இஸ்ரேலும் இந்தியாவின் இடதுசாரிகளும் : கோஷங்கள் யாருக்காக ?

This entry is part [part not set] of 32 in the series 20020407_Issue

மஞ்சுளா நவநீதன்


இஸ்ரேல் செய்வது படு மோசமான அத்துமீறல் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அப்படிப்பட்ட மாற்றுக்கருத்து இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் அமெரிக்க அரசியல்வாதிகளாகவும், யூதர்களாகவும் தான் இருப்பார்கள். பாலஸ்தீனத்தில் முஸ்லீம்கள் மட்டுமல்ல, கிறுஸ்தவர்களும் இருக்கிறார்கள் . அவர்கள் அனைவருமே இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்க்கிறார்கள். இது வெறும் முஸ்லீம்-யூதர்கள் பிரசினை அல்ல. சொந்த நாட்டிலிருந்து ஓர் அன்னிய ஆதிக்க சக்தியால் விரட்டப்படும் மக்களின் சோகக் கதை. சொந்த நாட்டில் , ஒரு மக்கள் தலைவரான அராஃபத்தை , ஒரு அன்னிய சக்தி சிறைவைத்திருப்பது மோசமான அத்துமீறல் மட்டுமல்ல, அச்சுறுத்தலும் ஆகும். இஸ்ரேலின் பின்னணியில் அமெரிக்க ஆதரவுக் கரமும், யுத்த தளவாடங்களும் இருப்பது இந்தப் போருக்கு மீண்டும் வலுவூட்டும் செயல். உலக மக்களின் கண்டனத்திற்கும், வெறுப்புக்கும் இந்த இஸ்ரேலின் செயல் ஆளாக வேண்டும். ஐ நாவும் கூட உடனடியாக ராணுவத்தை பாலஸ்தீனத்திலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் அமெரிக்காவின் ஆதரவு இருக்கும் வரையில் இஸ்ரேல் மற்றவர்களைப் பற்றி கவலை கொள்ளாது.

இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன மக்களைக் கொல்வதை கண்டித்து கம்யூனிஸக்கட்சியினரும், கம்யூனிஸ கட்சி மாணவர் சங்கங்களான DYFIயும், SFIயும் தில்லி, கல்கத்தா, பம்பாய் போன்ற நகரங்களில் பெருத்த ஊர்வலங்கள் நடத்தியிருக்கிறார்கள். உணர்ச்சியைத் தூண்டும் அளவுக்கு பலத்த கோஷங்கள் எழுப்பி அவர்கள் ஊர்வலம் சென்றது ஒளிப்படங்களில் பார்த்தேன். பாலஸ்தீன மக்களை தங்கள் சொந்த நாட்டிலிருந்து விரட்டி அடித்து அவர்களை அகதியாகத் துரத்திய இஸ்ரேல் ராணுவத்தை கண்டிக்க வேண்டியதுதான். பாலஸ்தீன மக்கள் தங்கள் சொந்த இடத்துக்குச் செல்லும் உரிமையை மறுப்பதன் மூலம் எப்போதும் தீர்வு வராது. இந்த உரிமை அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்றுதான் கம்யூனிஸக் கட்சியினரும் காங்கிரஸ் கட்சியினரும் தெருக்களில் ஊர்வலங்களில் கோஷமிட்டு வருகிறார்கள். என்னுடைய கேள்வி ஏன் இவர்கள் பம்பாய், கல்கத்தா தில்லித்தெருக்களில் கோஷமிட்டுச் செல்லவேண்டும் என்பதுதான். இங்கு பாலஸ்தீனர்கள் இருக்கிறார்களா ? அவர்களது உரிமைகளுக்காக கம்யூனிஸ கட்சியினர் போராடுவது கண்டு அவர்கள் மனம் குளிரப்போகிறார்களா ? பாலஸ்தீன மக்கள் ஏதேனும் இந்தியப்பத்திரிக்கைகளைப் படித்து சரி இந்தியக் கம்யூனிஸக்கட்சியினர் பாலஸ்தீன உரிமைகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று புளகாங்கிதம் அடையப்போகிறார்களா ? இந்தியாவின் காங்கிரஸ் கட்சியினர் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள் என்று பாலஸ்தீன மக்கள் சந்தோஷம் அடையப்போகிறார்களா ? எதற்காக இந்த ஊர்வலம் ? எதற்காக இந்த வேஷம் ? ஏன் இந்த கோஷம் ?

