது, சிலருக்கு மட்டும் கடவுளைக் கும்பிடு என்று சொன்னால் அதுதான் பகுத்தறிவா?” என்று மேலும் ஒரு முறை, தனது அறிவின் மேன்மையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார் நூலாசிரியர்.
இதற்கு அவரே பெரியார் சொன்னதாக “ஏதாவது ஒரு கடவுளை கிறிஸ்தவன், முஸ்லிம் மாதிரிக் கும்பிடு” எனும் வாக்கியத்தைச் சான்றாக்குகிறார்.
ஒழிக்க வேண்டியது சாதியை – அதனால் பிராமணரை – அதனால் மதத்தை எனும்போதே ஒழிக்கப்பட வேண்டியது சனாதன தர்மமான ஹிந்து மதம் என்பது தெள்ளத் தெளிவாகின்றது. பெரியாரால் பரிந்துரைக்கப்பட்டது கிறிஸ்துவ, இஸ்லாமிய மார்க்கங்கள்தான். பிராமணர்களை ஒழிக்க முஸ்லிம் கடவுளையா ஒழிக்க முடியும்?
என்ன எழுதுகிறோம் என்ற தன் மதியோடுதான் இதை எழுதினாரா? தெரியவில்லை.
**************************************
“பெரியார் சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாய் இருந்தார்” என்பதற்கு சான்றாக 1929,1935 களில் அவர் “சாகும்போது இந்துவாய் சாகப் போவதில்லை” என்று எழுதியதை பக்கம் 76-79 ல் சொல்லி விட்டு, அவர் ஏன் மதம் மாறவில்லை எனப் பரிகசிக்கிறது இப்புத்தகம்.
அதற்கான பதிலையும் இன்னொரு பக்கத்தில் தந்து விடுவதால், கேள்வியே முற்றுப் பெறுகின்றது. 1950ல் பெரியார் தாம் ஏன் மதம் மாறப்போவதில்லை என்பதற்கு “இந்துவாகவே இருந்து இந்து வண்டவாளங்களை எடுத்துப் பிரச்சாரம் செய்ய வசதியாய் இருக்கும்” என்றாராம். எனவே பெரியார் சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாய் இருந்ததாய் பசப்பும் வாதம் நூலிலேயே அடிபட்டு இற்று விழுகின்றது.
***********************************
“பெரியாருக்கு அம்பேத்கர் அரசியலமைப்பு அவையில் சேர்ந்ததும் ‘அதிகாரங்கள் குறைக்கப்பட்ட மாகாணங்களையும் வலுப்படுத்தப்பட்ட மைய அரசாங்கத்தையும் கொண்ட ஏக இந்தியாவிற்கு ஆதரவாகப் பேசத் தொடங்கியிருந்ததும்’ ஏமாற்றத்தையும், மன வேதனையையும் அளித்தது என எஸ் வி ஆர் எழுதுகிறாராம்.” (பக்கம் 150)
“பெரியாருக்கு அம்பேத்கர் அரசியலமைப்பு அவையில் சேர்ந்தது ஏமாற்றத்தையும் மன வேதனையையும் அளித்ததாம். உண்மையிலேயே சந்தோசம் அல்லவா அடைய வேண்டும்? ஒரு வேளை தாழ்த்தப்பட்டவர் வந்து விட்டார் என்பதாலா?” என்று சொல்கிறது மேற்படி புத்தகம்.
சுக்கு, மிளகு, திப்பிலியை, சுக்குமி ளகுதிப் பிலி என வாசித்த கதைதான் இங்கே தெரிகின்றது. அம்பேத்கர், வலுப்படுத்தப்பட்ட மய்ய அரசை ஆதரித்ததே பெரியாரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட ஏதுவானது என்பது ஊரறிந்த ஒன்று. அம்பேத்கரைத் தமது தலைவர் என்று கூட பெரியார் சொல்லி இருக்கிறார் என்பதை வெங்கடேசன் அறிவாரா?
****************************************
பக்கம் 156இல் பெரியார் மீது இன்னும் ஒரு திரிப்பு வேலையை செய்துள்ளது இப்புத்தகம். “1947க்குப் பிறகுதானே முதுகுளத்தூர் போன்ற இடங்களில் படுகொலை செய்யப்பட்டார்கள்?”, “ஜாதி இந்துக்களின் ஒரு சாதி வெறிச் செயலையாவது உண்மையாகக் கண்டித்தாரா? இல்லை. இல்லவே இல்லை” எனப் பெரியார் மீது காழ்ப்புணர்வோடு வரலாற்று ஞானமின்றிப் பழி சுமத்தும் போக்கினை அப்படியே விட்டு விட முடியாது.
