இலங்கைக்கரையோர மக்களிடையே வழங்கும் அம்பாப்பாடல்கள்

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ்


அறிமுகம்: அம்பாப்பாடல்கள் நாட்டார் பாடல்களின் வகைகளுள் தொழிற்பாடல் வகையைச் சேர்ந்தன தொழிற்பாடல்கள் மக்கள் பாரம் பரியமாகக் கூடித் தொழில் புரியுமிடங்களிலே வழங்கப்படுபவை. இலங்கைத்தமிழ் மக்களிடையே வழங்கிவரும் தொழிற்பாடல்களில் முக்கிய வகைகளில் ஒன்றான அம்பாப்பாடல்கள் பெரும்பாலும் சேகரிக்கப்படவுமில்லை. ஆய்வுக்கு உட்படுத்தப்படவுமில்லை. சேகரிக்கப்பட்ட தொழிற்பாடல்களில் கூடுதலாக விவசாயம் தொடர்பான பாடல்களே தொகுக்கப்பட்டுள்ளன..மீனவ மக்களிடையே வழங்கும் இவ்வம்பாப்பாடல்கள் சேகரிக்கப்படாமைக்கான காரணம் சாதி அடிப்படையிலான மேலாண்மைக்கருத்து நிலை எனக்கருத இடமுண்டு .கிழக்குப்பல்கலைக்கழக மொழித்துறையில் உள்வாரிமாணவர்களின் பட்டப்படிப்புக்காக மட்டக்களப்பு ,முல்லைத்தீவு, மன்னார் (ஆ.சுதாகரன்2003 பி.ஜே.கிளரன்ஸ்2004 கா. திருமகன்2004 ஆகியோர் இவற்றைச் சேகரித்து ஆராய்ந்தனர்.)ஆகிய பிரதேசங்களில் வழங்கிவரும் அம்பாப்பாடல்கள் ஆய்வுககு எடுத்துக் கொள்ளப்பட்டன .

அம்பாப்பாடல்கள் மீன்பிடித்தொழிலோடு தொடர்புபட்ட தொழிற்பாடல்களாகும்.இலங்கையில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, செம்பியன் பற்று, முல்லைத்தீவு மன்னார்,உடப்பு, நீர் கொழும்பு, மட்டக்களப்பு, கல்குடா ,காரைதீவு என கரைவலை மீன்பிடி செய்யப்படும் ஊர்களில் இவை காணப்படுகின்றன

அம்பாப்பாடல்கள் கருத்து

அம்பாப்பாடல்கள் மீனவரிடையே அமபாப்போடுதல் அம்பாச்சொல்லுதல் எனக்கூறப்படுகிறது. (தகவல் தங்கலிங்கம்-மட்டக்களப்பு கல்லடிக்கடற்கரை)
அம்பா என்றால் அழகி;யபாடல் எனப்பொருள் பெறும் அல்லது அம்பி என்பது தோணியின் மறுபெயராகும் இவ்வம்பி சம்பந்தமாக எழுந்தமையால் அம்பிப்பா உன்ற சொல் உருவாக்கப்பட்டு காலஞசெல்லச் சிதைவடைந்து அமபா ஆகிஇருக்கலாம் என்பர் மு.புஷ்பராஜன். (1976: 6) பரிபாடலில் அம்பாஆடல் (11:81) எம்பாவைஎன்பன பெண்களால்ஆடப்படும் சடங்கு நீராடல்கள் ஆகும் ஆனால் மீன்பிடியுடன் தொடர்புடைய அம்பாப்பாடலுக்கும் இவற்றுக்கும் இடையிலான தொடர்பை அறிய முடியவில்லை .எனவே கரைவலை மீன்பிடியின்போது முக்கியமாக ஊபயொகிக்கப்படும் கட்டுமரங்களை ஃதோணிகளைத்தள்ளுவதிலும் கட்டுமரங்களைத் தள்ளுவதிலும் வலிப்பதிலும் இப்பாடல்கள் அதிகம் பயனபடுத்தப்படுவதால் அமபி பா என்ற புஷ்பராஜனின் கருத்து ஏற்கக்கூடிய தொன்றாக உள்ளது. சங்க இலக்கியங்களில் இம்மீன்பிடி முறை பற்றிய குறிப்பு ஒன்றுண்டு.