இந்தக் கேள்வியை யாருமே எழுப்புவதில்லை. ஏனென்றால் இது வேஷமல்ல. உண்மையிலேயே பாலஸ்தீன மக்களின் துயர் கண்டு கம்யூனிஸ்ட கட்சிகள் கண்டனத்தில் இறங்கியுள்ளன என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் இது செய்லபடுத்தப் படும் விதமும் , இதன் பின்னணி அர்த்தம் வேறு. இது இந்தியாவின் முஸ்லீம் மக்களை நோக்கிச் செய்யும் கோஷம். பாலஸ்தீனர்களும் முஸ்லீம்கள். இந்திய முஸ்லீம்கள் பாலஸ்தீன முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆகவே இந்திய முஸ்லீம்களைச் சந்தோஷப்படுத்தச் செய்யும் கோஷம் இது. அதே நேரத்தில், பாஜக இஸ்ரேல் ஆதரவாக இருக்கிறது, நாங்கள் முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்ற அடிக்கோடு இது. இதில் , இந்த அரசியல் விளையாட்டில் எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை. ( ராவின் கீழ் நடந்த காங்கிரஸ் ஆட்சி தான் முதன் முதலில் இஸ்ரேலுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தியது என்பது இப்போது அதிகம் பேசப்படாத விஷயமாகிவிடும்) ஒரு எதிர்கட்சி எப்படி நடந்துகொள்ளுமோ அது போலத்தான் கம்யூனிஸக்கட்சியும், காங்கிரஸ் கட்சியும் நடந்துகொள்கின்றன. ஆனால், அதைத்தாண்டி நான் உலக அமைதிக்குப் போராடுகிறவனாக்கும் என்று பம்மாத்துப் பண்ணினால்தான் எனக்குப் பிரச்னை.

ர்வாண்டாவில் இதுவரை பாலஸ்தீனத்தில் நடந்த கொலைகளை எல்லாம் விட அதிகமாக சுமார் 3 மாதத்தில் 30 லட்சம் பேர் கொலை செய்யப்பட்டார்கள். கம்யூனிஸக்கட்சியினரும், காங்கிரஸ் கட்சியினரும், தெருவில் வந்து கோஷம் போடவேண்டாம், அது நடந்ததாகக்கூட அவர்களுக்குத் தெரியாது என்பதுதான் விஷயம். போல் போட்டின் கீழே லட்சக் கணக்கான மக்கள் செத்தார்கள். அது பற்றி இடதுசாரிகளுக்கும், காங்கிரஸ்-க்கும் கவலையில்லை. நம் பத்திரிக்கைகளும், ஆங்கில அமெரிக்கப்பத்திரிக்கைகளும் கண்டுகொள்ளவில்லை. அதற்குக்காரணத்தை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

சீனாவில் ஜனநாயகம் வேண்டி நடந்த போராட்டம் மிகக் குரூரமாக நசுக்கப்பட்டது. இன்றும் ஃபாலுன் காங் என்ற cult -ஐச் சேர்ந்த மக்கள் மோசமான முறையில் ஒடுக்கப் படுகிறார்கள். அது பற்றி கம்யூனிஸ்ட் கட்சி மூச்சுக் கூட விடவிலை. தவறு மாணவர்களிடத்தில் தான் என்று சீனாவின் அதிகார பூர்வமான கோஷத்தை எதிரொலித்தது. இப்போதும் கூட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்த்தை பக்தி சிரத்தையுடன் தன் மாநாட்டில் மார்க்ஸிஸ்ட் கட்சி வெளியிடுகிறது. கம்யூனிஸ்ட் கொள்கைகள் பொருளாதார ரீதியாய் சீனாவிலிருந்து பறந்து போய் வெகு நாட்களாகி விட்டன.

