இலை போட்டாச்சு !

This entry is part [part not set] of 34 in the series 20061026_Issue

ஜோதிர்லதா கிரிஜா


இது ஒரு சமையல் புத்தகம் என்பதை ” இலை போட்டாச்சு ” என்னும் தலைப்பைப் பார்த்ததுமே
புரிந்துகொண்டிருப்பீர்கள். இந்நாளில் யார் இலை போட்டுச்சாப்பிடுகிறார்கள் என்று உங்களுக்குத்
தோன்றக்கூடும். ஆனால், வாழை இலையில் சூடான உணவு வகைகளைப் போட்டுக்கொண்டு, அச்
சூட்டினால் வாழை இலையின் பச்சை நிறம் பழுப்பாக மாறும் போது பரிமாறப்பட்ட உணவு வகை
களை வாயும் தொண்டையும் பொறுக்கும் சூட்டில் உள்ளே தள்ளி விழுங்குகையில் விளையும் மனத்
திருப்தியை அனுபவித்தவர்கள் எவர்சில்வர்த் தட்டுகளில் சாப்பிடுவதை அவ்வளவாக ரசிக்க மாட்டார்கள்!
வாழையிலைச் சூட்டுக்குத் தனிப்பட்ட சுவையும் மணமும் உண்டு என்பது ஒரு புறமிருக்க, இதற்கு ஒரு
மருத்துவத் தன்மையும் உண்டு என்று நம் உள்நாட்டு மருத்துவ நூல்கள் கூறுகின்றன. வாழை இலை
யில் சாப்பிட்டால், தலைமுடி நரைத்தல் தள்ளிப் போடப்படும் என்பது நம் பெரியவர்களால் பெரிதும்
வலியுறுத்தப்படும் கூற்று. நம் பெரியவர்கள் தம் வாழ்க்கையை வகுத்துக்கொண்ட முறையில் பல்வேறு
சிறப்புகள் உண்டு. அவர்கள் வகுத்துள்ள வாழ்க்கை விதிகள் யாவுமே மனிதர்களின் உடல் நலத்தையும்
மன நலத்தையும் பெருக்கிப் பாதுகாக்கும் சிறப்புக் கூறுகள் படைத்தவை.

சமைத்த உணவைவிடவும் சமைக்கப்படாத பச்சைக்கறிகாய்களும் நன்றாய்ப் பழுத்த பழங்களும் தான்
மனிதர்களுக்கு நன்மை பயப்பவை என்பதும் வெகு நாள்களாக வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. இது
மிகவும் உண்மைதான். இவ்வுண்மையையும் மனத்தில் கொண்டு அடுப்பிலேயே ஏற்றாமல் தயாரிக்கக்
கூடிய உணவு வகைகள் பற்றியும் இந்நூலில் தகவல்களும் செய்முறைகளும் தரப்பட்டுள்ளன. வாசகரர்
இவற்றாலும் பயனடையலாம்.

இந்நூலில் சில உண்பொருள்களின் மருத்துவத் தன்மைகளும் விளக்கப்பட்டுள்ளன. இவற்றையும்
கவனமாய்ப் படித்து வாசகர்கள் பயனுற வேண்டும்.

சமையல் என்றாலே அது என்னவோ பெண்களுக்கு மட்டுமே உரிய வேலை என்னும் எண்ணம் நம்
மிடையே நிலவுகிறது. ஆண்கள்தான் சமையல்கலையில் பெண்களைக்காட்டிலும் சிறந்த வல்லுநர்கள்
என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் ஆண்கள் எண்ணிறந்தோர். ஆனால் மனைவியர்க்கு உதவுவதற்கு
மட்டும் இவர்கள் முன்வரமாட்டார்கள் (நாம் எல்லாரையும் சொல்லவில்லை. முழுச் சமையலும் செய்
கின்ற ஆண்களும் இருக்கிறார்கள். )

எனினும் இன்று நிலைமை சிறுகச் சிறுக மாறிவருகிறது. அவ்வையார் சொன்னவற்றில் பெரும்பா
லானவற்றை நம் இளைஞர்கள் அறவே புறக்கணித்துவிட்டபோதிலும், அவர் சொல்லிச் சென்ற
ஒன்றை மட்டும் கெட்டியாயப் பிடித்துக்கொண்டுவிட்டார்கள்; அதுதான் – திரைகடலோடியும்
திரவியம் தேடு என்பது!

இவ்வாறு திரவியம் தேடும்பொருட்டு அமெரிக்கா, கானடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, போன்ற
உலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நம் நாட்டு இளைஞர்கள் அண்மைக்காலமாய்ச் செல்லத்
தொடங்கியுள்ளார்கள் அங்கு உணவு விடுதிகளில் உண்பதென்பது கட்டுப்படி யாகாத ஒன்று. என்வே,
இவர்கள் அங்கு வாடகை வீட்டில் வசித்தவாறு தாங்களாகவே உணவுவகைகளைத் தயாரித்து உண்பது
கையைக் கடிக்காத விஷயம். இப்போதெல்லாம் நான்கைந்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு
வீட்டை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு தாங்களே சமைத்து உண்கிறார்கள். அங்கே போன பிறகு
சமைக்கக் கற்றுக்கொள்ளுவதை விட, அயல்நாடு செல்லும் எண்ணமிருந்தால், இங்கிருக்கும்போதே
இக்கலையை இவர்கள் கற்றுக்கொள்ளுதல் நல்லது என்பதால், இளைஞர்களும் இப்புத்தகத்தைக்
கொஞ்சம் புரட்டலாம்!


பாரதி மகேந்திரன் எழுதிய “இலை போட்டாச்சு” நூலின் முன்னுரை
.

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா