மலர் மன்னன்
மிகச் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசுகிறபோது சொன்னேன்: மரபை மீறலாம்; மரபைச் சிதைக்கத்தான் கூடாது. இதை அங்கு லேசாகக் கோடிட்டுத்தான் கூற முடிந்தது. என்னதான் இருப்பினும் இடம் பொருள் ஏவல் என்றெல்லாம் பார்க்க வேண்டும் என்கிற சம்பிரதாயம் ஒன்று இருக்கிறது அல்லவா?
நேரம் கடந்துவிட்டதும் இதை விளக்கிப் பேசுவதற்குச் சாதகமாக இல்லாது போயிற்று. கூட்டம் கலைந்தபின் தஞ்சாவூர்க் கவிராயர் என்கிற அபூர்வமான கவிஞர் நெருங்கி வந்து கூட்டத்தில் பேசுகையில் நான் தெரிவித்த கருத்தை மேலும் விரிவாகப் பேசுவது அல்லது கட்டுரையாக எழுதுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சொன்னார். இது விரிவாக விவாதித்து முடிவுக்கு வரவேண்டிய விஷயம். ஆகையால் போகிறபோக்கில் சொல்லி விட்டுப் போனதாக இல்லாமல் கட்டுரையாகவே பதிவு செய்துவிடுமாறு கூறினார். இதையே வேறு சில எழுத்தாளர்களும் கூட்டம் முடிந்தபின் சொன்னார்கள்.
ஆகையால் மரபை மீறுவதும் மரபைச் சிதைப்பதும் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள்தாம் என்று உணரலானேன். ஏனெனில் மரபை மீறல் என்கிற நினைப்பில் மரபைச் சிதைத்தல் சில சமயங்களில் சில படைப்பாளிகளால் செய்யப்பட்டு விடுகிறது. இதற்குக் காரணம் நம்முடைய மரபில் நமக்கு ஆழ்ந்த புரிதல் இல்லாமல் போயிருப்பதுதான். நம்முடையதுதானே என்கிற அலட்சியத்தில் எல்லாம் அறிந்திருப்பதாகக் கருதிக் கொண்டு நமது மரபு பற்றிய அரைகுறை ஞானத்தை வைத்துக் கொண்டே அதை மீற முயற்சித்து, மீறியதாகவும் பெருமைப்பட்டுக் கொண்டு ஆனால் சிதைத்துவிடுகிறோம்.
மரபைப் பற்றிய புரிதல் மிகவும் அரிதாகவே இருப்பதால் அது எங்கே மீறப்பட்டிருக்கிறது, எங்கே சிதைக்கப்பட்டுவிட்டது என்பதும் கவனத்திற்கு வராமலேயே போய்விடுகிறது. சிலசமயங்களில் அந்தச் சிதைப்பு சிலாகிக்கவும் படுகிறது!
தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தனள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய் என்று பாரதியார் சொன்ன மாதிரி நம்முடைய கலாசாரம் மிக மிகத் தொன்மையாக இருப்பதனாலேயே நமது மரபும் மிகவும் தொன்மை யாகிப் போனது. இப்படியொரு தொன்மை மிக்க கலாசாரமும் அதன் மரபும் அவற்றைச் சார்ந்த படைப்பாளிக்கு உறுதியான அடித்தளமாக அமையக்கூடும்; அதுவே கழுத்தில் கட்டிக் கொண்ட கல்லாகவும் ஆகிவிடக் கூடும். எல்லாம் மரபைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்திருக்கும் சாமர்த்தியத்தைப் பொருத்தது.
