பாரதிராமன்.
இவ்வாண்டு தமிழ் இலக்கிய தேவதை ஸ்திாீ புருஷ ரூபமாய் இரண்டு முகமும் மூன்று கண்ணும், நான்கு வாயும் ,பொன்னிற தந்தமும், நீண்ட நாக்கும், தொங்குகிற புருவமும், நீண்ட காதுகளும், நான்கு கைகளும், இரண்டு கால்களும், செம்பட்டைமயிரும் உள்ள உயரமான பருத்த மாநிற சாீரத்துடன் மந்த நடையில் பிரவேசிப்பார்.. அவள் நாமதேயம் இலக்கியா. கூவம் நீாில் ஸ்நானம் செய்துவிட்டு சேலத்துக் கைத்தறி வஸ்திரம் அணிந்து வீரப்பன்காட்டுச் சந்தனம் பூசி மோசடிநிறுவனத்து நகைகள் பூண்டு காகிதப் புஷ்பங்கள் சூடி மைக்ரோவேவ் பாத்திரத்தில் பீட்ஸாவும் லிச்சிப் பழமும் புசித்துக்கொண்டு மாட்டுவண்டியிலேறி கிாிக்கட் தொப்பி அணிந்து கம்ப்யூட்டர் ஆயுதத்துடன் காசியோ சிந்ததைசர் வாசித்துக்கொண்டு தவில் வாத்தியம் முழங்க மேற்குப் பார்த்த முகத்துடன் தெற்கு நோக்கிப் பயணித்து சனிக்கிழமை மாலை பிரவேசிப்பார்.
இதன் பலன்களாவன:
நாம பலன்: இலக்கியம் அந்தஸ்து கூடப்பெறும்.
ஸ்நானபலன்: கூவத்தில் எதிர்பாராத வெள்ளம் ஏற்படும்.
வஸ்திர பலன். சேலத்துக் கைத்தறி ஆடைகளின் ஏற்றுமதி பாதிக்கப்படலாம்.
பூச்சுப் பலன். வீரப்பன் எவர்பிடிக்கும் அகப்படாது தப்பிவிடுவது சாத்தியம்.
நகைப் பலன்: நகைக்கடைகளில் போட்ட பணம் மீளாது.
பூக்கள் பலன் காதில் பூ சுற்றுபவர்கள் பெருகிப்போவார்கள்.
பாத்திரப் பலன்: கிராமங்களில் மண்பாண்டங்கள் அருகிப்போகும்.
உணவுப் பலன்: தெருவுக்குத்தெரு பீட்சா கடைகள் பெருகும், நுங்கு அருகும்.
வாகனம்: வட்டார இலக்கியத்துக்கு மவுசு கூடும்.
தலை அணி எதிர்பாராத மொழிகளுக்கு இலக்கியப் பீடங்களின் பாிசுகள் அறிவிக்கப்பட்டு ஊழல் குற்றச்சாட்டுகள் எழும்.
ஆயுதப் பலன்: இணையப் பத்திாிகைகளில் பலத்த போட்டிக்கு வாய்ப்புண்டு.
சங்கீதப் பலன். ஜப்பானிய ஹைக்கூக்கு நிகராக தமிழ் ஹைக்கூ வளர்ச்சியுறும்.
வாத்தியப் பலன். இலக்கியத்தில் உரத்த குரல்களே முன்னிலை வகிக்கும்.
முக நோக்கு பலன். தமிழ் இலக்கியம் மேலை நாடுகளில் வாழும் தமிழர்களை வெகுவாகக் கவர்ந்து அவர்களுடைய பங்களிப்பை அதிகாிக்கச்செய்யும்.
பயணதிசைப் பலன் ஈழத்து இலக்கியம் முனைந்து முன்னிறுத்தப்பட்டாலும். எதிர்ப்புகள் கிளம்பி விவாதங்கள் உச்சக்கட்டத்தை அடையும்,
நாட்பலன்: சனிக்கிழமைகளில் ஏற்பாடு செய்யப்படும் இலக்கியக் கூட்டங்களுக்கு கூட்டம் சேரும்.
பொதுப் பலன்கள்: இலக்கியப் பூசல்கள்தீவிரமடையும்..விமர்சனங்கள் மலிந்தாலும் திறமைகள் கூடா. குழந்தைகளுக்கான இலக்கியத்தை பொியவர்களே தீர்மானிப்பார்கள்.பத்திாிக்கைகள் கோடிக்கணக்கில் பாிசுகளை அறிவித்து வாசகர்களை ஓட்டாண்டிகளாக்குவார்கள். தபால் இலாகாவுக்கு வருமானம் கூடும். பழைய கிசுகிசுக்கள் மறக்கப்பட்டு புதியன கிளம்பும். மேற்கத்திய இலக்கியங்களும் கீழை இலக்கியங்களும் அலசப்பட்டு முடிவொன்றும் கானப்படாமல் முற்றுப்பெறும். மொத்தத்தில் பொன்னிறமும், செம்பட்டை நிறமும்,மாநிறமும் கலந்ததுபோல தமிழ் இலக்கியம், யதார்த்தம், முற்போக்கு, தலித் என்று கலவையாக நத்தை நடையில் வலம் வருவது தொடரும்.
வளர்க தமிழ் இலக்கியம்!
- வழி
- அடகு
- காசுக்காக அல்ல
- திருடன்
- வன்முறை பற்றிய கட்டமைக்காத கட்டுரை
- இந்த வாரம் இப்படி – ஏப்ரல் 15, 2001
- பார்த்துப் போ…
- சிலுவையில் ஓர் சிவப்புப் புறா
- வன்முறை பற்றிய கட்டமைக்காத கட்டுரை
- முட்டை பஜ்ஜி
- நெத்திலி கருவாடு பொரியல்
- தமிழோவியன் கவிதைகள் : விளிம்புநிலை மக்களின் அனுபவத்தெறிப்பு
- அன்புள்ள ஆசிாியருக்கு
- இலக்கியப் புத்தாண்டுப் பலன்.