1957ல் முதுகுளத்தூரில், ஏற்பட்ட கலவரமும், அதனை அடுத்து முத்துராமலிங்கத் தேவரின் ஆதரவாளர்கள், தலித் தலைவர் இம்மானுவேல் சேகரனைக் கொன்றதும் மறுபடியும் சாதித் தீ மூண்டதும் நாம் அறிந்த ஒன்று. அச்சம்பவத்தில், முத்து ராமலிங்கத் தேவரைப் பலமாகக் கண்டித்துப் பேசியும், எழுதியும் இருப்பவர் பெரியார் மட்டுமே. அச்சம்பவத்தில், தேவரைக் கைது செய்து உள்ளே தள்ளச் சொல்லி விடுதலையில் எழுதி இருக்கிறார். தேவரை ‘காலித்தனம் செய்கிறார்’ என்றே எழுதி இருக்கிறார். இதன் காரணமாகவே தேவரின் பார்வர்டு பிளாக் கட்சி, பெரியார் இறந்தபோது இரங்கல் தீர்மானம் கூட நிறைவேற்றவில்லை.
1957 ஆம் வருட விடுதலை இதழ்களைத் தேடிப்பார்த்தால் முழு விவரமும் அறிய முடியும். அதே நேரத்தில் திமுக வும், அண்ணாவும் இக்கலவரத்தில் என்ன நிலைப்பாடு எடுத்தார்கள் என்பதையும் நாம் அறிவோம்.
கீழத்தூவல் கிராமத்தில்தான் (அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி அருகில் உள்ள ஊர்) இம்மானுவேலைக் கொன்ற கொலையாளிகள் பதுங்கி இருந்தனர் எனக்கேள்விப்பட்டு போலீசார் அக்கிராமத்துள் நுழைந்தனர். அப்போது அக்கிராமத்து தேவர் சாதி ஆட்களுக்கும் போலீசுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு, துப்பாக்கிச்சூட்டில் 5 மறவர்கள் கொல்லப்பட்டனர். உடனே எதிர்க்கட்சியினர் (கம்யூனிஸ்ட்,பிரஜா சோசலிஸ்ட், பார்வர்டு பிளாக், திமுக) காமராஜர் அரசின் மீது ‘கட்டி வைத்து மறவர் சுடப்பட்டனர்’ எனச்சொல்லி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்ற முயன்றனர். அண்ணா, அன்பழகன் ஆகியோர் (திமுக)இத்தீர்மானத்தை ஆதரித்துப் பேசி உள்ளனர். அதாவது ஆதிக்க சாதிக்கு ஆதரவாய். ஆனால் வாக்கெடுப்புக்குத் தீர்மானம் வருகையில் அதில் கலந்து கொள்ளாமல் வெளி நடப்பு செய்துள்ளனர். அதாவது இப்போது தலித் மக்களுக்கு சாதகமாய். பாலுக்கும் காவல் பூனைக்கும் காவல் என்பது போன்று.
ஆனால் பெரியாரோ தேவரை உள்ளே பிடித்துப் போட்டுக் கலவரத்தை ஒடுக்கச் சொன்னவர்.
அதே சமயம் வெங்கடேசன் போன்றோர் கொண்டாடும் குருஜி கோல்வல்கர், இந்த ஆதிக்க சாதித் தலைவரின் அன்பைப் பெற்றவராகவும் அவரின் பொன் விழாக் கொண்டாட்டத்தில் தேவரய்யாவின் பாராட்டுப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டவராயும் இருந்தார்.
அவர் ஏன் இந்த மேல் ஜாதித் தலைவரின் செயல்களைக் கண்டிக்கவில்லை?
****************************************
இன்னும் சில தமாசுகள்:
நூல் முழுக்க நகைக்க நிறைய இடம் இருப்பினும் விரிவஞ்சி, அவற்றில் சில தமாசுகளைப் பார்க்கலாம்.