நெடுங்கயிறு வலந்த குறுங்கண் அவ்வலை
கடல்பாடு அழிய இனமீன் முகந்து.
துணை புணர் உவகையர் பரதமாக்கள்
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி
உப்புஒய் உமணர் அருந்துறை போக்கும்
ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ
அயிர்திணிஅடைகரை ஒலிப்ப வாங்கி
பெருங்களம் தொகுத்த உழவர் போல
இரந்தோர் வறுங்கலம் மல்க வீசி
பாடுபல அமைத்தக் கொள்ளை சாற்றி வரிகள் அகம்30 1-10

நீண்ட கயிற்றினால் முடியப்பட்ட அல்லது கட்டப்பட்ட சிறிய கண்களையுடைய வலையைக் கொண்டு கடலில உள்ள மீன்களெல்லாம் அழியும்படியாக நல்லஇன மீன்களை முகந்து கொண்டு வருகின்ற பரதமாக்கள் மீன்பிடியின்போது இளையரும் முதியருமாக உப்பு வண்டிகளை எருதுகள்போன்ற வலிமையையுடைய உடல்களையுடையவராய் கிளையாகச்சேர்ந்து கடற்கரையில் நிறைந்த ஓசையுடன் வலையை இழுத்து தங்களால் பிடிக்கப்பட்ட மீனை மீன் கேட்டுவரும் மற்றவர்களுக்குக் கொடுப்பர் என்ற கருத்தினைத்தரும் இப்பாடல். கரைவலை மீன்பிடியிலேயே இப்பாட்டில்வருவது போன்று அதிகம் பேர்சேர்ந்து அதாவது 20ஃ30 பேர்வரை பங்குபற்றுவதை இன்றும் காணலாம். இன்றும்பாடு என்றசொல் மீன்பிடித ;தொழிலாளரிடையே முக்கியமான கலைச் சொல்லாக வழங்கி வருவதைக் காணலாம் இது கரைவலையில குறிப்பிட்டதொருவருடைய மீன்பிடிப்பகுதியைக் குறிப்பதைக் காணலாம். உதாரணமாக கந்த சாமியின் பாடு என்றால் அவரது வலையை கடலில் விட்டு தொழில் செய்ய அனுமதிக்கப்பட்ட பகுதியைக் குறிக்கும். அத்துடன் இரண்டு பாடு வலை போட்டார்கள் என்றால் இரண்டுதரம் வலை போட்டார்கள் என்பதைக ;குறிக்கும். ஆனால சாதாரண வழக்கில் வேலையின் கடுமையைக் குறிக்கவும் இது வழங்கப்படும.

இந்த மீன்பிடி முறையில் சில சந்தர்ப்பங்களில் 2000 கிலோ வரையான எடையுள்ள மீன்கள் பிடிபடுவதுமுண்டு.

அகநானூற்றில் வரும்

பெருங்களம் தொகுத்த உழவர் போல
இரந்தோர் வறுங்கலம்மல்க வீசி
பாடுபல அமைத்துக் கொள்ளை சாற்றி

என்ற அடிகள் இதையே காட்;டுகின்றன. இவ்வாறு அதிகம் மீன் பிடிபடும் பொது மீனவர் இலவசமாகவே தமது உறவினருக்கும் நண்பர்களுக்கம் மீன்களை வழங்குவதை இன்றும் காணலாம்.

