இலை போட்டாச்சு 37 – ரவா லாடு

This entry is part [part not set] of 45 in the series 20071108_Issue

பாரதி மகேந்திரன்


ரவா லாடு

தேவை

மும்பை ரவை – அரை கிலோ
சர்க்கரைப் பொடி – அரை கிலோ
ஏலக்காய்த் தூள் – ஒன்றரை தே.க.
பச்சைக்கற்பூரத் தூள் – ஒரு சிட்டிகை
நெய் – 250 கிராம்
முந்திரிப்பருப்பு – 50 கிராம் (அல்லது சற்று அதிகமாய்)
(முந்திரிப்பருப்புக்குப் பதிலாக வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலையைப்
போடலாம்)

முதலில் ரவையை நெய்யோ எண்ணெயோ இன்றி வெறும் வாணலியில் சற்றே சிவப்பாக வறுத்து மிக்சியில் பொடிக்கவும். (சிலர் ரவையைப் பொடிக்காமல் அப்படியேயும் போடுவார்கள். ஆனால் அதற்கு ரவை சன்ன ரகமாக இருக்க வேண்டும். பெரும் ரகமாக இருந்தால் பொடித்துக் கொள்ளுவதே நல்லது.)

வறுத்துப் பொடித்த ரவையுடன், பொடிசெய்து வைத்துள்ள சர்க்கரை, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, பச்சைக்கற்பூரப்பொடி, ஏலப்பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாய்க் கலக்கவும்.

பின்னர், வாணலியில் நெய்யை ஊற்றி அடுப்பில் ஏற்றி, அது உருகிய பிறகு மேற்படி கலவையை அதில் கொட்டிக் கலந்து சூட்டுடனேயே உருண்டைகளாய் பிடிக்கவும். சூடு இல்லாவிட்டால் உருண்டை பிடிக்க வராது.

(முந்திரிப் பருப்பை இரண்டாய்ப் பிளந்த பிறகுதானே நெய்யில் அதை வறுப்பீர்கள்? இல்லாவிட்டால் அதனுள்ளே இருக்கக் கூடிய “ஜீவராசி” களும் சேர்ந்து வறுபட்டு விடும் என்பதை அறிந்திருப்பீர்கள்.)

இதை இரவு நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. செரிமானம் கடினம் என்பதால்.

மா லாடு

இதே போல் பொட்டுக்கடலை (உடைத்த கடலை)ப் பொடியிலும் உருண்டை பிடிக்கலாம். அளவுகள் எல்லாம் ரவை உருண்டைக்குச் சொன்னது போலவே. ஆனால் பொட்டுக்கடலையை வறுக்கத் தேவையில்லை. பச்சையாகவே பொடிக்கலாம். பொடித்த பின் சலித்துக் கொள்ளுவது நல்லது.

mahendranbhaarathi@yahoo.com

Series Navigation

பாரதி மகேந்திரன்

பாரதி மகேந்திரன்