“ஆண்களைப் போலவே பெண்களும் வேஷ்டி, ஜிப்பா போடச் சொன்னாரே ஈ வே ராமசாமி நாயக்கர்.- ஏன் மணியம்மையும், கழகத் தோழிகளும் வேஷ்டி, ஜிப்பா போடவில்லை”
“புடவையே தேவை இல்லை என்று சொல்லி விட்டாரே – ஏன் மணியம்மையும், கழகத் தோழிகளும் புடவையை உதறாமல் இருந்தார்கள்?” (பக்கம் 177)
*********
“வீரமணி கூறுகிறார் ‘…தமிழர்கள் எவ்வளவு காலம்தான் ரத்தக் கண்ணீர் சிந்தி உலகத்திடம் நியாயம் கேட்டுப் பேசி வருவதோ புரியவில்லை. தமிழினத்திற்கு இப்படி ஒரு சாபக்கேடா?’. சாபத்தை நம்புகிறவர்கள் மூட நம்பிக்கைக்காரர்கள் என்று சொல்லும்போது அதே சாபத்தை வீரமணியும் நம்பும்போது அவரும் மூட நம்பிக்கைக்காரர்தானே?” (பக்கம் 194-195)
************
“வீரமணி கூறுகிறார் … ‘கிராமங்களில் தோற்றுவிக்கப்பட்ட பகை உணர்ச்சிப் ‘பேயை’ விரட்டி அடிக்க வேண்டும்’..
வெங்கடேசனின் வாதம்:- ‘அப்படியானால் ‘பேய்’ என்பது இருக்கிறதா?’ (பக்கம்: 196)
************
எந்தவித தர்க்கவாதமும் இன்றி, ஆண்டுகளை முன்னும் பின்னும் மாற்றிப் போட்டு, பெரியாரின் பேச்சுக்கள், கட்டுரைகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் உருவிப் போட்டு புத்தகம் மாதிரி ஒன்றை எழுதி இருக்கிறார், இந்த ஆள். இந்த வெட்டி அரட்டை நூலை புரொமோட் செய்ய விஸ்வாமித்திரர் என்பவர் வேறு இதைச் சிலாகித்து எழுதித் தள்ளி இருக்கிறார். பெரியாரின் பேச்சுக்களை, எழுத்துக்களை இப்படி உருவி எடுத்து தவறாகச் சித்தரிக்கும் போக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் தளபதி ரவிக்குமாரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதே மாதிரி செயலை-ஆனால் பல சுய முரண்பாடுகளுடன் (ரவிக்குமாரிடம் ஒருவித தொழில் நுட்பம் இருக்கும்)-எழுதி அதற்கு “ஈ.வே.ராம சாமி நாயக்கரின் மறுபக்கம்” என நாமமும் சூட்டி இருக்கின்றார்கள். தமிழில் ஆய்வு உலகம் இந்தத் தரத்தில் இருப்பதை என்ன என்பது? பெரியாரின் எழுத்துக்களை இவ்வாறு உருவி எடுத்து வாசிப்பதைக் காணும்போது, எனக்கு பைபிள் பற்றிய துணுக்கு ஒன்று நினைவுக்கு வருகின்றது.
புதிய ஏற்பாடு நூலை, ஆழ்ந்த இறை நம்பிக்கை உள்ள கிறிஸ்தவன் ஒருவன் விநோதமான முறையில் வாசித்து வந்தானாம். மூடி இருக்கும் நூலை திடீரென்று திறப்பான். அது எந்தப் பக்கத்தில் திறந்து கொள்ளுமோ அந்தப் பக்கத்தினை மட்டும் வாசிப்பது வழக்கம். ஒரு முறை அவன் அவ்வாறு செய்தபோது அவனுக்கு வாசிக்கக் கிடைத்த வசனம் “யூதாஸ் நாண்டுக் கொன்று செத்தான்” என இருந்தது. வாசித்தவனுக்கு இது அப சகுனமாய்ப் படவே, மறு முறை பைபிளை மூடித் திறந்தான். இப்போது அவனுக்கு வந்த வசனம் “நீங்களும் அவ்வாறே செய்யுங்கள்” என்றார் இயேசு.