அமபாப் பாடல்களின் அமைப்பு
இப்பாடல்வகை கடலில் வள்ளத்தைத் தள்ளத் தொடங்கியது முதல்வலை வளைவது அல்லதுகரைக்கு .இழுத்தெடுப்பது வரை பாடப்படும்கரை வலை மீன்பிடி கற்பாரகள இல்லாத கரைநீர்ப்பகுதியிலேயே இடம்பெறலாம்.; இல்லாவிடில் கற்பார்கள் வலையைக்கிழித்துவிடும.;. முட்டையிடுவதற்காக கூட்டங்கூட்டமாகவரும் மீனடகளே இதில் பிடிபடும்.. பெரும்பாலும இந்த மீன்பிடியில் குறைந்தது 20 தொழிலாளர் செயல்படவேண்டும் இந்தப்பாடல்கள் களைப்பைத் தீர்ப்பதற்காக அல்லது களைப்புத் தெரியாமல் இருப்பதற்காக சொல்லப்படும். .தொழிலில் உள்ள கடுமை இதனால் மறக்கப்படும்;. கரைவலையில் மீன்பிடிப்பதற்காக வள்ளத்தைத் தளளத் தொடங்கியது முதல் வலைவளைத்து மீனைக்கரைக்குக் கொண்டு வருமவ்ரை பாடப்படும். இவ்வாறு வலை வளைத்து மீன்பிடிப்பது 3,4 மணிநேரத்துக்குள் முடிந்து விடும். இந்தச ;சந்தர்ப்பத்தில் செய்யும் வேலைகளினடிப்படையில் பாடல்கள் பாடப்படும அவ்வேலைகளின் வேகத்துக்கும் தன்மைக்குமேற்ப. இப்பாடல்களின் ஓசைவேறுபடும்.

இம்மீன்பிடியில் கடற்கரையில் கரைக்கு மீன்வருக்pறதா என அவதானித்துக் கொண்டு ஒருவர் கடற்கரையில் இருப்பார் மீன்கூட்டத்தைக்கண்டதும் (இது செவ்வல,; பரிப்பு ,சிவப்பு என்ற சொற்களால் அழைக்கப்படும.. கல்லடிக் கடற்கரையில் இவ்வாறு அவதானிக்கும் ஒருவரின் பெயர் சிவப்பு எனவே மாறிவிட்டது.;) இதைக் கண்டதும் அவர் கூ என்ற ஒலி எழுப்பி தொழிலாளர்களை அழைப்பார். உடனேஅங்கு குழுமிய தொழிலாளர்கள் வள்ளத்தை முதலில் கடலிலே தளளி விட்டதும் தண்டு வலிப்பொர் வள்ளத்திலிருந்து வலையால் மீன்களைச் சுற்றி வளைத்து மறுபக்கம் வருவர். அதன்பின் வலையை இழுப்பர். பின்னர் மடி இழுக்கப் பட்டு மீன்கள் கரைக்குக் கொண்டுவரப்படும்.
இந்த வேலைகளினடிப்படையில் அம்பா சொல்லப்படும்.

1. வள்ளம் தள்ளப்படும் போது சொல்லபப்டும் அம்பா
2. தண்டுவலித்துவலை ளையும் பொது சொல்லப்படும் அம்பா
3. வலை இழுத்தலின்போது சொல்லப்படும் அம்பா
4.மடி இழுத்தலின் போது சொல்லப்படும்அம்பா

வள்ளம் அல்லது கட்டுமரத்தை கடலில் தள்ளும்போது சொல்லப்படும் அம்பா கரையிலிருந்து அதாவது நிலத்திலிருந்து நீருக்குள் வள்ளததை அல்லது தோணியைத் தள்ளும் போது மிக்வும் பலத்தைப் பிரயோகிக்க வேண்டும்.