என்ன செய்ய, முன்னூறு ஆண்டுகள் போல நமக்கு வாய்த்த கல்வித் திட்டம் நமது மரபிலிருந்து நம்மை அந்நியப்படுத்திவிட்டது. எந்தவொரு விளைவிலும் நன்றும் தீதும் கலந்தே இருக்கும். இது இயற்கையின் நியதி. விளக்கின் கீழேயே நிழல் இருந்துவிடுகிற மாதிரி. நமக்கு வாய்த்த கல்வித் திட்டத்தால் சில நன்மைகளும் தீமைகளும் சேர்ந்தே கிடைக்கலாயின. காலனி ஆதிக்கம் நீங்கியபின் புத்திசாலித்தனமாக அதில் சில மாற்றங்களைச் செய்து ஒரு சுதந்திர தேசத்திற்கு உகந்ததாக மட்டுமின்றி பிற தேசங்களுக்கு வாய்க்காத அதன் தொன்மைச் சிறப்பினை உணர்ந்த பிரக்ஞையோடு பொருத்தமான புதிய கல்வித் திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தியிருக்கலாம். இன்றளவும் இது நடக்காமலேயேதானிருந்து வருகிறது. குலபதி கே.எம். முன்ஷி போன்ற நமது கலாசரத்தில் வேரூன்றிய அறிஞர்கள் அதற்கான முயற்சியை மேற்கொண்டு பார்த்தார்கள். ஆனால் நமது கலாசாரப் பின்னணியை முன்னேற்றத்திற்குச் சாதகமற்றதென எண்ணிகொண்டிருந்தவர்களின் செல்வாக்கே அதிகார பீடத்தில் செல்லுபடியாகிக் கொண்டிருந்ததால் அது செயலுக்கு வராமலே போயிற்று.
நமது படைப்பாளிகளுக்குச் சிலுவை என்பது எதன் குறியீடு என்கிற விஷயம் சரியாகவே புரிந்திருக்கிறது. வெறும் விறகுச் சுமையைத் தலையில் வைத்துக் கொண்டு போகிறவனை அவன் தனது சிலுவையைச் சுமந்துகொண்டு செல்வதாக எவரும் எழுதுவதில்லை. ஆனால் அரசவையில் அமர்ந்தவன் அங்குள்ள அரசுக் கட்டிலில் அமர்ந்தவனுக்கே விசுவாசம் காட்டி உத்தரவு கேட்க வேண்டும் என்கிற மரபின் பிரகாரம் பதினெட்டு நாள் பாரதப் போரில் முதல் பத்து தினங்கள் கௌரவ ஸேனையை வழி நடத்திவிட்டு, விரும்பும் தருணத்தில் சாவைத் தழுவலாம் என்கிற இச்சா மரண சாபல்ய யோக்கியதை பெற்றிருந்தும் குருட்சேத்திரக் களத்தில் அம்புப் படுக்கையில் உடல் கிடத்தி, உத்தராயணத்திற்காகக் காத்திருந்து, பரமனிடமே அனுமதி பெற்றுத் தமது சடலத்தைத் துறந்த பீஷ்ம பிதாமகரை முள் புதரில் விழுந்தவனோடு இணை காட்டத் தோன்றுமானால் அது மரபின் நுட்பம் உணராத மரபின் சிதைப்பு. இதில் படைப்பாளி மீது குற்றம் இல்லை. திணிக்கப்பட்ட கல்வித் திட்டத்தின் தாக்கம் அது. மேற்கத்தியப் பார்வையுடன் சொந்த மரபைக் காணப் பயிற்றுவிக்கப்பட்டதன் விளைவு. பீஷ்மரைப் படிமம் ஆக்குகிறபோது அவரது பிரமாண்டமான ஆகிருதியையும் ஆளுமையினையும் கவனத்தில் கொண்டு இணை வைக்க வேண்டும். தவறினால் அபத்தமாகப் போய்விடும்.
தற்காலத் தமிழில் மௌனி, கு. ப. ராஜகோபாலன், புதுமைப் பித்தன், கு. அழகிரிசாமி, எனப் பலரும் மரபை அழகாக மீறியிருக்கிறார்கள். ஒரு முன்னோடியாகத் தமது பாஞ்சாலி சபதத்தில் பாரதியாரும் கம்பீரமாக மீறியிருக்கிறார். இவர்களைக் கருத்தூன்றிப் படித்தால் யார் யார் எங்கெங்கே கண்களை உறுத்தாதவாறு மரபை மீறியிருக்கிறார்கள் என்பது தெரிய வரும். கி. ராஜ நாராயணனுங்கூட மிகவும் சுவாரஸ்யமாக இதைச் செய்திருக்கிறார். கவிஞர்களில் ஞானக்கூத்தன், விக்கிரமாதித்யன், ஸல்மா, தஞ்சாவூர்க் கவிராயர் எனப் பலரும் மரபைச் சிதைக்காமல் மீறிச் சென்றிருக்கிறார்கள். அது வாசலில் போட்ட கோலத்தை மிதித்துக் கொண்டு போகாமல் எச்சரிக்கையுடன் சுற்றிக் கடந்து செல்வது போன்றது. எனக்குத் தெரியாத இன்னும் பலரும், குறிப்பாக பா. வெங்கடேசன் போன்ற இளம் தலைமுறைப் படைப்பாளிகளும் இதைச் செய்திருக்கக்கூடும்.