******************************
இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கொடுங்கோன்மையாய் மக்களை ஒடுக்கி வந்த பார்ப்பனீயம் எனப்படும் இந்து சனாதன தர்மத்தினை வேரோடு அசைத்து அதில் குறிப்பிடத்தகுந்த வெற்றியும் கண்டவர் பெரியார். அவர் தெளிவாகவே தமது சிந்தனையை 50 வருடங்களுக்கும் மேலாக தமிழ் தேசம் எங்கும் சுற்றிச் சுழன்று பரப்புரை செய்தார். அவரின் வாழ் நாளிலேயே அவருக்கு சிலை வைக்கப்பட்டு, ஒவ்வொரு சிலையிலும் ‘கடவுளைக் கும்பிடுபவன் காட்டு மிராண்டி’ எனும் புகழ்பெற்ற வாசகத்தையும் பொறிக்கச் செய்தார். அவ்வாறு செய்யாதிருப்பின் அவரின் சிலையையும் பின்னால் வரும் சந்ததிகள் ஏதோ துறவி என்று பூசை வைத்து விடுவர் எனும் எண்ணமே, ஒவ்வொரு சிலையிலும் தேதி குறிப்பிட்டு அவ்வாசகங்களை எழுதத்தூண்டிற்று.
அவரின் நூல்களை 90 சதம் படித்ததாகப் பீற்றிக்கொண்டு வந்திருக்கும் இந்நூலில் அபத்தங்களும், தகவல் பிழைகளும், முன்னுக்குப் பின் முரணான விசயங்களும் நிரம்பி வழிகிறது.
நாகம்மையார் இறந்தவுடன் யாரையும் அழக்கூடாது என்று சொன்ன ஈவெரா, ராஜாஜி இறந்தபோது கண்ணீர் விட்டார் என்றும் எனவே முன்னுக்குப் பின் முரணாக இப்படி நடந்தவர்தான் ராமசாமி நாயக்கர் என்றும் சொல்லப்படும் ஆழமான ஆராய்ச்சியை நமக்கெல்லாம் அறிமுகம் செய்த விஸ்வாமித்ராவை எப்படி வேண்டுமானாலும் பாராட்டலாம்.
நகைச்சுவைக்காக என்றே வாசிக்கப்படும் பாக்கியம் ராமசாமி புத்தகங்கள் கிடைக்காதபோதில் இதனை வாசித்தால், வாய் விட்டு சிரிக்கலாம்.
******************************
vellaram@yahoo.com
- கடிதம்
- ஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 2
- மிஸ் இந்தியா
- கடிதம்
- சங்க இலக்கியங்களில் தமிழர்களின் மரபுசார் உழவுத்தொழில்
- பூமகனின் உயிர்க்குடை : பிச்சினிக்காடு இளங்கோ கவிதைகள்
- நூல் அறிமுகம் : மார்ட்டின் கிரே-யின் வாழ்வெனும் புத்தகம் : அந்த வானமும் இந்த வார்த்தையும்
- உறைதலும் உயிர்ப்பித்தலும் – இரா.முருகனின் “மூன்று விரல்”
- கடிதம்
- “வலைப்பதிவர்களுக்கான” மாதாந்திரப் போட்டி
- கடிதம்
- கடிதம்
- பென்ரோஸ் வரைபடங்கள். (Penrose diagrams)
- கடிதம்
- விஸ்வாமித்ராவுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்
- திரு.சீ.இராமச்சந்திரன் அவர்களின் ஆய்வுக்கட்டுரை குறித்து: ஆகாயக்கடலும், லிங்கமும்
- கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 3
- ஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 1
- கரை மேல் பிறக்க வைத்தார்
- ஓ போடு – ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம்
- எதிர்மறைகள்
- ‘ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்’ – என்னதான் இருக்கிறது?
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 17
- உம்மும்மா நேசித்த ஊசிக்கிணறு
- டர்மெரின் – 2
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-17) (Based on Oscar Wilde’s Play Salome)
- எடின்பரோ குறிப்புகள் – 12
- ராஜ்குமார் மறைவும் பெங்களூர் வன்முறையும்
- பயங்கர மனநோயாளிகள்
- தொழிற்சங்கங்களும் மத்திய மாநில அரசுகளும்
- புலம் பெயர் வாழ்வு (9) – சிங்கப்பூர் போல எமக்கும் ஒரு நாடு வேண்டும்
- சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-3
- வளங்குன்றா வளமைக்கு வழிகாட்டும் ஹிந்து திருக்கோவில்கள்
- இவை எழுதப்பட்ட காலங்கள்–1
- கீதாஞ்சலி (69) வாழ்க்கை நதியின் பெருமை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பாயடி பாரதமே! பாய் !
- பெரியபுராணம் – 85 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- நீங்கள் மகத்தானவர்!
- குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
- சினைமுட்டைப்பை மாற்று சிகிச்சை – ஒரு சகாப்தம் இந்தியாவில்
- அ வ னா ன வ ன்