இலவங்காடுகள்.

This entry is part [part not set] of 18 in the series 20010610_Issue

ருத்ரா.


செடிமறைவில்
ஒரு செங்குருவி..
கூவுகிறது..
கண்ணுக்கு அகப்படாமல்
குரலை மட்டும் தூவுகிறது.
அந்த கிளையெல்லாம்
இலையெல்லாம்
என் நரம்பு துடிக்கிறது.
பிரபஞ்சத்தின்
இதயத்தைப்பிசைந்த
அந்த வலியும் இனிக்கிறது.

முகம் காட்டாத
குரலுக்குள்
எத்தனை முகங்கள் ?

அந்த செடியின்
சின்ன சின்ன பூக்கள்
விடியற்காலத்து
நட்சத்திரங்களாய்
குருவியின் குரலுக்கு
குலுங்கி குலுங்கி
சிலிர்க்கின்றன.

மெளனத்தை
வைரக்கீற்றுகளாய்
உரித்து
உடுத்துக்கொண்டு
அழகுபார்க்கும்
ஒரு உன்மத்தம்
பிழம்பாகி உருகியதன்
இந்த கனமான தருணங்களில்

அன்பே

அந்த செங்குருவியாய்
எங்கு ஒளிந்திருக்கிறாய் நீ ?

‘இதோ வருகிறேன் ‘
என்றாய்.

அந்த ஒலிச்செதில்களை
சேகரித்து
செதுக்கிவைத்துக்கொண்டிருக்கிறேன்.
அன்று
உன் பார்வைகள்
செய்த ‘அக்கு பஞ்சரில் ‘
உற்சாகம் கொப்புளிக்க நின்றேன்.

இப்போது
இந்தக்குரல்
பெய்த ஊசிமழையில்
சல்லடையாகி நிற்கின்றேன்.

உன் சுவாசம் விரவிய
என் நுரையீரல்
பூங்கொத்துகளில் எல்லாம்
அந்தக்குரல்
மின்சார மகரந்தங்கள்.
இந்த குருவியின்
சுருதிக்குள்
சுருண்டுகிடக்கும்
தேன் கடல்
தெளிக்கும் திவலைகளில்
நீ சிதறிவிட்டுப்போன
‘டெசிபல்கள் ‘
ஒலிவழியாய்
ஒத்தடம்
கொடுத்துக்கொண்டிருக்கின்றன.

என்றேனும் வருவாய்
என்று
அந்த குருவி
எனக்குள் துடித்துக்கொண்டிருக்கிறது.

எங்கு சென்றாய் நீ.

வதைக்கும் இந்தக்குரலின்

விசுவரூபம்

உனக்கு தெரியவில்லையா ?

உன் நினைவு விம்மிய

இந்த வானத்தை

முக்காடு போட்டுக்கொண்டா

நான் ஒளிய முயல்வது ?

அந்த சிறுகுருவியின்

சில்லறை சப்தங்கள்

அருவியாய் கொட்டுவதில்

மூச்சுமுட்டுகிறது.

விரைவில் வந்து விடு.

அன்பே.

இந்த கடிகாரமுட்கள்

குத்திக்கிழித்ததில்

காயம்பட்ட

‘காலம் ‘

இந்த குருவியின்

கூச்சலில்

இரத்தம் கொட்டுகிறது.

மயில் இறகின்

தலைமீது

இந்த பாறாங்கல்

எத்தனை காலத்துக்கு ?

காத்திரு காத்திரு

என்று கூவுகிறதா ?

இல்லை

காய்த்திரு காய்த்திரு

என்று கூக்குரலிடுகிறதா

இந்த குருவி ?

காய்த்துப்போன

ஏக்கங்களில்

காத்திருக்கின்றேன்

அவை

பழுக்கட்டும் என்று.

ஆனாலும்

அந்த செங்குருவியின் குரல்

செவிட்டில்

அறைகின்றது.

என் இதயக்காட்டில்

அடர்ந்து செழித்தது

அத்தனையும்

இலவங்காடுகளா ?

***

Series Navigation

ருத்ரா

ருத்ரா