இலவசம்! இலவசம்!

This entry is part [part not set] of 29 in the series 20020324_Issue

புஹாரி, கனடா


இலவசம்! இலவசம்!

ஒன்று வாங்கினால்
ஒன்று இலவசம்!

ஒருநாள் மட்டும்
மூக்குப்பொடி இலவசம்!

பலகீனங்கள் இங்கே
பரீட்சிக்கப்படுகின்றன….!

தாலி வாங்கினால்
பெண்டாட்டி இலவசம்
என்று
கடை திறக்காததுதான்
மிச்சம்…!

O

இலவசமாய்
ஓர் அற்பத்தை வழங்கிவிட்டு
உங்களையே
வேரோடு இழுத்துக்கொண்டுவிடும்
வணிக சிகாமணிகளின் சாதுர்யத்தை
என்னவென்று சொல்ல… ?

படி அரிசியைப்
பரிசாய்க் கொடுத்துவிட்டு
பாராளுமன்றத்துக்கு ஓட்டுகுவிக்கும்
திருட்டு அரசியல்வாதிக்கு
சற்றும் இளைத்ததோ
இந்த வணிக நுணுக்கம்…!

O

முன்னேறிய நாடுகளிலும்
முக்கால்வாசிபேர்
முழு பலகீனர்களே என்பது
முக்காடுபோடும் வெட்கம்…!

ஒன்றுக்கு மூன்று
இலவசம் என்று அறிவித்துவிட்டாலோ
செத்த பிணங்களும்
விற்றுத்தீரும் அவலம்…!

சீரழியும் வணிகமுறையால்
பொருள் சிக்கனங்கள்
புரட்டி எடுக்கப்படுகின்றன…!

தேவைகளோ
தீண்டப்படாமல் திண்டாட…
தேவையற்றவையே
தேடி வருகின்றன தினந்தோறும்…!

O

கெளரவ மனிதனுக்கும்
கையேந்த கற்றுத்தரும்
நாகரிகம் வளரலாமா… ?

நாளுக்கு நாள்
ஆடை குறைத்து
அலையும் இதயங்களை
அடித்து விழுங்கும்
சில்லறைத் திரைப்படங்களைவிட…

இலவசம் என்னும்
காந்தக் கணைகளால்
ஒட்டுமொத்த மக்களின்
தேவைகளைப் பெருக்கி
தில்லானா ஆடவைத்து
பொருள் அழிவில்
பணம் குவிப்பது
உலக அழிவில்லையா… ?

இதுதான் வணிக தர்மமா… ?

அதன் பின் செல்வதுதான்
செவ்வாயில் தேடல் நடத்தும்
நம் அறிவின் முதிர்ச்சியா… ?

****

buhari2000@hotmail.com

Series Navigation

புஹாரி, கனடா

புஹாரி, கனடா