அதற் கேற்ற முறையிலே அம்பா அமையும். இவ்வம்பாக்களை வள்ளத்தைத் தள்ளும் எல்லோரும் சொல்லுவர. திரும்பத் திரும்ப ஒரு வரியே பெரும்பாலு;ம் சொல்லப்படும் . இது ஒற்றையம்பா (மன்னார்) கட்டையம்பா (ம்ட்டக்களப்பு -கல்லடிக்கடற்கரை) என அழைக்கப்படும்.

ஒற்றையம்பாவுக்கன உதாரணங்கள் சில வருமாறு

1. சோமாலை மாதாவே . (முல்லைத்தீவு மட்டக்களப்பு)
2. பிள்ளையார் காவலிலே (மட்டக்களப்பு)
3. ஏன்சிரித்தாய் சந்தையிலே( (முல்லைத்தீவு)
4. அந்தோனி காவலிலே. (மன்னார்)
5. தூத்துக்குடி பரவர் சோத்துப்பெட்டியை பாக்கிறார்(மன்னார்)
6. வடவடப்பொரி வங்காளப்பொரி (வல்வெட்டித்துறை )
7. வேலும் மயிலும் வேலாயுதம் (வல்வெட்டிததுறை
8. அம்படைச்சி மயிராம் அறுவது பாகமாம்
கயிறும் திரிக்கலாம் கப்பலும ;இழுக்கலாம் (வல்வெட்டிததுறை)

வல்வெட்டித்துறையில் கரைவலைத் தொழில் இல்லையெனினும் மாரிகாலத்தில் கடலிலிருந்து வள்ளங்களைக்கரைக்கு இழுக்கவும் மீண்டும் கடலுக்குள் தள்ளவும் இப்பாடல்கள் பாடப்படும் ஒருவர் ஒரு சொல்லைச் சொல்ல மற்றவர்கள்; மறுசொல்லைச் சொல்லும் பாடல்களும் உண்டு

ஒருவர் மற்றவர்
ஏலயிலோ ஓவலம்மா
இடிஇடிக்க மழைபொழிய
இருகரையும் பெருகி வர
பெருகுதடா ராச வெள்ளம்
பெருங்கடல் போல் முழங்குதடா
மின்னுதடா மழைஇருண்டு
மேகவல்லி கூடலிலே
குயிலாளைத் தூக்கிவைச்சு (மன்னார் சேகரித்தவர் பி.ஜே. கிளரன்ஸ்2004 டிசம்பர்)

மாமாங்கப் பிள்ளையாரே
மனமிரக்கம் உள்ளவரே
உள்ளவரை நாம்பாட
உதவிசெய்வாய் ஆண்டவரே
ஆண்டவரே உன்னைநம்பி
உன்னைநம்பி அரியகடல்
ஏறிவந்தொம் ( பாடியவர் கல்லடி, மட்டக்களப்பு ச.சவுந்தாராஜன் ஜனவரி2007)

எனக் கற்பனைக் கேற்றவாறு தோணியைக் கடலில் தள்ளும் வரை தொடரும்.

வலை வளையும் போது சொல்லப்படும் அம்பா

வலை ஏற்றிக்கடலுக்குள் தள்ளியபின்னர் மீன்திரளைச்சுற்றி வலையைப்போட்டு இழுப்பர் அவ்வாறு வலையைப்போடும்போது தண்டுஅல்லது துடுப்பின் உதவியுடனேயே வள்ளம் கடலில் செலுத்திச் செல்லப்படும். அப்போது காற்றின் திசைக்கேற்ப வலைவளையும் திசையைத் தீர்மானித்திருப்பர்.அவ்வாறு தண்டுவலித்துச் செயலும் போது முன்னையதைவிட சற்று வேகமானது. அதாவது மீன்கள் கடலுக்கு மேலே போய்விடாமல் விரைவாக வளைக்கப்பட வேண்டிய நேரம் அது.

ஒருவர் அல்லது இருவர் சேர்ந்து இதைச் சொல்லுவர்.