மரபை ஆழமாய்ப் புரிந்துணர்ந்து, அதன் பின் அவசியம் கருதியும், காலப் பொருத்தம் பார்த்தும் அதனை மீறுதல் முறையான மரபு மீறல். இதற்கும் ஓர் எடுத்துக் காட்டு நினைவுக்கு வருகிறது.
நமது மரபு சார்ந்த அழகியலில் கோரமான எதையும் அது உள்ளவாறே புலப்படுத்தும் முறை இல்லை. ஆனால் கோரம் என்பது ஓர் உக்கிரத்தின் பின் விளைவு. ஆகவே நமது அழகியல் நமக்கு விதிப்பது கோரம் தவிர்த்த உக்கிரம். உக்கிரத்தைக் காட்டி கோரத்தை உணர்த்துதல் நம் மரபு சார்ந்த அழகியல் முறைமை. இதனால்தான் ஹிரண்யனை மடியில் கிடத்திக் கொண்டு வயிறு கிழித்துக் குடல் உருவிய நரசிம்மத்தின் முகத்தில் கோரம் இல்லை. மடியில் கிடக்கிற ஹிரண்யன் வயிறு பிளந்து குடல் சரிந்து ரத்தம் வழிகிற கோலமும் இல்லை. அவ்வளவு ஏன், நரசிம்மத்தின் விரல் நகங்கள்கூட ஹிரண்யன் வயிற்றில் பதிவதில்லை. ஒரு சமிக்ஞை, ஒரு பாவனை மாத்திரமே. அதனால் என்ன, நிலைமையின் கோரம் உணரப்படாமலா போனது? இல்லையே!
பின்னர் ரத்த வாடையில் திளைத்த நரசிம்மத்தை ஒரு நிலைக்குக் கொணர வேண்டி வந்துதித்த சரபம் அதனிலும் கோர வடிவாய் அமைய நேரிடினும் அதன் முகத்திலும் கோரம் இல்லை. உக்கிரம் மட்டுமே உண்டு.
நரசிம்ம முகத்தில் கோரம் காட்டாது உக்கிரம் மட்டுமே காட்டிய சிற்ப வடிவங்களில் நாயக்க சம்பிரதாயத்தைப் பொருத்த வரை பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு மரபை மீறும் மாற்றம் தென்படலாயிற்று. நரசிம்ம முகத்தில் உக்கிரத்துடன் கோர சொரூபமும் மடியில் கிடக்கும் ஹிரண்யன் வயிறு பிளந்து குடல் மாலை சூடலும் உருவகித்தல் நிகழ்ந்தது. எதற்காக இந்த மரபு மீறல்?
கோரக் காட்சிகளைக் கண்களுக்குப் பழக்கப்படுத்துவதற்காகத்தான். விஜய நகர சாம்ராஜ்யத்தைச் சூழ்ந்து எப்போது பாய்ந்து கடித்துக் குதறலாம் எனக் காத்திருந்த பாமினி சுல்தான் ராஜ்யங்கள் எவ்வித வரம்பும் இன்றி முற்றிலும் நாசவேலையே குறிக் கோள் எனத் திரிந்ததில் தெரிந்த கோரம் தந்த திகைப்பும் செயலிழப்பும் தவிர்க்கப்பட வேண்டும் என்கிற அவசியம் கருதி நிகழ்ந்த மரபு மீறல் அது. மரபு இன்னதெனத் தெளிவாகத் தெரிந்திருந்து, இப்படி அவசியம் கருதி, ஒரு நோக்கத்துடனான மீறலில் அர்த்தம் உண்டு. அதேபோல மரபு இதுவென அறியாது, அரைகுறையான புரிதலுடன் மரபை மீற வேண்டும் என்பதற்காகவே மரபை மீறுதலில் மரபு சிதைகிற அபாயமும் உண்டு.