இது தான் என் கேள்வி: எத்தனை தடவை இவர்கள் பாகிஸ்தானில் இந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்விக்கப்பட்ட போது அதனை எதிர்த்துக்குரல் எழுப்பினார்கள் ? கிழக்குப் பாகிஸ்தானாக இருந்த பங்களாதேஷில், பாகிஸ்தானிய ராணுவம் இந்துக்களைகுறிவைத்து தாக்கி அழித்தபோது, இவர்கள் கோஷமிட்டார்களா ? கோஷமிடாதது மட்டுமல்ல, பேச்சு வார்த்தை நடத்தி அகதிகளைத் திருப்பி அனுப்பு, கிழக்கு பாகிஸ்தானுக்குள் நுழையாதே என்பது தானே அவர்களின் உபதேசமாக இருந்தது. இப்போதும் கூட தன்னுடைய சர்வாதிகாரத்தை நிலைப் படுத்திக் கொள்கிற மோசடியில் முஷரஃப் கவனம் கொண்டிருக்கும் போதும், படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும், பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்பது தான் இவர்களின் உபதேசமாய் இருக்கிறது. பாகிஸ்தானிய ராணுவம் பங்களாதேஷில் இந்துக்களை மட்டுமே குறிவைத்து அழித்தது என்பது சமீபத்தில் நிக்ஸனின் காகிதங்கள் வெளிவந்தபோதுதான் தெரிந்தது. அது பற்றிக்கூட இந்தியப்பத்திரிக்கைகள் பேசவில்லை. திரிபுராவில் கிரிஸ்தவ போராளிகள் இந்துக்களைத் தாக்கி அழிப்பதும், சரஸ்வதி பூஜை நடத்தக்கூடாது என்று தடை உத்தரவு போட்டதும் இவர்களுக்கு முக்கியமானதாக இல்லை. அதனை எதிர்த்து இவர்கள் தெருக்களில் வந்து கோஷமெழுப்பவில்லை. இந்தப் பாரபட்சமான போக்கு ஒரு ஆபத்தான விளையாட்டு. இந்து சம்பந்தமான பிரச்னைகளை மூடி மறைப்பதும், இந்துக்களுக்கு எதிரான வன்முறைகளை பொருளாதார ரீதியில் மறுவிளக்கம் கொடுத்து பூசி மெழுகுவதும், இந்துக்கள் கொல்லப்பட்டால் அதற்கும் இந்துத்துவ சக்திகள் தான் காரணம் என்று சொல்வதும் சரியானதல்ல. காஷ்மீர இந்துக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக, பாகிஸ்தானின் பயங்கரவாதக் கும்பலால் துரத்தப்பட்டு தெருக்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எத்தனைமுறை கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் அவர்களுக்காகக் கோஷமெழுப்பியது ? (பாகிஸ்தானை கண்டிப்பது காங்கிரஸில் இருக்கும் ஒரு சீக்கிய இளைஞர் மட்டுமே. மற்றவர்கள் எல்லோரும் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்கும் கும்பல்.)