ஏலவலை ஏலதண்டு லேலேலங்கடி லேலோ
ஓவலம்மா ஓவலம்மா லேலேலங்கடி லேலோ
முத்தனவே கொண்டையடி லேலேலங்கடி லேலோ
முடித்தாலே நான்வருவேன் லேலேலங்கடி லேலோ
நாயைவிட்டு விரட்டாதடி லேலேலங்கடி லேலோ
சாவலுமொ என்னழகு லேலேலங்கடி லேலோ
கூவுதில்லை கொற்றவரே லேலேலங்கடி லேலோ
அன்னம் போல நடைநடந்து லேலேலங்கடி லேலோ
வாறாளே பெண்ணொருத்தி லேலேலங்கடி லேலோ

மன்னார் சேகரித்தவர் பி.ஜே.கிளரன்ஸ்2004

முல்லைத்தீவு அம்பா பின்வருமாறு அமைகிறது.

ஏலவலை ஏலவலை ஓடோடி வாடா நாடோடி மன்னா
ஓடோடி வாடா நாடோடி மன்னா

ஓவலம்மா ஓவலம்மா ஓடோடி வாடா நாடோடி மன்னா
ஓடோடி வாடா நாடோடி மன்னா

ஓவெல ஏலதண்டு ஓடோடி வாடா நாடோடி மன்னா
ஓடோடி வாடா நாடோடி மன்னா

ஓவெலயா ஓவெலயா ஓடோடி வாடா நாடோடி மன்னா
ஓடோடி வாடா நாடோடி மன்னா

ஊரைவிட்டு ஓம்பது நாள் ஓடோடி வாடா நாடோடி மன்னா
ஓடோடி வாடா நாடோடி மன்னா

தாயார்முகம் காணவெண்டு ஓடோடி வாடா நாடோடி மன்னா
ஓடோடி வாடா நாடோடி மன்னா

சேகரித்தவர் கா.திருமகன் 2004

இந்தவகைப்பாடல்களின் நீளமும் முன்னே குறிபப்pட்டவாறு போலவளைத்துக்கரையை அடையும் வரை நீளும் .

வலையை இழுத்தலின்போது சொல்லப்படும் அம்பா

ஏலவலை ஏலதண்டு
ஓவெல ஓவலம்மா

ஏலம்மா ஏலவலை
புள்ளையார் புதுமையால
ஏலம்மா ஏலவலை
பொண்டிலுமோ புள்ளத்தாச்சி
என்னத்தசென்னாயோடா
இடையூறு மன்னவரே
முன்னவா உன்னருமை
மலையேறி மேயுதடா
உன்னால நான்படுகும்
துயரத்தை ஆரறிவார்
ஆரம்மா வண்டியிலே
ரோசாப்பூ கொண்டையிலே
மண்டாடி மனம்நிரம்ப
மடிநிரம்பி வாவனம்மா


மடி இழுத்தலின் போது சொல்லப்படும் அம்பா

மீன்நிறைந்த மடியை இழுத்து வெளியே கொண்டுவரும் போது மிகவும் வேகமாக இழுக்க வேண்டும்;
அது பின்வருமாறு அமைகிறது.

ஓடிவா ஏல
பொருத்து ஏல
இழு ஏல
தலைவாய் ஏல
கிழிஞ்சு போச்சு ஏல
குயிக்கா ஏல
மாத்து ஏல
கொண்டுவா ஏல
கூட்டிப்பிடி ஏல
கொட்டாப்புடிக்காத ஏல

என அமையும் முல்லைத்தீவு அம்பா. இவ்வாறு பிடிக்கப்பட்டாலும் இவ்வகைப்பாடல்கள் அனைத்துமே தொடராக கரைவலை வேலை தொடங்கி முடியும்வரை பாடப்படும்.