படைப்பாற்றலுக்குத் தடைகளை விதிக்கிற கொடூரமோ பிடிவாதமோ தொன்மை மிக்க நமது மரபுக்குக் கிடையாது. அது மிகுந்த தாராளப் போக்குள்ளதுதான். விசாரணைகளோ விளக்கம் தருவதற்கான வாய்ப்புகளோ இன்றித் தண்டனையை விதித்து விடுகிற கொடிய சம்பிரதாயம் அதற்கு இல்லை. படைப்பாளியின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள எத்தனிக்க அது எப்போதும் தவறுவதில்லை. நமது பழைய படைப்புகளை ஆராய்ந்தோமெனில் அது எத்தனையோ சந்தர்ப்பங்களில் மரபு மீறலை ஏற்றுக்கொண்டிருப்பது தெரிய வரும். ஒரு நியாயமான அவசியத்திற்காக நிகழ்வதாக அந்த மீறல் இருக்க வேண்டுமேயன்றி, வெறும் சாகசத்திற்காக, மீறிக்காட்ட வேண்டும் என்கிற அதிகப் பிரசங்கித்தனத்தால் மேற்கொள்ளப் படுவதாக இருத்தலாகாது, அவ்வளவுதான்.
சரி, மரபை மீறலாம், ஆனால் ஏன் சிதைக்கக் கூடாது? என்ன குடி முழுகிப் போய்விடும்?
உலகம் முழுவதுமே மனித சமுதாயத்திற்கு இருப்பது ஒத்த சிந்தனைப் போக்கும் ஒரே மாதிரியான உணர்வுகளும்தான். சில திணிப்புகளால் அவற்றில் வலுக்கட்டாயமான திரிபுகள் இடம் பெறக் கூடும். அவை விதி விலக்குகள்தாம். இருப்பினும் வெளியிடும் முறையில், தொனியில், கொடுக்கும் முக்கியத்துவத்தில் தென்படும் கோணங்களால் பல வண்ணப் பூக்கள் மலர்ந்த நந்தவனமாக உலகைக் காண முடிகிறது.
உதக மண்டலத்தில் நடைபெறுகிற மலர்க் காட்சியைப் பார்த்தவர்களுக்குத் தெரியும், ரோஜா மலர்களைப் பச்சை, கருமை போன்ற முற்றிலும் எதிர்பார்க்க முடியாத வண்ணங்களில் இப்பொதெல்லாம் பூக்க வைப்பது. ஆனாலும் அவை அடிப்படையில்
ரோஜாச் செடியிலிருந்து மலர்பவை என்கிற மரபை இழக்கவில்லை. திகைப்பூட்டுகிற விதமாக மீறியிருக்கின்றன, அவ்வளவே. ரோஜாச் செடியில் ரோஜவுக்குப் பதிலாக வேறு ஏதேனும் மலர் பூக்கும் படியாகச் செய்தால் அது சிதைப்பு. அப்புறம் எல்லாப் பூச் செடிகளுமே ரோஜா மலர்கள் மட்டும் பூக்கிற செடிகளாகிப் போகும். பல வண்ணங்களில் அவை இருந்தாலும் எல்லாமே ரோஜாக்கள்தாம். அதன் பிறகு நந்த வனத்தில் முன்பிருந்த பன்மை அழகு தென்படாது போகும்.
ஒரேயொரு மரபு சிதைந்து அதன் விளைவாகப் பின்னர் அந்த ஒரு மரபு அழிந்து போனாலும் அது உலகிற்குப் பெரும் இழப்புதான். மிகத் தொன்மையான மரபின் மறைவோ சகிக்க முடியாத துக்கம்.
உலகம் தோன்றியது முதல் எத்தனையோ விலங்கினங்கள் பூண்டற்று அழிந்து போயின. மனிதனின் வேட்டைப் பிரியத்தினாலேயே கூடச் சில சிதைந்து அழிந்தன. சில அவனது பேராசையினால் வரம்பு கடந்த உபயோகிப்பால் மறைந்தன. பல அருமையான விலங்கினங்களை இனிக் காணவே இயலாதே என விலங்கியல் அன்பர்கள் ஏங்குகிறார்கள். முற்றிலும் அழிந்து போனதாக ஆவணப் படுத்தப்பட்ட ஏதேனும் ஒரு விலங்கினத்தின் ஒரேயொரு பிரதி அதிருஷ்ட வசமாகத் திடீரென எங்காவது தென்பட்டால் அக மகிழ்ந்து அதனை எப்படியாவது பெருகச் செய்யப் படாதபாடு படுகிறார்கள்.