பாகிஸ்தானை திட்டாமல், அதே சமயம் இஸ்ரேலைத் திட்டியும் கோஷமெழுப்புவது, பான்-இஸ்லாமிக் (உலக இஸ்லாம்களின் ஒன்றுபடல் ) சிந்தனையை இந்திய முஸ்லீம்கள் மீது திணிக்கும் வேலை. காஷ்மீர பிரச்னையைப் பற்றிக் கண்டுகொள்ளாத இந்திய முஸ்லீம்கள் ஏன் அனைத்துலக முஸ்லீம் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் ? அவர்கள் கண்டுகொளவதில்லை. அவர்களது தலைவர்களாகத் தங்களைக் காண்பித்துக்கொண்டு ஓட்டுப்பொறுக்கும் போலித்தலைவர்களுக்கு இந்த மாதிரி வேலைகளெல்லாம் தேவைப்படுகிறது. அதைவிட, இங்கே பக்கத்தில் இருக்கும் காஷ்மீர இந்துக்களின் பிரச்னைகளைப்பற்றிக் கவலைப்படாமல், பாலஸ்தீன மக்களுக்காக கோஷம் போடுவதை வேடிக்கை பார்க்கும் இந்துக்கள் யோசிக்காமல் இருப்பார்களா ? (நம் ஊர் இந்து பத்திரிகையும் பாலஸ்தீன மக்களுக்காக கோஷம் போடும். காஷ்மீர கோவிலில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் கொலை செய்வதற்கும் இந்துத்வ சக்திகள் மீதே பழிபோடும்) .

இப்படிப்பட்ட வாதங்களின் நீண்ட கால பாதிப்பை இவர்கள் உணர்வதில்லை. இந்தப் போக்கு தான் , இந்துக்களின் பிரச்னைகளைப் பற்றிப் பேசும் அமைப்புக்களாக இந்துத்வா அமைப்புக்களை உருவாக்கி விட்டுவிட்டது. அதுதான் மிகப்பெரிய ஆபத்து. பாஜகவும் ஆர் எஸ் எஸ் அமைப்பும் இந்துக்களை முக்கியமாகக் கொண்ட அமைப்புக்கள் என்பது யாரும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அவர்கள் நிச்சயம் இந்துப்பிரச்னைகளைப்பற்றிப் பேசப்போகிறார்கள். அவர்கள் பேசுவதை நாமும் பேசக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு கண்ணுக்கு முன்னால் தெரியும் அவலங்களை நியாயப்படுத்தும் போக்கு , இந்தப்பிரச்னைகளை இந்துத்வா சக்திகளிடம் தாரை வார்க்கும் விஷயம்.

இஸ்ரேலுக்கு எதிர்ப்பு, பாகிஸ்தானுக்கு ஆதரவு என்பதில் உள்ள தீவிரமான முரண்பாட்டை இந்த இடதுசாரிகள் உணர்வதாகவும் தெரியவில்லை. மத்திய கிழக்குப் பகுதியில் இஸ்ரேலின் திமிரை வளர்த்து விட்டதில் எவ்வளவு பங்கு அமெரிக்காவிற்கு உண்டோ, அதைவிட அதிகமான பங்கு பாகிஸ்தானின் சர்வாதிகாரப் போக்கையும், அடிப்படைவாதப் போக்கையும் வளர்த்து விட்டதில் அமெரிக்காவிற்கு உண்டு. மத்திய கிழக்குப் பகுதியில் இஸ்ரேல், தெற்காசியாவில் பாகிஸ்தான் என்று செல்லப் பிள்ளைகளை அமெரிக்கா வளர்த்து விடுவதன் மூலம், பிராந்தியச் சிக்கல்களை நிரந்தரப் படுத்துவது தான் அமெரிக்காவின் நோக்கம். அமெரிக்காவிற்கு எதிர்ப்பு, சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் ஆதரவு என்பது என்ன விதமான போலித்தனம். பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு, காஷ்மீர் பண்டிட்கள் பற்றி மெளனம் என்பது என்ன விதமான போலித்தனம்.

‘சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடா கிளியே செய்வதறியாரடா ‘ என்பது இப்படிப்பட்டவர்களைப் பற்றி பாரதியார் பாடிய பாடல்.

****

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்