அம்பாப்பாடல்கள் இவ்வாறு சந்தர்ப்பத்திற் கேற்பப் பாடப்பட்டாலும் அவற்றின் பொருள் கடவுளைப்பாடுவதிலிருந்து கன்னிகளைப்பாடுவது வரை அமைந்திருக்கும். கடவுளைப்பாடும் போது நிறையமீன் வலையில் படவேண்டுமென்று வேண்டிப்பாடுவர் இராமேஸ்வரத்து கடவுளான இராமநாதன் மாமாங்கப்பிள்ளையார் செபமாலை மாதாஅந்தோனியார் எனத்தாம்வணங்கும் கடவுளரையெல்லாம் வேண்டிப்பாடுவர். உதாரணம் முத்தமாரியம்மனைப்பாடிய பாடல்

ஏலவலை ஏலவலை எங்கள் முத்து மாரியம்மா
எங்கள் முத்து மாரியம்மா
ஓவெல ஓவலம்மா எங்கள் முத்து மாரியம்மா
எங்கள் முத்து மாரியம்மா
காணக்கிடைக்காதம்மா எங்கள் முத்து மாரியம்மா
எங்கள் முத்து மாரியம்மா
நாகங்குடைபிடிக்க எங்கள் முத்து மாரியம்மா
எங்கள் முத்து மாரியம்மா
நல்லபாம்புதாலாட்ட எங்கள் முத்து மாரியம்மா
எங்கள் முத்து மாரியம்மா
ஆண்டவனே உன்னைநம்பி எங்கள் முத்து மாரியம்மா
எங்கள் முத்து மாரியம்மா

அரியகடல் வ்லை வளைச்சம் எங்கள் முத்து மாரியம்மா
எங்கள் முத்து மாரியம்மா ( பாடியோர் லூயிஸ், இருளப்பு பீரிஸ் முல்லைத்தீவு2004)

பொங்கி மடை தருவன் சோமாலை மாதாவே

புதுப்பானை நேத்தி வைப்பேன ;சோமாலை மாதாவே

எனக்கடவுளை நம்பி வலை வளைத்ததாகப் பாடுவர் அதுமடடுமல்லாமல் மதிய நேரம்வலை வளைக்கும் சம்மாட்டிக்கும் இதில் வசை இடம பெறும்

மத்தியான வேளையில எங்கள் முத்து மாரியம்மா
எங்கள் முத்து மாரியம்மா

வளைக்கிறானே கரைவலையை எங்கள் முத்து மாரியம்மா
எங்கள் முத்து மாரியம்மா
இடுப்பு வலியே யெணை எங்கள் முத்து மாரியம்மா
எங்கள் முத்து மாரியம்மா

வந்துதவி செய்யனணை எங்கள் முத்து மாரியம்மா
எங்கள் முத்து மாரியம்மா

( பாடியோர் லூயிஸ், இருளப்பு பீரிஸ் முல்லைத்தீவு2004)

சிலபாடல்களில் திரும்ப வரும் தொடர்களிலே அரசியல்வாதிகளும் வருவதுண்டு முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான ரத்வத்தையின் பெயர் இங்கெ வருகிறது.
உதாரணம் வருமாறு ரத்வத்த மாமா லண்டனில என்ற தொடர் இப்பாடலில் வருகிறதைப்பார்க்கலாம்

சோதிசோதி ஏனழுதாய் ரத்வத்த மாமா லண்டனில
சோகம் போட்டு நானழுதேன ரத்வத்த மாமா லண்டனில
அடிபோடி கெட்டவளே ரத்வத்த மாமா லண்டனில
பிடிவாதம் ஏதுக்கடி ரத்வத்த மாமா லண்டனில
மாமா நல்லா உறங்கட்டுமே ரத்வத்த மாமா லண்டனில

எனவரும் அது திரும்ப வரும் தொடர்களை இவ்வாறான பாடல்களிலே சேர்த்து வாசிக்கமுடியாது. அது அப்பாடலுக்கு ஓசையாக வருமே தவிர பொருள் தராது.