ஒரு கலாசாரத்தின் மரபும் அத்தகையதுதான். சிதைக்கப்பட்டுப் பின் அழிந்தே போனால் போனதுதான். திரும்பக் கிட்டாது.
எனவேதான் நமது மரபு நம்முடைய படைப்பாளிகளிடம் மீறுங்கள், பரவாயில்லை; சிதைக்க வேண்டாம், அழிந்து போனால் அப்புறம் கிடைக்க மாட்டேன் என்று சொல்கிறது.
காதுள்ளவர்கள் கேட்டுக் கொள்ளலாம்.
malarmannan79@rediffmail.com
- அம்மா
- எல்லையைக் கொஞ்சம் நீட்டுவது — குறித்து….!!!
- அக்கினிப் பூக்கள் – 6
- திண்ணைப் பேச்சு – அசுரன் மறைவு
- ‘பயணி’ (The passenger – A film by Michelangelo Antonioni)
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் !விண்மீன் தோற்றமும் முடிவும் (கட்டுரை: 9)
- Last Kilo Bytes
- எவனோ ஒருவன் – திரைப்பட விமர்சனம்
- கிறிஸ்தவம்? கோகோ கோலா?
- கிழிசல்கள்
- எழுத்துக்கலைபற்றி ……..5 கி.சந்திரசேகரன்
- கிழக்கிலங்கையின் கவிகள்
- ஜெகத் ஜால ஜப்பான் -5 சுமிமாசென்
- புதுச்சேரியில் புத்தகக் கண்காட்சி
- கடிதம்
- கலாமோகனின் கதைகள் குறித்து… ஒரு முன்குறிப்பு
- நாஞ்சில்நாடன் அறுபது வயது நிறைவு நூல் வெளியீடு
- மொழிபெயர்ப்பாளர் திருமதி. லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம்; ‘இயல் விருது’ பெறுகின்றார்
- நூல்கள் அறிமுக நிகழ்வு – அழைப்பிதழ்
- லா.ச.ரா. நினைவாக : எழுத்தாளருக்கு எழுத்தாளர்கள் எடுத்த விழா
- ஈழத்துமண்ணும் எங்கள் முகங்களும்- வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதைக் காவியம்
- அனார் கவிதைகள் : எனக்குக் கவிதை முகம்
- உயிர்மை புத்தக வெளியீடு – மணா , தமிழச்சி தங்க பாண்டியன் நூல்கள்
- கவிதைகள்
- பெருஞ்சுவர் சூழ்ந்த பெண் : (பெருஞ்சுவருக்கு பின்னே [சீனப்பெண்களின் வாழ்வும் வரலாறும்] ஜெயந்தி சங்கர்.)
- “பழந்தமிழ்ப் பாக்கள்- மரபுவழிப் படித்தலும் பாடுதலும்” – சில எண்ணங்கள்
- நாடக வெளியின் ‘வெளி இதழ்த் தொகுப்பு’ – புத்தக அறிமுகக்கூட்டம்
- குறிப்பேட்டுப் பதிவுகள் – 6 !
- ரௌத்திரம் பழகு
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 4 (இறுதிக் காட்சி)
- தைவான் நாடோடிக் கதைகள் 6 பெண்புலி மந்திரக்காரி (ஹொ கொ பொ)
- பிரம்மரிஷி
- ராலு புடிக்கப்போன டோனட் ஆன்ட்டி
- அப்பாவின் தாங்க்ஸ்கிவ்விங் – ஒரு பெரிய சிறுகதை
- இலக்கிய விசாரம் : மரபு மீறலும் மரபு சிதைத்தலும்
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 13 நம்பிக்கை எனும் நீர் குமிழ்
- தமிழிலிருந்து தமிழாக்கம்: நூற்கடல் தி.வே.கோபாலையர் தமிழாக்கிய பெரியவாச்சான் பிள்ளையுரை
- சம்பந்தம் இல்லை என்றாலும் – விநோத ரச மஞ்சரி (ஆசிரியர் அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்)
- அதிகார வன்முறைக்கு எதிரான ஜிகாத்
- பாலியல் கல்வி,சிறார்கள் மற்றும் நாடாண்மை
- கொலையும் செய்யலாம் பத்தினி!!!
- தாகூரின் கீதங்கள் – 9 ஆத்மாவைத் தேடி !
- விருது
- வலி தந்த மணித்துளிகள்
- மாத்தா ஹரி அத்தியாயம் -42