சுனாமிக்குப்பின்னர் மீனவரால் பாடப்படும் பாடல் ஒ;ன்று வருமாறு

அலைவருது ஏலோலம்
சுனாமி வருமா ஏலோலம்
பெரிய அலையா ஏலோலம்
வருகுது மக்காள் ஏலோலம்
ஆணலைதான்மகன் ஏலோலம்
முன்னால வருகுது ஏலோலம்
சின்னதா பின்னால ஏலோலம்
பொண் அலவருகுது ஏலோலம்
ரண்டும் சேந்தாத்தான் ஏலோலம்
சுனாமி வரும் மக்காள் ஏலோலம்
இழுங்கடாவலைய ஏலோலம்
அண்டக்கி ரெண்டும் ஏலோலம்
சேந்துதான் பாருடா ஏலோலம்
சுனாமி வந்திச்சி ஏலோலம்
ஊரையும் அள்ளித்து ஏலோலம்
போய்த்துடா மக்காள் ஏலோலம்
புள்ளகுட்டிகள் ஏலோலம்
புடுங்கித்து போய்த்து ஏலோலம்
என்னபாவம் ஓகோ ஏலோலம்
செய்தமோ தெரியல்ல

காரை தீவு மட்டக்களப்பு அம்பா சேகரித்தவர் பாடியவர்கள் கணபதிப்பிள்ளை;60) சந்திர குமார் (37) எஸ் ஜெயவதனி 2007

வாழக்கைப்பிரச்சினைகள் இப்பாடல்களில் வெளிப்படுத்தப்படும். கடலம்மாவை அதிக மீன்பிடிபட உதவுமாறு வேண்டி தமது பிரச்சினைகளையும் பாடல்களில் கூறுவர்.

அம்மா கடலே தாயம்மா
அரிகா தாயே ஏலம்மா
சும்மாநிண்டா ஏலம்மா
சோறுவருமா ஏலம்மா
கெதியா இழுங்க ஏலம்மா
கெழிச்சு இழுங்க ஏலம்மா
வண்ணாண்ட பொண்டாட்டி ஏலம்மா
வந்து நிப்பாள் ஏலம்மா
இருநாறு ரூபா ஏலம்மா
கொடுக்கணுண்டோ ஏலம்மா
காசுமில்ல ஏலம்மா
கடலம்மா தாயே அம்மம்மா

காரைதீவு காரை தீவு மட்டக்களப்பு அம்பா சேகரித்தவர் பாடியவர்கள் சங்கரப்பிள்ளை;64)சுதாகரன் ; (34) எஸ் ஜெயவதனி 2007

எனவரும் பாடலிலே இன்றைய வாழ்க்கைப் பிரச்சினை வெளிப்படுத்தப்படுவதுடன் சாதி அமைப்பிலான வேலைப்பிரிவினையும் கூறப்படுகிறது.

பள்ளுப்பாடல்களில்போல் அம்பாப்பாடல்களிலும் தமது முதலாளிகளான சம்மாட்டிமாரின் மனைவிமாரையும் தொழிலை வழிநடத்தும் மண்டாடி மாரையும்; கேலிசெய்வர்.எதாரணம் வருமாறு.

மண்டாடி பொண்டிலுக்கு கன்னி இளமானே
மார்பெல்லாம் பெருஞ்சிரங்காம் கன்னி இளமானே

சம்மாட்டி ஆச்சிவாறா கன்னி இளமானே
சங்கிலியை முன்ன விட்டு கன்னி இளமானே
முன்னடக்க பின்னடக்க கன்னி இளமானே
முகத்துல சீல பந்தடிக்க கன்னி இளமானே
( பாடியோர் த. நிருபன் த. தேவிசுதன் முல்லைத்தீவு2004)

மொழிநடையைப் பொறுத்தவரை அந்தந்த்ப் பிரதேசத்து மொழிநடைகள் இப்பாடல்களிற் கையாளப்படுகின்றன. சிங்கள மீனவர் சேர்ந்து மீன்பிடிக்கும் இடங்களில் சிங்களச் சொற்களும் அம்பாக்களில் காணப்படுகின்றன.
உதாரணமாக பின் வரும் பாடலைக்கூறலாம்

எக்காய் ஏலம் தெக்காய் ஏலம்
கத்தராய் பகாய்
உம்மே கியலா ஏலம்
மடதிப்பா ஏலம்
ஒக்கம பகின்டஏலம் எக்காய் தெக்காய் (எஸ் ஜயவதனி 2007)

ஆண்களாலேயே இவை பாடப்படுவதால் இப்பாடல்களில் பாலியல் குறிப்புகள் அதிகம் காணப்படுவதுண்டு. பெரும்பாலும்பெண்கள் அதில் ஈடுபடுவதில்லை. எனினும் அதைப்பற்றிப் பொருட்படுத்துவதுமில்லை. ஆண்பெண்உறவு பற்றிய விடயங்கள் ஆண்,பெண்களின் உறுப்புகளை பேச்சுவழக்குச் சொற்களிலே வர்ணித்தல் போன்றன காணப்படும். அதனாலே படித்தவர்கள் இப்பாடல்களைச் சேகரிக்க விரும்புவதில்லை.

இவ்வாறாக கரைவலை மீன்பிடிப்பாடல்களான அம்பர்பாடல்கள் மீனவரின் பலவேறு வாழ்வியல் அம்சங்களைச ;சுட்டிநிற்பதுடன் வளமான இலக்கிய வகைகளாக காணப்படுpன்றன்.

அம்பர்பாடல்களின் இன்றைய நிலை

சுனாமி எனப்ப்டும் கடல்கோள் 2004 டிசம்பரில் ஏற்பட்டபின் இக்கரைவலை மீன்பிடி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்டோர் பலர் இறந்து விட்டனர்பாடத்தெரிந்தோர் சுனாமியால் இறந்ததினால் பாடல் தெரிந்தொரைக்கண்டுபிடிப்பதும் மிகவும் சிரமமாயுள்ளது (கா. திருமகன் முல்லைத்தீவுக்கு பாடல்களைச்சேகரிக்க சென்றபோது தெய்வாதீனமான சுனாமியிலிருந்து உயிர்தப்பினார் பாடல்களைக்கொடுத்தபலர் இறந்து விட்டதாகவும் அப்பாடலகளின் குரற்பதிவுகளை இறந்தவர்களின் உறவினர் தருமாறு வேண்டியதாயும் அவர் குறிப்பிட்டார்) அல்லது இடம் பெயர்ந்துவிட்டனர் அத்துடன் சினிமாப்பாடல்களையும் அம்பாவாகச்சொல்லும் முறையும்தோன்றியுள்ளது.

எனவேதான் இவைமுற்றாக மறைந்துபோவதற்குமுன்னர் இவை தொகுக்கப்படவேண்டும்

உசாத்துணை

அகநானுர்று நியுசெஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேற் லிமிட்டெட் 2004சென்னை
அம்பா மு. புஷ்பராஜன் அலைவெளியீடு 1976 யாழ்ப்பாணம்
கட்டரையாளரின் மேற்பார்வையில் அம்பாப் பாடலகளை ஆராய்ந்த ஆ. சுதாகரன் 2003 கா. திருமகன்2004 பி.ஜே கிளரன்ஸ் 2004 ஆகியோரின் சேகரிப்பிலிருந்த பாடல்கள்

நேர்கண்டோர்

சவுந்தரராஜன் .ச. (40)கல்லடிக்கடற்கரை மட்டக்களப்பு 2007
தங்கலிங்கம் வ. (45)கல்லடிக்கடற்கரை மட்டக்களப்பு 2007
குகதாஸ் க. (50) வல்வெட்டித்துறை 2004


murugathas1953@yahoo.com

Series Navigation

கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ்

கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ்